இலங்கைத் தமிழ் பேசும் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்களை தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர், வேடுவர் மற்றும் சிங்களவர் என வகையினராக அடையாளப்படுத்தலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையைத் தமது தாயகமாக கொண்டோர் இலங்கை தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் ஆவர். இந்திய தமிழ் முஸ்லீம்கள் போலில்லாமல் இவர்கள் முஸ்லீம்கள் என்ற சமய அரசியல் அடையாளத்தை முன்னிறுத்துகின்றார்கள். 1800 களில் பிரித்தானிய காலனித்துவ அரசால் இலங்கை மலைநாட்டு தேயிலை இரப்பர் தோட்டங்களில் வேலைசெய்வதற்கு என வருவிக்கப்பட்ட தொழிலாளர்களின் வம்சாவளியினர் மலையகத் தமிழர் எனப்படுகிறார்கள். ஏறக்குறைய எண்பது சதவீதத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள்.[சான்று தேவை] ஏனையோர் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள். இலங்கையில் அனைத்து தமிழர்களினதும் மனித உரிமைகளை சிங்கள பேரினவாத அரசு மறுத்து, அவர்களை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே ஈழப்போராட்டம் வெடித்தது.