மொரிசியத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொரிசியசில் வாழும் தமிழ் மக்களை மொரிசியசு தமிழர் எனலாம். இவர்கள் மொரிசியசின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 75,000 பேர் இருக்கின்றனர். இவர்கள் தங்களை இந்துத் தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 54, 000 தங்களது தாய்மொழி தமிழ் எனத் தெரிவித்தனர்.[1]. இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுவதாகவும், மேலும் 3300 பேர் தமிழும் இன்னொரு மொழியும் வீட்டில் பேசுவதாகவும் அரசுக் கணக்கெடுப்பில் தெரிவித்தனர்.[2][3].

தமிழர்கள் திறமைவாய்ந்த உழைப்பாளிகளாக அறியப்பட்டனர். எனவே, அவர்களைக் கவுரவிக்கும் விதமாக மொரிசியசு அரசு, மொரிசியசு ரூபாய் பணத்தில் தமிழ் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிடுகிறது. தைப்பூசம், தீபாவளிப் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பல இன மக்களின் மொழிக் கலப்பால் மொரிசியசு கிரியோல் என்னும் மொழி உருவானது. இம்மொழியின் பல சொற்கள் தமிழில் இருந்து பெறப்பட்டவை.

மொரிசியசு நாணயத்தில் தமிழ் எழுத்துக்களும் இலக்கங்களும்

வாழும் பகுதிகள்[தொகு]

வாழ்வியல்[தொகு]

மொரீசியசுத் தமிழர்களின் வாழ்வியல் தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் ஆய்ந்துள்ளனர். இவர்களின் ஆய்வுகள் பல உலகத் தமிழ் மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பலர் தமிழ்ப் பெயர்களை சூட்டும் வழக்கம் கொண்டுள்ளதை பிரெஞ்சுத் தொடர்பினால் திரிபடைந்திருப்பதன் மூலம் அறியலாம். ஏறத்தாழ அனைவரும் இந்து சமயத்தினர் ஆவர். அரசுக் கணக்கெடுப்பின்படி, தமிழ் இந்துக்கள் 75000 பேர் ஆவர். மொரிசியசின் பல இன, பல மொழிச் சூழலில் பிறருடன் இயந்து வாழும் அதே சமயத்தில் தங்கள் பண்பாட்டைப் பேணிக் காப்பதற்காக கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. சன்னாசி, சுப்பிரமணி, பொன்னுசாமி, முத்தையன் ஆகிய பெயர்கள் அதிகம் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழலில் வளர்ந்தாலும், செந்தமிழிலேயே எழுத்துவழக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தளவினரே தமிழ் பேசுகின்றனர். தற்காலத்தே தமிழ்ப் பண்பாட்டை அறியும் ஆவலில் உலகத் தமிழருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கப்படுகின்றன.

ஊடகம்[தொகு]

மொரிசியசு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சேனல் 16 என்ற பிரிவில் தமிழில் சேவைகளை வழங்குகிறது. பத்திரிகை என்ற இதழ் தமிழ், பிரெஞ்சு, கிரியோலே, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் கட்டுரைகளை வெளியிடுகிறது. ஒனெக்சு எப்.எம் தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்புகிறது. அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. பிற வானொலி நிலையங்களும் பகுதி நேர தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. இந்திய தொலைக்காட்சியான பொதிகை டி.வியும், பிற அரசு தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. ஏனைய தொலைக்காட்சிகளிலும் தமிழ் நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கப்படுகின்றன.

கல்வி[தொகு]

மொரீசியசில் வாழும் மக்கள் தங்கள் தாய்மொழியைக் கற்க வேண்டும் என மொரிசியசு அரசு வலியுறுத்துகிறது. இதன்படி ஏறத்தாழ 200 இளநிலைப் பள்ளிகளில் 100 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கின்றனர். 2013 ஆம் ஆண்டு இலக்குவனார் பெயரில் போர்ட் லூயிசில் தமிழ்ப் பள்ளி ஒன்று துவங்கப்பட்டுள்ளது.[4] அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளது. தமிழைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் படிக்கவும் இந்திய அரசு உதவுகிறது.

மொழி[தொகு]

இங்கு வாழும் தமிழர்கள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, கிரியோலே ஆகிய மொழிகளில் ஒன்றையோ ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளையோ பேசுகின்றனர். ஏறத்தாழ 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுவதாகவும், மேலும் 3300 பேர் தமிழும் இன்னொரு மொழியும் வீட்டில் பேசுவதாகவும் அரசுக் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்..[2][3].

தாயகத் தமிழருடனான தொடர்பு[தொகு]

இந்திய அரசு, மகாத்மா காந்தி பண்பாட்டுக் கழகத்தை மொரீசியசில் நிறுவியது. இதனால் மொரீசியசுத் தமிழர் இந்தியப் பண்பாட்டையும், தமிழ் மொழியையும் கற்க வழி ஏற்பட்டது. சென்னை, பெங்களூரு ஆகிய இந்திய நகரங்களுக்கு ஏர் மொரீசியசு விமானங்களை இயக்குகிறது. இந்து சமயப் பண்பாட்டைப் பேண தமிழ்நாட்டில் இருந்தும், இலங்கையில் இருந்தும் அர்ச்சகர்களும், பூசாரிகளும், சிற்பக் கலைஞர்களும் வரவழைக்கப்படுகின்றனர்.

சமயங்கள்[தொகு]

பெரும்பாலான தமிழர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள். முருகன், மாரியம்மன் கோயில்கள் பெருமளவில் உள்ளன. மொரிசியத் தமிழர் முருக பக்தர்கள் ஆவர். தமிழ்நாடு, இலங்கை தவிர சிங்கப்பூர், மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதைப் போன்றே மொரிசியசிலும் காவடி எடுத்து விரதமிருந்து கொண்டாடுகின்றனர். தைப்பூச நாள் மொரீசியசு நாட்டின் தேசிய அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொரிசியசு தமிழ்க் கோயில்கள் கழகம், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் ஆகியன தமிழர் வாழ்வியலில் இயங்குகின்றன. தமிழ்ப் பள்ளிகள், தமிழ்ப் பண்பாடு ஆகியனவற்றைப் பேணுதல் இவற்றின் பொறுப்பு. இங்கே ஏறத்தாழ 120 தமிழ்க் கோவில்கள் உள்ளன. இவற்றில் 70 கோவில்கள் முருகனுக்கும், 40 கோவில்கள் அம்மனுக்கும் ஆனவை.

அமைப்புகள்[தொகு]

 • அனைத்து மொரிசியத் தமிழ் பரீட்சை ஆட்சிக்குழு - The All Mauritius Tamil Examination Syndicate (AMTES)
 • இந்து மகா சன சங்கம் - The Hindu Maha Jana Sangham
 • மொரிசியத் தமிழ்ப் பண்பாட்டு நடுவ அறக்கட்டளை - The Mauritius Tamil Cultural Centre Trust
 • மொரிசியத் தமிழ் பேசுவோர் ஒன்றியம் - The Mauritius Tamil Speaking Union
 • மொரிசியத் தமிழ்க் கோயில்கள் கூட்டமைப்பு - The Mauritius Tamil Temples Federation
 • முருகன் அறக்கட்டளை - The Murugan Foundation
 • வட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - The Northern Tamil Coordination Committee
 • Pathirikai
 • சவனீ தமிழ் ஒன்றியம் - The Savanne Tamil Association
 • தமிழ் வணிகர் கழகம் - The Tamil Chamber of Commerce and Industry
 • தமிழ் லீக் - The Tamil League
 • L'Union Tamoule De Maurice
 • The International Tamil Diaspora Association (INTAD)

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. https://archive.today/20121227225242/www.gov.mu/portal/sites/ncb/cso/report/hpcen00/Demogra/forerep.htm
 2. 2.0 2.1 https://archive.today/20121227223236/www.gov.mu/portal/sites/ncb/cso/report/hpcen00/Demogra/fatrep.htm%23rep
 3. 3.0 3.1 https://archive.today/20121227230430/www.gov.mu/portal/sites/ncb/cso/report/hpcen00/Demogra/homerep.htm
 4. தினமலர், உலகத் தமிழர் செய்திகள், மொரீசியசில் தமிழ்ப் பள்ளி திறப்பு, பிப்பிரவரி 16 2013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரிசியத்_தமிழர்&oldid=3793040" இலிருந்து மீள்விக்கப்பட்டது