மத்திய கிழக்கில் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்திய கிழக்கில் தமிழர் என்னும் இக்கட்டுரை மத்திய கிழக்கு நாடுகளான குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரேய்ன், யெமென், ஓமான் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றியது. இவர்களில் பல தொழிலாளர்களாகவும், துறைசார் திறனர்களாகவும் பணி நிமித்தம் அங்கு இருப்பவர்களே. இவர்களிற் பலர் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள். இலங்கையில் இருந்து சென்ற தமிழர்களும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.

குடிசார் நிலை[தொகு]

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எல்லா வெளிநாட்டினரையும் போலவே தமிழர்களும் ஒப்பந்த அடிப்படையிலான தொழில் புரிபவர்கள் என்னும் அடிப்படையிலேயே இங்கே வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இவர்களுக்கு இவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் வழங்கும் பொறுப்பின் அடிப்படையில் வதிவிட விசா அந்தந்த நாட்டு அரசுகளால் வழங்கப்படுகின்றன. குறித்த வதிவிட விசாக்களின் காலம் நாடுகளைப் பொறுத்து 2 அல்லது 3 ஆண்டுகளாக உள்ளது. சொந்தத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தமிழர்களும் இந்த நாடுகளில் காணப்படுகின்றனர். குடும்பத்துடன் இந்நாடுகளில் வசிக்கக்கூடிய தகுதி உள்ள தமிழர்கள் பலர் குடும்பத்துடன் இந்நாடுகளில் வாழ்கின்றனர்.

சமய நிலை[தொகு]

இசுலாம், இந்து, கிறித்தவம் ஆகிய எல்லாச் சமயங்களையும் சார்ந்த தமிழர்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். பெரும்பாலான நாடுகளில் தனிப்பட்ட முறையில் அவரவர் சமயங்களைக் கடைப்பிடிப்பதற்கான அனுமதி உண்டு. ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் போன்ற சில நாடுகளில் மட்டும் இந்துக் கோவில்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உண்டு.

கல்வி[தொகு]

பெரும் பாலான மத்திய கிழக்கு நாடுகளில் தமிழ்ச் சிறுவர்களின் கல்வி வசதிகள் சிறப்பாகவே உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் போன்ற நாடுகளில் இந்தியக் கல்வித் திட்டங்களுக்கு அமைவான பள்ளிகள் நிறையவே உள்ளன. இந்நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழ்ப் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை இங்கேயே முடித்துக்கொண்டு உயர் கல்விக்காக இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். சில நாடுகளில், உயர் கல்விக்கான இந்தியப் பல்கலைக் கழகங்களின் கிளைகளும் உள்ளன. இவற்றைவிட, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலுகின்ற தமிழரும் கணிசமாக உள்ளனர். பொதுவான கல்வி வசதிகளுக்குக் குறைவு இல்லை என்றாலும், தமிழ் மொழிக் கல்விக்கான வசதிகள் மிகவும் குறைவே. இரண்டாம், மூன்றாம் மொழிகளாக இந்தி, வங்காள் மொழி, மலையாளம் போன்றவை பெரும்பாலான பள்ளிகளில் கற்பிக்கப்பட்டாலும், தமிழ் மொழி ஓரிரு பள்ளிகளில் மட்டுமே கற்பிக்கப்படுவதைக் காணலாம்.

கலை, பண்பாடு[தொகு]

தமிழர்களோடு நெருக்கமான கலை பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டவர்களான மலையாளிகள் மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவில் வாழ்வதனால், பரத நாட்டியம், கர்நாடக இசை போன்ற கலைகளைப் பயில்வதற்கான வசதிகளுக்கு இப்பகுதியில் உள்ள பல நாடுகளில் வசதிகள் உள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் பல நிறுவனங்கள் மேற்படி கலைகளில் பயிற்சியளித்து வருகின்றன. தமிழரும் இவற்றின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்நிறுவனங்கள் தமது மாணவர்களைக் கொண்டு கலை விழாக்களை நடத்துவதனாலும், ஓணம் போன்ற பண்டிகைகளையொட்டிக் கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதனாலும், இந்நாடுகளில் வாழும் தமிழர்களும் இக்கலைகளோடுள்ள தொடர்புகளைப் பேணிவரக்கூடியதாக உள்ளது.

தவிர, தமிழர்களுக்கான சில பண்பாட்டுச் சங்கங்களும் உள்ளன. இந்நாடுகளின் சட்டங்களுக்கு அமைய பெரும்பாலும் இச்சங்கங்கள் இந்தியத் தூதரகங்களின் பொறுப்பிலேயே இயங்குகின்றன. இவ்வாறான தமிழர் சங்கங்களும் இலக்கிய நிகழ்வுகளையும், கலை நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்வது உண்டு. அவ்வப்போது தமிழ்நாட்டில் இருந்தும் பேச்சாளர்கள், கலைஞர்கள் போன்றவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_கிழக்கில்_தமிழர்&oldid=1648741" இலிருந்து மீள்விக்கப்பட்டது