திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
| பதினாறாம் பெனடிக்ட் Benedict XVI |
|
| 265ஆம் திருத்தந்தை | |
பதினாறாம் பெனடிக்ட் |
|
| ஆட்சி துவக்கம் | ஏப்ரல் 19, 2005 (7 ஆண்டுகள், 43 நாட்கள்) |
|---|---|
| முன்னிருந்தவர் | அருள் சின்னப்பர் II |
| திருப்பட்டங்கள் | |
| குருத்துவ திருநிலைப்பாடு | ஜூன் 29, 1951 மைகேல் வான் பாஉல்பர்-ஆல் |
| ஆயர்நிலை அருட்பொழிவு | மே 28, 1977 ஜோசப் ஸ்டேன்கிள்-ஆல் |
| கர்தினாலாக உயர்த்தப்பட்டது | ஜூன் 27, 1977 |
| பிற தகவல்கள் | |
| பிறப்புப் பெயர் | யோசப் அலோயிசு ராட்ஸிங்கர் |
| பிறப்பு ஆண்டும் இடமும் | 16 ஏப்ரல் 1927 பவேரியா, ஜெர்மனி |
| குடியுரிமை | இரட்டைக் குடியுரிமை: செருமன் மற்றும் வத்திக்கான் |
| மதம் | கத்தோலிக்கம் |
| பெற்றோர் | யோசப் ராட்ஸிங்கர், மரியா ராட்ஸிங்கர் |
| கையொப்பம் | |
| ஆசீர்வாதப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் | |
திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (போப் பெனடிக்ட் XVI), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாவார். இவர் வத்திக்கான் நகரின் ஆட்சித்தலைவருமாவார். இவர் 1927 ஏப்பிரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பெயர்மாற்றம் செய்துகொண்டார். 2005 ஏப்பிரல் திங்கள் 24 ஆம் நாள் பாப்பரசராக தமது முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். 2005 மே திங்கள் 7 ஆம் நாள் புனித யோவான் லாத்தரன் பேராலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக மூனிச் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் கர்தினாலாகவும் செயற்பட்டுவந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் [1].
[தொகு] திருத்தந்தை பெனடிக்டின் படிப்பினைகள்
இன்றைய உலகில் மக்களின் முழு வளர்ச்சிக்குக் கிறித்தவ சமயம் துணையாக உள்ளது என்னும் கருத்தைத் திருத்தந்தை பெனடிக்ட் வலியுறுத்துகிறார். உலகமயமாக்கும் போக்கு கடவுள் நம்பிக்கையிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடும் ஆபத்து உள்ளது என்றும், உண்மையான மதிப்பீடுகளை வாழ்வில் கடைப்பிடிக்கும்போதுதான் மனித வாழ்க்கை வளம்பெறும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார்.
கிறித்தவ சமயம் பகுத்தறிவுக்கு எதிராகப் போவதில்லை. மனிதர் பகுத்தறிவு கொண்டுள்ளார்கள் என்றால் அப்பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதல்ல, மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்குகின்ற கொடை. அக்கொடையை நன்றியோடு ஏற்பது மனிதரின் பொறுப்பு.
கடவுளால் படைக்கப்பட்ட உலகத்தை மனிதர் தம் பகுத்தறிவின் துணைகொண்டு ஆய்ந்து அறிந்து சீரமைக்கும் பொறுப்பு கொண்டுள்ளார்கள். எனவே கடவுள் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை அல்ல; மாறாக, மனித பகுத்தறிவுக்கு உகந்ததே கடவுள் நம்பிக்கை. ஆனால், பகுத்தறிவு தன்னால் எல்லாம் கூடும் என்று மமதை கொண்டு, கடவுளின் துணை வேண்டாம் என்னும் போக்கில் போவது தவறு. இப்போக்கினைத் திருத்தந்தை பெனடிக்ட் பகுத்தறிவு மிகைவாதம் (rationalism) என்று அடையாளம் காட்டிக் கண்டிக்கின்றார். மேலும், உண்மை என்று ஒன்று இல்லை எனவும், மனிதர் உண்மையான மதிப்பீடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கடைப்பிடிக்க இயலாது என்றும் கூறுகின்ற சூழ்நிலைவாத அடக்குமுறை (dictatorship of relativism) என்னும் கொள்கையையும் அவர் தவறு எனக் காட்டுகின்றார்.
[தொகு] திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட படிப்பினை ஏடுகள்
திருத்தந்தை பெனடிக்ட் பல போதனை ஏடுகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் மூன்று சுற்றுமடல்களும் (encyclicals)[2] அடங்கும். அவை கீழ்வருவன:
1) கடவுள் அன்பாய் இருக்கிறார் (God is Love - இலத்தீனில் Deus Caritas Est)[3]:
இது திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட முதல் சுற்றுமடல். 2005, திசம்பர் 25ஆம் நாள், கிறித்து பிறப்புவிழாவன்று கையொப்பமாகி, 2006, சனவரி 25இல் வெளியிடப்பட்ட இம்மடலில் கடவுளுக்கும் அன்புக்கும் இடையே நிலவும் நெருங்கிய பிணைப்பு விளக்கப்படுகிறது. கடவுள் மனிதரைத் தம் சாயலாகப் படைத்துள்ளார். கடவுளின் உள்ளார்ந்த இயல்பு அன்பு ஆகும். அந்த அன்பு மனிதரின் இயல்பாகவும் உள்ளது. எனவே மனிதர் கடவுளையும் மனிதரையும் அன்புசெய்யும் திறன் கொண்டுள்ளார்கள். மனிதர் காட்டும் அன்புக்கு ஊற்றாகவும் அது நிகழ்வதற்கு வழியாகவும் அமைவது கடவுளின் அன்புதான். கடவுளையும் மனிதரையும் பிணைக்கின்ற இந்த அன்பு மனிதரின் தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் துலங்க வேண்டும்.
இச்சுற்றுமடலின் முதல் சொற்கள் விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டவை: கடவுள் அன்பாய் இருக்கிறார் (1 யோவான் 4:16). மேலும், அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார் (1 யோவான் 4:16).
பிறரோடு பகிர்தலும் பிறரிடமிருந்து பெறுதலும் அன்பின் இரு அடிப்படைப் பண்புகள் ஆகும். இதுவே கடவுளின் இயல்பு கூட. அவர் தம்மையே மனிதருக்குக் கையளித்து, தம் உறவை மனிதரோடு பகிர்கின்றார். அதே வேளையில் கடவுள் மனிதரிடமிருந்து பெறுகின்ற அன்பில் கடவுள் மகிழ்கின்றார். இந்த இருவகை அன்பு கிரேக்க கலாச்சாரத்தில் eros, மற்றும் agape என்று அறியப்பட்டன. தன்னையே பலியாக்கி அளிக்கும் அன்பு (agape) பிறருக்கு வாழ்வளிக்கும். பிறரிடமிருந்து பெறும் அன்பு (eros) புலன்களுக்கு மகிழ்வூட்டித் திளைக்கச் செய்யும். இவை இரண்டிற்குமே ஊற்று கடவுள்தாம் என்பதால் இவற்றை மனிதர் பிரித்தலாகாது.
2) எதிர்நோக்கால் மீட்படைகிறோம் (Saved by Hope - இலத்தீனில் Spe Salvi)[4]:
இச்சுற்றுமடல் 2007, நவம்பர் 30ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு வெளியானது. உலகில் ஏற்படுகின்ற துன்பங்களின் நடுவே நம்பிக்கை இழக்காமல் வாழ்வது எப்படி, ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கி வாழ்வது எப்படி என்று இம்மடல் விளக்குகிறது. மனிதர் பிற மனிதரை மதிக்காமல் அடிமைகள்போல நடத்துகின்ற வேளைகளில், காரணமின்றி இழிவுபடுத்துகின்ற வேளைகளில் எதிர்நோக்கு என்னும் நற்பண்பு நம்மிலிருந்து மறைந்துவிடலாகாது. துன்பமும் துயரமும் அநீதியும் அடிமைத்தனமும் ஒருநாள் மறைந்தொழியும் என்பது கிறித்தவம் தருகின்ற நம்பிக்கை, எதிர்நோக்கு. இதைத் திருத்தந்தை பெனடிக்ட் இம்மடலில் விளக்குகின்றார்.
இம்மடலின் கருத்து தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது:நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும் எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? (உரோ 8:24).
3) உண்மையில் தோய்ந்த அன்பு (Love in Truth - இலத்தீனில் Caritas in Veritate)[5]:
இச்சுற்றுமடல் 2009, சூன் 29ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு, சூலை 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் திருத்தந்தை பெனடிக்ட் சமூக நீதி பற்றிப் பேசுகின்றார். இன்றைய உலகில் நிலவுகின்ற சமூக அநீதிகள் பல. ஏழை நாடுகளுக்கும் செல்வம் படைத்த நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி செல்வம் குவிக்கின்றன. இலாப நோக்கோடு மட்டுமே வியாபார உறவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசடைவது பற்றிப் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இத்தகு குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றால் மனிதரிடையே அன்பு வளர வேண்டும் என்று பெனடிக்ட் அறிவுறுத்துகிறார். அந்த அன்பு உண்மையின் அடிப்படையில் எழ வேண்டும். அப்போதுதான் மக்களிடையே நீதி நிலவும் சமுதாயம் உருவாகும்.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ 16ஆம் பெனடிக்ட்
- ↑ சுற்றுமடல்
- ↑ "கடவுள் அன்பாய் இருக்கிறார்"
- ↑ "எதிர்நோக்கால் மீட்படைகிறோம்"
- ↑ "உண்மையில் தோய்ந்த அன்பு"