உள்ளடக்கத்துக்குச் செல்

மகுடிக் கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகுடிக் கூத்து இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியில் ஆடப்படும் ஒருவகைப் பாரம்பரியக் கூத்து. இக்கூத்து முள்ளியவளைப் பிரதேசத்தின் கலையம்சமாகவும் விளங்குகின்றது. அந்நியர் ஆட்சியின் அடக்குமுறைகள், சாதிய மேலாண்மை என்பவற்றுக்கு எதிர்க் குரலாக இக்கூத்தின் பாடுபொருள் அமைகிறது. இந்த மகுடிக் கூத்து, வட்டக்களரியில் இரவு முழுதுமாக ஆடப்படுகிறது. இக்கூத்தினை, இப்போது ஏழாவது சந்ததியினர் தொடர்ந்து கொண்டு செல்கின்றனர்.

பிரதான கதை

[தொகு]

மகுடிக்கூத்திற்கென ஓர் ஐதீகம் உண்டு. முற்காலத்தில் ஆலயமொன்றில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை, வேற்று மதத்தவர்கள் கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டு இவ்வூரை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் வியாபார நோக்கம் கருதி வந்ததால் அவ்விடத்திலே கொட்டகைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவ்வேளையில் ஆலயத் திருவிழாவிற்கான பொருட்களை வாங்குவதற்காக குருக்களும் இன்னும் சிலரும் இவர்களது கடைகளை நோக்கிச் சென்றுள்ளனர். கடையில் தேவையான பொருட்களை வாங்கிவிட்டுப் பணம் செலுத்தும்போது பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வியாபாரி அவசரம் இல்லை பணத்தை பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கூற, குருக்களும் அந்த குழுவினரும் ஆலயத்தை நோக்கி சென்றுவிட்டனர். இரு தினங்கள் கழித்து குறித்த வியாபாரி பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கருவாட்டுடன் ஆலயத்திற்குள் நுழைந்து, குருக்கள் பூஜை செய்து கொண்டிருக்கும் வேளையில் சத்தமிட்டு பணத்தை கேட்டுள்ளார். வியாபாரி கருவாட்டுடன் ஆலயத்தில் நுழைந்ததும் இல்லாமல், தனது சிவபூசையையும் கெடுத்துவிட்டான் என்ற கோபத்தில் ஆலயத்தை விட்டு வெளியேறு என்று குருக்கள் பலமாகக் கத்தியுள்ளார். கோபம் வந்த வியாபாரி, என்னையா ஆலயத்தை விட்டு வெளியேறச் சொல்கிறாய்? இரு உன்னை துர்சக்திகளைக் கொண்டு அழிக்கின்றேன் என்று கூறி, தனது பெரிய தந்தையை நோக்கிச் சென்றுள்ளார். விடயமறிந்த அந்த வியாபாரியின் பெரிய தந்தை, துர்சக்தியை ஆலயத்தை நோக்கி ஏவி விட்டாராம். ஆலயத்தை நோக்கிச் சென்ற துர்சக்தியும் அந்த வியாபாரியும் ஆலய முன்றலில் வைக்கப்பட்டிருந்த கும்பத்தை உடைக்க முற்பட்டபோது பிராமணருக்குக் கோபம் வர, இறைவனை நினைத்து விபூதியைத் தூவி விட்டுள்ளார். உடனே அந்த வியாபாரியும் துர்சக்தியும் நிலத்தில் வீழ்ந்தனர். இதனைக் கேள்வியுற்று வந்த வியாபாரியின் பெரிய தந்தை, குருக்களிடம் தான் செய்தது பிழை எனவும், மன்னித்து விட்டுவிடும்படியும் குருக்களின் காலில் வீழ்ந்து கதறி அழுதுள்ளார். பின்பு குருக்கள் இறைவனின் மகிமையை அந்த வியாபாரியின் பெரிய தந்தைக்கு எடுத்துக் கூறி, இனி தவறு செய்ய வேண்டாமென அறிவுறுத்தி மன்னித்து விடுகின்றார். இதுவே மகுடிக்கூத்தின் பிரதான கதையாக விளங்குகின்றது.

பாத்திரங்கள்

[தொகு]

இதில் குருக்களும், வியாபாரிகளும் பிரதான பாத்திரங்கள். இவர்களுடன் பல துணைப்பாத்திரங்களும் இணைந்து கொள்கிறார்கள்.

ஆடையமைப்பு

[தொகு]

கதையில் இடம் பெறும் வியாபாரிகள் வேற்றுமதத்தினர் என்பதால் அவர்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில் ஆடையமைப்புகளும்,, நடனஅமைப்புகளும் வடிவமைக்கப் படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுடிக்_கூத்து&oldid=2593317" இலிருந்து மீள்விக்கப்பட்டது