உள்ளடக்கத்துக்குச் செல்

1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1906 Intercalated Games

1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகள் அல்லது 1906 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கிரேக்கத்தின் ஏதென்சில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். அவை நிகழ்த்தப்பட்டபோது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்று கருதபட்டு "ஏதென்சில் இரண்டாம் பன்னாட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்" என்று பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் அழைக்கப்பட்டது.[2] இந்த விளையாட்டுக்களில் பங்கேற்ற வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டாலும் இன்று இந்தப் பதக்கங்களை பன்னாட்டு ஒலிம்பிக் குழு அங்கீகரிக்கவில்லை.[3] லோசானிலுள்ள ஒலிம்பிக் அருங்காட்சியகத்திலும் இந்தப் பதக்கங்கள் காட்சிப்படுத்தப்படாது உள்ளன.

தோற்றம்

[தொகு]

முதல் இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் 1901இல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை பல நாடுகளில் நிகழ்த்தவிருந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு நடுவே எப்போதுமே ஏதென்சில் நடக்குமாறு இந்த ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிடப்பட்டன. இது ஒரு பிணக்குத் தீர்வாகவே எழுந்தது: 1896இல் ஏதென்சில் கிரேக்கர்கள் வெற்றிகரமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியபிறகு அங்குதான் ஒவ்வொரு ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அங்கு விளையாட்டரங்குகளின் கட்டமைப்புகள் இருந்தமையாலும் நன்றாக ஒழுங்குபடுத்தும் திறன் கொண்டிருந்தமையாலும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவில் பல நாடுகள் இதனை ஆதரித்தன. இருப்பினும் குழுவின் நிறுவனரான பியர் தெ குபர்த்தென் இத்தகைய அமைப்பைக் கடுமையாக எதிர்த்தார். ஒலிம்பிக் இயக்கத்தை உலகெங்கும் எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருந்த அவர் அத்தகைய முதல் போட்டிகளை பாரிசில் 1900ஆம் ஆண்டு நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால் 1900இல் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளும் 1904இல் ஐக்கிய அமெரிக்காவில் நடந்த போட்டிகளும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் ப.ஒ.கு கிரேக்கக் கருத்துருவை ஏற்று ஏதென்சில் இரண்டாவது தொடரை முதல் தொடருக்கு நடுவில் நடத்த ஒப்புதல் அளித்தது. அனைத்து போட்டிகளுமே பன்னாட்டு பல்திறன் விளையாட்டுப் போட்டிகளாயிருக்கும்; இரண்டிற்குமான வேறுபாடு ஒரு தொடர் குபர்த்தெனின் கருத்துருப்படி வெவ்வேறு நாடுகளில் நடக்க, மற்றொரு தொடர் கிரேக்கக் கருத்துருப்படி ஏதென்சை நிரந்தர தாயகமாகக் கொண்டு கிரேக்கத் தேசிய ஒலிம்பிக் குழுவால் ஒருங்கிணைக்கப்படும். 1902ஆம் ஆண்டு மிக அண்மையில் இருந்தமையால் ஏதென்சின் இரண்டாம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1906இல் நடைபெற்றன.

முதல் இடைச்செருகிய போட்டிகள்

[தொகு]
1906ஆம் ஆண்டு போட்டிகளின் ஒழுங்கமைப்புக் குழு

1906ஆம் ஆண்டுப் போட்டிகள் வெற்றிகரமாக அமைந்தன. 1900, 1904 அல்லது 1908 விளையாட்டுப் போட்டிகள் போலன்றி இந்தப் போட்டிகள் பல மாதங்கள் இழுத்தடிக்கப்படவில்லை; எந்தவித பன்னாட்டு கண்காட்சியாலும் மறைக்கபடவும் இல்லை. மிகக் குறுகிய காலமே கொண்ட இந்தப் போட்டி வடிவமைப்பே இன்றுவரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகக் கொள்ளலாம்.

இந்த விளையாட்டுக்களில்தான் முதன்முதலாக அனைத்து போட்டியாளர்களும் தங்கள் தேசிய ஒலிம்பிக் குழுவில் பதிந்து கொண்டவர்களாக இருந்தனர். இதில்தான் முதன்முதலாகத் தனியான துவக்கவிழா இருந்தது. இந்த துவக்கவிழாவில் போட்டியாளர்கள் தேசிய அணிகளாக, தங்கள் தேசியக் கொடிகளை ஏந்தியவரின் பின்னால், விளையாட்டரங்கினுள் அணிவகுத்து நுழைந்தனர். ஒலிம்பிக் குடியிருப்பு, முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டது. நிறைவு விழா, வெற்றி பெற்றவர்களின் நாட்டுக் கொடி உயர்த்தப்படுதல் போன்ற பல வழமைகள் இந்தப் போட்டிகளில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.

விளையாட்டுக்கள்

[தொகு]
1906இல் பனதினைக்கோ விளையாட்டரங்கம்

இந்த விளையாட்டுப் போட்டிகள் 22 ஏப்ரல் முதல் 2 மே 1906 வரை கிரீசின் ஏதென்சில் நடந்தது. 1896இல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தேறிய அதே பனதினைக்கோ விளையாட்டரங்கில் நடந்தது. முதல் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றிருந்த பல விளையாட்டுக்கள் இதில் இடம் பெறவில்லை; அவை ஒலிம்பிக் விளையாட்டுக்களின் அங்கமா என்பதுக் குறித்த தெளிவின்றி இருந்தது. புதியதாக ஈட்டி எறிதலும் ஐந்திறப் போட்டியும் அறிமுகமாயின.

திறப்பு

[தொகு]

இந்த விளையாட்டுக்களில்தான் தனியான திறப்பு விழா நடந்தது. பெரும்திரளானோர் இதனைக் கண்டு களித்தனர். போட்டியாளர்கள் முதன்முறையாக தங்கள் நாட்டுக்கொடிகளின் பின்னே அணிவகுத்து அரங்கினுள் நுழைந்தனர். இதனை அலுவல்முறையாக மன்னர் முதலாம் ஜார்ஜ் திறந்து உரையாற்றினார்.

மாண்சீர்க் கூறுகள்

[தொகு]
மாரத்தான் முடிவுறுதல்
  • ஏதென்சில் இரண்டு தாண்டுதல் போட்டிகளே இருந்தன. இரண்டிலும் ரே எவ்ரி வென்று முந்தைய பதக்கங்களை பாதுகாத்துக் கொண்டார். மொத்தமாக எட்டு தங்கப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார். பின்னதாக 1908இலும் தங்கப்பதக்கம் பெற்று தனது மொத்த பதக்கங்களை 10ஆக உயர்த்திக் கொண்டார். இந்த சாதனை 2008இல் மைக்கல் ஃபெல்ப்ஸ் தனது மொத்த ஒலிம்பிக் பதக்கங்களை 14ஆக உயர்த்திக்கொள்ளும் வரை நீடித்தது.
  • பவுல் பில்கிரிம் நடுத்தூரப் போட்டிகளான 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் இரண்டிலும் வென்ற சாதனை மொண்ட்ரியால் 1976 இல் ஆல்பெர்ட்டோ யுவான்டோரெனா திருப்பி நிகழ்த்தும் வரை இவர் பெயரிலேயே இருந்தது.
  • கனடிய பில்லி செரிங் உள்நாட்டு வானிலைக்கேற்ப பழகுவதற்காக இரண்டு மாதங்கள் கிரீசிலேயே தங்கியிருந்தார். இதனால் மாரத்தானில் எதிர்பாராவிதமாக வெற்றி பெற்றார். இவருடன் இறுதிச் சுற்றில் இளவரசர் ஜார்ஜ் உடன் ஓடினார்.[4]
  • பின்லாந்து முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. முதல் ஒலிம்பிக்கிலேயே அந்நாட்டின் வெர்னர் யார்வினென் வட்டெறிதலில் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
  • அயர்லாந்தின் பீட்டர் ஓகொனர் மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார். பிரித்தானியக் கொடியை ஏற்றியதற்கு எதிர்ப்பாக ஓகொனர் கொடிரமத்தின் மீதேறி பச்சைவண்ண அயர்லாந்தின் கொடியை ஏற்றினார். அவரது இச்செயலிற்கு அமெரிக்க போட்டியாளர்களும் அயர்லாந்து ஆதரவாளர்களும் கொடிமரத்தைச் சுற்றி பாதுகாப்பு வழங்கினர்.
  • அயர்லாந்து அமெரிக்க விளையாட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த மார்ட்டின் செரிடான் ஐக்கிய அமெரிக்கா சார்பில் பங்கேற்று 16 பவுண்டு குண்டெறிதலிலும் கட்டற்ற வட்டெறிதலிலும் தங்கப் பதக்கத்தையும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் கல் எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் மிகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற போட்டியாளராக இவர் விளங்கினார். இவரது சாதனைக்காக மன்னர் முதலாம் ஜார்ஜ் அலங்கார ஈட்டி ஒன்றைப் பரிசளித்தார். இந்த ஈட்டி இன்னமும் அயர்லாந்தின் மாயோ கௌன்ட்டியில் உள்ள செரிடானின் பிறப்பிடமான போகோலாவில் ஓர் உள்ளூர் மதுவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நிறைவு விழா

[தொகு]

ஒலிம்பிக்கின் முதல் நிறைவுவிழாவாகக் கருதக்கூடிய விழாவில் ஆறாயிரம் பள்ளிச் சிறார்கள் பங்கேற்றனர்.

பங்கேற்ற நாடுகள்

[தொகு]

20 நாடுகளிலிருந்து 854 போட்டியாளர்கள், 848 ஆடவர், 6 மகளிர், 1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.[1]

1906 ஒலிம்பிக்கில் பங்கேற்றோர்

பதக்கங்கள்

[தொகு]

இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்ட போதிலும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் தற்போது ஏற்றுக்கொள்ளப்படாது உள்ளன.

கீழ்வரும் அட்டவணையில், போட்டி நடத்தும் நாடு தனிவண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.[1]

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  பிரான்சு 15 9 16 40
2  ஐக்கிய அமெரிக்கா 12 6 6 24
3  கிரேக்க நாடு 8 14 13 35
4  பெரிய பிரித்தானியா 8 11 5 24
5  இத்தாலி 7 6 3 16
6  சுவிட்சர்லாந்து 5 6 4 15
7  செருமனி 4 6 5 15
8  நோர்வே 4 2 1 7
9  ஆஸ்திரியா 3 3 3 9
10  டென்மார்க் 3 2 1 6
11  சுவீடன் 2 5 7 14
12  அங்கேரி 2 5 3 10
13  பெல்ஜியம் 2 1 3 6
14  பின்லாந்து 2 1 1 4
15  கனடா 1 1 0 2
16  நெதர்லாந்து 0 1 2 3
17  கலவை அணி 0 1 0 1
18  ஆத்திரேலியா 0 0 3 3
19  பொகேமியா 0 0 2 2
மொத்தம் 78 80 78 236

பெல்ஜிய/கிரேக்க விளையாட்டாளர்களைக் கொண்ட கலவை அணி ஒரு மைல் படகு வலிக்கும் இரட்டையர் போட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றது. இசுமைர்னாவின் அணிக்குக் கிடைத்த வெள்ளிப் பதக்கமும் தெசோலிங்கிற்கு காற்பந்தில் கிடைத்த வெண்கலப் பதக்கமும் கிரேக்கர்களால் வெல்லப்பட்டது. இக்காலத்தில் இந்த இரு நகரங்களும் உதுமானியாவின் ஆட்சியில் இருந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "1906 Athina Summer Games". sports-reference.com. Archived from the original on 2013-09-22. பார்க்கப்பட்ட நாள் 2014-01-29. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Journal of Olympic History, Volume 10, திசம்பர் 2001/சனவரி 2002, The 2nd International Olympic Games in Athens 1906, by Karl Lennartz" (PDF). Archived from the original (PDF) on 2012-05-15. பார்க்கப்பட்ட நாள் 2014-03-19.
  3. What Events are Olympic? பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம் Olympics at SportsReference.com. Accessed 7 Sep 2008.
  4. The Olympic games at Athens, 1906 by James E. Sullivan, American commissioner to the Olympic games. Published 1906.
  5. பின்லாந்தின் முடியாட்சி உருசியப் பேரரசின் அங்கமாக இருந்தது. இருப்பினும் தனிநாடாக நடத்தப்பட்டது.
  6. 1906 ஒலிம்பிக்கில், ஓட்டோமான் பேரரசைக் குறிக்க "துருக்கி" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.