ஒலிம்பிக் மரபுவிழாக்கள்
ஒலிம்பிக் விளையாட்டுக்களின் மரபுவிழாக்கள் (Olympic Games ceremonies) பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்களின் அங்கமாக இருந்தன. இதிலிருந்து வழித்தோன்றிய தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் இவற்றில் சிலவற்றைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்த மரபுவிழாக்களில், முக்கியமாக துவக்கவிழா மற்றும் நிறைவு விழாக்களில், கிரேக்கத்தின் தாக்கம் மிகுந்திருக்கும். இதனையொட்டி 2004 விளையாட்டுக்களில், பதக்கம் வென்றவர்களுக்கு சைத்தூன் கிளைகளாலான கிரீடங்கள் அணியப்பெற்று பதக்கங்கள் வழங்கப்பட்டன. இது பண்டைய ஒலிம்பிக்கில் வெற்றியாளர்களுக்கு சைத்தூன் வளையங்களைப் பரிசாக கொடுத்ததற்கு ஒப்பானது. ஒலிம்பிக் மரபுவிழாக்களின் பல்வேறு கூறுகளையும் ஒலிம்பிக் பட்டயம் கட்டாயமாக்குகிறது; போட்டிகளை நடத்தும் நாடு இவற்றை மாற்றவியலாது. துவக்கவிழா மற்றும் நிறைவு விழாக்களில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகள் கூட பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் (IOC) ஒப்புதலைப் பெறவேண்டும்.
இந்த விழாக்கள் பல நூற்றாண்டுகளாக மாற்றமடைந்து வந்துள்ளன. பண்டைய விளையாட்டுக்களில் ஒவ்வொரு அடுத்தடுத்த விளையாட்டுப் போட்டிகளின் துவக்கத்தையும் முடிவையும் குறிக்க விழாக்கள் நடத்தப்பட்டன. இந்த பண்டைக்கால விழாக்களுக்கும் தற்கால விழாக்களுக்கும் ஒப்புமைகளும் வேற்றுமைகளும் உள்ளன. தொழினுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டு வந்தபோதும் போட்டி நடத்தும் ஒவ்வொரு நாடும் தங்கள் கலைப் பண்பாட்டைக் காட்சிப்படுத்த விரும்பினாலும் இந்த விழாக்களின் அடிப்படைத் தன்மை மாறாதுள்ளது. ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் முந்தையதை விட துவக்க விழாவும் நிறைவு விழாவும் பிரம்மாண்டம், பரப்பு மற்றும் செலவு ஆகியவற்றில் வளர்ந்து கொண்டே இருந்தபோதும் மரபு வழாது உள்ளன.
பண்டையக் கால விழாக்கள்
[தொகு]கி.மு 776 முதல் கி.பி 393 வரை நடைபெற்ற பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில்[1] வெற்றி விழாக்கள் விரிவான விருந்துகள், குடி, பாட்டு மற்றும் கவிதை வாசிப்புடன் திகழ்ந்தன; இவற்றின் சில கூறுகளை இன்றைய ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பதக்கங்கள் வழங்கு விழாக்களிலும் நிறைவு விழாக்களிலும் காணலாம். பரிசு வென்றவரின் செல்வச்செழிப்பை ஒட்டி வெற்றிவிழாவின் ஆடம்பரமும் இருக்கும்.[2] வெற்றியாளர்களுக்கு சைத்தூன் வளையங்கள் அல்லது மகுடங்கள் வழங்கப்பட்டன. இதற்கான சைத்தூன் கிளைகள் ஒலிம்பியா, கிரீசு|ஒலிம்பியாவில் இதற்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு மரமொன்றிலிருந்து இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவனால் தங்கக் கோடாலி மூலம் வெட்டப்பட்டன.[2] வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் புனித சூளுரைகள் கூறுவதுடனும் பல்வேறு கடவுள்களுக்கு மரபார்ந்த பலிகள் கொடுக்கப்பட்டும் நிறைவு விழா கொண்டாடப்படும்.[2]
இந்த பழங்கால விளையாட்டுக்கள் நடைபெற்ற 12 நூற்றாண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நேர்ந்துள்ளன. கிட்டத்தட்ட 77வது ஒலிம்பியாட்டிலிருந்து 18 நிகழ்வுகளைக் கொண்ட சீர்தர நிரல் வடிவமைக்கப்பட்டது.[3] பண்டைய கிரேக்கத்தில் இந்த விளையாட்டுக்களை தொடங்கிட திறப்பு விழாவொன்று நடத்தப்பட்டது. இதனையடுத்து விளையாட்டு வீரர்கள் போட்டி நேர்மைப் பண்பு குறித்த சூளுரை மேற்கொள்வர். தாரை, குழலூதிகளின் கலைப் போட்டிகள் முதல் போட்டிகளாக நடைபெற்று துவக்க விழா முடிவடையும்.[3]
துவக்க விழா
[தொகு]ஒலிம்பிக் துவக்க விழா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முறையாக தொடங்கப்படுவதை குறிக்கின்றன. தற்கால ஒலிம்பிக்கில் துவக்க விழாவிற்கு முன்னதாகவே சில விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன. காட்டாக, 2008இல் ஆடவர் மற்றும் மகளிருக்கான காற்பந்தாட்டங்கள் துவக்க விழாவிற்கு இருநாட்கள் முன்னதாகவே (ஆகத்து 6) துவங்கின.[4] ஒலிம்பிக் பட்டயத்தின்படி துவக்கவிழாவின் பல கூறுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.[5][6] இந்தப் பல்வேறு சடங்குகளும் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் நடந்த 1920 ஒலிம்பிக் போட்டிகளின்போது கட்டாய விதிகளாக்கப்பட்டன.[7]
கலை நிகழ்ச்சிகள்
[தொகு]குபேர்ட்டின் கனவுகண்ட தற்கால ஒலிம்பிக்சில் கலைச்சாதனைகளும் விளையாட்டுப் போட்டிகளும் இணைந்தே இடம் பெற்றிருந்தன.[8] தற்கால ஒலிம்பிக் ஓர் விளையாட்டை மையப்படுத்திய கொண்டாட்டமாக மாற்றமடைந்து வருகையில் துவக்க விழாவில் மட்டுமே குபேர்ட்டினின் கனவைக் காண இயல்கிறது. துவக்க விழாக்கள் பொதுவாக போட்டி நடாத்தும் நாட்டின் கொடியேற்றத்துடனும் நாட்டுப்பண்ணுடனும் தொடங்குகிறது.[5][6] போட்டி நடத்தும் நாட்டின் இசை, பாடல்கள், நடனங்கள் மற்றும் பிற நாடகத் திறமைகள் அவர்களது நாட்டுப் பண்பாடு, வரலாறு மற்றும் நடப்பு ஒலிம்பிக் குறிக்கோள்களை முதன்மைப்படுத்தும் வண்ணம் காட்சிப்படுத்தப்படுகின்றன.[7] மாசுக்கோவின் 1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதல், இந்தக் கலைக்காட்சிகள் அளவிலும் சிக்கலான வடிவமைப்பிலும் பெரிதும் முன்னேறியுள்ளன. பீஜிங்கில் நடந்த போட்டிகளின்போது இந்த கலைநிகழ்ச்சிகளுக்கு US$100 மில்லியன் செலவிடப்பட்டது.[9]
நாடுகளின் அணிவகுப்பு
[தொகு]துவக்கவிழாவின் மரபார்ந்த அங்கமாக முதலில் "நாடுகளின் அணிவகுப்பு" நடைபெறுகிறது. போட்டிகளில் பங்கேற்கும் பெரும்பாலான விளையாட்டாளர்கள், நாடுவாரியாக, விளையாட்டரங்கினுள் அணிவகுத்து நுழைகின்றனர். இந்த அணிவகுப்பில் பங்கேற்பது போட்டியாளர்களுக்கு கட்டாயமில்லை. துவக்கவிழாவிற்கும் முதல் போட்டி நிகழ்வுகளுக்கும் இடையே நேர இடைவெளி குறைவாக இருப்பதால் இந்த துவக்க விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் துவக்கவிழாவில் பங்கேற்பதில்லை. மிகப் பெரும்பாலும் நீச்சற்போட்டிகள் போட்டிகளின் முதல் நாளில் நடைபெறுவதால் நீச்சற் போட்டியாளர்கள் துவக்கவிழாவில் பங்கேற்பதில்லை.
தங்கள் நாட்டின் பெயர் தாங்கியப் பலகை மற்றும் கொடியுடன் கூடிய சார்பாளர்கள் ஒவ்வொரு நாட்டு அணியின் முன்னிலையில் செல்கின்றனர்.[5][6] வழமையாக (1928 ஒலிம்பிக்கில் துவங்கி), ஒலிம்பிக் துவங்கிய வரலாற்றுக் காரணங்களுக்காக கிரீசு முதலிலும், போட்டிகளை ஏற்று நடத்துகின்ற நாட்டின் அணி இறுதியிலும் அணிவகுக்கின்றன.[7] ஏதென்சில் நடந்த 2004 ஒலிம்பிக்கில், கிரேக்கக் கொடி முதலில் அணிவர, கிரேக்க அணி, போட்டி நடத்தும் நாடாக, கடைசியில் வந்தது.
கீரிசிற்கு பின்னதாகவும் போட்டி நடத்தும் நாட்டுக்கு முன்னதாகவும் மற்ற நாட்டு அணிகள் அணிவகுத்து வருகின்றன. அணிவகுப்பு வரிசை அந்த ஒலிம்பிக்கின் ஒருங்கிணைப்புக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் அகரவரிசைப்படி அமைந்திருக்கும். இம்மொழி பெரும்பாலும் நடத்துகின்ற நகரத்தில் பெரும்பாலும் பேசப்படுகின்ற மொழியாக இருக்கும். அறிவிப்பாளர்கள் அணிவகுக்கும் நாட்டின் பெயரை ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் உள்ளூர் மொழியிலும் அறிவிக்கின்றனர். ஆங்கிலமும் பிரெஞ்சும் ஒலிம்பிக் குழுவின் அதிகாரபூர்வ மொழிகளாகும்.
பார்செலோனாவில் நடந்த 1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போது எசுப்பானியமும் காட்டலான் மொழியும் விளையாட்டுக்களுக்கான அலுவல்முறை மொழிகளாக இருந்தன. இருப்பினும் காட்டலான் மொழியின் பயன்பாடு குறித்த அரசியல் உணர்ச்சிகளுக்காக பிரெஞ்சு அகரவரிசையில் நாடுகள் அணிவகுத்து வந்தன. 2008 கோடைக்கால ஒலிம்பிக்கில், சீன மொழிபெயர்ப்பிலான அணிகளின் பெயரில் உள்ள கோடுகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அணிவகுப்பு இருந்தது.[10]
மரபுவழி நிகழ்ச்சிகள்
[தொகு]அனைத்து நாடுகளும் அணிவகுத்து அரங்கில் நுழைந்தவுடன் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உரையாற்றுகிறார். இவரையடுத்து பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவர் உரையாற்றுகிறார். தனது உரையின் முடிவில் போட்டி நடத்தும் நாட்டின் சார்பாளரை அறிமுகப்படுத்துகிறார். இவர் போட்டி நடத்தும் நகரத்தின் நாட்டுத் தலைவராக இருக்க வேண்டும் என்று ஒலிம்பிக் பட்டயம் வரையறுக்கிறது. இவர் போட்டிகள் தொடங்குவதாக முறையாக அறிவிக்கிறார்.[11] இருப்பினும், ஒலிம்பிக்கின் வரலாற்றில் பலமுறை நாட்டுத் தலைவரல்லாது பிறிதொருவர் விளையாட்டுக்களை தொடங்கியதாக அறிவித்துள்ளனர். முதல் பிறழ்வாக 1900இல் பாரிசில் நடந்த இரண்டாம் ஒலிம்பியாட்டில் துவக்கவிழா எதுவம் நடைபெறவில்லை; 1900 உலக வணிகக் கண்காட்சியின் அங்கமாக ஒலிம்பிக் நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே ஐந்து முறை ஒலிம்பிக் போட்டிகளை நாட்டுத்தலைவர் தொடங்கவில்லை.[12]
ஒலிம்பிக் பட்டயம் பின்வரும் வரிகளில் பொருத்தமான ஏதாவதொன்றை தொடங்கி வைப்பவர்[11] கூற வேண்டும் என வரையறுக்கிறது:
- ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்களில் (கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்): I declare open the Games of [name of the host city] celebrating the [ordinal number of the Olympiad] Olympiad of the modern era.
- குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில்: I declare open the [ordinal number] Olympic Winter Games of [name of the host city].
1936க்கு முன்பாக தொடங்கி வைப்பவர் ஓர் சிற்றுரையை ஆற்றிய பின்னர் போட்டிகளைத் தொடங்கி வைப்பார். 1936இல் இட்லர் கார்மிச் பார்டேன்கிர்கென் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளையும் பெர்லின் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளையும், தொடங்கியதை அடுத்து வந்த அனைத்து தொடக்கம் அறிவித்தவர்களும் சீர்தர உரையுடன் நிறுத்திக் கொண்டனர். அண்மைய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதல் வரிகளே பயன்படுத்தப்படும் முறைமை உள்ளது.[13]
அடுத்து, ஒலிம்பிக் சின்னங்கள் கிடைமட்டமாக (1960 ஒலிம்பிக்கிலிருந்து) அரங்கினுள் கொணரப்பட்டு ஒலிம்பிக் வாழ்த்துப்பாடல் இசைக்க, ஏற்றப்படுகிறது. ஒலிம்பிக் பட்டயத்தின்படி "முதன்மை விளையாட்டரங்கில் கவனிக்கத்தக்க இடத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் முழைமையான காலத்திற்கும் ஒலிம்பிக் கொடி பறந்து கொண்டிருக்க" வேண்டும்.[11] பெரும்பான்மையான ஒலிம்பிக்குகளில், போட்டி நடத்தும் நாட்டின் சிறப்புமிக்க விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியை அரங்கினுள் ஏந்தி வருகின்றனர்.
அனைத்து நாடுகளின் கொடியேந்திகளும் ஒரு வட்டமாக கூடிட, நடத்தும் நாட்டின் விளையாட்டாளர் ஒருவரும் (1920 முதல்) நடத்தும் நாட்டின் நடுவர் ஒருவரும் (1972 முதல்) ஒலிம்பிக் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். இந்த உறுதிமொழியில் போட்டியாளர்கள் அந்தந்த விளையாட்டு விதிமுறைகளின்படி போட்டியிடவும் தீர்ப்பு வழங்கவும் உறுதிகொள்கின்றனர்.[11] இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக்கில் பயிற்றுனர் ஒருவரும் ஒலிம்பிக் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ஒலிம்பிக் தீச்சுடர்
[தொகு]இறுதியாக தீவட்டி அஞ்சலோட்டம் மூலமாக பல்வேறு விளையாட்டு வீரர்களிடம் கைமாறி ஒலிம்பிக் தீவட்டி விளையாட்டரங்கினுள் கொணரப்படுகிறது. கடைசி சுற்று ஓட்டத்தில் போட்டி நடத்தும் நாட்டின் சிறப்புமிக்க விளையாட்டு வீரர்கள் இதனை எடுத்து வந்து அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் தீக்கொப்பரை (அல்லது தீச்சட்டி)யில் எரியூட்டுகிறார்கள்.[5][6] ப.ஒ.கு விதிகளின்படி, ஒலிம்பிக் தீச்சட்டியில் தீ மூட்டுவதை திறப்பு விழாவிற்கு வந்துள்ள அனைவரும் காணுமாறு இருத்தல் தேவையாகும். எனவே இதன் அமைவிடம் துவக்கவிழா நடக்குமிடத்தில் இருக்க வேண்டும். மற்றொரு விதியின்படி நடத்தும் நகரத்தின் அனைத்துக் குடிமக்களும் காணுமாறும் இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் 2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது தெளிவானது. வான்கூவரில் துவக்கவிழா நடந்த பிசி பிளேசு விளையாட்டரங்கம் காற்றினால் தாங்கப்பட்ட குவிமாட வகையைச் சேர்ந்தது. இதனால் தீச்சட்டியை உள்ளே இருப்பவர்களும் வெளியே இருப்பவர்களும் ஒருசேரக் காண இயலாததாக இருந்தது. இதற்குத் தீர்வாக இரண்டு தீச்சட்டிகள் பயன்படுத்தப்பட்டன. முதல் தீவட்டியை அரங்கினுள் ஏற்றியபிறகு ஓர் தானுந்தில் பயணித்து எரியூட்டுபவர் ஊரில் அனைவருக்கும் தெரியுமாறமைந்த இரண்டாவது தீச்சட்டியை ஏற்றினார்.
இதேபோல 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் விளையாட்டரங்கினுள் அமைக்கப்பட்டிருந்த தீக்கொப்பரை அரங்கிற்கு வெளியேத் தெரியவில்லை. இதனால் எரிகின்ற தீக்கொப்பரையின் படிமம் விளையாட்டரங்கின் கூரைமீதிருந்த திரைகளில் முதல் சில வாரங்களுக்கு முன்வீச்சப் பட்டது.[14] நிகழலை ஒளிதம் அனைத்து ஒளிபரப்பு உரிமை பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.[15]
புறாக்கள்
[தொகு]முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய 1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிருந்து, ஒலிம்பிக் தீச்சட்டியை ஏற்றிய பின்னர் அமைதியை குறிக்கும் வண்ணம் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. 1988ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கில் இச்சடங்கின்போது பல புறாக்கள் ஒலிம்பிக் தீயில் உயிருடன் கருகியதை அடுத்து தொடர்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்நிகழ்வு கைவிடப்பட்டது.[16] இதற்கு மாற்றாக ஒலிம்பிக் தீ ஏற்றப்பட்டபின்னர் ஓர் குறியீடாக புறாக்களை பறக்கவிடுவது நிகழ்த்தப்பட்டது.[5][6]
2000 கோடைக்கால ஒலிம்பிக்கின் துவக்கவிழாவில், விளையாட்டாளர்கள் பிடித்துக்கொண்டிருந்த வெள்ளைத் துணியொன்றில் புறாவின் படிமங்கள் முன்வீச்சப் பட்டன. 2004 துவக்க விழாவில் ஒளிகாலும் இருமுனைய திரைகள் பயன்படுத்தப்பட்டன. 2006 துவக்க விழாவில், கழைக்கூத்தாடிகள் புறா போன்ற வடிவத்தை அமைத்தனர். 2008 துவக்க விழாவில் புறாக்களையொத்த வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன. 2010இல் புறா படிமங்கள் தரையில் முன்வீச்சப்பட்டன. 2012 துவக்கவிழாவில் ஒளிகாலும் இருமுனையங்களால் ஒளியூட்டப்பட்ட புறாச்சிறகுகளைக் கொண்ட மிதிவண்டிக்காரர்கள் வலம் வந்தனர்.
பதக்கங்கள் வழங்குவிழா
[தொகு]ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் நடந்து முடிந்த பின்னர் பதக்கம் வழங்கும் விழா நடைபெறும். கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் போட்டி நடந்து முடிந்த உடனடியாக போட்டி மைதானத்திலேயே பதக்கங்கள் வழங்கப்படும். ஆனால் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், சில போட்டிகளைத் தவிர்த்து, பெரும்பாலானவற்றிற்கு இதற்கான தனிப்பதக்க வளாகத்தில் இரவுநேரத்தில் வழங்கப்படுகின்றது. மூன்றடுக்குகள் உள்ள பதக்க மேடையில் –தங்கப் பதக்கம் வென்றவர் மிக உயரமான மேடையிலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர் அடுத்த உயரமான மேடையிலும் வெண்கலப் பதக்கம் வென்றவர் மற்ற மேடையிலும் நிற்க– ப.ஒ.குழுவின் உறுப்பினர் ஒருவர் பதக்கங்களை அணிவிப்பார்.[17] இந்த உறுப்பினருடன் செல்லும் அந்த விளையாட்டைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் சார்பாளர் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் மலர்ச்செண்டு கொடுப்பதும் வழக்கமாயுள்ளது. ஏதென்சில் நடந்த 2004 போட்டிகளில் பதக்க வெற்றியாளர்களுக்கு சைத்தூன் வளையங்களும் பண்டைய ஒலிம்பிக்கின் நினைவாக வழங்கப்பட்டன. பதக்கங்கள் வழங்கப்பட்ட பின்னர், மூன்று வெற்றியாளர்களின் நாட்டுப் கொடிகளும் ஏற்றப்படும். தங்கப் பதக்கம் வென்றவரின் நாட்டுக் கொடி மையத்திலும் மிக உயரமாகவும் வெள்ளி பதக்க நாட்டுக் கொடி இடது புறத்திலும் வெண்கலப் பதக்க நாட்டின் கொடி வலது புறத்திலும், தங்கப் பதக்க கொடியை விட குறைந்த உயரத்தில் பறக்க விடப்படும். கொடிகள் ஏற்றப்படும்போது தங்கப் பதக்கம் வென்றவரின் நாட்டுப்பண் இசைக்கப்படும்.[18] போட்டி நடத்தும் நாட்டின் குடிமக்களும் இந்த விழாவினை நடத்துபவர்களாக செயல்படுவர். இவர்கள் பதக்கம் வழங்கும் அதிகாரிகளுக்கு உதவியாகவும் கொடியேந்திகளாகவும் செயல்படுவர்.[19]
இந்த விழாவின்போது விளையாட்டு வீரர்களின் நடத்தையைக் குறிக்கும் விதிகள் மிகவும் கடுமையானவை. அவர்கள் முன்னதாக அனுமதிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் அணி சீருடைகளையே அணிய வேண்டும். பதக்க மேடையில் எந்தவொரு அரசியல் சார்பை வெளிப்படுத்தவோ கோஷமிடவோ கூடாது.[11]
வழக்கமாக, கோடைக்கால ஒலிம்பிக்கில் ஆடவர் மாரத்தான் பதக்கங்கள் (குளிர்கால ஒலிம்பிக்கில் ஆடவர் 50கிமீ நாட்டுக்குறுக்கு பனிச்சறுக்கு பதக்கங்கள்) நிறைவு விழாவின் அங்கமாக, ஒலிம்பிக் விளையாட்டரங்கில், வழங்கப்படுகின்றன. இவையே ஒலிம்பிக் விளையாட்டுக்களின் கடைசி பதக்கங்களாக உள்ளன.
நிறைவு விழா
[தொகு]துவக்க விழா நிகழ்ச்சிகளுக்கு மாறாக நிறைவு விழாவின் பல கூறுகள் ஒலிம்பிக் பட்டயத்தில் விதிகளின்படி அமையாது மரபுவழியாக வந்துள்ளன.[20]
துவக்க விழாவைப் போன்றே நிறைவு விழாக்களும் போட்டி நடத்தும் நாட்டின் கொடியை ஏற்றி அந்நாட்டு நாட்டுப் பண்ணை இசைப்பதுடன் துவங்குகிறது.[20] நிறைவு விழாவின் மரபார்ந்த அங்கங்கள் "கொடிகளின் அணிவகுப்புடன்"[20] துவங்குகின்றன. பங்கேற்ற ஒவ்வொரு நாட்டின் கொடியேந்திகளும் ஒரே வரிசையில் விளையாட்டரங்கில் நுழைகின்றனர். அவர்களுக்குப் பின்னே அனைத்து போட்டியாளர்களும் தேசியப் பாகுபாடின்றி உள்ளே நுழைகின்றனர். இந்த "விளையாட்டாளர்களின் அணிவகுப்பு",[20] மரபு 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து துவங்கியது. மெல்பேர்ன் நகரத்து சிறுவன் ஜான் இயான் விங் என்பவனின் ஆலோசனைப்படி உலக விளையாட்டாளர்களை ஒற்றுமைப்படுத்தி "ஒரே தேசமாக்க" இது அறிமுகப்படுத்தப்பட்டது.[21]
அனைத்து விளையாட்டாளர்களும் அரங்கில் நுழைந்த பின்னர் இறுதி பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெறும். ஒவ்வொரு போட்டி நடத்தும் நகரத்தின் போட்டிகள் ஒழுங்கமைவு குழுவும் ப.ஒ.குழுவின் அறிவுரைக்கேற்ப, எந்த விளையாட்டுப் போட்டியின் பதக்கங்கள் வழங்கப்படும் என்பதைத் தீர்மானிக்கிறது.[20] கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இது பொதுவாக ஆடவர் மராத்தான் போட்டியாக இருக்கும்.[20] வழமையாக, ஆடவர் மராத்தான் ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாளில் கடைசி மணித்துளிகளில் நடத்தப்பட்டு நிறைவு விழாவிற்கு சற்று முன்னரே முடிவடையுமாறு அமைக்கப்படும். இருப்பினும், அண்மைய கோடைக்கால ஒலிம்பியாடுகளில் ( அட்லான்டா, பீஜிங், இலண்டன் ) நடத்தும் நகரத்து வானிலையை ஒட்டி விடிகாலைப் பொழுதுகளில் மராத்தன் நடத்தப்பட்டது. 2006 குளிர்கால ஒலிம்பிக்கிலிருந்து, ஆடவர் நாட்டுக் குறுக்கு பனிச்சறுக்கு போட்டிகளுக்கான பதக்கங்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் வழங்கப்படுகின்றன. பதக்கம் வென்றவர்களின் நாட்டுக் கொடிகள் ஏற்றப்படுகிறது; தங்கப் பதக்கம் பெற்றவரின் நாட்டுப் பண் இசைக்கப்படுகிறது.
அடுத்து ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிறந்த கிரீசை கௌரவப்படுத்தும் வண்ணம் அந்நாட்டின் கொடி நாட்டுப்பண் இசைக்க ஏற்றப்படுகிறது. பின்னர் அடுத்த கோடைக்கால (அல்லது குளிர்கால) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாட்டின் கொடியும் அந்நாட்டுப் பண் இசைக்க ஏற்றப்படுகிறது.[20] மாசுக்கோவில் அடுத்த ஒலிம்பிக் நடக்கவிருக்கும் கொடியாக லாஸ் ஏஞ்சலஸ் நகரின் கொடி ஏற்றப்பட்டது; 1980இல் ஐக்கிய அமெரிக்க இப்போட்டிகளை புறக்கணித்ததை ஒட்டி அந்நாட்டுக் கொடி ஏற்றப்படவில்லை.[22]
பின்னர் ஒலிம்பிக் வாழ்த்துப்பாடல் ஒலிக்க, துவக்க விழாவின்போது ஏற்றப்பட்ட ஒலிம்பிக் கொடி கீழிறக்கப்பட்டு அரங்கத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறது.[20] ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிருந்து துவங்கியதால் ஆண்ட்வெர்ப் சடங்கு என்று அறியப்படும் சடங்கில் போட்டி நடத்திய நகரத்தின் நகரத்தந்தை (மேயர்) ஓர் சிறப்பு ஒலிம்பிக் கொடியை ப.ஒ.கு.தலைவருக்கு மாற்றிட அவர் அதை எதிர்வரும் போட்டிகளை நடத்தவிருக்கும் நகரத்தின் நகரத்தந்தைக்கு மாற்றி வழங்குகிறார்.[11] கொடியைப் பெற்றுக்கொண்ட நகரத்தந்தை அதை எட்டு முறை அசைக்கிறார். இந்த சிறப்புக் கொடிகள் மூன்று உள்ளன:
- ஆண்ட்வெர்ப் கொடி 1920ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கின் போது ப.ஒ.குழுவிற்கு ஆண்ட்வெர்ப் நகரத்தால் வழங்கப்பட்டது; இது அடுத்தடுத்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்திய நகரங்களுக்கு 1988 சியோல் ஒலிம்பிக் வரை கைமாறி வந்தது.
- சியோல் கொடி 1988ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கின் போது ப.ஒ.குழுவிற்கு தென் கொரியாவின் சியோல் நகரத்தால் வழங்கப்பட்டது; இது முந்தைய ஆண்ட்வெர்ப்]] கொடிக்கு மாற்றீடாக வழங்கப்பட்டது.
- ஒஸ்லோ கொடி 1952ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கின் போது ப.ஒ.குழுவிற்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தால் வழங்கப்பட்டது; இது அடுத்தடுத்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்திய நகரங்களுக்கு கைமாறி வருகிறது.
கொடி கைமாறிய பிறகு போட்டி நடத்தும் நாடு தனது கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் வண்ணம் கலைநிகழ்ச்சிகளை வழங்கி அறிமுகப்படுத்திக் கொள்கிறது. இந்த வழக்கம் 1976 ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிருந்து துவங்கியது.
கலைநிகழ்ச்சிகளுக்குப் பிறகு போட்டி ஒழுங்கமைப்புக் குழுவின் தலைவர் உரையாற்றுகிறார். இவரைத் தொடர்ந்து பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவர் உரையாற்றி இறுதியில் பின்வருமாறு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கூறி ஒலிம்பிக் போட்டிகளை நிறைவு செய்கிறார்:
And now, in accordance with tradition, I declare the Games of the [ordinal number of Summer Olympics] Olympiad/[ordinal number of Winter Olympics] Olympic Winter Games closed, and I call upon the youth of the world to assemble four years from now in [name of next host city] to celebrate the Games of the [subsequent ordinal number of Summer Olympics] Olympiad/[subsequent ordinal number of Winter Olympics] Olympic Winter Games.[23][24][25][26]
இறுதியாக, ஒலிம்பிக் தீச்சுடர் அணைக்கப்பட்டு அவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறைவடைகின்றன.[20]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Ancient Olympic Games". The Olympic Movement. பார்க்கப்பட்ட நாள் 2010-02-15.
- ↑ 2.0 2.1 2.2 Swaddling, Judith (1999). The Ancient Olympic Games. University of Texas Press. pp. 90–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-292-77751-5. பார்க்கப்பட்ட நாள் 2008-10-23.
- ↑ 3.0 3.1 Howell, Maxwell L. (1975). The Ancient Olympic Games:A Reconstruction of the Program. San Diego State University.
- ↑ "Complete Olympic Schedule". USA Today. 2008-08-10. http://www.usatoday.com/sports/olympics/beijing/results.htm. பார்த்த நாள்: 2008-12-30.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Fact sheet: Opening Ceremony of the Summer Olympic Games" (PDF). International Olympic Committee. June 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 "Fact sheet: Opening Ceremony of the Winter Olympic Games" (PDF). International Olympic Committee. June 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-12.
- ↑ 7.0 7.1 7.2 "The development of the Games – Between festival and tradition". The Modern Olympic Games (PDF). International Olympic Committee. 2009-09-12. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ de Coubertin, Pierre (1997). Olympic Memoirs. International Olympic Committee. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-9149-015-6.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ "Beijing Dazzles: Chinese History, on Parade as Olympics Begin". Canadian Broadcasting Centre. 2008-08-08 இம் மூலத்தில் இருந்து 2008-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080810214030/http://www.cbc.ca/olympics/story/2008/08/07/olympics-ceremonies.html. பார்த்த நாள்: 2009-01-10.
- ↑ Walker, Peter (2008-08-08). "Beijing Olympics open with spectacular ceremony". London: The Guardian. http://www.guardian.co.uk/sport/2008/aug/08/olympics2008.china1. பார்த்த நாள்: 2009-01-10.
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 "Olympic Charter" (PDF). The International Olympic Committee. 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
- ↑ முதலாவதாக செயின்ட். லூயி ஒலிம்பிக்கில் லூசியானா கொள்முதல் கண்காட்சித் தலைவர் டேவிட் பிரான்சிஸ் தொடங்கி வைத்தார்; நாட்டுத் தலைவர் தியொடோர் ரோசவெல்ட்டை அழைக்க வேண்டும் என யாருக்கும் தெரியவில்லை. 1932இல் அப்போது நியூயார்க் மாநில ஆளுநராக இருந்த பிராங்க்ளின் ரூசவெல்ட், III குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைத்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் துணை குடியரசுத் தலைவர் சார்லசு குர்ட்டிசு பத்தாவது ஒலிம்பியாட்டை கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தொடங்கி வைத்தார். 1960இல் டுவைட் டி. ஐசனாவர் தனது சார்பாக துணைத்தலைவர் ரிச்சர்டு நிக்சனை VIII குளிர்கால ஒலிம்பிக்கை தொடங்கி வைக்க அனுப்பினார். இறுதியாக 1980இல் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டருக்கு மாற்றாக துணைத்தலைவர் வால்ட்டர் மொன்டேல் XIII குளிர்கால ஒலிம்பிக்கை தொடங்கி வைத்தார்.
- ↑ "Opening Ceremony: 2010 Winter Games declared open". Vancouver 2010. 12 February 2010. Archived from the original on 2010-04-11. பார்க்கப்பட்ட நாள் 2010-02-19.
- ↑ https://archive.today/20121211061542/www.london2012.com/news/articles/cauldron-moved-into-position-olympic-stadium.html
- ↑ https://archive.today/20130128140340/www.london2012.com/media-centre/article=london-2012-olympic-cauldron-moved-into-position-ready-for-athletics-competition.html
- ↑ "When messengers of peace were burnt alive". Deccan Herald. 2004-08-13. Archived from the original on 2004-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-01-10.
- ↑ "Olympic Games – the Medal Ceremonies". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2009-01-10.
- ↑ "Symbols and Traditions". USA Today. 1999-07-12. http://www.usatoday.com/olympics/owg98/osytr03.htm. பார்த்த நாள்: 2009-01-10.
- ↑ "Medal Ceremony Hostess Outfits Revealed". China Daily. 2008-07-18. http://english.sina.com/china/p/1/2008/0718/172118.html. பார்த்த நாள்: 2009-01-10.
- ↑ 20.0 20.1 20.2 20.3 20.4 20.5 20.6 20.7 20.8 "Closing Ceremony Factsheet" (PDF). The International Olympic Committee. 2012-06-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-12.
- ↑ "Melbourne (Equestrian – Stockholm) 1956". British Olympic Association. Archived from the original on 2008-12-06. பார்க்கப்பட்ட நாள் 2009-01-10.
- ↑ "Moscow 1980 — Closing Ceremony — Los Angeles and Moscow's flags in the stadium". Olympic.org. August 3, 1980. பார்க்கப்பட்ட நாள் February 24, 2014.
- ↑ "Rogge: Torino Games 'truly magnificent'". Associated Press. USA Today. 2006-02-26. http://www.usatoday.com/sports/olympics/torino/2006-02-26-rogge_x.htm. பார்த்த நாள்: 2012-08-13.
- ↑ "Speech by Jacques Rogge at the Closing Ceremony". Beijing 2008. 2008-08-24. Archived from the original on 2013-04-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
- ↑ "Vancouver Winter Olympics lowers curtain with joy and sorrow". Xinhuanet. 2010-03-01. http://news.xinhuanet.com/english2010/special/vancouver2010/2010-03/01/c_13192351.htm. பார்த்த நாள்: 2012-08-13.
- ↑ "London 2012: Jacques Rogge praises 'happy and glorious' games". The Daily Telegraph. 2012-08-13. http://www.telegraph.co.uk/sport/olympics/london-2012/9471505/London-2012-Jacques-Rogge-praises-happy-and-glorious-games.html. பார்த்த நாள்: 2012-08-13.