பெனான் மக்கள்
சரவாக் உலு பாராம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெனான் பெண். | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
16,000[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
போர்னியோ: | |
மலேசியா சரவாக் | 16,281 (2010)[2] |
புரூணை | 300[3] |
மொழி(கள்) | |
பெனான் மொழி, மலாய் மொழி (சரவாக் மலாய் மொழி) | |
சமயங்கள் | |
புங்கான் (நாட்டுப்புற மதம்), கிறிஸ்தவம் (பெரும்பான்மை)[4] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கென்னியா மக்கள் |
பெனான் அல்லது பெனான் மக்கள் (மலாய்: Kaum Penan அல்லது Orang Penan; ஆங்கிலம்: Penan People); என்பவர்கள் போர்னியோ சரவாக்; புரூணை ஆகிய நிலப்பகுதிகளில் வாழும் நாடோடி பழங்குடி மக்கள் (Nomadic Indigenous People) ஆகும்.
புரூணையில் ஒரே ஒரு சிறிய சமூகமாக இருந்தாலும்; அவர்களில் பாதி பேர் இசுலாத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.[1] வேட்டையாடுதல்; வனப் பொருள்கள் சேகரித்தல்; ஆகியவற்றை முதன்மையாகக் கொண்ட பழங்குடி மக்களில் எஞ்சியிருக்கும் கடைசி மக்களில் பெனான் மக்களும் ஒரு தொகுதியினர்.[5]
பொது
[தொகு]பெனான் மக்கள் 'மொலாங்' (Molong) என்ற பழக்கத்திற்காக நன்கு அறியப் படுகின்றனர். அதாவது தேவைக்கு அதிகமாக எதையும் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இவர்களிடம் இல்லை.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் சமயப் பரப்புரையாளர்கள் (Missionary), பெனான் மக்கள் வாழ்ந்த பல பகுதிகளுக்குச் சென்றனர். சமயப் பரப்புரைகள் செய்தனர். குறிப்பாக உலு பாராம் மாவட்டம் (Ulu-Baram District); லிம்பாங் மாவட்டம் (Limbang District) ஆகிய மாவட்டங்களில், சமயப் பரப்புரையாளர்கள் குடியேறும் வரையில் பெரும்பாலான பெனான் மக்கள் நாடோடி வேட்டைக்காரர்களாக வாழ்ந்து வந்தனர்.
தாவரங்களை உண்பது இவர்களின் பொது வழக்கம். அத்துடன் அந்தத் தாவரங்களை மருந்துகளுக்காகவும் பயன்படுத்துவதும் மற்றொரு வழக்கம். விலங்குகளை வேட்டையாடி உண்பதுடன்; அவற்றின் தோல்கள், உரோமங்கள் மற்றும் பிற பாகங்களை ஆடை மற்றும் தங்குமிடத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
மக்கள் தொகையியல்
[தொகு]பெனான் மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 16,000. அவர்களில் ஏறக்குறைய 200 பேர் மட்டுமே இன்னும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.[1] இருப்பினும் அவர்கள் நாடோடியாகப் போகும் போது, ஓர் இடத்தில் நிரந்தரமாகக் குடியேறினார்களோ, அப்போது இருந்து அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. [6]
பெனான் மக்களை கிழக்கு பெனான் குழு (Eastern Penan Group); மற்றும் மேற்கு பெனான் குழு (Western Penan Group) என இரண்டு பெரும் குழுக்களாகப் பிரிக்கலாம். கிழக்கு பெனான் குழுவினர் மிரி, பாராம், லிம்பாங் பகுதிகளைச் சுற்றி வாழ்கின்றனர். மேற்கு பெனான் குழுவினர் பெலாகா மாவட்டம் (Belaga District); மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.[7]
பெனான் மக்களின் அசல் தன்மை
[தொகு]இவர்களை அசலான குழுவாக அல்லது அசல் பழங்குடியினராக கருதலாம். ஏனெனில் இவர்கள் கென்னியா (Kenyah), காயான் (Kayan), மூருட் (Murut), கெலாபிட் (Kelabit) போன்ற பிற அண்டை சொந்தக் குழுக்களில் இருந்து சற்றே வேறுபட்ட தனி மொழியைக் கொண்டு உள்ளனர்.
இருப்பினும், அரசாங்க மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெனான் மக்களை ஒராங் உலு என்று மிகவும் பரவலான ஒரு முறையில் வகைப்படுத்தி உள்ளனர். ஒராங் உலு என்றால் உள் பகுதி மக்கள். சில வேளைகளில் சரவாக்கின் பழங்குடி மக்கள் அனைவருமே தயாக்கு என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுகின்றனர்.
பெனான் மொழி
[தொகு]பெனான் மொழி என்பது ஆஸ்திரோனீசிய மொழிகளில் (Austronesian Languages) ஒன்றான மலாயா-பொலினீசிய மொழிக் குடும்பத்தின் (Malayo-Polynesian) கென்னியா மொழியின் (Kenyah Language) துணைக்குழுவில் உள்ள ஒரு மொழியாகும்.
வாழ்க்கை முறை
[தொகு]1950-கள் வரை பெனான் சமூகங்கள் பெரும்பாலும் நாடோடிகளாக இருந்தன. 1950 முதல் தற்போது வரையிலான காலகட்டம் வரையில், சரவாக்கின் பிற பூர்வீகக் குழுக்களைப் போலவே, நீள வீடுகள் சார்ந்த கிராமங்களில், பெனான் மக்களை குடியேற்றுவதற்கு; மாநில அரசும் மற்றும் வெளிநாட்டு கிறிஸ்தவ அமைப்புகளும் தொடர்ச்சியான திட்டங்களை நிறைவேற்றி வந்துள்ளன.[7]
இளைய தலைமுறையினர் சிலர், தற்போது நெல் மற்றும் தோட்டக் காய்கறிகளை பயிரிடுகின்றனர். ஆனாலும் பெனான் மக்களில் பலர், காட்டுப்பனை மரங்கள் சார்ந்த உணவுகளையே நம்பி உள்ளனர். சாகோ என்பது சாகோ பனையில் (Metroxylon Palm) இருந்து கிடைக்கும் ஒருவகையான கஞ்சி மாவு ஆகும்.
வேட்டையாடுதல் முக்கியத் தொழில்
[தொகு]காடுகளில் பழங்களைச் சேகரிப்பது பெனான் மக்களின் முக்கியமான தொழிலாகும். தவிர வேட்டையாடுதலும் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. காட்டுப்பன்றி (Bornean Bearded Pig), குரைக்கும் மான் (Muntjac Barking Deer), சருகுமான் (Chevrotain Mouse Deer) போன்ற விலங்குகளை வேட்டையாடுகின்றனர்.
அத்துடன் குரங்குகள், பறவைகள், தவளைகள், உடும்புகள் (Monitor Lizards), நத்தைகள் மற்றும் வெட்டுக்கிளிகள் போன்றவற்றையும்; சில வேளைகளில் மலைப்பாம்புகளையும் (Reticulated Python) வேட்டையாடுகின்றனர்.
இன்றைய நிலை
[தொகு]புரூணையில் மிகக் குறைவான அளவில் வாழ்கின்றனர். மேலும் நிரந்தர குடியிருப்புகளில் வாழ வேண்டிய கட்டாயநிலை; ஆண்டு முழுவதும் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய அழுத்தங்கள்; இவற்றினால் அவர்களின் வாழ்க்கை முறையும் மாறி வருகிறது.[8]
சரவாக் காடுகள் அழிப்புக்கு எதிர்ப்பு
[தொகு]சரவாக் மாநிலத்தின் பாராம் (Baram), லிம்பாங் மாவட்டம் (Limbang District), துத்தோ (Tutoh) மற்றும் லாவாசு மாவட்டம் (Lawas District) பகுதிகளில் போர்னியோ பழங்குடி மக்கள் பெரும் அளவில் வாழ்கிறார்கள். 1960-களில் இந்த இடங்களில், காட்டு மரங்களை வணிக ரீதியில் வெட்டும் நடவடிக்கைகள் (Commercial Logging) தொடங்கப் பட்டன.
இந்தோனேசிய மற்றும் மலேசிய அரசாங்கங்கள் போர்னியோவின் உள்புறங்களில் காட்டு மரங்களை வெட்டுவதற்கு காடுகளைத் திறந்தபோது போர்னியோ பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டன. அப்போது அந்த நடவடிக்கையை பெனான் மக்கள் எதிர்த்தனர். அவர்களின் அந்த எதிர்ப்புகள் தேசிய அளவிலும்; பன்னாட்டு அளவிலும் கவனத்தை ஈர்த்தன.[9]
காட்டு மரங்களுக்கான உலகளாவிய தேவைகள்
[தொகு]பெரும்பாலான வேளைகளில், மிகப்பெரிய அளவில் காட்டு மரங்கள் வெட்டுதலின் சலுகைகள்; அரசியல் மற்றும் வணிக உயரடுக்கு உறுப்பினர்களுக்குச் சென்றன. அந்த நேரத்தில் காட்டு மரங்களுக்கான உலகளாவிய தேவைகள் அதிகரித்தன. அவற்றைப் பயன்படுத்திக் கொண்ட அந்தச் சலுகையாளர்கள் சந்தைப் படுத்தக்கூடிய அனைத்துக் காட்டு மரங்களையும் வாங்கத் தொடங்கினர்.
அந்த வனப் பகுதிகளில் வாழ்ந்த நாடோடி பெனான் சமூகமும் இதர பழங்குடிச் சமூகங்களும் வன உற்பத்தியை நம்பியே வாழ்ந்தவை. அவர்கள் பாரம்பரியமாக வசித்த பிரதேசங்களை ஆக்கிரமித்து; பெரிய அளவிலான மரம் வெட்டும் நடவடிக்கைகள் தொடரப் பட்டதால் அந்தப் பழங்குடிச் சமூகங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.
பெனான் மக்களின் புதைகுழிகள் அழிப்பு
[தொகு]அத்துடன் ஆறுகளின் வண்டல் மண் இடப்பெயர்ச்சி (Sediment Displacement); பெனான் மக்களின் முக்கியமான உணவுப் பொருளாக (Penan Diet) கருதப்படும் சாகோ பனை மரங்களின் (Sago Palms) இழப்பு; காட்டுப்பன்றி, மான் மற்றும் பிற விலங்குகளின் பற்றாக்குறை; பாரம்பரிய வன மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படும் காட்டு மரங்கள் (Traditional Forest Medicine), தாவரங்களின் பற்றாக்குறை; பெனான் மக்களின் புதைகுழிகளை அழித்தல் (Destruction of Burial Sites); பிரம்பு மற்றும் பிற அரிய தாவரங்கள், விலங்கு இனங்களின் இழப்பு; ஆகியவற்றுடன் அவற்றின் நீர் பிடிப்புப் பகுதிகள் மாசுபடுவதற்கு (Pollution of Water Catchment Areas) காடு அழிப்புகள் காரணமாகின.[10]
போர்னியோவின் வன மக்களுக்கு, மற்ற பழங்குடியினரை போலவே, காட்டுத் தாவரங்கள் மற்றும் காட்டு விலங்குகள் புனிதமானவையாகக் கருதப்பட்டன. அத்துடன் ஆற்றல்மிக்க ஆவிகள் மற்றும் தெய்வங்களின் உருவகங்களாகவும் கருதப்பட்டன.
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 Main_Penan_Settlements.html பரணிடப்பட்டது 15 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Laurel Evelyn Dyson, Stephen Grant & Max Hendriks, ed. (2015). Indigenous People and Mobile Technologies. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-13-176-3894-0.
- ↑ Jeffrey Hays (2008). "Minorities In Brunei". Facts And Details. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
- ↑ Paul C. Y. Chen, ed. (1990). Penans: The Nomads of Sarawak. Pelanduk Publications. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 96-797-8310-3.
- ↑ Bending, Tim (2006) Penan Histories: Contentious narratives in upriver Sarawak pp. 67–68
- ↑ Surivival-International.org
- ↑ Brosius, Peter (1997) "Prior Transcripts, Divergent Paths: Resistance and Acquiesence to Logging in Sarawak, East Malaysia", Comparative Studies in Society and History, Vol 39, No 3
- ↑ Brunei: The Abode of Peace - Retrieved 20 April 2007 பரணிடப்பட்டது 26 சூன் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Colchester, M. Pirates, Squatters and Poachers: The political ecology of Dispossession of the Native Peoples of Sarawak, 1989: 40.
- ↑ Klare, M (2001) Resource Wars: The New Landscape of Global Conflict
குறிப்புகள்
[தொகு]- ^ Sarawak Peoples Campaign, Ian Mackenzie, accessed 2005-04-05
- ^ Nomads of the Dawn, The Penan of the Borneo Rainforest, Chapter
மேலும் படிக்க
[தொகு]- Stranger in the Forest, a travel report by Eric Hansen (travel writer)
- Redheads, a comic eco-thriller novel set in a fictional sultanate in Borneo, which describes the Penan plight, by Paul Spencer Sochaczewski
- An Inordinate Fondness for Beetles , travels with Alfred Russel Wallace, which includes chapters on the Penan and Bruno Manser, by Paul Spencer Sochaczewski
வெளி இணைப்புகள்
[தொகு]- Clifford Sather, "Sea Nomads and Rainforest Hunter-Gatherers:Foraging Adaptions in the Indo-Malaysian Archipelago" in "The Austronesians - Historical and Comparative Perspectives" p268, Canberra 1995/2006
- Bruce Parry's Penan documentary
- A report on the Lands of the Penan