சபான் மக்கள்
சபான் தயாக்கு பெண்பிள்ளைகள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
ஏறக்குறைய 2,700 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
போர்னியோ: | |
மலேசியா சரவாக் | 1,600[1] |
இந்தோனேசியா கிழக்கு கலிமந்தான் | 1,100[1] |
மொழி(கள்) | |
சபான், மலாய் மொழி, சரவாக் மலாய் மொழி, இந்தோனேசிய மொழி | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம் பெரும்பான்மை (70.00%); ஆன்மவாதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கெலாபிட் மக்கள், லுன் பாவாங் மக்கள் |
சபான் அல்லது சபான் மக்கள் (மலாய்: Kaum Saban அல்லது Orang Sa'baan; ஆங்கிலம்: Saban, Sa'ban, Sa'baan அல்லது Saban People); என்பவர்கள் மலேசியா, சரவாக் மற்றும் இந்தோனேசியா கிழக்கு கலிமந்தான் (East Kalimantan) பகுதிகளில் வாழும் பழங்குடி தயாக்கு மக்கள் (Indigenous Dayak People) ஆகும்.[2]
இவர்கள் மலேசியா ஒராங் உலு இனக் குழுவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். கெலாபிட் மக்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளனர்.
பொது
[தொகு]சபான் மக்கள் வடகிழக்கு சரவாக்கின் தொலைதூர கெலாபிட் பீடபூமியில் உள்ள புனாங் கெலபாங் (Punang Kelapang) பகுதியில் வாழும் ஒரு சிறிய மக்கள் குழுவாகும். அந்த மலைப்பகுதிகளில் உள்ள முக்கியமான கிராமம் லோங் பங்கா (Long Banga).
வேலை வாய்ப்புகளைத் தேடி சபான் மக்களில் பலர் மிரி (Miri) போன்ற நகர்ப் புறங்களுக்குச் சென்று விடுகின்றனர். எஞ்சியவர்கள் இன்னும் தங்கள் தாயகமான லோங் பங்கா (Long Banga), லோங் புவாக் (Long Puak), லோங் பாலாங் (Long Ballong), லோங் பெலுவான் (Long Peluan) ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.[3]
இந்தோனேசிய சபான் மக்கள்
[தொகு]சபான் மக்கள் முதலில் இந்தோனேசியா, கிழக்கு கலிமந்தான் (East Kalimantan) பிராந்தியத்தில் உள்ள பகாவ் ஆற்றின் (Bahau River) மேல் பகுதியில் வாழ்ந்தனர். பின்னர் படிப்படியாகப் புலம்பெயர்வுகள் நடைபெற்றன.
சரவாக் நிலப்பகுதியிலான இடம்பெயர்வுகள் 1900-இல் தொடங்கி 1960-களின் பிற்பகுதி வரை நீடித்தன. ஏறக்குறைய 1,600-க்கும் குறைவான மக்கள்தொகையுடன், சரவாக்கில் உள்ள சிறிய இனக்குழுக்களில் சபான் குழுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1]
கெலாபிட் கலாசார ஒற்றுமைகள்
[தொகு]சபான் மக்களுக்கும் கெலாபிட் (Kelabit) சமூகத்திற்கும் பல கலாசார ஒற்றுமைகள் உள்ளன. இருந்தாலும், சபான்கள் இன்றும் கூட வெளியாட்களுடன் அரிதாகவே பழகும் ஒரு தனித்துவமான வழக்கத்தைக் கொண்டவர்கள். வரலாற்று ரீதியாக இவர்கள் சிறப்புப் பெற்ற போர்வீரர்கள்.
சபான்கள் உழைப்பாளி மக்கள். போர்களில் துணிச்சலுக்கும் உறுதிக்கும் பெயர் பெற்றவர்கள். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனும் வலுவான விருப்பத்தைக் கொண்டவர்கள்.[1]
வாழ்வியல்
[தொகு]ஒரு பொதுவான சபான் கிராமம், ஒரு நீளவீட்டை போன்ற சீரமைப்பில் கட்டப்பட்ட வீடுகளைக் கொண்டுள்ளது. தற்போது கிராமங்களில் தனி வீடுகளும் கட்டப் படுகின்றன. விவசாயம் இவர்களின் ஒரு முக்கிய பொருளாதார நடவடிக்கை. இடங்களை மாற்றி மாற்றி நெல் சாகுபடி (Shifting Paddy Cultivation) செய்வதுடன்; காபி, கரும்பு போன்றவற்றையும் பயிர் செய்கிறார்கள்.
அண்மைய காலங்களில் சபான்கள் பலர் நகர்ப்புறங்களில் வேலைகள் செய்கின்றனர். உள்புறங்களில் மரம் வெட்டும் மற்றும் தோட்டத் தொழில்களிலும் வேலை செய்கிறார்கள்.
கல்வித்தரம்
[தொகு]சபான்கள் மத்தியில் கல்வித்தரம் அதிகமாக உள்ளது. பொதுவாக பள்ளி மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் தொலைதூர நகரங்களில் முடித்து விடுகிறார்கள். ஒரு சிலர் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளாகவும் உள்ளனர்.
சபான்கள் கூட்டுக் குடும்பங்களில் (Extended Families) வாழ்கின்றனர். நெருங்கிய உறவினர்களிடையே குழந்தைகளை தத்தெடுப்பது பொதுவானது. சபான் சமூகம் உயர்குடியினர் மற்றும் சாமானியர்களைக் கொண்டுள்ளது. முன்பு அவர்களிடம் ஓர் அடிமை வர்க்கமும் (Slave Class) இருந்தது.
சபான் மக்களின் நவீனமயம்
[தொகு]கிராமத் தலைவர்கள் பொதுவாக உயர்குடி வகுப்பில் இருந்து தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள். ஒரு சபான் தம்பதிகள் தங்கள் முதல் குழந்தை மற்றும் முதல் பேரக்குழந்தை பிறந்தவுடன் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
காது மடல்களை நீட்டி தொங்க விடுவது (Elongating Ear Lobes); மற்றும் பச்சை குத்திக் கொள்வது போன்ற சில பாரம்பரிய நடைமுறைகள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. சபான் மக்கள் நவீனமயமாகி வருகிறார்கள். பழங்கால குடங்களையும் (Antique Jars) பாசி மணிகளையும் குலதெய்வமாக (Heirlooms) போற்றிப் பாதுகாக்கும் வழக்கம் இன்றும் இவர்களிடம் தொடர்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Project, Joshua. "Sa'ban in Malaysia". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 January 2023.
- ↑ Clayre, Iain F. C. S. (1970). "Notes on the Sa'ban Language". Borneo Research Bulletin 2 (1): 9. http://www.borneoresearchcouncil.org/BRB%20PDF%20scans/BRB_1970_02_01.pdf. பார்த்த நாள்: 2011-02-20.
- ↑ "The Saban of Malaysia, numbering 1,700, are No Longer Unreached. They are part of the Borneo-Kalimantan people cluster within the Malay Peoples affinity bloc". peoplegroups.org. பார்க்கப்பட்ட நாள் 28 January 2023.
சான்றுகள்
[தொகு]- Clayre, Iain F. C. S. (1970). "Notes on the Sa'ban Language". Borneo Research Bulletin 2 (1): 9. http://www.borneoresearchcouncil.org/BRB%20PDF%20scans/BRB_1970_02_01.pdf. பார்த்த நாள்: 2011-02-20.