உள்ளடக்கத்துக்குச் செல்

பாத்தேக் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாட்டெக் மக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாத்தேக் மக்கள்
Batek people
Orang Batek
ஒரு பாத்தேக் குடும்பம்.
மொத்த மக்கள்தொகை
1,359 (2010)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா (பகாங், கிளாந்தான், திராங்கானு)
மொழி(கள்)
பாத்தேக் மொழி, மலாய் மொழி
சமயங்கள்
மரபுவழிச் சமயம், இசுலாம், கிறித்தவம் அல்லது பௌத்தம்.
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சக்காய் மக்கள், மின்ரிக் மக்கள்

பாத்தேக் மக்கள் (ஆங்கிலம்: Batek people; மலாய்: Orang Batek) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் மழைக்காடுகளில் வாழும் உள்ளூர் மக்கள் ஆவர். 2000-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இவர்களின் மொத்த எண்ணிக்கை 1,519[2]. இவர்களின் தாயகப் பகுதிகளுக்குள் ஏற்பட்ட ஊடுருவல்களினால் இவர்கள் பெரும்பாலும் தாமான் நெகாரா தேசியப் பூங்கா பகுதிகளுக்கு உள்ளேயே வாழ்கின்றனர்.

இம்மக்கள் நாடோடி வேட்டுவரும், உணவு சேகரிப்பவர்களும் என்பதால், இவர்களது வாழிடங்கள் குறித்த வாழிட எல்லைகளுக்குள் மாறிக்கொண்டு இருக்கின்றன.[3]

மலாய் மொழியில் 'தொடக்க மக்கள்' எனப் பொருள்படும் 'ஒராங் அசுலி' என்னும் சொல்லால் இம்மக்கள் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றனர். இது அவர்கள் பரந்த இனக்குழுத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளதைக் குறிக்கின்றது. தென்கிழக்காசியாவின் தீவுகளில் இருந்து படகுகள் மூலம் வந்து குடியேறிய ஆசுத்திரோனீசிய மொழிகளைப் பேசிய மக்கள் இப்பெயரை முதலில் பயன்படுத்தி இருக்கலாம்.

பொது

[தொகு]

நாடுகாண் பயணியும், இயற்கை ஆர்வலரும், உருசியாவைச் சேர்ந்தவருமாகிய நிக்கொலாய் மிக்லுக்கோ-மாக்லாய் என்பவர் 1878 இல் எழுதியதே ஐரோப்பியரின் இம்மக்களைப் பற்றிய முதல் பதிவாக உள்ளது.[4]

ஏறத்தாழ 1970 வரை தீபகற்ப மலேசியாவின் உட்பகுதிகள் அணுகுவதற்குக் கடினமாக இருந்ததால், மரம் வெட்டும் நடவடிக்கைகள் அப்பகுதிகளில் குறைவாகவே இருந்தன. இதனால், இப்பகுதி முழுவதும் பாத்தேக் மக்கள் பரந்து வாழ்ந்தனர்.

இப்போது அப்பகுதிகளில் மரம் வெட்டும் செயற்பாடுகளுக்கு வசதிகள் ஏற்பட்டுள்ளதால், பாத்தேக் மக்கள் தமன் நெகாரா தேசியப் பூங்கா பகுதிக்குள்ளும் அதைச் சூழவுள்ள சில பகுதிகளிலும் முடங்கியுள்ளனர்.[5]

மக்கள்தொகை

[தொகு]

மலேசியாவில் பாத்தேக் மக்கள்தொகை இயங்கியல்:-

ஆண்டு 1960[6] 1965[6] 1969[6] 1974[6] 1980[6] 1993[7] 1996[6] 2000[8] 2003[8] 2004[9] 2010[1]
மக்கள்தொகை 530 339 501 585 720 960 960 1,519 1,255 1,283 1,359

மொழி

[தொகு]

பாத்தேக் மொழி, பரந்த மொன்-கெமெர் மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியாகிய அசுலியான் மொழிகளின் துணைக் கிளையான கிழக்கத்திய யகாய் மொழிகளைச் சேர்ந்தது. மின்டில், யகாய் என்பன பாத்தேக் மொழிக்கு மிக நெருங்கிய மொழிகள். பிற அசுலிய மொழிகளுக்கு இது தூரத்து உறவு. இது ஒரு சிறிய மொழி என்றபோதும், இதற்கு தெக், இகா, டெக், நோங் ஆகிய கிளைமொழிகள் உள்ளன. இவற்றுள் கடைசி இரு மொழிகளும் தனி மொழிகளாகக் கருதக்கூடிய அளவுக்கு வேற்பட்டுக் காணப்படுகின்றன. பாட்டெக் பெரும்பாலும் ஒரு பேச்சு மொழியாகவே உள்ளது. மிகக் குறைவான எழுத்துமூலப் பதிவுகளே உள்ளன. தற்காலத்தில் இது மாற்ரம் செய்யப்பட்ட இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றது.

வாழ்க்கை முறை

[தொகு]

பாத்தேக்குகள் கூடாரங்கள் அல்லது படற்கூரை வாழிடங்களில் குடும்பக் குழுக்களாக வாழ்கின்றனர். ஓரிடத்தில் 10 குடும்பங்கள் வரை சேர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறான ஒவ்வொரு தங்குமிடத்தையும் சுற்றியுள்ள பகுதிகள் அங்கு வாழ்பவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பாத்தேக் மக்களிடையே தனியார் நில உடைமைக் கருத்துரு இல்லாததால், ஒவ்வொரு குழுவும் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தின் உடைமையாளராக அல்லாமல், பாதுகாவலராகவே செயற்படும். அத்துடன், இவர்கள் நாடோடிகள் ஆதலால், ஒரு குறித்த இடத்தில் காட்டுத் தாவர வளங்கள் குறையும்போது அவர்கள் தமது வாழிடப் பகுதிக்குள் அடங்கும் இன்னொரு இடத்துக்குச் சென்றுவிடுவர்.[10]

பாத்தேக் சமூகம்

[தொகு]

பாத்தேக் மக்களின் பொருளாதாரம் மிகவும் சிக்கலானது. அங்கே நிலம் போன்ற சிலவற்றை எவரும் உடைமையாகக் கொள்ளும் உரிமை இல்லை. வேறு சிலவற்றை உடைமை கொள்ளக்கூடிய உரிமை இருந்தாலும், சமூக நெறிமுறைகளின்படி அவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். மேய்ச்சல் மூலமாகக் கிடைக்கும் உணவு இத்தகையது. ஆண்கள் பயன்படுத்தும் ஊதுகணைக் குழல், பெண்களின் சீப்பு போன்றவை தனியாள் உடைமையாகக் கொள்ளத் தக்கவை.[11]

பாத்தேக் சமூகம் அமைதி வழியைக் கடைப்பிடிப்பது. குழுவின் ஒரு உறுப்பினர் அக்குழுவின் இன்னொரு உறுப்பினருடன் முரண்பட்டால் அவர்கள் அவ்விடயத்தைத் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்க்க முயற்சி செய்வர். இம்முறையில் பிரச்சினை தீராவிட்டால், அக்குழுவில் உள்ள ஏனையோரின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக, இருவரும் தத்தமது வாதங்களைப் பொதுவாக முன்வைப்பர். இச்சமூகத்தில் வயதுவந்த எல்லோரும் சமமானவர்கள் ஆதலால், தலைமைப் பதவியோ, நீதி முறைமையோ இங்கே கிடையாது. எனவே மேற்கூறிய இரண்டு வழிகளிலும் பிரச்சினை தீராவிட்டால், சம்பந்தப்பட்ட ஒருவரோ அல்லது இருவருமோ பிரச்சினை தணியும்வரை குழுவிலிருந்து விலகியிருப்பர்.[10][12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99-716-9861-7.
  2. "Orang Asli Population Statistics". Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2008-02-12.
  3. Bonta, Bruce D. Peaceful Peoples: an Annotated Bibliography பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-2785-9. Metuchen NJ: Scarecrow, 1993 Page 29-31
  4. Endicott, Kirk. “The Batek of peninsular Malaysia.” The Cambridge Encyclopedia of Hunters and Gatherers பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-57109-X. 2004 Page 298
  5. Lye, Tuck-Po. Changing Pathways: Forest Degradation and the Batek of Pahang Malaysia பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7391-0650-3. Lanham, MD: Lexington, 2004 Page 2-4
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 Nobuta Toshihiro (2009). "Living On The Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  7. Colin Nicholas (2000). "The Orang Asli and the Contest for Resources. Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia" (PDF). Center for Orang Asli Concerns & International Work Group for Indigenous Affairs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-90730-15-1. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  8. 8.0 8.1 "Basic Data / Statistics". Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  9. Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-341-0076-0.
  10. 10.0 10.1 "Bonta, Bruce D. Peaceful Societies. 2005. January 12, 2006". Archived from the original on January 4, 2016. பார்க்கப்பட்ட நாள் January 23, 2018.
  11. Endicott, Kirk. “Property, Power and Conflict Among the Batek of Malaysia.” Hunters and gatherers 2: Property Power and Ideology பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85496-735-4. 1988 Page 117
  12. Endicott, Kirk. “Property, Power and Conflict Among the Batek of Malaysia.” Hunters and gatherers 2: Property Power and Ideology பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85496-735-4. 1988 Page 119-120

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்தேக்_மக்கள்&oldid=4086521" இலிருந்து மீள்விக்கப்பட்டது