மலாய-பொலினீசிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலாய-பொலினீசிய மொழிகள் என்பன ஆஸ்திரோனீசிய மொழிகளின் ஒரு துணைக் குழுவாகும். ஏறத்தாழ 351 மில்லியன் மக்கள் இம் மொழிகளுள் ஒன்றைப் பேசிவருகிறார்கள். இம் மொழிகள் தென்கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் தீவு நாடுகளிலும், சிறிய அளவில் தலை நில ஆசியாவிலும் பேசப்படுகின்றன. இக் குழுவைச் சேர்ந்த மலகாசி மொழி, இம் மொழிகள் பொதுவாகக் காணப்படும் புவியியற் பகுதிக்கு வெளியே, இந்துப் பெருங் கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் பேசப்படுகிறது.

பன்மையைக் குறிப்பதற்கு ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ இரு தடவை பயன்படுத்துதல் மலாய பொலினீசிய மொழிகளிடையே காணப்படும் ஒரு இயல்பாகும். அத்துடன் ஏனைய ஆஸ்திரோனீசிய மொழிகளைப் போல இம் மொழிகளும் எளிமையான ஒலியனமைப்பைக் (phonology) கொண்டவை. இதனால் இம்மொழியின் உரைகள் குறைவான ஆனால் அடிக்கடி வரும் ஒலிகளைக் கொண்டவை. இம் மொழிக் குழுவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் கூட்டுமெய்கள் (consonant clusters) இருப்பதில்லை. இம் மொழிகளுட் பல உயிரொலிகளையும் குறைவாகவே கொண்டுள்ளன. ஐந்து உயிர்களே பொதுவாகக் காணப்படுவதாகும்.