தொழுதூர் மதுராந்தக சோளீசுவரர் கோவில்
தொழுதூர் ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் திருக்கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | தொழுதூர் ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் திருக்கோவில் |
ஆங்கிலம்: | Madurantaka Choleswarar |
அமைவிடம் | |
ஊர்: | தொழுதூர்,பெருந்தொழுவூர், தொழுவூர் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மதுராந்தக சோளீஸ்வரர் உடைய நாயனார் |
உற்சவர்: | நடராஜர் |
தாயார்: | பெரியநாயகி |
உற்சவர் தாயார்: | சிவகாமசுந்தரி |
தல விருட்சம்: | வில்வம் |
சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, பிரதோச விரதம், திருவாதிரை நோன்பு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | 3 |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
கட்டப்பட்ட நாள்: | 12 அல்லது 13ம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | மூன்றாம் குலோத்துங்கன் |
வலைதளம்: | fb.com/Madurantaka.Choleswarar |
தொழுதூர் மதுராந்தக சோளீஸ்வரர் கோவில் (Tholudur Madhurantaka Choleswarar)தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் தொழுதூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும்.
அமைவிடம்
[தொகு]ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் திருக்கோயில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுக்காவில் சென்னை திருச்சி பெருவழியில் (NH45) உள்ள தொழுதூர் எனப்படும் பெருந்தொழுவூரில் அமைந்துள்ளது.
இது சென்னையில் இருந்து சுமார் 250 கி.மீ, திருச்சியில் இருந்து சுமார் 71 கி.மீ, கடலூரில் இருந்து 103 கி.மீ, சேலத்தில் இருந்து 123 கி.மீ தொலைவிலும் உள்ளது.
ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் திருக்கோயில்
[தொகு]வெள்ளாற்றங்கரையில், கற்கால தடயங்களையும், சமணர்கள் வாழ்ந்த அடையாளங்களையும் கொண்ட இந்த ஊரில் உள்ள இக்கோவிலானது சுமார் ஆயிரம் வருடம் பழமை கொண்டது என்பது கல்வெட்டு சான்றுகள் மூலமும், செவிவழி செய்தி மூலமும் அறியபடுகிறது. கல்வெட்டுகளில் இருந்து இக்கோவிலில் உள்ள மூலவர் மதுராந்தக சோளீஸ்வரமுடைய நாயனார் என்று அறிய முடிகிறது.
'இறைவனை', எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் முழு அன்போடும், மனதார பக்தியோடும், கைக் கூப்பி தொழுகின்ற ஸ்தலம் என்பதால் இவ்வூருக்கு தொழுவூர் எனப் பெயர் வந்தது என்பது ஐதீகம். பிரதோஷ பூஜையின் போது உடையாரையும், ஆருத்ரா தரிசனத்தின் போதும் நடராஜரின் திருநடன திருமேனியையும் காண பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலின் சிறப்புகள் மகா பரம்பொருள் சர்வ வல்லைமை கொண்டவர் என வெளிப்படுத்தும் பிரம்மசூத்திரதுடன் மிக பெரிய ஆவுடையார் வடிவிலும், நெற்றிக்கண் கொண்ட சர்வ சக்தியான பெரியநாயகி அம்மையும் இத்திருக் கோயிலில் எழுந்தருளி உள்ளனர்.
கல்வியையும், சிறப்பையும் தரும் மாம்பழ விநாயகரும்; வள்ளி தேவசேனாவுடன் காட்சி தரும் சுப்ரமணிய சுவாமியும்; சர்வ செல்வம் தரும் கஜலக்ஷ்மியும் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி உள்ளனர். தெற்கு பார்த்த ராஜகோபுரமும் மற்றும் நவகிரகங்கள் குழி வடிவில் உள்ளதும் இக்கோவிலில் உள்ள தனிச் சிறப்பு ஆகும்.
நிருத்த கணபதி, தக்ஷ்ணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியவை கோஷ்ட தெய்வங்களாக உள்ளனர். பைரவர் மற்றும் சூரிய பகவான் தனி சன்னதியில் கிழக்கு திசையில் உள்ளனர்.
கோயில் அமைப்பு
[தொகு]செம்பை செத்திராய வெள்ளான் என்பவனைக் கொண்டு கட்டப்பட்ட இக் கற்கோவிலானது ஸ்ரீ விம்மனா என்கிற தூவித் தலமும், அர்த்த மண்டபமும் கொண்டுள்ளது. இதில் தேவாஷ்ட திருவுருவங்கள் சிற்பங்களாக வழங்கப்பட்டுள்ளது. சிவபெருமான் லிங்கவடிவில் அதனுள் எழுந்தருளி உள்ளார். மேலும் தாயார் (அம்மன்) சந்நிதியில் பெரியநாயகி என்ற பெயருடன் பின்னாளில் கட்டப்பட்ட மகாமண்டபத்தில் தெற்கு முகமாக வீற்றிருக்கிறார்.
இந்த ஆலயத்தினுள் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் கஜலக்ஷ்மிக்கு என்று சிறுசிறு சந்நிதிகளும் உள்ளது. மேலும் பைரவர் மற்றும் சூரிய பகவானுக்கு கிழக்கு பக்கத்தில் சந்நிதி உள்ளது. வெளியில் சிவனை பார்த்தவாறு நந்தி ஒன்று உள்ளது. சுற்றுச்சுவரானது நாயக்கர் காலப் பணி என்று அறியப்படுகிறது.
சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அஷ்டதேவர், நடராஜர், சிவகாமி, நடன சம்பந்தர், பைரவர் மற்றும் சூரிய பகவானுக்கு பஞ்ச உலோக திருமேனிகள் உள்ளன.
கல்வெட்டுகள்
[தொகு]ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் ஆலயத்தில் கீழ்கண்ட 3 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரண்டு கல்வெட்டுகள் கோயிலின் தெற்கு பக்கத்திலும், ஒரு தனிக்கல்வெட்டும் உள்ளது.
கல்வெட்டு 1:
[தொகு]“ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கருவூருங் கொண்டருளி ய திரிபுவனவீர தேவர்க்கு யாண்டு ௩௨வ .. வட கரைகு சிங்க வளநாட்டு உகளூர் கூற்றத்து பெருந்தொழுவூர் உடையார் மதுராந்தகீசுவரமுடைய நாயனார்க்கு திரு நாள் எழுந்தருளள திருமேளி நாயகரையும் நாச்சியாரையும் உடை ற்க்கு தம்பிராட்டியாரையும் எழுந்தருளிவித்த செம்பை.. யாளியான சேதாராய வெள்ளான் திருக்கூத்து .. ஆள்ளு டையாரையும் நாச்சியாரையும் எழுந்தருளிவித்த செம்பை தேவனாந நாயக வெளான் திருக்கற்றளியும் திருமண்ட பமு செய்வித்த”
கல்வெட்டு 2:
[தொகு]ஸ்ரீதிருமுகப்படி தொழுவூர் உடை யார் மதுராந்தகசோளீச்வரமுடைய னாய னாற்கு சந்திரசேகரநல்லூர் திருநீற்று வீரமாநத சோழபெரிய ஏரியில் நன் செய்நிலத்து ஒன்பதாவது நாளில் தேவதான யி றையிலியா நம் விட்ட நன்செய் நிலம் அரைக்கு ஆ றா...லே நாமிருக்க அண்ண தேவர் இ...நன் நல்லூரிலே விட்டு இவ்வூர்க்கும் இ...மது .ருக்கு.. வட க்கு அகப்பட்ட நிலம் நீக்கி ..க்கி அளந்து கண்.. ..மனேறு முக்கால்.கையா..நிலத்துக்கு தலைமாறு ஏழாவது முதல் வீடும் நன்செய்நிலம் மாமுமாவரை யும் தொழுவூர் வாரப்பற்றில் நன்செய்நிலத்து அடை த்தோம் இந்த நன்செய் நிலம் ஏழுமாவரையும் சந் திராதித்தவரையும் இறையிலியாக விட்டோம்.
கல்வெட்டு 3:
[தொகு]"................ ................ ஆற்றங்கரையில் திருவி ளக்குபுறம் தெங்கந் தோ ட்டம் இருமாவரையும் கறி அமுதுக்கு புஞ்சி நிலம் இரண் டு மாவும் இதந் கிழக்கு நிலம் இரண்டு மாவும் மதுராந்தகசோ ..ரமுடையாற்கு ஆக நன்செய் நிலம் ௩இ வேலியும் அரைசந்துறை நாயநாற்கு சை ..வசிகாமணி உள்பட நசெநிலம் ௧ வே லி சிறுதொழுவூரில் நசெய் ௪ மாவும்..புஞ்செ ய் ௧ வேலியும் தெங்கந் திருநந்தவாநத் துக்கு கீழ்பாதி நிலம் ஒரு மாவரை யும் சிறுகழியில்..... நாயனாற்கு நிலம்.... ற்க்கு தெற்க்கும் கழநி நடுவில் ஓடைக். ..செய் நிலம் ஒரு வேலியும் இத.. ..ற்கு ஆற்றங்கரை திருச்சாந்தா ட .. புஞ்சி நிலம் ஆறு மா அலர் நிலம் அம ... ஒரு"
கல்வெட்டு கூறும் வரலாற்று பின்னணி
[தொகு]திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற வரிகளில் இருந்தும், மதுரையும், பாண்டிய முடிதலையும் கருவுங் கொண்டருளிய வீர தேவர்க்கு என்ற வரிகளில் இருந்தும் இது மூன்றாம் குலோத்துங்கனால் மூன்றாவது பாண்டியப் போரில் பாண்டியர்களை வென்று மதுரையை கைப்பற்றியதின் நினைவாக சுமார் 1210 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட கற்கோயில் என அறியமுடிகிறது. சோழநாட்டின், வடகரை ராஜசிங்க வள நாட்டின் உகளூர் கூற்றத்தின் தலைவனான செம்பை சேதிராய வெள்ளான் என்பவன் கற்கோவிலும், திருமண்டபமும் கட்டுவித்தான் என்று கல்வெட்டு கூறுகிறது. மேலும் உற்சவமூர்த்தியான ஈஸ்வரனுக்கும், ஈஸ்வரிக்கும் திருவுருவங்கள் செய்து கொடுத்தான் எனவும் அதே கல்வெட்டு கூறப்படுகின்றது.
அரசனின் திருமுகத்தின்படி தொழுவூரில் இருக்கும் மதுராந்தக சோளீஸ்வரர் உடைய நாயனார்க்கு வீரம காட சோழன் நிலம் வழங்கியதாக ஓர் கல்வெட்டு கூறுகிறது. அவன் பெரிய ஏரி ஒன்றை கட்டுவித்தான், அது திரு நீரு வீரம காட சோழன் பெரியஏரி என வழப்படுகிறது. அது அந்த நிலத்தை நஞ்சையாக மாற்றப் பெரிதும் பயன்பட்டது. இது வனக் கோவாராயன் அளித்த சந்திர சேகர நல்லூரை அடுத்துள்ளது. இறையிலியாக விடப்பட்ட நிலங்கள் சம்பந்தப் பட்ட குறிப்புகள் கொண்ட மேலும் ஒரு தனிக் கல்வெட்டும் உள்ளது.
விசேஷ பூஜைகள்
[தொகு]- மாதம் இருமுறை வரும் பிரதோஷம்,
- திருவாதிரை ஆருத்ரா தரிசனம்
- சனி பிரதோஷம் – மிகவும் சிறப்பான நாள்
கோவிலின் சிறப்புகள்
[தொகு]மதுராந்தக சோளீஸ்வரர் கோவில், இறைவனை தொழுவதற்கு என்றே உள்ள சிறப்புத் தலம், ஆதலால் சிவபெருமானை நினைத்து அமைதியாக தியானம் செய்ய சிறந்த இடம். காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருமுறை இக்கோவிலுக்கு வந்து இறைவனைத் தரிசித்திருக்கிறார்.
கோவிலின் இன்றைய நிலை
[தொகு]800 வருடம் பழமையான இக்கோவிலானது கடந்த இருநூறு வருடங்களாக திருப்பணி ஏதும் செய்யப்படாததால் இயற்கை சீற்றத்தாலும், கட்டுமானத்தின் மீது வளரும் செடி, மற்றும் சிறு மரங்களாலும் முழுவதும் பாதிப்படைந்து உள்ளது. இதன் காரணமாக கோவிலின் ஒரு சுற்றுச் சுவர் 2013 ஆம் ஆண்டு இடிந்துள்ளது. கோவிலின் கட்டுமானம் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது.
வெளி இணைப்பு
[தொகு]- கட்டுரை மூலம்: https://www.facebook.com/Madurantaka.Choleswarar
அருகில் உள்ள கோயில்கள்
[தொகு]- தொழுதூர் வரதராஜ பெருமாள் கோவில்
- வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில்
- திருவாலந்துறை தொளீஸ்வரர் கோவில்
- திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவில்
- வதிஷ்டபுரம் ரெங்கநாதசாமி கோவில்
- கோழியூர் ஈஸ்வரன் கோவில்
- திருவட்டதுறை தீர்த்தபூரிஸ்வரர் கோவில்
ஆதாரங்கள்
[தொகு]- ARE 1913 - Page 460
- ARE 1913 - Page 399
- http://www.dinamalar.com/news_detail.asp?id=793137&Print=1
- https://www.facebook.com/Madurantaka.Choleswarar/info
- தொழுவதற்கு ஒரு கோவில் அது, தொழுதூர் சிவன் கோவில், ஆன்மீக ஜோதி, நவம்பர் 2௦13 மலர் பக்கம் 5
- மகிழ்ச்சியெல்லாம் தரும் மதுராந்தக சோளீஸ்வரர், தினமலர் பக்தி மலர் ஜூலை 13 2௦௦6 பக்கம் 24
- மனக் கவலைகள் தீர்க்கும் மதுராந்தக சோளீஸ்வரர் - குமுதம் ஜோதிடம் 25.07.2008, பக்கம் 3
- மனக்கவலை மாற்றும் மதுராந்தக சோளீஸ்வரர் - ராணி வாராந்திர இதழ், 11.12.2005, பக்கம் 31