உள்ளடக்கத்துக்குச் செல்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சர்வபள்ளி ராதாகிருட்டிணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
2-ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
13 மே 1962 – 13 மே 1967
பிரதமர்ஜவஹர்லால் நேரு
குல்சாரிலால் நந்தா (தற்காலிகம்)
லால் பகதூர் சாஸ்திரி
குல்சாரிலால் நந்தா (தற்காலிகம்)
இந்திரா காந்தி
துணை அதிபர்ஜாகிர் ஹுசைன்
முன்னையவர்ராஜேந்திர பிரசாத்
பின்னவர்ஜாகிர் ஹுசைன்
முதல் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
13 மே 1952 – 12 மே 1962
குடியரசுத் தலைவர்ராஜேந்திர பிரசாத்
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்ஜாகிர் ஹுசைன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
(1888-09-05)5 செப்டம்பர் 1888
திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு17 ஏப்ரல் 1975(1975-04-17) (அகவை 86)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இளைப்பாறுமிடம்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
அரசியல் கட்சிசுயேட்சை
துணைவர்சிவகாமு
பிள்ளைகள்ஐந்து பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு பையன்
பெற்றோர்
  • சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
வேலைஅரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan), வீரா. ராதாகிருஷ்ணய்யா தெலுங்கு: సర్వేపల్లి రాధాకృష్ణ) (ஒலிப்பு; 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975[1]) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவார்.[2]

இளமைக் காலம்

[தொகு]

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். இவர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.[3] இவருடைய தந்தை சர்வபள்ளி வீராசாமி ஐயர்,[3] மற்றும் தாயார் சீதம்மா ஆகியோர் ஆவர்.[3] இவர் தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[4]

டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பு

[தொகு]

கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை, சமுகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக கருதும் நிலையினை இன்றும் காண இயலும். இச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர்வீரனே. அதில் வெற்றியோ தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றி, அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு அனைவரும் தலைவணங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆங்கில கல்வியின் ஆதிக்கம் செய்த அக்காலங்களில், ஒரு பிரிவினர் அதனை முழுவதுமாக வெறுத்ததும்; மறுபிரிவினர் அதனை முழுவதும் ஏற்றுக் கொண்டும் சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை அற்றவராகவும் இருந்தார்கள். மூன்றாவது ஆங்கிலக் கல்வியின் நன்மையினைப் பெற்றதோடு அதன் மூலம் எண்ணற்ற நவீன கருத்துகளையும் வழங்குபவராகவும்; மூட நம்பிக்கைகள் மற்றும் அடிமைத்தனத்தை முற்றிலும் எதிர்ப்பராக திகழ்ந்தார்கள். இவர்கள் தாம் கால்பதித்த இடங்களில் புதிய அத்தியாயத்தினைப் படைப்பவராக விளங்கியவர்களுள் மிக முக்கியமானவர்கள் காந்திஜி, அரவிந்தர், தாகூர், விவேகானந்தர், கிருஷ்ணமூர்த்தி, இராதாகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் எனலாம்.

கல்வியாளர் என்ற வார்த்தை உச்சரிக்கும்போதெல்லாம் இவரது பெயரை என்றும் உச்சரிக்க மறந்ததில்லை. மேலைநாட்டுக்கல்வி எளிமையான பழக்க வழக்கங்கள், புத்தக விரும்பி ச. இராதாகிருஷ்ணன் ஆவார். இவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும் தன்பேச்சால் அனைவரையும் தன்பால் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார். தன் முதல் பணியினை சென்னை மாநில கல்லூரியில் துவங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்சுபோர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து நீண்ட காலமாக தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் "சர்" பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு தன்னை முழுமையாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், மனமார ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார்.

வாழ்க்கைப் பற்றிய அவரது கருத்து

[தொகு]

இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியக்கல்வி இரண்டிலும் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். மனிதனுடைய வாழ்வு விலங்குகளிடமிருந்து வேறுபட்டுள்ளதை தனது பல்வேறு உரைகளில் எடுத்துரைக்கச் செய்தார்.

மனிதனை கடவுளின் படைப்பின் மகுடம் என்றும் மனம் போனபோக்கில் செல்லாமல். தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுதந்திரமாக தெரிவுச்செய்து செயல்படக் கூடியவனாக விளங்க வேண்டும் என்றார். மேலும் அவர் நாம் அனைவருமே வாழ்க்கையின் பொருள் என்னவென்பதையும், வாழ்வின் நோக்கம் என்னவென்பதையும் அறிய வேண்டியவனாகிறோம் என்றும் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கான திட்டத்தையும், நோக்கத்தையும் அறிந்து கொள்ளாமல் அமைதி காண இயலாது என்கிறார்.

உங்களது இலட்சியமும் நம்பிக்கையும் ஒரு கோட்பாட்டில் அமையாவிட்டால், உங்கள் நடத்தை சஞ்சலமடைந்து முயற்சி / சக்தி வீணாகிவிடும் என்கிறார். அதிலும் கோட்பாட்டில் நம்பிக்கை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் நடத்தை உருவாகிறது என்பதை திறம்பட உரைக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் தனித்த வாழ்க்கையன்றி மற்ற மனிதர்களுக்கிடையில்தான் வாழ்கின்றான். இதன் விளைவாக தோன்றியதுதான் நாகரீகம். ஓவ்வொருவரும் இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ மற்றவரின் ஒத்துழைப்பும் இணக்கப்பண்பும் அவசியம் என்பதை மேலும் வலியுறுத்துகிறார்.

கோழைத்தனத்தை வெறுத்து தைரியத்தை ஆதரித்ததோடு; தைரியம் இல்லாமல் எந்த நற்பண்பும் வாழ முடியாது என்றும்; எல்லா அம்சங்களையும் கவனமாகக் கணித்து திட்டமிட்டு தைரியமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அவரின் தின்னமான கருத்தாக இருந்தது.

நாம் எப்போதும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றார்.

கல்வியின் நோக்கம்

[தொகு]

இயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை அவர் என்றும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார்.

கல்வியின் நோக்கம் மனித மனத்தில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள்ளே இருக்கும் குரங்கு தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை வளர்த்து, அனைவற்றிற்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும். விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் மட்டும் கற்பிக்கும் கல்வி ஒரு மனிதனை சிறு தொழில் நுட்பாளனாக உருவாக்குமே தவிர நல்ல மனிதனாக ஆக்காது என்பதை வாதிட்டார். விஞ்ஞானம் அவனுக்கு இயற்கையை வெற்றி கொள்ளவும் பூமியைச் சூறையாடவும் உதவியிருக்கிறது. காற்றில் பறக்கவும் கடலுக்கடியில் நீந்தவும் அவனுக்கு சக்தி அளித்துள்ளது. இவையனைத்தும் மனிதனின் உண்மையான இயல்பு அல்ல. மனிதன் தன்னுடனேயே அமைதியான வாழும் திறனைக் கல்வி அவனுக்கு அளிக்கவில்லை என்று சாடினார்.

மனநோய்கள், மனப்பதற்றம் முதலான கேடுகள் எல்லாம் தவறான கல்வியின் விளைவு ஆகும். மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என்றார். அது சமூக நீதியையும் சுமூகமான மனித உறவுகளை வளர்க்கும் கலையாகும். ஒரு கருத்தைக் கூறி அதற்கு ஆதாரமான காரணங்களை ஒருவர் கூறினால், மற்றொருவர் இதை விட சிறப்பான காரணங்களைக் கூறி மறுக்க முடியும். காரண காரிய வாதத்தில் காணும் முடிவுரைகளுக்கு இறுதித்தன்மை கிடையாது என்கிறார்.

பல்கலைக்கழக ஆணையமும், இராதாகிருஷ்ணனும்

[தொகு]

பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக இருந்த அவர் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி பள்ளிக் கல்வியிலும் சிறப்பான கொள்கைகளை வகுத்ததில் முக்கியப் பங்கு அவருக்குண்டு. அவைகள் பின்வருமாறு:

  • ஆன்மீகப்பயிற்சி அளிக்கவும் சுதந்திரமாக ஆராய்ந்து சமயம் பற்றி தங்களுடைய அணுகுமுறையை தாங்களே உருவாக்கி கொள்ளுதல்.
  • ஆங்கிலத்திற்கு பதில் விரைவில் இந்திய மொழி ஒன்றை பயிற்று மொழி ஆக்கப்பட வேண்டும். பிராந்திய மொழி ஒன்றை பயன்படுத்தும் வரை ஆங்கில மொழி தொடர்ந்து பயன்படுத்துதல் வேண்டும்.
  • கல்வி வாய்ப்புகளைத் திறமையின் அடிப்படையிலேயே வழங்குதல்.

இவ்வாணையத்தின் கருத்துகள் கிறித்துவ நாடுகளிலும் பின்பற்றப்பட்டது என்பது சாலச்சிறந்தது

ஆசாரியரும் மொழிப் பெயர்ப்பு நூல்களும்

[தொகு]

இவர் "ஆசாரியர்" என்ற நிலைக்கு உயர்ந்ததின் முக்கிய காரணம், அவரால் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் மற்றும் பகவத் கீதை ஆகும்.

அவருக்கு மிகவும் பிடித்த நூலான பகவத் கீதையைப் பற்றிக் கூறும்போது "உபநிடதங்கள்" என்ற பசுவிலிருந்து கிருஷ்ணர் என்ற தெய்வீக ஆயர், அர்ஜுனனுக்காகக் கறந்த பால் தான் பகவத் கீதை என்றும்; அது பழையதும் அன்று, புதியதும் அன்று, நிரந்தரமானது என்பதை தெளிவுப்படுத்தினார்.மனிதன் ஆசைகளை ஒழுங்குபடுத்தி பகவா னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும்; நம்பிக்கை என்பது சந்தேகமில்லாத உறுதியான விசுவாசமும் ஈடுபாடும் இணைந்து வாழ்க்கையின் ஒரு நோக்கத்தை அளிப்பதோடு; வாழ்வில் ஏற்படும் இன்னலிலும் இருளிலும் இருந்து மீண்டு வரசெய்யும் நம்பிக்கையை அளிக்கிறது. இன்னல்களிலிருந்து விடுபட சுயகட்டுப்பாடும் புலன்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்.

ஒருமுறை "பகவத் கீதையை" ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதனை காந்திஜியிடம் அவர் அளிக்க அவரோ “தான் அர்ஜுனன் என்றும், தாங்கள் கிருஷ்ணன் என்றும், தாங்கள் தவறாக எழுதியிருக்க முடியாது" என்று காந்திஜி கூறியதிலிருந்து அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்பட்டது எனலாம். ஆன்மீகமும் ஆசாரியரும் அறிவியலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் நாம் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்றாலும் அறநெறி மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் முந்தைய தலைமுறைக் காட்டிலும் பின்தங்கியுள்ளோம். நம்முடைய இயல்பானவைகள் இன்று இயந்திரமாகிவிட்டன.

ஒருவருடைய அறிவுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. அறிவு செயல்படுவதுதான் விவேகமாகும். எது நன்மை என்று தெரிந்தும் செய்யாமலிருப்பது, எது தீமை என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமை, ஆனால் தீமையை நீக்கி நன்மைக் காண நம்மால் இயலும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் மனதில் ஒரு தடத்தை பதித்து, பலமிக்க சக்தியாக மாறி, மென்மேலும் சேர்ந்து செயலுக்கு உரித்தான சக்தியாக விளங்கி அவைகள் அணிவகுத்து பழக்கங்களாக மாறுகின்றன. இத்தகைய பழக்கங்களை உடைப்பது கடினம் என்றாலும் ஏற்படுத்துவது எளிது ஆகும். மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் முந்தைய செயல்களின் சக்தியே வழிகாட்டுதலாக அமைகின்றன. நாம் "பழக்கம்" என்ற விதையை விதைத்துப் "பண்பு" என்ற பயிரை அறுவடை செய்வதாகவும், பண்பு தான் விதியாகும் என்கிறார் அவர்.

சமயம் பற்றிய அவரது கருத்து

[தொகு]

சமயம் என்பது ஒரு அனுபவம், நம்பிக்கை, மனிதனின் இயல்பில் ஒருங்கிணைப்பாகும். அது ஒரு முழுமையான ஈடுபாடு ஆகும். ஒருவன் மற்றொருவர் மூலமாக சமயத்தைப் பின்பற்றி நடக்க இயலாது. ஒவ்வொருவரும் தனது சிலுவையைத் தானே சுமந்து அகங்காரத்தை சிலுவையிலறைந்து தன்னிடமுள்ள ஒளியைச் சுடர்விடச் செய்ய வேண்டும். சமயத் தேடல் என்பது ஒரு போராட்டமாகும். அதற்கு வழி நெடுங்கிலும் கடுமையான மன உழைப்பு அவசியமாகிறது.

விஞ்ஞான தொழில்நுட்ப அளவின் குறைபாடுகளைச் சீர்செய்வதற்கு சமயமும் தத்துவமும்தான் சரியான துணை என்பதை எப்பொழுதும் முன்மொழிந்தார். நட்பு, அன்பு, கலைப்படைப்பு போன்ற பண்புகளை விஞ்ஞானம் கொண்டு விளக்க முடியாது. புகழ்பெற்ற ஓவியரால் வரையப்பட்ட ஓவியமும் புகழ்பெற்ற இசையெழுப்பவர்கள் உருவாக்கப்பட்ட பாடல்களும் அவரவர் உள்ளுணர்வின் உத்வேகத்தால் ஏற்பட்டவைகளே தவிர விஞ்ஞானத்தால் ஆராய வேண்டியதன்று. அவருடைய உரை எதுவும் அரசியல், கல்வி, சமயம் பற்றியதாக இருந்தாலும் விருந்து படைப்பதாகவும், சிந்தனை தூண்டும் செயல்களை உள்ளடக்கியதாகவும், இருக்கும். இந்த உரையைப் படிப்பதே ஒரு கல்வியாகும். நீண்ட நினைவாற்றல் கொண்ட இவர், தன்னுடைய எல்லா புத்தகங்களிலும் சிந்தனையைத் தூண்டும் கருத்துகளை ஆங்காங்கே தூவியிருப்பதைக் காணலாம்.

அமெரிக்காவில் பால் ஆர்தர் வெளியிட்ட "வாழும் தத்துவ ஞானிகளின் நூல்கள்" என்ற புத்தக வரிசையில் டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள் பற்றி வெளியாயிருப்பதிலிருந்து அவரது தத்துவங்கள் உலகெங்கும் பரவி உள்ளதற்கானச் சான்று இதுவாகும்.

இராதாகிருஷ்ணனின் தத்துவத்தை "ஆன்மீக மனித நேயம்" என்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த தத்துவ அறிஞரும் ஏராளமாக எழுதியதில்லையாம். அவரது பிறந்த நாளை செப்டம்பர் ஐந்தாம் தேதியை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டுமென்றே ஆசிரியர்களின் தேசிய சம்மேளத்தின் கோரிக்கையை ஏற்று, நேருவின் முயற்சிக்குப்பின் அவ்வாறே முடிவு செய்யப்பட்டு நாமும் கொண்டாடி மகிழ்கின்றோம். உலக சிந்தனையாளர்களுள் ஒருவராக ஜொலிக்கவில்லை என்றாலும் நம் மனதில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்த கல்வியாளர்களுள் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

இல்லற வாழ்க்கை

[தொகு]

இராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான[5] சிவகாமு,[6] என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.

அரசியல் நிலைபாடுகள்

[தொகு]

1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ. வி. அழகேசன் பதவியை ராஜினாமா செய்தார்கள்.இந்தி ஆட்சி மொழிக்கு ஆதரவான பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவ்விரு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அதனை குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.[7]

ஆசிரியப் பணி

[தொகு]

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர்.[8]

இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எழுதிய நூல்கள்

[தொகு]
  1. முதன்மை உபநிடதங்கள்
  2. இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
  3. இந்தியத் தத்துவம் தொகுதி I & II
  4. கிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்
  5. தம்மபதம்
  6. பகவத் கீதை விளக்க உரை
  7. கிழக்கும் மேற்கும்
  8. மகாத்மா காந்தி
  9. கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு
  10. பிரம்ம சூத்திரம் விளக்க உரை
  11. இரவீந்திரநாத்தின் தத்துவங்கள்
  12. இந்திய சமயங்களின் சிந்தனை
  13. இந்துஸ்தானின் இதயம்
  14. சமயமும் கலாச்சாரமும்
  15. சமகால இந்திய தத்துவம்
  16. சமயமும் சமுதாயமும்
  17. உண்மையான கல்வி
  18. இந்தியச் சமயங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=2001438
  2. "DR. SARVEPALLI RADHAKRISHNAN - THE PHILOSOPHER PRESIDENT". பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 3.2 "TeluguOne". TeluguOne. Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 2011-08-31.
  4. Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 11
  5. Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 12
  6. Radhakrishnan's wife's name is spelled differently in different sources. It is spelled Sivakamu by Sarvepalli Gopal (1989); Sivakamuamma by Mamta Anand (2006); and still differently by others.
  7. மயிலைபாலு (5 செப்டம்பர் 2014). "அவரை அசிங்கப்படுத்தாதீர்கள்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். p. 3. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  8. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 509

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
17 செப்டம்பர் 1939 - 16 சனவரி 1948
பின்னர்