பக்ருதின் அலி அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்ருதின் அலி அகமது
Fakhruddin Ali Ahmed
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
24 ஆகத்து 1974 – 11 பெப்ரவரி 1977
பிரதமர்இந்திரா காந்தி
Vice Presidentபசப்பா தனப்பா ஜாட்டி
முன்னையவர்வி. வி. கிரி
பின்னவர்பசப்பா தனப்பா ஜாட்டி (பதில்)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பேகம் ஆபிதா அகமது
தொழில்வழக்கறிஞர்

பக்ருதின் அலி அகமது (Fakhruddin Ali Ahmed, ஒலிப்பு, 13 மே 1905–11 பெப்ரவரி 1977) இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக 1974 முதல் 1977 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.[1][2].

தோற்றம்[தொகு]

பக்ருதின் அலி அகமது பழைய தில்லியின் ஹவுஸ் காசி பகுதியில் 1905, மே 13 தேதி பிறந்தார். இவர் நன்கு அறியப்பட்ட அசாமிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கல்வி[தொகு]

இவர் தனது பள்ளி படிப்பை உத்திர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தின் அரசு உயர் நிலைப்பள்ளியில் தொடங்கினார். தனது மெட்ரிகுலேஷன் படிப்பை டெல்லி அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் இங்கிலாந்து சென்ற இவர் 1923 ஆம் ஆண்டு புனித கேத்தரின் கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார். கேம்பிரிச் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்ற இவர் 1928 ல் லாகூர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்தார்.

அரசியல்[தொகு]

பிரித்தானிய இந்தியாவில்[தொகு]

1925 ஆம் ஆண்டு இலண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் தீவிரமாக பணியாற்றினார்.1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றமைக்காக 3 1/2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.

சுதந்திர இந்தியாவில்[தொகு]

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் 1952 முதல் 1953 ராஜ்ய சபாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பின்னர் அசாம் அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார். 1936 முதல் அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராகவும், 1947 முதல் 1974 வரை பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் கோபிநாத் போர்டோலாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும்,வருவாய் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இரண்டு முறை (1957–1962) மற்றும் (1962–1967) ஆகிய ஆண்டுகளில் அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் மக்களவைக்காக அசாமின் பார்பெட்டா தொகுதியிலிருந்து 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு , தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார்.

அசாம் கால்பந்து சங்கம் , மட்டைப்பந்து சங்கம் ஆகியவற்றின் தலைவராக பலமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அசாம் விளையாட்டு குழுவின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 1967 ஆம் ஆண்டு அகில இந்திய மட்டைப்பந்துசங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 முதல் இவர் தில்லி கால்ப் கிளப் மற்றும் தில்லி ஜிம்கானா கிளப் ஆகியவற்றில் உறுப்பினராகவும் இருந்தார்.

இறப்பு[தொகு]

1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பக்ருதின் அலி அகமது 1977-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார்.

பட்டங்கள்[தொகு]

1975 ஆம் ஆண்டு யுகோஸ்லாவியா சென்ற போது அங்குள்ள கொசோவோ நகரின் பிரிஸ்டினியா பல்கலைகழகத்தினர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. முன்னாள் குடியரசுத் தலைவர்கள், குடியரசுத் தலைவர் இணையத்தளம்.
  2. Fakhruddin Ali Ahmed (1905–1977): Biography RRTC, Ministry of Information and Broadcasting (India)]].
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்ருதின்_அலி_அகமது&oldid=3776743" இலிருந்து மீள்விக்கப்பட்டது