உள்ளடக்கத்துக்குச் செல்

இயேசுவில் நிறைவேறிய இறைவாக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயேசு கிறிஸ்துவே யூதர்களால் எதிர்பார்க்கப்படும் மெசியா என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். யூதர்களின் மறைநூலான பழைய ஏற்பாட்டில் மெசியாவைப் பற்றிக் காணப்படும் இறைவாக்குகள் புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவின் வரலாற்றில் நிறைவேறியது என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

கடவுள், உலகத்தில் தனது மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடையே தோன்றிய இறைவாக்கினர்கள் வழியாக இயேசுவின் வருகைக்காக உலகத்தைத் தயார் செய்தார் எனவும், உலக மீட்பரைப் பற்றிய இறைவாக்குகள் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், இந்த இறைவாக்குகளே இயேசு மெசியா என்று சான்று பகர்கின்றன என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

இயேசுவில் நிறைவேறியதாக நம்பப்படும் இறைவாக்குகள்[தொகு]

இறைமகன் இயேசு[தொகு]

இயேசு கிறிஸ்து கடவுளின் மகனே என்பதற்கான சான்றுகள்:

"மண்ணுலகின் எல்லைகளைக் குறித்தவர் யார்? அவர் பெயரென்ன? அவருடைய மகன் பெயரென்ன?" (நீதிமொழிகள் 30:4) ஆண்டவர் ஆணையிட்டு உரைத்தது: "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்." (திருப்பாடல்கள் 2:7)
வானதூதர் மரியாவை பார்த்து, "இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்." (லூக்கா 1:31-32)

கிறிஸ்துவின் வழிமரபு[தொகு]

இயேசு பிறக்கும் வழிமரபுக்கான சான்றுகள்:

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, "உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்″ என்றார். (தொடக்க நூல் 22:18) "யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!" (எண்ணிக்கை 24:17) ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள தளிர் தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார்." (எரேமியா 23:5)
"தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்து." (மத்தேயு 1:1) வானதூதர் மரியாவைப் பார்த்து, "அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். (லூக்கா 1:31,33)

மீட்பரின் பிறப்பு[தொகு]

இறைமகன் இயேசுவின் பிறப்பு பற்றிய சான்றுகள்:

"நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்." (மீக்கா 5:2) "ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' [இறைவன் நம்மோடு உள்ளார்] என்று பெயரிடுவார்." (எசாயா 7:14) "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்." (எசாயா 9:6)[1]
யோசேப்பும் மரியாவும் பெத்லகேமில் இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்; பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். (லூக்கா 2:6-7) வானதூதர் இடையர்களிடம், "இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்றார். (லூக்கா 2:10-11)

முன்னோடி எலியா[தொகு]

திருமுழுக்கு யோவான் பற்றிய சான்றுகள்:

"குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்." (எசாயா 40:3) "இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்." (மலாக்கி 4:5)
திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். அவர் தொடர்ந்து, "என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" எனப் பறைசாற்றினார். (மாற்கு 1:4,7-8) இயேசு மறுமொழியாக, "நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்" என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள். (மத்தேயு 17:12-13)

தூய ஆவியின் துணை[தொகு]

இயேசுவின் பணியில் தூய ஆவி பற்றிய சான்றுகள்:

"ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்." (எசாயா 11:2) "இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்." (எசாயா 42:1)
மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (லூக்கா 3:21-22) இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்" என்றார். (யோவான் 1:29,32,34)

நீதியுள்ள போதனைகள்[தொகு]

இயேசுவின் போதனைப் பணி பற்றிய சான்றுகள்:

"நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைசெய்திகளை எடுத்துரைப்பேன்." (திருப்பாடல்கள் 78:2) "என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்கு இனித் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள். நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்." (எசாயா 30:20-21)
மக்களின் கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, இயேசு பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார். (மாற்கு 4:33-34) இயேசு சீடர்களிடம் கூறியது: "நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்." (யோவான் 13:13)

அருட்பொழிவின் வல்ல செயல்கள்[தொகு]

இயேசுவின் வல்ல செயல்கள் (அற்புதங்கள்) பற்றிய சான்றுகள்:

"ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது. ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்; ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்." (எசாயா 61:1-2) "அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்." (எசாயா 35:5-6) "என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்." (மலாக்கி 4:2)
இயேசு மறுமொழியாக, "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர் பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறுபெற்றோர்" என்றார். (மத்தேயு 11:4-6)

எருசலேமில் நுழைதல்[தொகு]

இயேசு அரசராக எருசலேமில் நுழைவது பற்றிய சான்றுகள்:

"மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்." (செக்கரியா 9:9)
சீடர்கள் அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். (மாற்கு 11:7-11)

நண்பனால் காட்டிக்கொடுக்கப்படல்[தொகு]

இயேசுவை நண்பன் காட்டிக்கொடுப்பது பற்றிய சான்றுகள்:

"என் உற்ற நண்பன், நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான்." (திருப்பாடல்கள் 41:9)
அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். (மாற்கு 14:18) இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், "யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?" என்றார். (லூக்கா 22:47-48)

கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும்[தொகு]

இயேசுவுக்கு நேரும் நிந்தனை பற்றிய சான்றுகள்:

"அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை." (எசாயா 50:6)
பின்பு இயேசுவின் முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, "இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்" என்று கேட்டனர். (மத்தேயு 26:67)

இயேசுவின் பொறுமை பற்றிய சான்றுகள்:

"அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்." (எசாயா 53:7)
தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது இயேசு மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், "உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?" என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான். (மத்தேயு 27:12-14)

கிறிஸ்து இயேசு மக்களின் பாவங்களை சுமந்தது பற்றிய சான்றுகள்:

"மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்." (எசாயா 53:4-5)
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். (யோவான் 19:1-2,16-17) "சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை இயேசுவே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்." (1 பேதுரு 2:24) "கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்." (எபேசியர் 1:7)

இயேசுவின் உடைமேல் சீட்டுப் போடுவது பற்றிய சான்றுகள்:

"தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள். என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்." (திருப்பாடல்கள் 22:16-18)
அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, "அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்" என்றார்கள். (யோவான் 19:18,23-24)

இயேசு தீயோருக்காக பரிந்துபேசுவது பற்றிய சான்றுகள்:

"அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்." (எசாயா 53:12)
மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே இயேசுவையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்போது இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார். (லூக்கா 23:33-34)

இயேசுவின் மரணத்தின்போது நிகழ்பவை பற்றிய சான்றுகள்:

தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: "அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன். உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்." (ஆமோஸ் 8:9-10)
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். (லூக்கா 23:44-46,48)

இயேசுவின் விலா குத்தப்படுவது பற்றிய சான்றுகள்:

"அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவரையே உற்று நோக்குவார்கள்; அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவரைப் போலும் மனம் கசந்து அழுவார்கள்." (செக்கரியா 12:10)
பின்பு வீரர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. (யோவான் 19:33-34)

இயேசுவின் உயிர்ப்பு[தொகு]

இயேசுவின் சாவிலிருந்து உயிர்த்தெழுவதற்கு சான்றாக நம்பப்படுவன:

"என்றுமே இல்லாதவாறு அவர் சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்." (எசாயா 25:8)
"கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக் கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை." (திருத்தூதர் பணிகள் 2:23-24)

இயேசுவின் விண்ணேற்றம்[தொகு]

இயேசு விண்ணகம் செல்வது பற்றிய சான்றுகள்:

"எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்." (திருப்பாடல்கள் 47:5) ஆண்டவர் என் தலைவரிடம், "நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று உரைத்தார். (திருப்பாடல்கள் 110:1)
இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். சீடர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். (லூக்கா 24:50-51) சீடர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். (மாற்கு 16:19)

மெசியாவின் அரசு[தொகு]

இயேசுவின் முடிவற்ற அரசாட்சி பற்றிய சான்றுகள்:

"வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது." (தானியேல் 7:13-14) "இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர். (எசாயா 52:13,15)
சீடர்கள் கண்கள் முன்பாக இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. (திருத்தூதர் பணிகள் 1:9) விண்ணகத்தில் உரத்த குரல் ஒன்று எழுந்தது; "உலகின் ஆட்சி உரிமை நம் ஆண்டவருக்கும் அவருடைய மெசியாவுக்கும் உரியதாயிற்று. அவரே என்றென்றும் ஆட்சி புரிவார்" என்று முழக்கம் கேட்டது. (திருவெளிப்பாடு 11:15)

கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் மெசியாவின் ஒப்பீடு[தொகு]

கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் மெசியாவின் அடிப்படைத் தகுதிகளாகவும், மெசியாவின் வருகையின் போதும் ஆட்சியின் போதும் நிகழ்வனவாக கருதுபவற்றின் ஒப்பீடு பட்டியல்

மெசியாவின் குணம் யூதம் கிறிஸ்தவம்
நீதிபதிகளும் ஆலோசகர்களும் திருப்பிக் கொணரப்படுவர்[2][3]
அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்:[3][4]
உலகத்தார் அனைவரும் இஸ்ரயேலின் ஒரே கடவுளை வணங்குவர்[3][5][6]
யூதர் அனைவரும் தங்களின் மறைக்குத் திரும்புவர்[3]
அவர் சாலமோன்[1][7] வழியாய் தாவீது அரசரின் குலத்தவராய் இருப்பார்[8]
யூதரான அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்[3][9]
தீயோரும், கொடியோரும் அவரின் ஆட்சியில் அழிவர்[3][10]
மண்ணுலகம் ஆண்டவர் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்[3][11]
பிறஇனத்தார் அவரைத் தேடி வருவார்கள்[3][12]
இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை ஒன்று திரட்டுவார்[1][3][13][14]
என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்[3][15]
அப்போது பசி, சாவு, நோய் முதலியன இருக்காது[3][15]
இறந்த இறைமக்கள் உயிர் பெறுவர்[3][16]
யூதர்கள் அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்[3][17]
அவர் அமைதியின் மன்னராய் இருப்பார்[3][18]
இஸ்ரயேலருக்கு இழைக்கப்பட்ட அநீதியை அனைவரும் உணர்வர்[3][19]
உலக மக்களனைவரும் ஆன்மீக வழிகாட்டுதலுக்கு யூதர்களிடம் வருவர்[3][20]
எருசலேம் மீன்டும் கட்டப்படும்[3][21]
ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்படும்[3][22]
எருசலேமில் மூன்றாம் முறையாக கோயிலை மீண்டும் கட்டுவார்[1][3][6][23][24]
உலகிற்கு அமைதி கொணர்வார்[1][6][25]
உலகம் முழுமையும் கடவுளை புரிந்து கொள்ள செய்வார்.[1][26]
மக்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்[3][27]
மக்களின் தேவைகளனைத்தையும் நிறைவேற்றுவார்[3][28]
பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம்போல் ஆக்குவார்[3][29]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 [1] பரணிடப்பட்டது 2008-05-29 at the வந்தவழி இயந்திரம் English Handbook Page 34
 2. Isaiah 1:26
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 "Jewish Messiah, Moshiach/Mashiach - What is the Jewish Belief About 'The End of Days'?". Archived from the original on 2008-02-16. பார்க்கப்பட்ட நாள் 2011-09-13.
 4. Isaiah 2:4
 5. Isaiah 2:17
 6. 6.0 6.1 6.2 Messiah Truth: A Jewish Response to Missionary Groups
 7. 1 Chron. 22:8-10
 8. Isaiah 11:1
 9. Isaiah 11:2
 10. Isaiah 11:4
 11. Isaiah 11:9
 12. Isaiah 11:10
 13. Isaiah 11:12
 14. Isaiah 27:12-13
 15. 15.0 15.1 Isaiah 25:8
 16. Isaiah 26:19
 17. Isaiah 51:11
 18. Isaiah 52:7
 19. Isaiah 52:13-53:5
 20. Zechariah 8:23
 21. Ezekiel 16:55
 22. Ezekiel 39:9
 23. Ezekiel 40
 24. Micah 4:1
 25. Isaiah 2:4, Isaiah 11:6, Micah 4:3
 26. Isaiah 11:9, Isaiah 40:5, Zephaniah 3:9
 27. Zephaniah 3:9
 28. Psalms 37:4
 29. Isaiah 51:3, Amos 9:13-15, Ezekiel 36:29-30, Isaiah 11:6-9