உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 477-799

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சபை வரலாற்றின் கால கட்டங்கள்

[தொகு]

கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

கி.பி. 477ஆம் ஆண்டு முதல் கி.பி. 799ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள்

[தொகு]
முதலாம் யுஸ்தீனியன் மன்னன். கற்பதிகை ஓவியம். காலம்: கி.பி. 547க்கு முன். காப்பிடம்: தூய வித்தாலே பசிலிக்கா பெருங்கோவில், ரவேன்னா, இத்தாலியா.


  • கி.பி. 480ஆம் ஆண்டு: மரபுப்படி, இந்த ஆண்டில் புனித ஆசிர்வாதப்பர் என்று அழைக்கப்படும் பெனதிக்து (St. Benedict) [1] பிறந்தார். இவர் மேற்கு கிறித்தவ வரலாற்றில் துறவியர் இல்லங்கள் உருவாக அடித்தளம் இட்டார். துறவியர் வாழ்க்கைமுறை [2] ஒழுங்குகள் வகுத்தார்.


  • கி.பி. 496ஆம் ஆண்டு: ஃபிராங்கு இனத்தவராகிய முதலாம் குளோவிசு மன்னர் (Clovis I) [3] தம் மரபு சமயத்தை விட்டு, கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவுகிறார்.


  • கி.பி. 502ஆம் ஆண்டு: போப்பாண்டவர் பதவிக்கு வாக்களிப்பதில் குருமார் அல்லாத பொதுநிலையினர் பங்கேற்கலாகாது என்றும், உயர்நிலைக் குருமார் மட்டுமே அந்த உரிமை கொண்டவர்கள் என்றும் சிம்மாக்கசு என்னும் போப்பாண்டவர் (Pope Symmachus) [4] சட்டம் இயற்றுகிறார்.


  • கி.பி. 522: கோஸ்மாஸ் இண்டிக்கோப்ளூஸ்டெஸ் (Cosmas Indicopleustes) [பொருள்: "இந்தியப் பயணம் மேற்கொண்ட கோஸ்மாஸ்") என்னும் அலெக்சாந்திரிய நகர் துறவி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைப் பற்றி பல விவரங்கள் தருகின்றார்[5].


  • கி.பி. 529ஆம் ஆண்டு: மன்னர் யுஸ்தீனியன் [6] தலைமையில் சட்டத் தொகுப்பு உருவாக்கப்படுகிறது. குடிமைச் சட்டத் தொகுப்பின் (Corpus Iuris Civilis) முதல் பகுதி வெளியிடப்படுகிறது. அதுவரை சிதறிக்கிடந்த சட்டங்களை ஒன்றிணைத்துத் திறமையாகத் தொகுத்தது வரலாற்றுச் சிறப்பான நிகழ்வு. அச்சட்டத் தொகுப்பு இன்றைய சட்டத் தொகுப்புகளுக்கு அடிப்படையாக உள்ளது.


  • கி.பி. 533, சனவரி 2: மெர்க்கூரியசு என்பவர் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் (Pope John II) [7] என்னும் பெயரேற்று ஆளத் தொடங்குகிறார். இவரே வரலாற்றில் முதல்முறையாக ஆட்சிப் பெயர் ஏற்ற போப்பாண்டவர் ஆவார். பிசான்சிய மன்னர் யுஸ்தீனியன் போப்பாண்டவருக்குப் பரிசுகள் அளித்ததோடு, கிறித்தவ நம்பிக்கையில் நிலைத்திருப்பதாக உறுதியும் அளிக்கிறார்.


  • கி.பி. 533ஆம் ஆண்டு: மன்னர் யுஸ்தீனியனின் குடிமைச் சட்டத் தொகுப்பின் இரண்டாம் பகுதி வெளியிடப்படுகிறது. மூன்றாம் பகுதி நடைமுறைக்கு வருகிறது.


  • கி.பி. 536ஆம் ஆண்டு: மன்னர் யுஸ்தீனியனுக்குப் படைத் தளபதியாய் இருந்த பெலிசாரியுசு (Belisarius) என்பவர் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியை மீண்டும் கைப்பற்ற பெரும் துணை செய்கிறார் [8]. உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியாகிய பிசான்சியத்தின் முதன்மையான தளபதிகளுள் ஒருவர் பெலிசாரியுசு.


  • கி.பி. 553ஆம் ஆண்டு: இரண்டாம் கான்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம் கூடுகிறது [9]. இச்சங்கம் அலெக்சாந்திரியா நகர் ஓரிஜன் (Origen of Alexandria)[10] என்னும் கிறித்தவ அறிஞரின் தவறான போதனைகளைக் கண்டனம் செய்கிறது. இதுவரை நடந்த நான்கு பொதுச்சங்கங்களின் போதனையை (நிசேயா [325]; முதலாம் கான்ஸ்தாந்திநோப்புள் [381]; எபேசு [431]; கால்செதோன் [451]) இச்சங்கம் உறுதிப்படுத்தியது.


  • கி.பி. 590ஆம் ஆண்டு: போப்பாண்டவர் முதலாம் (பெரிய) கிரகோரி (Pope Gregory the Great) [11] பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திருச்சபை அமைப்பு, நடைமுறை ஆகிவற்றில் சீர்திருத்தம் கொணர்கிறார். கிரகோரிய இசை (Gregorian Chant) [12] என்னும் இராக முறை இசையைப் பரவலாக்குகிறார்.


  • கி.பி. 596ஆம் ஆண்டு: போப்பாண்டவர் பெரிய கிரகோரி இங்கிலாந்து நாட்டில் கிறித்தவ மறையைப் பரப்புவதற்காகக் கண்டர்பரி அகுஸ்தீன் [13] என்னும் பெனதிக்து சபைத் துறவியை அனுப்புகிறார். அவரோடு சில துறவியர் உட்பட இன்னும் 40 பேர் செல்கிறார்கள்.


  • கி.பி. 638ஆம் ஆண்டு: இசுலாமியர் [14] கிறித்தவ எருசலேம் நகரையும் சிரியாவையும் கைப்பற்றுகிறார்கள்.


  • கி.பி. 642ஆம் ஆண்டு: எகிப்து இசுலாமியர் கைவசம் ஆகிறது. தொடர்ந்து அவர்கள் வடக்கு ஆப்பிரிக்காவில் பரவுகிறார்கள்.


  • கி.பி. 664ஆம் ஆண்டு: இங்கிலாந்திலுள்ள கெல்ட்டிக் திருச்சபை [15] கத்தோலிக்க சபையோடு இணைய விட்பி மன்றம் வழிவகுக்கிறது.


  • கி.பி. 680ஆம் ஆண்டு: இயேசு கிறிஸ்துவிடம் இறை உளம் உண்டே ஒழிய மனித உளம் இல்லை[16] என்னும் தவறான கொள்கையை 3ஆம் காண்ஸ்தாந்திநோப்புள் பொதுச் சங்கம் கண்டிக்கிறது.


  • கி.பி. 685ஆம் ஆண்டு: மரோனித்தர்[17] என்று அழைக்கப்படும் குழுவிலிருந்து யோவான் மரோன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தியோக்கியா நகருக்கும் கீழ்த்திசை சபைகள் அனைத்திற்கும் முதுபெரும் தந்தையாக நியமிக்கப்படுகிறார். அவர் முதலாம் செர்ஜியுசு என்னும் போப்பாண்டரின் ஒப்புதலைப் பெறுகிறார்.


  • கி.பி. 698ஆம் ஆண்டு: முதலாம் செர்ஜியுசு என்னும் போப்பாண்டவர் வில்லிபுரோர்து[18] என்பவரை ஓலாந்து நாட்டு ஃபிரிசியர்களுக்கு ஆயராக நியமிக்கிறார். வில்லிபுரோர்து உட்ரெக்ட் நகரில் ஒரு கோவில் எழுப்புகிறார்.


  • கி.பி. 711ஆம் ஆண்டு: இசுலாமியப் போர்ப்படைகள் எசுப்பானியா நாட்டின் மீது தாக்குதல் நிகழ்த்துகிறார்கள்[19].


  • கி.பி. 718ஆம் ஆண்டு: இங்கிலாந்து நாட்டவரான புனித போனிஃபாசு[20] என்பவரை இரண்டாம் கிரகரி என்னும் போப்பாண்டவர் செருமனிக்கு அனுப்பி, அங்குக் கிறித்தவ மதம் பரவிட வழிவகுக்கிறார்.


  • கி.பி. 726ஆம் ஆண்டு: உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியில் கிறித்தவப் புனிதர்களின் உருவச் சின்னங்களை அழிக்கும் செயல் தொடங்குகிறது [21]. இது கி.பி. 843 வரை நிகழ்கிறது.


  • கி.பி. 732ஆம் ஆண்டு: இசுலாமியர் மேற்கு ஐரோப்பாவின்மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்துகிறார்கள். சார்லஸ் மர்த்தேல் என்னும் அரசன் இசுலாமிய ஆக்கிரமிப்பைப் ஃபிரான்சு நாட்டுப் புவாத்தியே நகர் அருகே தடுத்துநிறுத்துகிறார் [22].


  • கி.பி. 751ஆம் ஆண்டு: பிசான்சிய பேரரசின் வெளி ஆட்சித் தளமாகிய ரவேன்னா நகரை லொம்பார்தியர் கைப்பற்றுகிறார்கள். இதனால் மத்திய இத்தாலியாவிலும் உரோமையிலும் பிசான்சியத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.


  • கி.பி. 756ஆம் ஆண்டு: போப்பாண்டவரை நாட்டுத் தலைவராகக் கொண்டு ஆளப்படுகின்ற போப்பாண்டவர் நாடு (Papal States) [23] உருவாகத் தொடங்குகிறது.


  • கி.பி. 787ஆம் ஆண்டு: பெப்பினின் கொடை [24] என்னுன் செயல்பாடு வழியாக ஃபிராங்கு இனத் தலைவன் பெப்பின் போப்பாண்டவர்கள் தன்னாட்சி உரிமையோடு ஆளலாம் என்னும் சலுகையை அளிக்கின்றான்.


  • கி.பி. 787ஆம் ஆண்டு: கிறித்தவ சமய உண்மைகளையும் புனிதர்களையும் ஓவியம், சிலை, படிம உருவம் ஆகிய ஊடகங்களில் சித்தரித்து மக்கள் வணக்கம் செலுத்துவது தவறல்ல எனவும், கடவுளுக்கு மட்டுமே முழுமுதல் ஆராதனை செலுத்தப்படுகிறது, சிலைகளுக்கு ஆராதனை வழங்கப்படுவதில்லை எனவும் இரண்டாம் நீசேயா பொதுச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றிகிறது.


  • கி.பி. 793ஆம் ஆண்டு: விக்கிங்கி இனத்தார் கிறித்தவ ஐரோப்பாவைத் தாக்கத் தொடங்குகின்றனர். இங்கிலாந்துக்கு அருகிலுள்ள லிண்டிஸ்ஃபார்னே[25] தீவில் அமைந்த முக்கிய துறவியர் இல்லத்தை அழிக்கின்றனர்.

(தொடர்ச்சி): திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 800-1453

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. புனித பெனதிக்து
  2. துறவியர் வாழ்க்கைமுறை
  3. முதலாம் குளோவிசு
  4. போப்பாண்டவர் சிம்மாக்கசு
  5. கோஸ்மாஸ் இண்டிக்கோப்ளூஸ்டெஸ்
  6. யுஸ்தீனியன் சட்டத் தொகுப்பு
  7. போப்பாண்டவர் இரண்டாம் ஜான்
  8. பெலிசாரியுசு
  9. இரண்டாம் கான்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம்
  10. அலெக்சாந்திரியா நகர் ஓரிஜன்
  11. போப்பாண்டவர் முதலாம் கிரகோரி
  12. கிரகோரிய இசை
  13. புனித கண்டர்பரி அகுஸ்தீன்
  14. இசுலாமியர்
  15. கெல்ட்டிக் திருச்சபை
  16. இயேசுவின் மனித இயல்பு
  17. மரோனித்தர் சபை
  18. வில்லிப்ரோர்து
  19. இசுலாமியர் தாக்குதல்
  20. புனித போனிஃபாசு
  21. உருவச் சின்னம் உடைப்பு
  22. சார்லஸ் மர்த்தேல்
  23. போப்பாண்டவர் நாடு
  24. பெப்பினின் கொடை
  25. லிண்டிஸ்ஃபார்னே துறவியர் இல்லம்

வெளி இணைப்புகள்

[தொகு]