கடல்
கடல் (ⓘ) அல்லது ஆழி(Sea), உலகப் பெருங்கடல் (World ocean), அல்லது வெறுமனே பெருங்கடல் (Ocean) என்பது புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட தொடர்ச்சியான (connected) நீர்நிலை ஆகும். இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகிறது. பழங்காலங்களிலிருந்து கடலில் பயணங்கள் செய்யப்பட்டும் தேடல்கள் நடந்தும் வந்தாலும், அறிவியல் அடிப்படையிலான கடலியல் அல்லது பெருங்கடலியல் என்பது பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலை ஜேம்ஸ் குக் 1768 க்கும் 1779 க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததில் இருந்துதான் தொடங்குகிறது. கடல் எனும் சொல்லானது பெருங்கடலின் சிறிய, பகுதியளவு நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆழி, விரிநீர், பெருநீர், பருநீர், முந்நீர் முதலானும் குறிக்கப்படுகிறது.
கடல் நீரில் மிக அதிகளவு கரைந்துள்ள திடப்பொருள் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) ஆகும். மேலும் இந்நீரில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகளும் மேலும் பல தனிமங்களும் உள்ளன. இதில் சில குறைந்த செறிவுத்தன்மையுடன் காணப்படுகின்றன. உவர்ப்புத் தன்மை (salinity) இடத்திற்கு ஏற்றாற்போல் வெகுவாக வேறுபடுகிறது. கரைக்கு அருகிலும் கழிமுகப் பகுதியிலும் (ஆறும் கடலும் கலக்கும் இடம்) ஆழக்கடல் பகுதியிலும் உவர்ப்புத் தன்மை குறைவாகக் காணப்படுகிறது. எவ்வாறேனும், பெருங்கடல்களில் கரைந்திருக்கும் உப்புகளின் "ஒப்புமை" விதங்கள் பொதுவாக ஒன்றாகவே இருக்கின்றன; பெரிதாக மாறுவதில்லை. கடல் பரப்பின் மீது வீசும் காற்றினால் அலைகள் உருவாகின்றன. இவை ஆழம் குறைவான நீரை அடையும்போது கொந்தளிப்புடன் உடைந்து சிதறுகின்றன. வீசும் காற்றின் உராய்வின் மூலமாக பரப்பு நீரோட்டங்கள் உருவாகின்றன. இது பெருங்கடல்கள் முழுவதும் மெதுவான ஆனால் நிலையான ஒரு நீரோட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த நீர்ச்சுழலின் திசைகள் கண்டங்களின் வடிவங்கள், புவியின் சுழற்சி (சுழலகற்சி விளைவு; Coriolis effect) போன்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளாவிய இயங்கு பட்டை என்று அறியப்படும். ஆழ்கடல் நீரோட்டங்கள், அருகில் இருக்கும் துருவங்களில் இருந்து அனைத்து பெருங்கடல்களுக்கும் குளிர் நீரை எடுத்துச் செல்கின்றன. ஓதங்கள் தினமும் இருமுறை கடல்மட்டத்திலிருந்து உயர்ந்து தாழ்கின்றன. இந்த ஏற்ற இறக்கமானது புவியின் சுழற்சியினாலும் புவியைச் சுற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினாலும் மிகக்குறைந்த அளவு சூரியனாலும் ஏற்படுகின்றன. ஓதங்கள் விரிகுடாக்களிலோ கழிமுகங்களிலோ அதிக வீச்சுடன் இருக்கும். அழிவுத்தன்மை கொண்ட ஆழிப்பேரலைகள் கடலடி நிலநடுக்கங்களால் ஏற்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் கடலடியில் ஏற்படும் கண்டத்தட்டு நகர்வு, எரிமலை வெடிப்பு, பெரும் நிலச்சரிவு அல்லது பெரிய விண்வீழ்கற்களால் ஏற்படுகின்றன.
வைரசுகள், பாக்டீரியங்கள், புரோடிஸ்ட்கள், பாசிகள், தாவரங்கள், பூஞ்சைகள் இவற்றுடன் விலங்குகள் போன்ற பெரும் அளவிலான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. இந்த உயிரிகள் சூரியஒளி அதிகம் படும் பரப்பு நீர் முதல் சூரிய ஒளியே படாத அதிக அழுத்தத்திலும் குளிர்ச்சியிலும் இருட்டிலும் இருக்கும் அதிஆழ நீர் வரை பரவியுள்ளன. குறுக்குக் கோடு வாக்கில் (latitude) கடலின் தன்மையும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆர்க்டிக் பனிக்கு அடியில் குளிர் நீரையும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வண்ணமயமான பவளப் பாறைகளையும் கடல் கொண்டுள்ளது. முதன்மையான பல உயிரினக் குழுக்கள் கடலில்தான் சிறந்துவந்தன (evolved). மேலும், உயிரும் கடலிலேயே தோன்றியிருக்கக்கூடும்.
கடல் மக்களுக்குக் கணிசமான அளவு உணவுப் பொருட்களைத் தருகிறது. இதில் முதன்மையானதாக மீன், ஆளிகள், கடல்வாழ் பாலூட்டிகள், கடல்பாசி போன்றவை அடங்கும். கடல்பாசிகள் காட்டில் அறுவடை செய்யப்பட்டோ நீருக்கடியில் வளர்க்கப்பட்டோ கிடைக்கின்றன. வணிகம், பயணம், கனிமப் பிரித்தெடுப்பு, திறன் ஆக்கம் (power generation), போர், ஓய்வுநேரச் செயல்பாடுகளான நீச்சல், அலைச்சறுக்கு (surfing), பாய்மரப் பயணம் (sailing), கருவியுதவியுடன் குதித்தல் (scuba diving) போன்றவற்றுக்கும் கடல் பயன்படுகிறது. மாசுபாட்டினால் கடல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வரலாறு முழுதும் கடல் பல பண்பாடுகளிலும் பெரிதும் உதவியுள்ளது. கடல் ஓமரின் ஒடிசி போன்ற இலக்கியங்களிலும் முதன்மையான கூறாக இருந்திருக்கிறது. இது கடல்சார் ஓவியத்திலும், அரங்கங்களிலும், பண்டைய இசையிலும் பெரும்பங்காக இருந்து வந்துள்ளது.
வரையறை
[தொகு]கடல் புவியின் அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடனிணைத்த ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பில் "பெருங்கடல்கள்" என்று அழைக்கப்படும் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்தும் அடங்கும்.[1] "கடல்" எனும் சொல் குறிப்பாக குறைந்த அளவு கடல்நீரைக் கொண்டவற்றைக் குறிப்பிடப் பயன்படுகின்றது. அதாவது செங்கடல், கருங்கடல் போன்றவை.
கடலைக் குறிக்கும் பிற சொற்கள்
[தொகு]தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது.[2][3]
கடலின் இயற்பியல்
[தொகு]சூரியக் குடும்பத்தில் நீர்ம நிலையில் (திரவ நிலை) புறப்பரப்பில் நீரைக் கொண்டுள்ள ஒரே கோள் புவியே ஆகும்.[4](p22) ஆனால், சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள புவியை ஒத்த கோள்களில் பெருங்கடல்கள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.[5] புவியின் புறப்பரப்பின் 70 விழுக்காட்டிற்கும் மேலாக கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.[4](p7) புவியின் 97.2 விழுக்காடு நீரானது கடலிலேயே காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட 1,360,000,000 கன சதுர கிலோமீட்டர்கள் (330,000,000 cu mi) என்ற அளவுக்குச் சமம்.[6] மீதி 2.15 விழுக்காடு நீரானது பனியாறுகளிலும், கடல் மேல் உறைந்த பனிக்கட்டியிலும் அடங்கியுள்ளது. 0.65 விழுக்காடு நீரானது நீராவி, பிற நன்னீர் ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் மற்றும் காற்றிலும் உள்ளது.[6] விண்வெளியிலிருந்து பார்க்கும்போது நமது கோள் நீல நிற கோலி போன்று காட்சியளிக்கும்.[7] அறிபுனை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் நமது புவியில் கடலே ஓர் ஆதிக்கமான அம்சமாக இருப்பதால் "புவி (Earth)" என்று அழைப்பதற்குபதில் "பெருங்கடல் (Ocean)" என்று இதனை அழைக்கலாம் என்று கூறினார்.[4](p7)
பெருங்கடல் இயற்பியல் (Physical Oceanography) அல்லது கடல் இயற்பியல், என்பது கடலின் புறவியல் (இயற்பியல்) பண்புகளான வெப்பநிலை-உவர்ப்புத் தன்மை கட்டமைப்பு, கலப்பு, அலைகள், உள்ளக அலைகள், புறப்பரப்பு ஓதங்கள். உள்ள்க ஓதங்கள், சுழற்சிகள் ஆகியவற்றைப் பற்றிய படிப்பு ஆகும்.[4](pp14–17)[8] சுழற்சிகள் (currents), ஓதங்கள், அலைகள் வடிவிலான நீரின் இயக்கமானது கடற்கரையோரப் பகுதிகளில் பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது.[9] கடலின் புவியியல் என்பது பெருங்கடல் வடிகால்களின் வடிவத்தையும் அவற்றின் நீட்சியையும், மேலும் கடலில் முடியும் நிலப்பகுதியின் கரைகளையும் பற்றிய படிப்பாகும். கடல் படுகையின் வடிவமைப்பும் அதன் நீட்சியும் புவியிலுள்ள பொருட்கள் எதனால் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய உதவுகின்றன. மேலும், இவற்றின் மூலம் கண்ட நகர்வு, நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகள், எரிமலைப் பகுதிகளின் செயல்பாடுகள், படிவுப் பொருட்களின் மூலம் படிவுப் பாறைகள் உருவான விதம் ஆகியவற்றைப் பற்றி அறிய முடிகிறது.[9]
கடல் நீர்
[தொகு]கடலிலுள்ள நீரானது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புவியின் எரிமலைகளினால் உருகிய பாறைகளில் இருந்து வெளிப்பட்ட பொருள்களினால் உருவானது என்று எண்ணப்பட்டது.[4](pp24–25) ஆனால், அண்மைய ஆய்வுகள் புவியின் நீரானது விண்வீழ்கற்களிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றன.[10]
பெருங்கடல்கள் உப்பு நீரைக் கொண்டுள்ளது. உப்புக் கனிமங்கள் நிலத்திலிருந்து ஆறுகள் வழியாக கடலில் கலப்பதால், கடல்நீர் உப்புத் தன்மைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு, மழை நீருடன் கலந்து சிறிது அமிலத் தன்மையாக மாறி, பின் மலைநீர் ஆறாக உருவமாறி, மலைப் பாறைகள் மற்றும் மண்னில் உள்ள பலவகையான உப்பு முதலிய கனிமங்களுடன் கலந்து இறுதியாக கடலில் கலப்பதாலும் கடல் நீர், அருந்த முடியாத அளவிற்கு உப்புநீராக மாறுகிறது. மேலும் கடலுக்கடியில் உள்ள எரிமலைகள் நீராவியை கக்குவதாலும், எரிமலைகள் வெடிப்பதாலும், புவிக்கடியில் உள்ள உப்புக் கனிமங்கள் கடலில் கலப்பதால் கடல்நீர் உப்புத் தன்மையாக மாறுகிறது.[11] இதனால் கடல் நீர் உவர்ப்பு தன்மையாக உள்ளது.
உவர்ப்புத்தன்மை பொதுவாக ஆயிரத்தில் இத்தனை பகுதிகள் (parts per thousand - இது ‰ குறி கொண்டோ "/ மில்லியன்" என்றோ குறிப்பிடப்படுகிறது) என்று அளக்கப்படுகிறது. ஒரு திறந்த பெருங்கடலின் ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் திடப்பொருளைக் கொண்டுள்ளது. அது 35 ‰ என்று குறிப்பிடப்படுகிறது. (பெருங்கடலின் 90% நீரானது 34‰ முதல் 35‰ வரையிலான உவர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளன[12]). நடுநிலக்கடல் சிறிது அதிகமாக 37 ‰ என்ற அளவைக் கொண்டுள்ளது. அந்த நீரில் சாதாரண உப்பு, சோடியம், குளோரைடு ஆகியவை 85 விழுக்காட்டு அளவில் உள்ளன. மேலும் அதில் மக்னீசியம், கால்சியம் ஆகியவற்றின் உலோக அயனிகளும், சல்ஃபேட், கார்பனேட், புரோமைடு போன்றவற்றின் எதிர்மின் அயனிகளும் கரைந்துள்ளன. பல்வேறு கடல்களில் வெவ்வேறு உவர்ப்புத் தன்மை காணப்பட்ட போதிலும் ஒப்புமை பங்கீட்டளவு உலகம் முழுதும் நிலையான ஒன்றாகவே உள்ளது.[13][14] கடல் நீர் மனித சிறுநீரகங்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதிலுள்ள அதிகப்படியான உப்பினை அவற்றால் சுத்திகரிப்பு செய்யமுடியாது.[15] ஆனால், எதிர்மறையாக நிலம் சூழப்பட்ட அதிஉவர் ஏரிகள் (hypersaline lakes) சிலவற்றில், எடுத்துக்காட்டிற்கு சாக்கடல் ஆனது ஒரு லிட்டரில் 300 கிராம் கரைந்த திடப்பொருள்களைக் கொண்டுள்ளது (அதாவது 300 ‰)
கரைபொருள் | செறிவு (‰) | மொத்த உப்புகளில் இத்தனை % |
---|---|---|
குளோரைடு | 19.3 | 55 |
சோடியம் | 10.8 | 30.6 |
சல்ஃபேட் | 2.7 | 7.7 |
மக்னீசியம் | 1.3 | 3.7 |
கால்சியம் | 0.41 | 1.2 |
பொட்டாசியம் | 0.40 | 1.1 |
பைகார்பனேட் | 0.10 | 0.4 |
புரோமைடு | 0.07 | 0.2 |
கார்பனேட் | 0.01 | 0.05 |
இசுட்ரான்சியம் | 0.01 | 0.04 |
போரேட் | 0.01 | 0.01 |
ஃபுளூரைடு | 0.001 | < 0.01 |
இன்னபிற கரைபொருள்கள் | < 0.001 | < 0.01 |
மேற்பரப்பு நீரின் ஆவியாதல் வீதம் (உயர் வெப்பநிலை, காற்று வீசும் வீதம், அலை இயக்கத்தினால் அதிகரிக்கும்), வீழ்படிவாக்கும் திறம், கடல் பனி உருகுதல் அல்லது உறைதல், பனியாறு உருகுதல், புதிய ஆற்று நீர் உள்புகுதல், வெவ்வேறு உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்நிலைகளின் கலப்பு ஆகியவற்றால் கடலின் உவர்ப்புத் தன்மை மாறுகிறது. எடுத்துக்காட்டாக, பால்டிக் கடலின் குளிர்ச்சியான சூழலுள்ள குறைந்த ஆவியாகும் தன்மை, நிறைய ஆறுகளின் கலப்பு இவைமட்டுமன்றி, வடக்குக் கடலில் இருந்து குளிர்ந்த நீர் அடிக்கடி இக்கடலில் வந்து நிரம்புதல் போன்றவற்றால் இதன் அடி அடுக்கு அடர்வானதாக மாறி அதன் பரப்பு அடுக்குகளுடன் கலக்க முடியாமல் போகிறது. அதனால் மேல்மட்ட அடுக்கின் உவர்ப்புத் தன்மை 10இலிருந்து 15 ‰ வரை மட்டுமே உள்ளது. மேலும் அதன் கழிமுகப் பகுதிகளில் இன்னும் குறைவானதாக இருக்கிறது.[16] வெதுவெதுப்பான செங்கடல் அதிகபட்ச ஆவியாதல் அளவையும் ஆனால் குறைவான வீழ்படிவாதல் பண்பையும் பெற்றிருக்கிறது; சில ஆறுகளும் அதனுள் கலக்கின்றன. மேலும், ஆதாம் வளைகுடாவுடன் கலக்கும் பாப்-எல்-மாண்டெப் ஆனது மிகவும் குறுகலாக உள்ளது. எனவே அதன் சராசரி உவர்ப்புத் தன்மை 40 ‰ என்ற அளவில் உள்ளது.[17]
கடலின் வெப்பநிலை அதன் பரப்பில் விழும் சூரிய ஒளியைப் பொறுத்தது. வெப்பமண்டலப் பகுதிகளில் உச்சியில் சூரியன் இருக்கும்பொழுது அதன் வெப்பநிலை30 °C ஆக இருக்கும். ஆனால், துருவப் பகுதிகளில் கடல் வெப்பநிலை கடலிலுள்ள பனியுடன் ஒரு சமநிலையில் உள்ளது. அது எப்போதும் -2 °C என்ற அளவில் உள்ளது. பெருங்கடல்களில் தொடர்ச்சியான ஒரு நீரோட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. வெதுவெதுப்பான பரப்பு நீரோட்டங்கள் வெப்பமண்டலத்தை விட்டு விலகுகையில் குளிர்கின்றன. குளிர்வதால் அந்நீரின் அடர்த்தி அதிகரிக்கிறது. அதனால், அது கீழே செல்கிறது. அந்தக் குளிர் நீர் ஆழக் கடல் நீரோட்டத்தின் காரணமாக மீண்டும் நிலநடுக்கோட்டினருகில் வருகிறது. இந்த சுழற்சி முழுவதும் வெப்பநிலை அடர்த்தி மாற்றங்களால் நிகழ்கிறது. உலகம் முழுவதும் அடி ஆழக்கடல் வெப்பநிலை -2 °C முதல் 5 °C வரை இருக்கலாம்.[18]
பெருங்கடல்கள்
[தொகு]அத்திலாந்திக் பெருங்கடல்
[தொகு]உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் இதுவாகும். இதன் மொத்தப்பரப்பு 106,4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். இது பூமியின் பரப்பில் சராசரியாக இருபது சதவிகிதம் ஆகும். இதன் மேற்கு பகுதியில் வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களும், கிழக்கு எல்கையில் ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும்அமைந்துள்ளன. இக்கடலின் மிக ஆழமான பகுதி ப்யூரிடோ ரிகோ ஆகும். அட்லாண்டிக் கடலின் சராசரி ஆழம் 28,232 அடிகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 10,936 அடிகள் ஆகும்.
தென்முனைப் பெருங்கடல்
[தொகு].
அன்டார்க்டிக் நிலபரப்பைச்சூழ்ந்துள்ள கடல்பரப்பு ஆகும். இது பனிபாறைகள் நிரம்பிய ஒரு குளிர்ந்த கடல் ஆகும். இங்கு பத்து டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இங்கு பனிப்பாறைகள் கடல் மட்டத்திற்கு கீழ் பல நூறு அடிகளுக்கு மிதந்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதங்களில் பனிப்பாறைகளின் பரப்பளவு 26 லட்சம் சதுர கி.மீ. ஆக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் இதன் பரப்பு குறைந்து 19.8 லட்சம் சதுர கி.மீ ஆக ஆகி விடுகிறது. இக்கடல் ராஸ் கடல், அமுன்ட்சென் கடல், வெடல் கடல் மற்றும் அன்டார்க்டிகா விரிகுடாக்களையும், இன்னும் பல விரிகுடாக்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது.
உலகின் நான்காவது பெருங்கடலாக விளங்குவது அன்டார்க்டிக் பெருங்கடல். இது பல நேரங்களில் தெற்கு பெருங்கடல் என அழைக்கப்படுகிறது. 2000 - ஆம் ஆண்டில் சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இக்கடலின் எல்லையை விரிவுபடுத்தி 60 டிகிரி தெற்கு ரேகைக்கு தெற்கே உள்ள கடல் பகுதிகளை அன்டார்க்டிக்காவுடன் இணைத்தது. தற்போது இதன் மொத்த பரப்பளவு இரண்டு கோடியே மூன்று லட்சத்து இருபத்தியேழாயிரம் சதுர கி.மீ. ஆகும். 4,000 முதல் 5,000 மீட்டர் ஆழம் காணப்படுகிறது.
இக்கடல் பகுதிகளில் மிகப் பெருமளவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் நிறைந்துள்ளன. சீல் எனப்படும் கடல் சிங்கங்களும், திமிங்கலங்களும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.
ஆர்டிக் பெருங்கடல்
[தொகு]ஆர்க்டிக் பெருங்கடல், உலகிலுள்ள பெருங்கடல்களுள் சிறியது. இது முழுவதுமாக ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 14,090,000 சதுர கி.மீ. ஆகும். இதன் சராசரி ஆழம் 3,658 மீ. இதன் மிக அதிகபட்ச ஆழம் 4,665 மீ. ஆகும். இப்பெருங்கடல் முழுவதுமாக நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. அலாஸ்கா - ரஷ்யா இடையே அமைந்துள்ள பேரிங் நீரிணையம், கிரீன்லாந்து - கனடா இடையே அமைந்துள்ள டேவிஸ் நீரிணையம், கிரீன்லாந்து - ஐரோப்பா இடையே அமைந்துள்ள டென்மார்க் நீரிணையம், நார்வேஜியன் கடல் போன்றவை ஆர்க்டிக் பெருங்கடலை வெளி உலகுடன் இணைக்கின்றன.
ஆர்க்டிக் பெருங்கடல் பூமி அடித்தட்டின் அடிப்படையில் இரு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை யுரேசியன் தட்டு, வட அமெரிக்கத் தட்டு ஆகும். ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையில் அவற்றின் விளிம்புகள் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கை சுற்றியுள்ள நிலப்பரப்புகளும், மூழ்கியுள்ள தட்டுப்பகுதிகளும் வெளி நீர் உட்புகாதவாறு தடுக்கின்றன. எனவே, இக்கடல் குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு நீர்த்தேக்கம் போல் உள்ளது.
ஆர்க்டிக் பெருங்கடலின் மையப்பகுதி நிரந்தரமாக பத்து அடி ஆழத்திற்கு பனிக்கட்டியாக உறைந்துள்ளது. வெயில் மாதங்களில் பனிக்கட்டிகளை சுற்றி நீர் சூழ்ந்து அவை மிதக்க துவங்கிவிடும். குளிர் மாதங்களில் வெயில் மாதங்களில் இருந்ததைப் போன்று இருமடங்கு அதிக பரப்பில் பனிக்கட்டி உறைந்து விடுகிறது.
ஆர்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும், இதரப்பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது. 130 இலட்சம் ச.கி.மீ.க்கும் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாலேயே பெருங்கடல் என்ற சிறப்புடன் இது அழைக்கப்படுகிறது.[19]
இந்தியப் பெருங்கடல்
[தொகு]உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடல் ஆகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும்.
சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இரண்டாயிரமாண்டில் இந்திய பெருங்கடலின் எல்லைகளை வரையறை செய்தது. அதன்படி இந்திய பெருங்கடலின் தெற்கே 60 டிகிரிக்கு கீழ் உள்ள பகுதி பிரிக்கப்பட்டு தெற்கு பெருங்கடலின் (அன்டார்க்டிக்) எல்லை விரிவாக்கப்பட்டது.
இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழி ஆகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். இக்கடலில் அதிகமாக பெட்ரோலியப் பொருள்களும், இயற்கை எரிவாயுக்களும் இயற்கையாக, மிகுதியாக காணப்படுகின்றன. உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மீன் போன்ற கடல் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கிடைப்பது இக்கடலின் மற்றுமொரு இயற்கை வளமாகும். இந்திய பெருங்கடல் நாடுகள் உட்பட ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் நாட்டு மீன்பிடி கப்பல்கள் இதை தங்கள் மீன்பிடித் தளமாக பயன்படுத்துகின்றன.
இந்திய பெருங்கடல் முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளை இது ஐரோப்பாவுடன் இணைக்கிறது
பசிபிக் பெருங்கடல்
[தொகு]உலகின் மிகப்பெரும் பரப்பளவை தன்னகத்தே கொண்ட பெருங்கடல் பசிபிக் (Pacific Ocean) ஆகும். பசிபிக் என்பதன் லத்தின் பொருள் அமைதியான கடல் என்பதாகும். வடக்கே ஆர்க்டிக் கடல் முதல் தெற்கே தென்கடல் வரை இது பரந்து விரிந்துள்ளது. மேற்கில் ஆஸ்திரேலியாவும், ஆசியாவும், கிழக்கே அமெரிக்கக் கண்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பதினாறு கோடியே தொண்ணுத்திரெண்டு லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் இக்கடல் அமைந்துள்ளது. சுமாராக 62 புள்ளி 2 கோடி கனசதுர கி.மீ. நீரை இக்கடல் கொண்டுள்ளது. உலக நீர் இருப்பில் 46 சதவிகிதத்தையும், உலகின் மொத்தப் பரப்பளவில் 30 சதவிகிதத்தையும் இக்கடல் கொண்டுள்ளது.
உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடலாகும். பூமியின் பரப்பளவில் 35.25 சதவிகிதம் கொண்டது. உலகிலேயே ஆழம் கூடிய மிண்டானா பகுதி இதிலுள்ளது. இதன் ஆழம் 11,516 மீட்டர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தீவுகளும் இக்கடலில் தான் உள்ளன.
வடமேற்கு பசிபிக்கடலில் உள்ள மரியானா ட்ரென்ச் என்ற பகுதியே உலகிலேயே ஆழமான கடல் பகுதி ஆகும். இதன் ஆழம் 10,911 மீட்டர். பசிபிக்கின் சராசரி ஆழம் 4028 முதல் 4188 மீட்டர் ஆகும். இக்கடலில் சுமார் 25,000 தீவுகள் உள்ளன. பெரும்பாலான தீவுகள் தென் பசிபிக்கிலேயே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கடலில் மூழ்கி உள்ளன. பெரும்பாலானவை உயரமான தீவுகள். தற்போது பூமி தட்டின் நகர்வினால் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது. மாறாக அட்லாண்டிக் கடல் விரிவடைந்து வருகிறது. சராசரியாக ஆண்டிற்கு அரை கிலோ மீட்டர் சுருங்குகிறது.
பசிபிக் கடலின் மேற்கு எல்லையில் பல கடல்கள் அமைந்துள்ளன. அவை செலிபஸ் கடல் (Celebes Sea), கோரல் கடல் (Coral Sea), கிழக்குச்சீன கடல், ஜப்பான் கடல், தென் சீன கடல், சுலு கடல் (Sulu Sea), பிலிபைனி கடல் (Philippine Sea), டாஸ்மான் கடல் (Tasman Sea) மற்றும் மஞ்சள் கடல் போன்றவை ஆகும்.
கடல்கள்
[தொகு]அரபிக்கடல்
[தொகு]இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ள கடல் பகுதி அரபிக்கடல் என அழைக்கப்படுகிறது. இது பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் பச்சிம் சமுத்திரம் என அழைக்கப்பட்டது. இக்கடலின் கிழக்கே இந்தியாவும், மேற்கே சவுதி அரேபியாவும் - ஆப்பிரிக்காவும், வடக்கே ஈரானும் - பாகிஸ்தானும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன.
இக்கடலின் மிக அகலமான பகுதி ஏறத்தாழ 2400 கி.மீ. ஆகும். தெற்கில் இக்கடல் இந்தியப் பெருங்கடலுடன் கலப்பதால் இதன் தெற்கு எல்லையை அறுதியிட்டு கூற இயலாது. சிந்து, நர்மதை, தபதி ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. ஓமன் வளைகுடா இதனை பாரசீக வளைகுடாவுடனும், ஏடன் வளைகுடா இதனைச் செங்கடலுடனும் இணைக்கின்றன. இக்கடலின் கரையில் ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சி போன்ற பெரிய துறைமுகங்களும், பல புகழ்பெற்ற நகரங்களும் அமைந்துள்ளன.
ஆரல் கடல்
[தொகு]ஆரல் கடல் ( Aral sea ) என்பது துர்க்கிஸ்தான் பகுதியில் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பெரியதோர் உப்புநீர் ஏரியாகும். இந்த ஏரி உலகிலேயே நில உட்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலை ஆகும். இதன் மொத்த பரப்பளவு 66,459 சதுர கி.மீ. ஆகும். இது 17 முதல் 68 மீட்டர் ஆழமுடையது. ஆரல் கடலில் பல தீவுகள் அமைந்துள்ளன. அமுதாரியா (Amu Darya), சைர் தாரியா ( Syr Darya ) ஆகிய ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன.
அயோனியன் கடல்
[தொகு]அயோனியன் கடல் ( Ionian Sea ) என்பது மத்தியதரைக் கடலின் ஆழமிக்க பகுதியாகும். இக்கடல் இத்தாலியையும் - சிசிலியையும், அல்பேனியாவிலிருந்தும் - கிரீசிலிருந்தும் பிரிக்கிறது. இக்கடலையும் அட்ரியாடிக் (Adriatic) கடலையும் ஆட்ராண்டோ நீர்ப்பிரிவு ( Strait of Otranto ) இணைக்கிறது. இக்கடலின் அகலம் 676 கி.மீ. ஆகும். சில பகுதிகளில் இக்கடலின் ஆழம் 5093 மீட்டர் ஆகும்.
இன்லான்ட் கடல்
[தொகு]ஜப்பான் நாட்டில் பசிபிக் பெருங்கடலில் கால்வாய் போன்று அமைந்துள்ளது இன்லான்ட் கடல் (Inland sea). இது தென் ஜப்பானில் ஹான்சிகோக், கியூஸ் ஆகிய தீவுகளுக்கிடையில் உள்ளது. ஆழம் குறைந்த இக்கடலில் 950 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் மொத்த நீளம் 9505 கி.மீ. ஆகும். இது குறுகிய கால்வாய் ஒன்றின் மூலம் ஜப்பான் கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்லான்ட் கடலின் கடற்கரைகளில் மக்கள் தொகை மிகுதி. இக்கடல் இயற்கை எழிலுடன் புகழ்பெற்று விளங்குகிறது.
வங்காள விரிகுடா
[தொகு]இந்தியாவின் கிழக்கே எல்லையாக அமைந்திருப்பது வங்காள விரிகுடா (Bay of Bengal) ஆகும். இது 21 லட்சத்து 73 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கே இக்கடல் அமைந்துள்ளது. இதன் மேற்கே இந்தியாவும், இலங்கையும் எல்லையாக உள்ளன. வடக்கே பங்களாதேசமும், மியான்மரும் (பர்மா), கிழக்கே பெனின்சுலாவும், தெற்கே இலங்கையின் தென் முனையும், இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவு வரையிலான கடலும் வங்காள விரிகுடாவின் எல்லைகளாக உள்ளன.
இக்கடலின் மேற்கே பல முக்கியமான ஆறுகள் கலக்கின்றன. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவேரி போன்றவையே அவையாகும். வடக்கே பிரம்மபுத்திரா ஆறும் இக்கடலில் கலக்கின்றன. இக்கடலில் அமைந்துள்ள ஒரே தீவுக் கூட்டம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 2,600 மீட்டர் ஆகும். இக்கடலின் அதிகபட்ச ஆழம் 4,694 மீட்டர்.
வங்காள விரிகுடாவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதிகமான கனிமவளம் நிறைந்த மண் இக்கடலில் நிறைந்துள்ளது. இங்கு அதிகமான மீன் வளம் உள்ளதால் கடற்கரை நாடுகளும், ஜப்பான் நாடும் மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றன. இக்கடல் பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிகளைக் கொண்டுள்ளது. அவை பல சர்வதேச துறைமுகங்களை பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியாவின் கிழக்கு துறைமுகங்களுடன் இணைக்கின்றன.
பெருங்கடல் வாரியாக கடல்களின் பட்டியல்
[தொகு]- அர்கெந்தீனக் கடல்
- பபின் குடா
- சென். லாரன்ஸ் வளைகுடா
- ஃபண்டி வளைகுடா
- கரிபியன் கடல்
- மெக்சிக்கோ வளைகுடா
- சர்கசோ கடல்
- வடகடல்
- சேஸபீக் குடா
- பால்டிக் கடல்
- மத்திய பால்டிக் கடல்
- போத்னியா வளைகுடா
- போத்னியா குடா
- போத்னியக் கடல்
- பின்லாந்து வளைகுடா
- ஹெப்ரைட்ஸ் கடல்
- ஐரிஷ் கடல்
- செல்டிக் கடல்
- ஆங்கிலக் கால்வாய்
- மத்தியதரைக் கடல்
- ஏட்ரியாட்டிக் கடல்
- ஈஜியன் கடல்
- மிர்தூன் கடல்
- கிரீட் கடல்
- திரேசியன் கடல்
- அல்போரன் கடல்
- மர்மரா கடல்
- கருங்கடல்
- அசோவ் கடல்
- கட்டாலன் கடல்
- அயோனியன் கடல்
- லிகுரியக் கடல்
- திர்ரேனியக் கடல்
- சித்ரா வளைகுடா
- வேட்டெல் கடல்
- ரோஸ் கடல்
- கிரேட் ஆத்திரேலிய பைட்
- சென். வின்சன்ட் வளைகுடா
- ஸ்பென்சர் வளைகுடா
- ஸ்காட்டியாக் கடல்
- அமுன்சென் கடல்
- பெல்லிங்க்ஷுசென் கடல்
- டேவிஸ் கடல்
- ஹட்சன் குடா
- ஜேம்ஸ் குடா
- பேரன்ட்ஸ் கடல்
- காராக் கடல்
- பியூபோர்ட் கடல்
- அமுன்சென் வளைகுடா
- கிறீன்லாந்து கடல்
- நோர்வே கடல்
- சுக்சிக் கடல்
- லப்டேவ் கடல்
- கிழக்கு சைபீரியக் கடல்
- வெண் கடல்
- லிங்கன் கடல்
- செங்கடல்
- ஏடென் குடா
- பாரசீக வளைகுடா
- ஓமான் வளைகுடா
- அரபிக்கடல்
- வங்காள விரிகுடா
- அந்தமான் கடல்
- திமோர் கடல்
- சிலியன் கடல்
- பெரிங் கடல்
- அலாஸ்கா வளைகுடா
- சலிஷ் கடல்
- கலிபோர்னிய வளைகுடா
- ஒக்கொட்ஸ் கடல்
- ஜப்பான் கடல்
- செடோ உள்நாட்டுக் கடல்
- கிழக்கு சீனக் கடல்
- தெற்கு சீனக் கடல்
- சூலு கடல்
- செலேபெஸ் கடல்
- மிண்டானோக் கடல்
- பிலிப்பைன் கடல்
- கமோட்ஸ் கடல்
- ப்லோரெஸ் கடல்
- பண்டா கடல்
- அரபுராக் குடல்
- தீமோர் கடல்
- தாஸ்மான் கடல்
- மஞ்சள் கடல்
- பொகாய்க் கடல்
- கோரல் கடல்
- கார்பெண்டாரிய வளைகுடா
- பிஸ்மார்க் கடல்
- சொலொமன் கடல்
- செரம் கடல்
- ஹல்மஹெறக் கடல்
- மொலுக்கக் கடல்
- சாக்கடல்
- ஜாவாக் கடல்
- தாய்லாந்து வளைகுடா
நிலம் சூழ் கடல்கள்
[தொகு]- ஆரல் கடல்
- காஸ்பியன் கடல்
- சாக்கடல்
- கலிலேயக் கடல்
- சால்டன் கடல்
- உப்புப் பேரேரி
மேலும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sea". Merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
- ↑ தமிழ்க் கழக அகராதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.
- ↑ சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி (தமிழ் லெக்சிகன்)
- ↑ இங்கு மேலே தாவவும்: 4.0 4.1 4.2 4.3 4.4 Stow, Dorrik (2004). Encyclopedia of the Oceans. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-860687-1.
- ↑ Ravilious, Kate (21 April 2009). "Most Earthlike Planet Yet Found May Have Liquid Oceans". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 10 September 2013.
- ↑ இங்கு மேலே தாவவும்: 6.0 6.1 "Water cycle". Ocean Explorer. National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 19 April 2013.
- ↑ Platnick, Steven E. "Visible Earth". NASA. பார்க்கப்பட்ட நாள் 22 April 2013.
- ↑ Stewart, Robert H (September 2008). "Introduction To Physical Oceanography" (PDF). Texas A & M University. pp. 2–3. பார்க்கப்பட்ட நாள் 15 September 2013.
- ↑ இங்கு மேலே தாவவும்: 9.0 9.1 Monkhouse, F. J. (1975). Principles of Physical Geography. Hodder & Stoughton. pp. 327–328. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-340-04944-0.
- ↑ Cowen, Ron (5 October 2011). "Comets take pole position as water bearers". Nature. பார்க்கப்பட்ட நாள் 10 September 2013.
- ↑ Why Is the Ocean Salty?
- ↑ Pond, Stephen; Pickard, George (1978). Introductory Dynamic Oceanography. Pergamon Press. p. 5.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Swenson, Herbert. "Why is the ocean salty?". US Geological Survey. Archived from the original on 9 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 17 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ இங்கு மேலே தாவவும்: 14.0 14.1 Millero, Frank J; Feistel, Rainer; Wright, Daniel G; McDougall, Trevor J (January 2008). "The composition of Standard Seawater and the definition of the Reference-Composition Salinity Scale". Deep Sea Research Part I: Oceanographic Research Papers 55 (1): 50–72. doi:10.1016/j.dsr.2007.10.001. Bibcode: 2008DSRI...55...50M. http://www.sciencedirect.com/science/article/pii/S0967063707002282.
- ↑ "Drinking seawater can be deadly to humans". NOAA. 11 January 2013. பார்க்கப்பட்ட நாள் 16 September 2013.
- ↑ Thulin, Jan; Andrushaitis, Andris (2003). "The Baltic Sea: Its Past, Present and Future" (PDF). Religion, Science and the Environment Symposium V on the Baltic Sea. Archived (PDF) from the original on 2007-06-06. பார்க்கப்பட்ட நாள் 16 April 2013.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Thunell, Robert C.; Locke, Sharon M.; Williams, Douglas F. (1988). "Glacio-eustatic sea-level control on Red Sea salinity". Nature 334 (6183): 601–604. doi:10.1038/334601a0. Bibcode: 1988Natur.334..601T.
- ↑ Gordon, Arnold (2004). "Ocean Circulation". The Climate System. Columbia University. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
- ↑ தகவல் களஞ்சியம்