ஓமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹோமர் (கிரேக்கம் Ὅμηρος Hómēros)
Homer British Museum.jpg
ஹோமரை உருவகப்படுத்தும் ஹெலனியக் காலத்தைச் சேர்ந்த ஒரு சிலை. பிரித்தானிய அருங்காட்சியகம்.
வாழ்ந்தது கிமு 8ஆம் நூற்றாண்டு
Influence rhapsodic வாய்மொழிக் கவிதை
Influenced செந்நெறிக்கால ஆக்கங்கள் (மேல் நாட்டு நூல்கள்)
ஹோமரும் வழிகாட்டியும், வில்லியம்-அடோல்ஃப் பூகுவேராவினால் ஆக்கப்பட்டது. (1825–1905). இக் காட்சி, ஓமர் இடா மலையில், நாயுடனும், ஆடு மேய்க்கும் வழிகாட்டி குளோக்கசுடனும் இருப்பதைக் காட்டுகிறது.

ஓமர் என்பவர் பண்டைக் கிரேக்க இதிகாசக் கவிஞர் ஆவார். இலியட், ஒடிஸ்சி ஆகிய இதிகாசங்களை எழுதியவர் இவரே என்று கருதப்படுகிறது. பண்டைக் கிரேக்கர்கள் ஓமர் உண்மையில் வாழ்ந்த ஒருவர் என நம்பினர். ஆனால் இன்றைய அறிஞர்கள் இது குறித்து ஐயப்பாடு கொண்டுள்ளனர். இவர் பற்றிய நம்பத் தகுந்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும், செந்நெறிக் காலத்தில் இருந்து கிடைக்கவில்லை. இந்த இதிகாசக் கவிதைகளும்கூட பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த கதை சொல்லும் மரபின் வளர்ச்சியுற்ற நிலையைச் சார்ந்தனவாகவே காணப்படுகின்றன. மார்ட்டின் வெஸ்ட் என்பவருடைய கூற்றுப்படி, ஓமர், உண்மையில் வாழ்ந்த ஒரு புலவர் அல்ல, ஒரு கற்பனை மனிதரே. தற்காலத்தில், இக் கவிதைகள், நெடுங்காலம் வழங்கி வந்த வாய்வழிப் பாடல்களின் அடிப்படையாக எழுந்தவை என ஒப்புக்கொள்ளப்படினும், இதன் இறுதி எழுத்து வடிவத்தை உருவாக்கியதில் தனிக் கவிஞர் ஒருவருக்கு இருந்திருக்கக்கூடிய பங்கு குறித்துச் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஜெப்ரி கெர்க் போன்ற அறிஞர்களின் கருத்துப்படி, இரண்டு இதிகாசங்களுமே, மரபுவழிக் கதைகளிலில் இருந்து எடுக்கப்பட்ட பெருமளவு விடயங்களைப் பயன்படுத்தித் தனிக் கவிஞர்களால் ஆக்கப்பட்டவையாகும். ஆனால் மார்ட்டின் வெஸ்ட் போன்றவர்கள் இவை, பல்வேறு புலவர்களால் ஆக்கப்பட்டவை என்கின்றனர். கிரகரி நாகி என்பவரும், இவை தனிப்பட்ட எவரினதும் படைப்பு அல்ல என்றும், பல நூற்றாண்டுகளாக மெதுவாக வளர்ச்சியுற்று இன்றைய வடிவத்தைப் பெற்றன என்றும், இவை பல தலைமுறைகளைச் சேர்ந்த புலவர்களின் கூட்டு முயற்சி என்றும் கூறுகிறார்.[1][2][3]

ஓமர் வாழ்ந்திருக்கக்கூடிய காலம்பற்றிப் பண்டைக் காலத்திலும் ஒருமித்த கருத்து நிலவியதில்லை. ஹோரோடோட்டஸ் என்பவர் ஓமர், தனக்கு 400 ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாகக் கூறுகிறார். இதன்படி ஹோமரின் காலம் கிமு 850 என்று ஆகிறது. வேறு சில மூலங்கள் இவரது காலத்தை டிரோஜன் போருக்கு (Trojan War) அண்மித்ததாகக் காட்டுகின்றன. தற்கால அறிஞர்களைப் பொறுத்தவரை ஹோமரின் காலம், ஒரு தனிமனிதரின் வாழ்க்கைக்காலம் என்பது மட்டுமன்றி, அவர் எழுதியதாகக் கருதப்படும் இதிகாசங்களின் காலத்தையும் உள்ளடக்குகிறது. தற்கால அறிஞர்களுடைய கருத்துப்படி, இலியட், கிமு 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் அல்லது கிமு 8 ஆம் நூற்றாண்டு ஆகும். இது ஒடிஸ்சிக்குச் சில பத்தாண்டுகளால் முற்பட்டது எனவும் கருதப்படுகிறது. இதன்படி இலியட்டே மேலை நாட்டு இலக்கியங்களில் மிகவும் பழையது ஆகும். எனினும், சில அறிஞர்கள் இதன் காலத்தை கிமு 7 ஆம், அல்லது கிமு ஆறாம் நூற்றாண்டு அளவுக்குக் கூடப் பின்னே கொண்டுவருகிறார்கள்.

ஆல்பிரெட் ஹெயுபெக் என்பவர், ஹோமரின் ஆக்கங்கள், கிரேக்கப் பண்பாடு முழுவதினதும் வளர்ச்சிக்கு வடிவம் கொடுத்ததோடு அதன்மீது செல்வாக்குச் செலுத்தியதையும் பல கிரேக்கர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் அவரைத் தமது குருவாகக் கொண்டுள்ளார்கள் என்றும் கூறுகிறார்.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Wilson, Nigel (in en). Encyclopedia of Ancient Greece. Routledge. ISBN 9781136788000. https://books.google.com/books?id=8pXhAQAAQBAJ&pg=PA366. பார்த்த நாள்: 22 November 2016. 
  2. Romilly, Jacqueline de (in en). A Short History of Greek Literature. University of Chicago Press. ISBN 9780226143125. https://books.google.com/books?id=y_DTllltXBQC&pg=PA1. பார்த்த நாள்: 22 November 2016. 
  3. Graziosi, Barbara (in en). Inventing Homer: The Early Reception of Epic. Cambridge University Press. ISBN 9780521809665. https://books.google.com/books?id=vCHsh9QWzLYC&pg=PA15. பார்த்த நாள்: 22 November 2016. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமர்&oldid=2303077" இருந்து மீள்விக்கப்பட்டது