ஓதம்
ஓதம் (Tide) என்பது நிலவு, சூரியன் போன்ற விண்வெளி பொருட்களால் கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும். ஆழ்கடல் பரப்புத் தவிர்ந்த தரையும் கடலும் சார்பரப்பில் உருவாகும் ஓதங்களைப் பொதுவாக இரு வகைகளாகக் குறிப்பிடலாம். ஒன்று கழி ஓதம் - மற்றையது கடல் ஓதம்
தரையும் கடலும் சார்பரப்பில் கடலின் வற்று - பெருக்கு நீர்வாங்கல் நிலைகள் இவ்வகை ஓதங்களுக்கு துணை புரிகின்றன. பருவ காலங்களும் சிறிது துணை புரிகின்றன. பருவகால காற்று, சாதாரண தரைக்காற்று கடற்காற்று என்பனவும் ஓதங்கள் உருவாகச் சிறிது துணை புரிகின்றன. மழை வெள்ளம் அற்ற பருவகாலத்தை எடுத்துக் கொண்டால், நீர் வற்று ( வடு என்று சில இடங்களில் சொல்வர் ) மற்றும் நீர் பெருக்கு ( வெள்ளம் என்று சில இடங்களில் சொல்வர் ) அன்றாடம் கடலில் நடக்கும் நிகழ்வுகள் ஆகும். இதை பாம்பன் பாலத்தில் கடலின் வற்று - பெருக்கு - நீர் மாறல் நிலைகளைத் தெளிவாகப் பார்க்கலாம். பெரும் வளைவுகள் அற்ற ஓரளவு நேர் சீரான கடற்கரைப் பகுதியிலும் கடலில் வற்று பெருக்குக்களை தெளிவாக அவதானிக்க முடியும். தரைப் பகுதி கழிமுகத்தில் ஆறு கடலுடன் சங்கமிக்கும் போது ஆற்று நீர் கடல் நீரைவிட சற்று உயர்ந்து காணப்படும். கடல் நீர் வடிந்திருக்கும்போது - வற்று - வடு - ஆற்று நீரின் வேகத்தால் அலை மடியும் திசை சாதாரணமான இயல்பு நிலையில் கடலை நோக்கியிருக்கும் (கழிமுக நீர் பெருக்கில்லாமல் இருந்தாலும், அதாவது களப்பு போன்ற பிரதேசங்கள், உதாரணத்திற்கு பழவேற்காடு கடல்நீரேரி ). கடல்நீர் ஏறியிருக்கும்போது - வெள்ளம் - பெருக்கு - கழிமுக நீர்மட்டத்தைவிட உயரம் அதிகமாகிக் கொண்டிருக்கும். அப்போது அலை மடியும் திசை சாதாரணமான இயல்பு நிலையில் கடலில் இருந்து கழிமுகத்தை நோக்கியதாக இருக்கும். ( காற்றினால் ஏற்படுத்தப் படும் அலைகளைத் தவிர நீர் அசைவினால் ஏற்படும் அலைகள் பெரும்பாலும் நீரின் அசைவுத்திசையிலேயே இருக்கும் )
கழி ஓதம் - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே அதிகமாக இருப்பது கழி ஓதம்.
கடல் ஓதம் - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே குறைவான மட்டத்தில் இருப்பது உருவாவது கடல் ஓதம்.
கழி ஓதம்
[தொகு]கழி ஓதம் அல்லது உயர் ஓதம் - High Tide
கழிமுகத்தை நோக்கி வருவதால் இது கழி ஒதம்.[1] இக்கழி ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்ததை விட அதிகமாக இருக்கும். இதனால் நிலத்தினுள் கடல் நீர் வரும்.
கடல் ஓதம்
[தொகு]கடல் ஓதம் அல்லது தாழ் ஓதம் - Low Tide
கடலை நோக்கி கடல் நீர் செல்வதால் இது கடல் ஒதம். இக்கடல் ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்ததை விட குறைவாக இருக்கும். இதனால் கடல் உள் வாங்கும். [2]
இந்நிகழ்வைப் பாதிக்கும் காரணிகள்
[தொகு]- கழிமுகத்திற்கு வரும் நீரின் அளவு - அதாவது தரைப்பகுதி வெள்ளம்
- கடல்காற்று மற்றும் தரைக்காற்றினது வேகம் மற்றும் திசை.
- பருவகாலக் காற்றின் வேகம் மற்றும் திசை.
- கடல் மேற்பரப்பின் வளி மண்டலத்தின் அழுத்த வேறுபாடு.
- சந்திர ஈர்ப்பு ( அமாவாசை மற்றும் முழுநிலா நாட்களில் பல இடங்களில் கடல் பெருக்குடன் அதிக அலைவீச்சும் கொண்டு காணப்படும். இருந்தாலும் இரண்டும் தொடர்பு கொண்டனவா என்று மேலும் ஆய்வு செய்து உறுதிப் படுத்தவேண்டியுள்ளது.*)
- நீர் வாங்கல் எனப்படும் கரையோர, தொடுகடல், உயரக் கடல் பரப்புக்களில் நடக்கும் கீழ் நீரோட்டங்கள், உள் நீரோட்டங்கள், மேல் நீரோட்டங்கள்.
- தரை அமைப்பு.
கழிமுகத்திற்கு வரும் நீரின் அளவு - தரைவெள்ளம்
[தொகு]ஆறு நீண்ட தூரம் ஓடி பின் மிகமென்சாய்வான நிலம் வழியே கடலில் கலக்கும் போது நீரோட்டம் பொதுவான கடல்மட்டத்திற்கு அண்மித்ததாகவே இருக்கும். கடல் பெருக்கு நேரங்களில் கடல் நீர் இவ்வகையான ஆற்று நீரைப் பின் தள்ளியபடி தன் உயரத்திற்கேற்ப கழிமுகத்தினூடாக தரைப் பகுதி ஆற்றுக்குள் வரும். ஆற்று நதிமூலம் அதாவது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் வரும் வெள்ளம் வரும் காலத்தில் பெரும்பாலும் வலிமையான நீரோட்டம் கொண்டிருப்பதால் கடலில் இருந்து கழிமுகத்தினுள் நீர் வருவது மிகக் கடினம். அது கடல் பெருக்கில் இருந்தால் கூட ஆற்று வெள்ளம் / தரைப்பகுதி வெள்ளம் கடலுக்குள் மட்டுமே செல்லும். இந்த சமயத்தில் கடல் ஓதம் மட்டுமே பெரும்பாலும் காணப்படும்.
கடல்காற்று தரைக்காற்று
[தொகு]பருவக் காற்றுக்கள் வலிமை அற்றிருக்கும் காலங்களிலும் மழை இல்லாத நாட்களிலும் பகல் பொழுதில் நிலம் கடலை விட வேகமாக வெப்பமடைவதால் வளி சூடாகி மேற்செல்ல அந்த இடத்தை நிரப்ப கடலில் இருந்து காற்று வீசும். இது கடற்காற்று. அதே போல சூரியன் மறையும் நேரத்தில் நிலப் பகுதி கடலைவிட விரைவாகக் குளிர்ச்சியடையும். கடல் பகல்பொழுதில் உள்வாங்கிய வெப்பத்தால் அதன் மேற்பகுதிக் காற்று வெப்பமடைந்திருக்கும். அதனால் அவ்வளி மேற்காவு ஓட்டத்தில் சென்றுவிட அந்த வெற்றிடத்தைத் தரையில் இருந்து செல்லும் காற்று இட்டு நிரப்பும். இது தரைக் காற்று. வெயில் கொளுத்தும் அளவைப் பொறுத்து இக்காற்றுக்களின் வேகமும் திசையும் மாறும் நேரமும் வேறுபடும். அதற்கேற்ப கடல் நீரின் அசைவில் இக்காற்றுக்கள் தாக்கம் ஏற்படுத்துவதனால் கடல் ஓதமும் கழி ஓதமும் மாறிமாறி நிகழும்.
பருவகால காற்றின் திசையும் வேகமும்
[தொகு]பருவக் காற்றின் திசையும் வேகமும் ஓதங்களுக்கு துணை புரிகின்றன. தரையமைப்பு சார்ந்த காற்றையும், கடற்காற்றையும் தரைக்காற்றையும் போலல்லாமல் பருவக் காற்றுக்கள் அதிக வேகமும் அழுத்தமும் கொண்டவை. இவ்வகைக் காற்றுக் காலங்களில் தரைசார் கடற் பிரதேசங்களில் காற்று வீசும் திசையில் கடலில் நீரோட்டமும் இருக்கும் போது ஓரளவுக்கு சீரான வலிமையுடன் ஓதம் காணப்படும். ஆனால் நீரோட்டமும் காற்றுத் திசையும் ஒன்றுக்கொன்று மாறுபடும் போது வலிமையான நீர்ச் சுழிப்புடன் கூடிய ஓதம் காணப்படும். இது தரைசார் கடற்பகுதிக்கு மட்டுமன்றி உயரக் கடல் பகுதியிலும் மிக்க வலிமையுடன் இச் செயற்பாடு காணப்படும்.
கடல் மேற்பரப்பின் வளி மண்டலத்தின் அழுத்த வேறுபாடு
[தொகு]கடல் மேற்பரப்பின் வளிமண்டல அழுத்த வேறுபாடு தரையும் கடலும் சார்பரப்பில் தோன்றும் ஓதம் எனும் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. ஒரு வகையில் சீரானதும் வலிமையானதும் அதேபோல சீரானதும் வலிமையற்றதும் மறுவகையில் சீரற்றதும் வலிமையானதும், சீரற்றதும் வலிமையற்றதும் எனச் சிலவகைச் சிலவகைச் செயற்பாடுகளை உருவாக்கக் கூடிய பங்களிப்பை வளி மண்டல அழுத்த வேறுபாடு செய்யும். கடலோடிகளின் கருத்துப் படி அந்தந்த தரை சார் கடல்பரப்புக்களில் காலங்காலமாக பெறப்படும் அனுபவ பட்டறிவின்மூலம் பல்வகை ஓதச் செயற்பாட்டினைக் கணிக்க முடியும்.
நிலவின் ஈர்ப்பு
[தொகு]அமாவாசை எனப்படும் முழு இருட்டு இரவு நாளிலும் பௌர்ணமி எனப்படும் முழு நிலா இரவு நாளிலும் கடல் வழமையை விட அதிக பெருக்குடனும் அதிக அலைவீச்சும் மற்றைய நாட்களைவிட வழக்கத்துக்கு மாறான இரைச்சலுடனும் காணப்படும். இந்த நேரங்களில் வளி மண்டல அழுத்தம், கடலின் நீரோட்டம் போன்ற மற்றைய காரணிகள் ஓரே திசையில் இருக்கும்போது ஓதச் செயற்பாடுகளின் வலிமையும் அதிகமாக இருக்கும்.
கடலின் நீரோட்டங்கள்
[தொகு]கடலின் வற்று பெருக்கு நிலைகளில் கடற்கரை ஓரங்களில் நிலப் பகுதியை ஒட்டியதாக நடக்கும் சிறிய அளவிலான நீரோட்டங்களும் இவற்றுக்குக்கெல்லாம் காரணமான ஆழ்கடல் நீரோட்டப் பரிமாற்றங்களும் தரைசார் கடற்பரப்பிலான ஓதம் செயற்பாடுகளுக்கு ஒன்றுக்கொன்று உதவுகின்றன. குடா, தீபகற்பம், தீவு, தீவுத்திட்டைகள், கடற்பாறைகள் போன்ற புவியமைப்புக்கள் நீரோட்ட வழிகளில் தாக்கங்களை உண்டாக்கும் போதும் இந்த நீரோட்டங்களினால் உருவாகும் ஓதம் செயற்பாடுகளும் வழிப் படுத்தப் படுகின்றன.
ஓத ஆற்றல்
[தொகு]ஓத ஆற்றல் நேரடியாக புவி-நிலவு இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-சூரியன் இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும். நிலவு, சூரியன் இவற்றின் ஈர்ப்பினாலும் புவியின் சுழற்சியாலும் நீர்நிலைகளில் ஏற்படும் விசையால் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. மற்ற வகை ஆற்றல்கள், (உயிரி எரிபொருள், உயிர்த்திரள், நீர்மின்சாரம், காற்றுத் திறன், சூரிய ஆற்றல், கடல் அலை ஆற்றல்) சூரியனிடமிருந்தே நேரடியாகப் பெறுகின்றன. அணுவாற்றல் புவியில் உள்ள கதிரியக்கப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. புவி வெப்ப ஆற்றல் புவியில் அடைபட்டுள்ள வெப்பத்தினைக் கொண்டு பெறப்படுகிறது.[3]
பண்டைய கடல் போக்குவரத்தில் ஓதம்
[தொகு]ஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும். ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம்(Tide towards the Shore - High tide) கடல் ஓதம்(Tide towards the Sea - Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். ஓதம் குறையும் போது கடல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறி கடலுக்குள் செல்வர். ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு.[4]
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - நற்றிணை - 117
- ↑ ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! - சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: கானல் வரி ஊர்ந்த வழியே மீண்டும் ஊர்ந்தது கடல் ஓதம் என்கிறது சிலப்பதிகாரம். கழி ஓதம் ஊர்ந்து ஊரின் உள்ளே வந்த வழியில் மீண்டும் கடலுக்குள் ஓதம் செல்வதை ஊர்ந்த வழி சென்றது கடல் ஓதம் என்கிறது சிலம்பு.
- ↑ Turcotte, D. L. (2002). "4". Geodynamics (2 ed.). Cambridge, England, UK: Cambridge University Press. pp. 136–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-66624-4.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் - அகம் 350