ஓதம் அறிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும்.[1] ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம்(Tide towards the Shore - High tide) கடல் ஓதம்(Tide towards the Sea - Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். ஓதம் குறையும் போது கடல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறி கடலுக்குள் செல்வர். ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு.[2] மேற்கொடுத்த சங்கப்பாடல்களின் மூலம் ஓதம் என்ற இயற்கை சக்தியை கலம் ஓட்ட தமிழர் பயன்படுத்தினர் என அறியலாம்.

கழி ஓதம்[தொகு]

கழிமுகத்தை நோக்கி வருவதால் இது கழி ஒதம்.[3] இக்கழி ஓதத்தின் போது நீரின் ஆழம் அதிகம் இருக்கும். மேலும் கடல் நீர் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். இதனால் கடலில் மிதக்கும் கலத்தை துறைமுகத்துக்குள் பாறைகளில் மோதாமல் எளிதாகக் கொண்டு வர முடியும். மேலும் கடல் நீரும் கலத்தை கரை நோக்கி[4] நகர்த்துவதால் திமில் போடும் திமிலர்களின் வேலைப்பளுவும் குறையும்.

இந்நிகழ்வைப் பாதிக்கும் காரணிகள்[தொகு]

  1. கழிமுகத்திற்கு வரும் நீரின் அளவு - அதாவது தரைப்பகுதி வெள்ளம்
  2. கடல்காற்று மற்றும் தரைக்காற்றினது வேகம் மற்றும் திசை.
  3. பருவகாலக் காற்றின் வேகம் மற்றும் திசை.
  4. கடல் மேற்பரப்பின் காற்று மண்டலத்தின் அழுத்த வேறுபாடு.
  5. சந்திர ஈர்ப்பு ( அமாவாசை மற்றும் முழுநிலா நாட்களில் பல இடங்களில் கடல் பெருக்குடன் அதிக அலைவீச்சும் கொண்டு காணப்படும். இருந்தாலும் இரண்டும் தொடர்பு கொண்டனவா என்று மேலும் ஆய்வு செய்து உறுதிப் படுத்தவேண்டியுள்ளது.*)
  6. நீர் வாங்கல் எனப்படும் கரையோர, தொடுகடல், உயரக் கடல் பரப்புக்களில் நடக்கும் கீழ் நீரோட்டங்கள், உள் நீரோட்டங்கள், மேல் நீரோட்டங்கள்.
  7. தரை அமைப்பு.

கடல் ஓதம்[தொகு]

ஊர்ந்த வழியே மீண்டும் ஊர்ந்தது கடல் ஓதம் என்கிறது சிலப்பதிகாரம். கழி ஓதம் ஊர்ந்து ஊரின் உள்ளே வந்த வழியில் மீண்டும் கடலுக்குள் ஓதம் செல்வதை ஊர்ந்த வழி சென்றது கடல் ஓதம் என்கிறது சிலம்பு.[5] இக்கடல் ஓதத்தின் போது கடல் நீர் கரையிலிருந்து கடல் நோக்கி கலத்தை செலுத்தும். இதனால் கடல் ஓதத்தின் போதே மீனவரும் கடலோடிகளும் கலத்தில் பயணத்தைத் தொடங்குவர்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. க. ராஜன் (2010). தொல்லியல் நோக்கில் சங்ககாலம். https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU0kJUy.TVA_BOK_0005915. 
  2. கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் - அகம் 350
  3. பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - நற்றிணை - 117
  4. போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு, மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர, ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. - கம்பர் இராமாயணம்
  5. ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! - சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: கானல் வரி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓதம்_அறிதல்&oldid=3583012" இலிருந்து மீள்விக்கப்பட்டது