உள்ளடக்கத்துக்குச் செல்

ஓத ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகின் முதல் கிடக்கை விசைச்சுழலி[1] நீர்ப்பெருக்கு மின்னாக்கி — SeaGen — ஸ்ட்ரங்ஃபோர்ட் லௌ. படத்திலிலுள்ள நீர்ச்சுழல் மூலம் நீர்ப்பெருக்கின் வேகத்தை அறியலாம்.
புதுப்பிக்கத்தக்க
ஆற்றல்
காற்றாலை
காற்றாலை
உயிரி எரிபொருள்
உயிர்த்திரள்
புவிவெப்பம்
நீர்மின்சாரம்
சூரிய ஆற்றல்
நீர்ப்பெருக்கு
ஆற்றல்

அலை ஆற்றல்
காற்றுத் திறன்

ஓத ஆற்றல், நீர்ப்பெருக்கு ஆற்றல் சிலநேரங்களில் நீர்ப்பெருக்குத் திறன் என்பது நீராற்றல் வகைகளில் கடல் நீர் வரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி மின்னாற்றல் அல்லது வேறு ஆற்றல்வகையாக மாற்றிக் கிடைத்திடும் ஆற்றலாகும்.

சமகாலத்தில் பரவலாக பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் மின்னாக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கக் கூடியது. காற்றுத் திறன் அல்லது சூரிய ஆற்றலை விட நீர்ப்பெருக்கு ஏற்படும் காலங்களையும் அளவுகளையும் துல்லியமாகக் கணிக்க முடியும். வரலாற்றில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகளிலும் நீர்ப்பெருக்காலைகள் இயங்கி வந்துள்ளதைக் காண முடியும். உரோமர்கள் காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[2][3]

நீர்ப்பெருக்கு ஆற்றல்

[தொகு]
ஒரு நாளில் நீர்பெருக்குகளின் மாறுபாடு

நீர்ப்பெருக்கு ஆற்றல் நேரடியாக புவி-நிலவு இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-சூரியன் இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும். நிலவு, சூரியன் இவற்றின் ஈர்ப்பினாலும் புவியின் சுழற்சியாலும் நீர்நிலைகளில் ஏற்படும் விசையால் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. மற்ற வகை ஆற்றல்கள், (உயிரி எரிபொருள், உயிர்த்திரள், நீர்மின்சாரம், காற்றுத் திறன், சூரிய ஆற்றல், கடல் அலை ஆற்றல்) சூரியனிடமிருந்தே நேரடியாகப் பெறுகின்றன. அணுவாற்றல் புவியில் உள்ள கதிரியக்கப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. புவி வெப்ப ஆற்றல் புவியில் அடைபட்டுள்ள வெப்பத்தினைக் கொண்டு பெறப்படுகிறது.[4]

ஓரிடத்திலுள்ள கடல் நீரின் ஏற்ற இறக்கங்கள் சூரியன்/நிலவு இவற்றுடன் புவியின் அக்கால அமைவிடம், புவியின் சுழற்சி மற்றும் கடற்தளத்தின் மற்றும் கடற்கரையின் அமைப்பு இவற்றைக்கொண்டு அமைகிறது. இவற்றைக் குறித்த துல்லியமான தரவுகள் நம்மிடையே உள்ளதால் நீர்ப்பெருக்கு மின்னாற்றல் நிலையங்கள் வடிவமைப்பது எளிதாகும். மேலும் இவை இயற்கை விசைகளை சார்ந்திருப்பதால் இவ்வாற்றல் என்றும் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

ஓர் நீர்ப்பெருக்கு மின்னாக்கி இந்நிகழ்வைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. நீர் மட்டத்தின் உயரம் அல்லது நீர்வரத்தின் வேகம் இவை கூடுதலாக இருப்பின், மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனும் கூடுதலாகும்.

நீர்ப்பெருக்கு ஆற்றலின் வகைகள்

[தொகு]

நீர்ப்பெருக்கு ஆற்றலை மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கலாம்:

  • நீர்ப்பெருக்கு ஓடை அமைப்புகள்: காற்றோலைகள் எவ்வாறு காற்று வீசுவதைக் கொண்டு விசைச்சுழலிகளை இயக்குகின்றனவோ அவ்வாறே இவை ஓடுகின்ற நீரின் இயக்க ஆற்றலைக் கொண்டு விசைச்சுழலிகளை இயக்குகின்றன.இவை குறைந்த மூலதனச் செலவையும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கொண்டிருப்பதால் பரவலாக விரும்பப்படுகிறது.
நீர்ப்பெருக்கு தடுப்பணைக் குறித்த ஓர் கலைஞரின் ஆக்கம்: கரைகள், நாவாய் பூட்டு, மதகுகள் மற்றும் இரு விசைச்சுழலிகள்.
  • தடுப்பணைகள் உயர்ந்த மற்றும் குறைந்த நீர்ப்பெருக்கினைடையே உள்ள உயர வேறுபாட்டினால் கிடைக்கும் நிலை ஆற்றலை பயன்படுத்துகின்றன.கயவாயின் முழு அகலத்திலும் ஓர் அணை கட்டப்பட வேண்டியுள்ளதால் பெரும் கட்டமைப்புச் செலவுகளையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் கொண்டுள்ளது. தவிர, வேண்டுமளவு நிலை ஆற்றல் கிடைத்திடும் இடங்கள் உலகில் மிகக் குறைவாக உள்ளது.
  • நீர்ப்பெருக்கு காயல்கள் தடுப்பணைகளைப் போன்றவையே எனினும் தன்னிறைவாக இவற்றை அமைக்க முடியும். இதனால் குறைந்த கட்டமைப்புச் செலவையும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தவிர இவற்றைத் தொடர்ச்சியாக, தடுப்பணைகளைப் போலன்றி, இயக்க முடியும்.

நவீன விசைச்சழலி நுட்பங்கள் கடலில் இருந்து பெருமளவு மின்னாக்கம் பெற முயல்கின்றன.இவை கடலின் நீர்ப்பெருக்கைத் தவிர வெப்ப ஓடைகளையும் (எடுத்துக்காட்டு: வளைகுடா ஓடை) பயன்படுத்துகின்றன. இயற்கையான நீர்பெருக்கு ஓடைகள் மேற்கு மற்றும் கிழக்கு கனடா கடற்கரைகள், ஜிப்ரால்ட்டர் நீரிணை, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஓடை விசைச்சுழலிகள் அமைக்கப்படலாம்.இத்தகைய ஓடைகள் எங்கெல்லாம் வளைகுடாக்களும் நதிகளும் இணைகின்றனவோ, இரு நிலப்பகுதிகளிடையே நீரோட்டம் அடர்ந்துள்ளதோ அங்கெல்லாம் உள்ளன.

உசாத்துணைகள்

[தொகு]
  • Baker, A. C. 1991, Tidal power, Peter Peregrinus Ltd., London.
  • Baker, G. C., Wilson E. M., Miller, H., Gibson, R. A. & Ball, M., 1980. "The Annapolis tidal power pilot project", in Waterpower '79 Proceedings, ed. Anon, U.S. Government Printing Office, Washington, pp 550–559.
  • Hammons, T. J. 1993, "Tidal power", Proceedings of the IEEE, [Online], v81, n3, pp 419–433. Available from: IEEE/IEEE Xplore. [July 26, 2004].
  • Lecomber, R. 1979, "The evaluation of tidal power projects", in Tidal Power and Estuary Management, eds. Severn, R. T., Dineley, D. L. & Hawker, L. E., Henry Ling Ltd., Dorchester, pp 31–39.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://journals.pepublishing.com/content/l2525g3001286200/
  2. "Spain, Rob: "A possible Roman Tide Mill", Paper submitted to the Kent Archaeological Society" (PDF). Archived from the original (PDF) on 2011-05-17. பார்க்கப்பட்ட நாள் 2010-02-26.
  3. Minchinton, W. E. (October 1979). "Early Tide Mills: Some Problems". Technology and Culture 20 (4): 777–786. doi:10.2307/3103639. 
  4. Turcotte, D. L. (2002). "4". Geodynamics (2 ed.). Cambridge, England, UK: Cambridge University Press. pp. 136–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-66624-4. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓத_ஆற்றல்&oldid=3739695" இலிருந்து மீள்விக்கப்பட்டது