படிவுப் பாறை
படிவுப் பாறை (Sedimentary rock) என்பது முக்கியமான மூன்று பாறை வகைகளுள் ஒன்றாகும். தீப்பாறை, உருமாறிய பாறை என்பன ஏனைய இரண்டு வகைகளாகும். படிவுகளால் உருவான பாறைகள் நிலப்பரப்பின் 75-80% பகுதிகளை மூடியுள்ளன.சுண்ணக்கல், தொலொமைட்டு, மணற்கல் என்பன இவ்வகைப் பாறையுள் அடங்குவன. பாறைத் துகள்கள், கரிமப்பொருட் துணுக்கைகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் (chemical precipitates) என்பவை படிப்படியாக ஏதெனும் ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, கார்பனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும்.புவியின் மேலோட்டில் காணப்படும் பாறைகளின் கண அளவைப் பொறுத்தவரையில் படிவுப்பாறைகள் 5 விழுக்காடே ஆகும், எனினும் நிலப்பரப்பில் ஏறத்தாழ 75 விழுக்காடு படிவுப்பாறையே ஆகும். படிவ பாறைகள் பற்றிய அறிவு கட்டிடப் பொறியியல் துறையில் சாலைகள், வீடுகள் , சுரங்கங்கள் , கால்வாய்கள் போன்றவற்றை கட்ட மிகவும் உதவிகரமாக உள்ளது.மேலும் படிவு பாறைகள் நிலக்கரி, படிம எரிபொருட்கள்,நீர்,தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களின் முக்கியமான ஆதாரங்களாக திகழ்கிறது.மேலும் இப்பாறைகள் பற்றிய ஆய்வு செடிமென்டாலாஜி என்று அழைக்கப்படுகிறது இது புவியியல் மற்றும் புவியியல் இயற்பியலை உள்ளடக்கியது.
படிவுப் பாறைகள் அவற்றை உருவாக்கிய படிவுகளின் மூலங்களையொட்டி வகைப்படுத்தப்படுகின்றன. இப் படிவுகளின் மூலங்கள் பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
- உடைவுப் பாறை (clastic rock): இப்பாறைகள் ஏற்கனவே உள்ள பாறைகளில் இருந்து பின்வரும் முறைகளில் உடைந்து உருவாகின்றன.
- இருந்த இடத்திலேயே தேய்வடைதல்.
- நீர், காற்று முதலியவற்றால் அரிக்கப்பட்டு அவற்றுடன் தொங்கல் நிலையில் எடுத்துச் செல்லப்பட்டபின் வேறிடங்களில் படிதல்.
- உயிரியச் (biogenic) செயற்பாடு
- கரைசல்களிலிருந்து வீழ்படிதல்.
இப் படிவுகள் பின்னர் அழுத்தப்பட்டுப் பாறையாதல் (lithification) வழிமுறை மூலம் பாறைகளாக மாறுகின்றன.
உருவாக்கம்
[தொகு]ஒவ்வொரு நாளும் காற்று, வெப்பமநிலை, நீர் மற்றும் பனிக்கட்டிகளால் பாறைகள் சிதைக்கப்படுகின்றன, சிதைந்த பாறைத் துகள்கள் ஆற்று நீரில்கலக்கின்றன. ஆறு அத்துகள்களை ஆற்றின் கரைகளிலும் ஏரி, கடல் போன்றவற்றின் முகத்துவாரங்களிலும் படிய வைக்கிறது இவ்வாறு ஏதாவது ஓரிடத்தில் நிலைபெறுகின்ற பொருள்களே படிவுகள் எனப்படுகின்றன. முதலில் படிவுகள் மிருதுவாகவும் தளர்வாகவும் இருக்கும் இவை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குகளாகப் படிய்வைக்கப்படுகின்றன. மேலடுக்கின் சுமையினால் கீழடுக்கிலுள்ள பொருள்களும் அழுத்தப்படும். அதே நேரத்தில் பாறைகளின் தாதுக்களும் நீரில் கரைந்து அதுகள்களைச் சுற்றித் தங்குகின்றன. தாதுக்களின் கரைசல் படிவப்பொருள்களை ஒன்றோடொன்று உறுதியாகப் பிணைக்கிறது. இதனால் மிருதுவான படிவுகள் திடமானதாக மாறுகிற்து இவ்வாறு மாறிய படிவுகளே இறுதியாகப் படிவுப்பாறையாக மாறுகிறது.
தொங்கல் நிலையில் படிவுத் துகள்களைக் கொண்டு செல்லும் காற்று, பனிக்கட்டி, நீரோட்டம் என்பவற்றிலிருந்து, அதிக சுமை அழுத்தம் காரணமாக விடுபடும் அத் துகள்கள் படிவதனால் படிவுப் பாறைகள் உருவாகின்றன. படிவுகள் தொடர்ச்சியாக இடம்பெறும்போது ஏற்படும் சுமை அழுத்தம், பாறையாதல் என்னும் வழிமுறைமூலம் இப்படிவுகளைப் பல படைகளாலான திண்மங்களாக உருவாக்குகின்றது.
படிந்தபின்னர், பாறையாதலில், பிணைப்பு உட்பட, படிவுத் துகள்கள் அடையக்கூடிய வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் அனைத்தையும் ஒருசேர diagenesis என அழைப்பர். மேற்பரப்புச் சிதைவடைதல் இதில் அடங்குவதில்லை.
படிவுப் பாறைகள் படைகளாகவே உருவாகின்றன. ஒவ்வொரு படையும் முன்னைய படையின்மீது கிடைநிலையில் அமைகின்றது. இத் தொடர்ச் செயற்பாடுகளின்போது சில சமயங்களில் கால இடைவெளிகள் இருப்பது உண்டு. இவை படிவுகள் ஏதும் ஏற்படாத காலப்பகுதிகளைக் குறிக்கக்கூடும் அல்லது பழைய படிவுப் படைகள் கடல் மட்டத்துக்கு மேல் எழுந்து அரித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.
படிவுப் பாறைகள் புவியின் வரலாறு தொடர்பான பல தகவல்களைத் தம்முள் அடக்கியிருக்கின்றன. இவை பண்டைக்காலத் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தொல்லுயிர்ப் படிவங்களைக் கொண்டுள்ளன. நிலக்கரியும் ஒருவகைப் படிவுப் பாறையாகக் கருதப்படுகிறது. படிவுகளின் சேர்மானங்கள், மூலப் பாறையின் தன்மைகள் பற்றிய தகவல்களைப் பெற உதவுகின்றன. அடுத்தடுத்த படைகளிடையே காணப்படும் வேறுபாடுகள், அக்காலங்களில் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கின்றன. தொல்லுயிர் எச்சங்கள் அழிந்துபோகாத அளவிலான வெப்பநிலை மற்றும் அமுக்கங்களில் படிவுப்பாறைகள் உருவாவதால் அவை தொல்லியிர்ப் படிவங்களைப் பாதுகாத்து வைத்திருக்கக்கூடியதாக உள்ளது.
படிவுப் பாறைகள் பெருமளவு புவி மேற்பரப்பை மூடியிருந்தாலும், மொத்தப் பாறைகளின் அளவில் இவ் வகைப் பாறைகள் 5% அளவுக்கே உள்ளன. இது, படிவுச் செயற்பாடுகள் புவியோட்டின் மிகவும் தடிப்புக் குறைந்த மேற்பரப்பிலுள்ள படையாகவே இருப்பதைக் குறிக்கின்றது. புவியோட்டின் பெரும்பகுதி தீப்பாறைகளாகவோ அல்லது உருமாறிய பாறைகளாகவோ உள்ளது.
வகைப்பாடு
[தொகு]படிவுப் பாறைகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
- உடைவுப் பாறைகள் (clastic)
- வேதியியற் படிவுகள் (chemical precipitate)
- உயிர்வேதியியல் அல்லது உயிரியப் (biogenic) படிவுப் பாறைகள்
- மற்ற வகைகள்(எரிமலைகள்,மோதல்கள் போன்றவற்றினால் உருவாகுபவை)
என்பனவாம்.
படிவுப்பாறை வகைகள்
[தொகு]- மணற்பாறை
- களிப்பாறை
- பல்கூட்டுப்பாறை
- சுண்ணாம்புப்பாறை
- நிலக்கரி
சேர்மங்களின் அடிப்படையிலான வகைப்பாடு
[தொகு]படிவுப் பாறைகளை அவற்றின் பகுதிபொருட்களின் அடிப்படையில் பின்வருமாறு பிரிக்கலாம்,அவை:
- சிலிசி உடைவு அல்லது சிலிகேட் படிவுப் பாறைகள்
- இப்படிவுப் பாறைகளை வேறுபட்ட துகள்களை உடையப்பாறை,ப்ரீச்சிஸ், மணற்கல் மற்றும் களிப்பாறை ஆகிய வகைப்படும்
- கார்பனேட் படிவுப் பாறைகள்
- கால்சைட்,அராகோனைட்,டோலோமைட் மற்றும் CO32- அடிப்படையாக கொண்ட பிற கார்பனேட் கனிமங்கள்
- ஆவியாதல் படிவுப் பாறைகள்
- இப்படிவுப்பாறைகள் நீர் ஆவியாதல் மூலம் உருவாக்கப்பட்டது இவற்றில் பொதுவாக ஏராளமாக ஹாலைட், ஜிப்சம் மற்றும் அன்ஹைட்ரிடை கொண்டுள்ளது.
- கரிமம் நிறைந்த படிவுப் பாறைகள்
- இவை பொதுவாக 3 % அல்லது அதற்கு அதிகமாக கரிம பொருட்களை கொண்ட படிவப்பாறைகள் ஆகும்.எண்ணெய்,நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை இப்பிரிவை சார்ந்தது.
- சிலிகா படிவுப் பாறைகள்
- இவை முற்றிலும் சிலிக்காவை (SiO2) கொண்டிருக்கின்றன.பொதுவாக எடுத்துக்காட்டுகள் மாணிக்ககல், பட்டைவரியுடைய அல்லது மற்ற மைக்ரோகிரிஸ்டலின் வடிவ பாறைகள்
- இரும்பு சத்து நிறைந்த படிவுப் பாறைகள்
- இப்பாறைகள் 15 % ஐ விட அதிக அளவில் இரும்பை கொண்டிருக்கின்றன.
- பாஸ்பேட் படிவுப் பாறை
- இப்பாறைகள் 6.5% க்கும் அதிகமான பாஸ்பேட் கனிமங்களை கொண்டிருக்கின்றன