50 ரூபாய் பணத்தாள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய 50 ரூபாய் பணத்தாள் (Indian 50-rupee banknote (50) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். தற்போது புழக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி வரிசை 50 பணத்தாளானது 1996 முதல் புழக்கத்தில் உள்ளது.

50 பணத்தாளானது இந்திய ரிசர்வ் வங்கியால் முதன் முதலில் 1975 இல் சிங்க முத்திரை வரிசை பணத்தாளாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் பக்கத்தில் அசோகத் தூண் இடம் பெற்றது. இதற்கு பதிலாக 1996 இல் மகாத்மா காந்தி நிழலுருவம் இடம்பிடித்தது.[1]

மகாத்மா காந்தி புதிய வரிசை[தொகு]

2016 நவம்பர் 10 அன்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய மறுவடிவமைப்பில் 50 பணத்தாள் வரவிருக்கும் மாதங்களில், மகாத்மா காந்தி புதிய வரிசையின் ஒரு பகுதியாக வெளியிடப்படும் என்று அறிவித்தது.[2] இந்த பணத்தாள் விரைவில் வெளியிடப்படும் என்று 2017 ஆகத்து 18 அன்று அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. [3]

மகாத்மா காந்தி வரிசை[தொகு]

வடிவம்[தொகு]

50 பணத்தாளின் மகாத்மா காந்தி வரிசை தாளானது 147 × 73 மிமீ அளவில், இளஞ்சிவப்பு -ஊதா நிறத்தில், முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. தாளின் பின்பக்கம் இந்திய நாடாளுமன்றத்தின் கூட்ட அரங்கான சன்சாத் பவனின் படம் இடம்பெற்றுள்ளது.

2012 இக்குப் பிறகு, வெளியிடப்பட்ட 50 ரூபாய் பணத்தாளில் புதிய குறியீடு இடம்பெற்றது.[4] 2005 க்கு முன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் 2014 மார்ச் 31 முதல் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 சனவரியில் வெளியிட்டது. பின்னர் காலக்கெடுவை 2015 சனவரி 1 வரை நீட்டித்தது. இந்த காலக்கெடு மேலும் 2016 சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.[5]

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி மகாத்மா காந்தி புதிய வரிசையில் புதிய வடிவிலான, 50 பணத்தாளை அறிமுகப்படுத்தியது என்றாலும், முந்தைய வரிசையில் வெளியான 50 ரூபாய் நோட்டுகள் செல்லத் தக்கவையாகவே உள்ளன.[6] இந்த புதிய தொடரின் பணத்தாளின் பின் பக்கத்தில் , ஹம்பியில் உள்ள ரதத்தின் படத்தைக் கொண்டுள்ளது. இது நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை சித்தரிக்கிறது. பணத்தாளின் வண்ணம் ஃப்ளோரசன்ட் நீலம் ஆகும்.[7] பணத்தாளின் அளவு 135 x 66மிமீ ஆகும்..[8]

பாதுகாப்பு அம்சங்கள்[தொகு]

50 பணத்தாளின் பாதுகாப்பு அம்சங்கள் பின்வருமாறு:[9]

  • பாதுகாப்பு இழையில் 'भारत' (தேவநாகரி எழுத்தில் பாரத்) மற்றும் 'RBI' என்று மாறி மாறி வாசிக்கும்வகையில் உள்ளது.
  • மகாத்மா காந்தியின் வலதுபக்க ஓரத்தில் நீர் குறியீட்டு முறையில் ரூபாயின் மதிப்பு பொறிக்கப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தியின் உருவம் முதன்மையான நீர் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.
  • பணத்தாளின் மதிப்பைக் குறிப்பிடும் எண் உடனொளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது.
  • 2005 ஆம் ஆண்டைவிட கூடுதல் பாதுகாப்பு அம்சம் கொண்ட பாதுகாப்பு இழை, மின் அச்சு முறையில் நீர் குறியீடு. அச்சிடப்பட்ட ஆண்டு போன்றவை அமைந்துள்ளன.

மொழிகள்[தொகு]

மற்ற இந்திய ரூபாய் நோட்டுகள் போல 50 பணத்தாள்களிலும் 17 இந்திய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம், இந்தியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றிருந்ததன. மொழிகளின் வரிசை பின்வருமாறு: அசாமி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.

ஒன்றிய நிலை அலுவல் மொழிகள்
மொழிகள் 50
ஆங்கிலம் Fifty rupees
இந்தி पचास रुपये
மாநில நிலை அலுவல் மொழிகள் 15
அசாமி পঞ্চাশ টকা
வங்காளி পঞ্চাশ টাকা
குசராத்தி પચાસ રૂપિયા
கன்னடம் ಐವತ್ತು ರುಪಾಯಿಗಳು
காசுமீரி پَنٛژاہ رۄپیہِ
கொங்கணி पन्नास रुपया
மலையாளம் അൻപതു രൂപ
மராத்தி पन्नास रुपये
நேபாளி पचास रुपियाँ
ஒடியா ପଚାଶ ଟଙ୍କା
பஞ்சாபி ਪੰਜਾਹ ਰੁਪਏ
சமசுகிருதம் पञ्चाशत् रूप्यकाणि
தமிழ் ஐம்பது ரூபாய்
தெலுங்கு యాభై రూపాయలు
உருது پچاس روپیے

மேற்கோள்கள்[தொகு]