உள்ளடக்கத்துக்குச் செல்

மெழுகு அருங்காட்சியகம், மைசூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருங்காட்சியக நுழைவாயில்

மெழுகு அருங்காட்சியகம், மைசூர், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

மைசூர் அரண்மனையிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் இந்த அருங்காட்சியகம் 90 வருடங்களுக்கு மேலாக உள்ள ஒரு கட்டடத்தில் இயங்கி வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை வல்லுநர் திரு ஸ்ரீஜி பாஸ்கரன் என்பவரால் அக்டோபர் 2010இல் இது நிறுவப்பட்டது. கணினி தொழில்நுட்பம் இவ் வருங்காட்சியகத்தில் நன்முறையில் இவராலும், இவருடைய மனைவியாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவாவிலும், உதகமண்டலத்திலும் இதுபோன்ற அருங்காட்சியகத்தை இவர் அமைத்துள்ளார்.[1] மெல்லிசை உலகம் என்று கூட இதனை அழைக்கின்றனர்.[2]

சிலை உருவாக்கம்

[தொகு]

ஓர் ஆளுயர மெழுகுச் சிலையை அமைப்பதற்கு இரண்டிலிருந்து நான்கு மாத காலம் ஆகிறது. அதனை உருவாக்குவதற்கு 50 கிலோவிற்கு மேற்பட்ட மெழுகு தேவைப்படுகிறது. சிலை அமைக்கப்பட்டவுடன் அதற்குப் பொருந்தும் வகையில் உரிய ஆடையும், அணியும் அதற்கு அணிவிக்கப்படுகிறது. [1] ஒரு மெழுகுச்சிலையைத் தயாரிக்க ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சம் வரை ஆகிறது. சிலையின் கண்களும் பற்களும் செயற்கையானவை. உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக பெரும்பாலும் சின்தெடிக் அல்லது உண்மையான முடி பயன்படுத்தப்படுகிறது.[2] சில இசைக்குழுவினர் சிலைகளின் அருகே இசைக்கருவிகளின் பெயர்கள் படத்துடன் தரப்பட்டுள்ளன.

சிறப்பு

[தொகு]
மகாத்மா காந்தியின் மெழுகுச்சிலை

மகாத்மா காந்தியின் அமர்ந்த நிலையிலான மெழுகுச் சிலை இங்கு உள்ளது. மைசூரின் அந்நாளைய மன்னரான கிருஷ்ணராஜ வாடியாரின் சிலையும் இங்குள்ளது. பல சிலைகள் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றன.[1] இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு பகுதியில் பார்வையாளர் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு இசைக்கருவிகளை இசைக்கும் வசதி உள்ளது. [2]

இசைக்கருவிகள், மெழுகுச் சிலைகள்

[தொகு]

இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த பல வகையான இசைக்கருவிகள் இங்குள்ளன. கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையிலான இசைக் கருவிகளை இங்கே காணமுடியும். இசைக்கருவிகளை வாசிக்கின்ற இசைக்கலைஞர்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. 19 பிரிவுகளைக் கொண்டு அமைந்துள்ள இந்த அருங்காட்சிகத்தின் ஒவ்வொரு பிரிவும் இசை மற்றும் கலை உலகின் அனுபவத்தை வெளிப்படுத்துவனவாக உள்ளன. பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 110 ஆளுயர மெழுகுச் சிலைகள் இங்கு உள்ளன. இந்திய செவ்வியல் இசையான இந்துஸ்தானி, மற்றும் கர்நாடகா, பஞ்சாபி பங்கரா, மத்திய கிழக்கு, சீனா, மலையகம், ஜாஸ், ஹிப்ஹாப், ராக் உள்ளிட்ட பல குழுக்களைக் குறிக்கின்ற வகையில் இசைக்குழுக்களை சிலைகளாகக் காணலாம். [1]

பார்வை நேரம்

[தொகு]

இந்த அருங்காட்சியகத்தை காலை 9.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை அனைத்து நாள்களிலும் பார்வையிடும் வசதி உள்ளது. பார்வையாளருக்கு ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும். ஸ்டில் கேமராவிற்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது.[1]

படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]