உள்ளடக்கத்துக்குச் செல்

மைசூர் தசரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மைசூரு தசரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
(மேலிருந்து கீழ், இடமிருந்து வலம்) விழாவின் போது ஒளியூட்டப்பட்ட மைசூர் அரண்மனை, விஜயதசமியன்று யானை மீது சாமுண்டீசுவரி அம்மன் சிலை ஊர்வலம்,
வகைபண்பாடு, சமயம் (இந்து)
முக்கியத்துவம்தீமையை நன்மை வெற்றிகொண்டதைக் குறிக்கும் வகையில்
கொண்டாட்டங்கள்மைசூர் அரண்மனைஐ ஒளியூட்டுதல், ராமாயண நாடக அரங்கம், திருவிழாக்கள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள்.
தொடக்கம்இந்து நாட்காட்டியின்படி செப்டம்பர்/அக்டோபர்
முடிவு2025
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை17–27 செப்டம்பர் 1610
தொடர்புடையனசாமுண்டிஸ்வரி (தேவி சக்தி), துர்க்கை, மகிடாசூரன், இராமாயணம், விஜயநகரப் பேரரசு, மைசூர் அரசு, உடையார் அரச குலம்

மைசூர் தசரா (Mysore Dasara) என்பது கருநாடக மாநிலத்தின் மாநிலத் திருவிழா ஆகும். இது 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். நவராத்திரி எனப்படும் ஒன்பது இரவுகளுடன் தொடங்கி, கடைசி நாள் விஜயதசமியாகும். இந்தத் திருவிழா இந்து நாட்காட்டியின் அஸ்வின் மாதத்தில் பத்தாவது நாளில் அனுசரிக்கப்படுகிறது, இது பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வருகிறது.[1][2][3]

இந்துப் பண்டிகையான நவராத்திரி மற்றும் அதன் ஒரு பகுதியான விஜயதசமி, தீமையை நன்மை வெற்றி கொண்டதைப் போற்றுகிறது. இந்து தொன்மங்களின்படி விஜயதசமி நாளில் சாமுண்டேஸ்வரி தேவி (துர்கை) மகிடாசுரனை வெற்றி கொண்ட நாள் ஆகும்.[4] மகிடாசுரனை தேவி வதம் செய்ததாலே இந்த நகருக்கு மைசூர் என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. மைசூர் பாரம்பரியத்தில், இந்த விழாவின் போது நன்மைக்காகப் போராடிய வீரர்களும் அரசும் கொண்டாடப்படுகின்றனர். இதில், அரச வாள், ஆயுதங்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை போர்த் தெய்வமான தேவியுடன் சேர்த்து சடங்குகளின்படி வழிபடப்பட்டு, காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த விழாச் சடங்குகளுக்கும் முக்கிய ஊர்வலத்திற்கும் பாரம்பரியமாக மைசூர் மன்னரே தலைமை தாங்குகிறார்.[4]

மைசூர் நகரம், தசரா பண்டிகையைக் கோலாகலத்துடனும் ஆடம்பரத்துடனும் கொண்டாடும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மைசூரில் நடைபெறும் தசரா விழா 2019 ஆம் ஆண்டில் தனது 409வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.[5] அதே சமயம், கருநாடகத்தில் விஜயநகர மன்னர்களால் இந்த விழாக்கள் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.[6]

வரலாறு

[தொகு]

இந்தப் பண்டிகை விஜயநகரப் பேரரசர்களால் 14-15ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.[7] இந்த விழாவின் சரியான தோற்றம், அது எவ்வளவு பழமையானது என்பது குறித்து அறியப்படவில்லை. 14 ஆம் நூற்றாண்டின் விஜயநகரப் பேரரசில் இந்த விழா ஒரு வரலாற்று இடத்தை வகித்தது. அங்கு இது மகாநவமி என்று அழைக்கப்பட்டது. இந்த கொண்டாட்டங்கள் ஹம்பியில் உள்ள ஹசாரா ராம கோயிலின் வெளிச்சுவரில் உள்ள புடைப்புச் சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.[8][9]

இத்தாலியப் பயணி நிக்கோலோ டா கொன்ட்டி, அரச ஆதரவுடன் நடைபெற்ற இந்த விழாவின் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் ஒரு பிரம்மாண்டமான சமய மற்றும் போர்க்கலை நிகழ்வாக விவரித்தார். இந்த நிகழ்வில் துர்கை போர் தெய்வமாகப் போற்றப்பட்டார் (சில நூல்கள் அவளை சாமுண்டேஸ்வரி என்று குறிப்பிடுகின்றன). இந்த கொண்டாட்டங்களில் தடகளப் போட்டிகள், பாட்டு, நடனம், வாணவேடிக்கைகள், கண்கவர் இராணுவ அணிவகுப்பு மற்றும் பொதுமக்களுக்கு தர்மம் வழங்குதல் ஆகியவை இடம்பெற்றன.[10][11]

தக்காண சுல்தான்களால் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்த பிறகு, இந்தப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் முசுலிம் ஆட்சியாளர்களால் முடிவுக்கு வந்தன. விஜயநகரப் பேரரசின் தெற்குப் பகுதிகளில் மைசூரின் உடையார்கள் ஒரு இராச்சியத்தை நிறுவி, மகாநவமி (தசரா) திருவிழாக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்தனர்; இந்த மரபு முதன்முதலில் முதலாம் ராஜா உடையார் (கி.பி. 1578-1617) என்பவரால் 1610 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் தொடங்கப்பட்டது.[12][13]

விழாக்கள்

[தொகு]
2019 மைசூர் தசரா
மைசூரில் நடைபெறும் அனைத்து தசரா கொண்டாட்டங்களின் மையமாகத் திகழும், ஒளியூட்டப்பட்ட மைசூர் அரண்மனை

இந்த விழாக்களின் ஒரு பகுதியாக ஒரு சிறப்பு தர்பார் (அரசவை) நடக்கும். கி.பி. 1805 ஆம் ஆண்டில், மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியின் போதுதான், மன்னர் தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையில் ஒரு சிறப்பு தர்பார் நடத்தும் வழக்கத்தைத் தொடங்கினார், இதில் அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். 2013 திசம்பரில் ஸ்ரீகண்டத்த உடையார் இறந்த பிறகு, 2014-ஆம் ஆண்டு தசரா கொண்டாட்டத்தில், தங்க சிம்மாசனத்தில் 'பட்டத்து வாள்' வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.[14][15][16] ஆனால், 2015-இல் அரியணை ஏறியதிலிருந்து, மகாராஜா யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார் தசரா கொண்டாட்டங்களையும் தர்பாரையும் நடத்தி வருகிறார். தசரா பண்டிகையின் ஒன்பதாவது நாளான மகாநவமி ஒரு மங்களகரமான நாளாகும். அன்று பட்டத்து வாள் (அரச உடைவாள்) வழிபடப்பட்டு, யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் யானைகளுடன் கூட ஒட்டகங்களும், குதிரைகளும் இடம் பெறும்.[17]

அரண்மனை விளக்குகளால் அலங்கரிக்கபடுதல்

[தொகு]

இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் பத்து நாட்களும் மைசூர் அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பது பார்க்க பார்க்க திகட்டாத ஒரு காட்சி. தினமும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, சுமார் ஒரு இலட்சம் மின்விளக்குகளால் இந்த அரண்மனை ஒளியூட்டப்படுகிறது.[18] கருநாடக மாநிலத்தின் நடனம், இசை, பண்பாட்டை எடுத்துக்காட்டும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் இந்த ஒளியூட்டப்பட்ட அரண்மனையின் முன் நடைபெறும்.[19]

ஊர்வலம்

[தொகு]

விஜயதசமியன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். யானை மீது தங்க அம்பாரியில் சாமுண்டேச்வரி தேவி எழுந்தருளப்பட்டு மைசூர் நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவாள். இந்த தங்க அம்பாரியின் எடை 750 கிலோ ஆகும். இந்த அம்பாரி அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலம் வரும். ஊர்வலம் ஆரம்பிப்பதற்கு முன் அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும் தேவியை ஆராதிப்பார்கள்.

நடனக் குழுக்கள், இசைக்குழுக்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டங்கங்கள் எல்லாம் இந்த ஊர்வலத்தின் அழகைக் கூட்டும். இந்த ஊர்வலம் மைசூர் அரண்மனையிலிருந்து துவங்கி பன்னிமண்டபம் (Banni Mantapam) என்று சொல்லப்படும் இடத்தில் முடிவடையும். இந்த இடத்தில் இருக்கும் பன்னி (வன்னி மரங்கள்) மரங்களுக்கு பூசை நடக்கும். பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாதவாசத்தின் போது இந்த மரங்களில் தான் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர். போரைத் தொடங்குவதற்கு முன்பும், போரில் வெற்றி பெற வேண்டியும் மன்னர்கள் பாரம்பரியமாக இந்த மரத்தை வணங்கினர்.[17] அன்று அரசர்கள் செய்த வழிபாடு இன்றும் மைசூரு தசரா பண்டிகையில் தொடருகிறது. தசராக் கொண்டாட்டங்களில் தர்பார் ஒரு பகுதிதான் என்றாலும் பொதுமக்களுக்கு அரசரை அரியணையில் பார்ப்பது மிகவும் பிடித்த விஷயம். என்னதான் சுதந்திரம் கிடைத்து, குடியரசாக நாடு மாறிவிட்டாலும், இன்னும் அரசர்களுக்கும், அரச குடும்பங்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது

விளக்கொளி அணிவகுப்பு

[தொகு]

தசரா கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்ச்சியாக விளக்கொளி அணிவகுப்பு பன்னிமண்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் லேசர் காட்சிகள், கரணங்கள் போடுபவர்களின் சாகசங்கள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் மற்றும் குதிரையேற்றம் ஆகியவை இடம் பெறும். விளக்கொளி அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது அரசர் குதிரையேற்ற உடையில் குதிரை மீதமர்ந்து வந்து இராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இந்த நிகழ்ச்சி துவங்கும் சமயம் இரவுப் பொழுது வந்துவிடுமாதலால் நிறைய விளக்குகள் ஏற்றுவார்கள். அரசர் தனது இராணுவ பலத்தை தனது எதிரிகளுக்குத் தெரியப்படுத்தவும், மக்களிடையே ‘இத்தனை பலமுடைய நான் உங்கள் ராஜா; உங்களைக் காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது’ என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவுமே இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Encyclopedia Britannica 2015.
  2. James G. Lochtefeld 2002, ப. 212-213, 468-469.
  3. Encyclopedia Britannica Dussehra 2015.
  4. 1 2 Christopher John Fuller (2004). The Camphor Flame: Popular Hinduism and Society in India. Princeton University Press. pp. 114–126. ISBN 0-691-12048-X.
  5. "400th Mysore Dasara begins today". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2010-10-07 இம் மூலத்தில் இருந்து 2011-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111106231912/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-07/bangalore/28256260_1_jumboo-savari-dasara-elephants-theatre-festival.
  6. Dasara of Mysore பரணிடப்பட்டது 16 சூன் 2018 at the வந்தவழி இயந்திரம், All India Radio, Government of India
  7. "WebHost4Life - Web Hosting, Unix Hosting, E-Mail, Web Design". ourkarnataka.com. Retrieved 2 April 2018.
  8. John M. Fritz; George Michell; John Gollings (2003). Hampi. India Book House. pp. 46–47, 87–90. ISBN 9788175083363.
  9. P. J. Marshall (2005). The Eighteenth Century in Indian History: Evolution Or Revolution?. Oxford University Press. pp. 285 note 3. ISBN 978-0-19-567814-7.
  10. Christopher John Fuller (2004). The Camphor Flame: Popular Hinduism and Society in India. Princeton University Press. pp. 117–119. ISBN 978-0-69112-04-85.
  11. S Sivapriyananda (1995). Mysore Royal Dasara. Abhinav Publications. pp. 73–75.
  12. Christopher John Fuller (2004). The Camphor Flame: Popular Hinduism and Society in India. Princeton University Press. pp. 114–115. ISBN 0-691-12048-X.
  13. P. J. Marshall (2005). The Eighteenth Century in Indian History: Evolution Or Revolution?. Oxford University Press. pp. 268–270. ISBN 978-0-19-567814-7.
  14. R. Krishna Kumar (26 September 2014). "Emotional start to private Dasara". The Hindu. http://www.thehindu.com/todays-paper/emotional-start-to-private-dasara/article6447883.ece.
  15. "With no scion, the sword 'rules' at the Mysore Palace". Deccan Chronicle. 26 September 2014. Retrieved 2 April 2018.
  16. "Royal Sword takes king's place at Khas Durbar". Deccan Herald. Retrieved 22 October 2015.
  17. 1 2 Detailed account of the Mysore Dasara festival is provided by "Mysore Dasara - A Living Tradition". Prabuddha Bharata. Shri Sanjeev Nayyar. Archived from the original on 2007-03-07. Retrieved 2007-04-04.
  18. "Mysore Dasara, Nadahabba, Mysore Royal Festival, Karnataka State Festival". mysoredasara.org. Archived from the original on 29 August 2012. Retrieved 22 October 2015.
  19. "Mysore Dasara". inMysore.com. Retrieved 22 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_தசரா&oldid=4464706" இலிருந்து மீள்விக்கப்பட்டது