முப்பிரிவுகள் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியன் மறைவதைக் காட்டும் இப் படம் முப்பிரிவுகள் விதியைப் பின்பற்றி எடுக்கப்பட்டது.

முப்பிரிவுகள் விதி (rule of thirds) என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றில், கூட்டமைவு (composition) தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.[1]

முப்பிரிவுகள் விதியின் பயன்பாட்டை விளக்கும் படம்.

ஒரு ஓவியம் அல்லது நிழற்படம் ஒன்றை குறுக்காகவும், நெடுக்காகவும் இவ்விரண்டு கோடுகள் வரைவதன் மூலம் ஒன்பது சமமான பாகங்களாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பதற்காக வரையப்படும் நான்கு கோடுகளும் அவற்றுள் ஒன்றையொன்று வெட்டும் நான்கு புள்ளிகள் கிடைக்கும். இந்த நான்கு புள்ளிகளும் அந்த ஓவியத்தின் அல்லது நிழற்படத்தின் குவியப் புள்ளிகள் ஆகும். படமொன்றைப் பார்க்கும்போது ஒருவருடைய கண்கள் இயற்கையாக நாடும் இடங்களை இக் குவியப் புள்ளிகள் குறிக்கின்றன. இதனால் ஓவியம் போன்றவற்றில் இடம் பெறுகின்ற முதன்மையான அம்சங்களை அமைப்பதற்கு இப் புள்ளிகளை அண்டிய இடங்கள் பொருத்தமானவை ஆகும். இதுவே முப்பிரிவுகள் விதியாகும்.

அருகிலுள்ள படம் முப்பிரிவுகள் விதியின் பயன்பாட்டை விளக்குகின்றது. படத்திலுள்ள அடிவானம், கீழ் மூன்றிலொரு பகுதியை, மேலுள்ள மூன்றில் இரண்டு பகுதியிலிருந்து பிரிக்கும் கோட்டுக்கு அண்மையில் அமைந்துள்ளது. மரம், இரண்டு கோடுகளின் வெட்டுப் புள்ளியில் உள்ளது. படத்தின் முக்கியமான அம்சம், இக்கோடுகளில் ஒன்றை உண்மையில் தொடவேண்டும் என்பதில்லை. எடுத்துக்காட்டாகப் படத்தில், அடிவானத்துக்கு மேலுள்ள ஒளி மிகுந்த பகுதி மேற்குறிப்பிட்ட கோடுகளில் ஒன்றின்மேல் பொருந்தி வரவில்லை. எனினும் இது, இரண்டு கோடுகளின் வெட்டுப்புள்ளிக்கு அண்மையில் இருப்பதனால், முப்பிரிவுகள் விதியினால் கிடைக்கக்கூடிய சாதகங்களை அடையமுடிகின்றது.

முப்பிரிவுகள் விதியின் அடிப்படையில் அமைக்கப்படும் படங்கள், முதன்மை அம்சங்களை நடுவில் வைத்து அமைக்கும் படங்களைவிடக் கூடிய ஆற்றலையும், ஆர்வத்தையும் உருவாக்கக்கூடியன என்பது இவ்விதியைப் பின்பற்றுபவர்களது கருத்தாகும். அத்துடன் இத்தகைய முறையில் அமைந்த நிழற்படங்கள், ஓவியங்கள் முதலியன, கூடுதலான அழகியற் தன்மை கொண்டனவாகவும், தொழில்முறைத் தகுதி கொண்டனவாகவும் இருப்பதாகப் பொதுவாகக் கருதப்படுகின்றது.

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பிரிவுகள்_விதி&oldid=2740745" இலிருந்து மீள்விக்கப்பட்டது