சா. சி. சிவசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
சா.சி. சிவசங்கர்
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
29 மார்ச் 2022
முன்னவர் இராஜ கண்ணப்பன்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பதவியில்
7 மே 2021 – 29 மார்ச் 2022
முன்னவர் சீ. வளர்மதி
பின்வந்தவர் இராஜ கண்ணப்பன்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 மே 2021
முன்னவர் ஆர். டி. ராமச்சந்திரன்
தொகுதி குன்னம்
பதவியில்
23 மே 2011 – 24 மே 2016
முன்னவர் தொகுதி உருவாக்கம்
பின்வந்தவர் ஆர். டி. ராமச்சந்திரன்
தொகுதி குன்னம்
பதவியில்
17 மே 2006 – 22 மே 2011
முன்னவர் செ. குரு
பின்வந்தவர் இல்லை
(ஜெயங்கொண்டம், குன்னம் ஆகியவற்றுடன் தொகுதி இணையப்பெற்றது)
தொகுதி ஆண்டிமடம்
தனிநபர் தகவல்
பிறப்பு 24 மார்ச்சு 1969 (1969-03-24) (அகவை 53)
தேவனூர்,
பிரிக்கப்படாத திருச்சிராப்பள்ளி மாவட்டம்
(தற்போது அரியலூர் மாவட்டம்),
தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி Flag DMK.svg திராவிட முன்னேற்றக் கழகம்
(1993- தற்போது வரை)
வாழ்க்கை துணைவர்(கள்) காயத்ரிதேவி
பிள்ளைகள் சிவசரண்
சிவசூர்யா
பெற்றோர் சிவராஜேஸ்வரி (தாய்)
சா. சிவசுப்பிரமணியன் (தந்தை)
படித்த கல்வி நிறுவனங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
பணி அரசியலர்
எழுத்தாளர்
இணையம் http://sssivasankar.blogspot.com/
http://ss-sivasankar.blogspot.com/

சா. சி. சிவசங்கர் (S. S. Sivasankar) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக (திமுக) உறுப்பினரான இவர், ஆண்டிமடம் (2006-11)[1], குன்னம் (2011-16; 2021-)[2] ஆகிய தொகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மே 2021 முதல் மார்ச் 2022 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சராகப் பணியாற்றினார்.[3] 29 மார்ச் 2022 முதல் தமிழ்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றிவருகிறார்.

மக்களுடன் என் அனுபவங்கள் (2015), சோழன் ராஜா ப்ராப்தி (2019), "தோழர்" சோழன் (2019) ஆகியன சிவசங்கரின் படைப்புகள் ஆகும்.

தொடக்க வாழ்க்கை[தொகு]

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள தேவனூரில் 24 மார்ச் 1969 அன்று பிறந்தார் சிவசங்கர். இவரது தந்தை சா. சிவசுப்பிரமணியன் தீவிர திராவிட இயக்கப் பற்றாளர். அரியலூர் மாவட்டத்தில் திமுகவை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவர்.[4] தாய் பெயர் சிவராஜேஸ்வரி.

ஆண்டிமடம் அரசுப்பள்ளியில் பயின்றபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இளங்கலைப் பொறியியல் பயின்றார் சிவசங்கர். 1991ஆம் ஆண்டு பட்டம் பெற்றபின் 1993 வரை பெங்களூரில் தனியார் நிறுவன ஊழியராகப் பணியாற்றினார்.[4]

அரசியல்[தொகு]

தொடக்கமும் கட்சிப் பணிகளும்[தொகு]

1978 டிசம்பரில் திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டார் சிவசங்கர்.[4][5] 1993-இல் முழு நேர அரசியலில் நுழைந்தார். 1999ஆம் ஆண்டு ஆண்டிமடம் ஒன்றிய திமுக செயலாளராகத் தேர்வானார். 2001-இல் தனியாகப் பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தின் செயலாளராக இளம் வயதிலேயே நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கட்சி அளவில் பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் இணைக்கப்பட்டதால், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளராக தொடர்ந்தார்.[4] தற்போது மீண்டும் அரியலூர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

உள்ளாட்சி உறுப்பினராக (1996-2006)[தொகு]

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக 1996 முதல் 2001 வரையிலும், பின் அரியலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக 2001 முதல் 2006 வரையிலும் பணியாற்றினார்.[6]

சட்டமன்ற உறுப்பினராக (2006-16 ; 2021-)[தொகு]

2006 சட்டமன்றத் தேர்தலில் தன் சொந்தத் தொகுதியான ஆண்டிமடத்தில் போட்டியிட்டு வென்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 31 சனவரி 2014 அன்று அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் கொனிஜெடி ரோசையாவின் உரை அடங்கிய தாளைக் கிழித்து அவையில் தூக்கியெறிந்தமையால், அக் கூட்டத்தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.[7][8]

2016 சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியை இழந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அமைச்சராக (2021-)[தொகு]

2021 தேர்தலில் திமுக கூட்டணி வென்றதைத் தொடர்ந்து மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மே 2021 முதல் மார்ச் 2022 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சராகப் பணியாற்றினார்.

29 மார்ச் 2022 முதல் போக்குவரத்து துறை அமைச்சராகப் பணியாற்றிவருகிறார்.

சிவசங்கர் சந்தித்த சட்டமன்றத் தேர்தல்கள்
ஆண்டு தொகுதி முடிவு வாக்குகள் (விழுக்காடு) எதிராளி எதிராளிக் கட்சி எதிராளி வாக்குகள் (விழுக்காடு) வேறுபாடு

(விழுக்காடு)

2006 ஆண்டிமடம் வெற்றி 51,395
(45.32%)
கே. பன்னீர்செல்வம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 45,567

(40.18%)

5,828

(5.14%)

2011 குன்னம் வெற்றி 81,723
(46.88%)
துரை காமராஜ் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 58,766

(33.71%)

22,957

(13.17%)

2016 அரியலூர் இரண்டாமிடம் 85,902
(40.97%)
தாமரை சு. இராசேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 88,523

(41.94%)

2,621

(1.25%)

2021 குன்னம் வெற்றி 1,03,922
(47.26%)
ஆர். டி. ராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 97,593

(44.38%)

6,329

(2.87%)

பிற பதவிகள்[தொகு]

கல்லூரிக் காலத்திலேயே புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்த சிவசங்கர், புகைப்படவியலாளர் சங்க செயலாளராக இருந்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட தடகள சங்க உறுப்பினராகவும், தமிழ்நாடு சிலம்பம் சம்மேளனத் தலைவராகவும் இருந்துள்ளார் .

படைப்புகள்[தொகு]

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
2015 மக்களுடன் என் அனுபவங்கள்:

குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்

நாட்குறிப்பு கிழக்குப் பதிப்பகம்
சிவசங்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகளின் தொகுப்பு.
2019 சோழன் ராஜா ப்ராப்தி கட்டுரைத் தொகுப்பு அந்திமழை பதிப்பகம்
அந்திமழை இதழின் விருந்தினர் பக்கத்தில் இடம்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு.
2019 "தோழர்" சோழன் வரலாற்றுப் புதினம் அமேசான் கிண்டில்
நக்சல் இயக்கம் மற்றும் தனித் தமிழ்நாடு கோரி ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளை (எ-கா: பொன்பரப்பி தமிழரசனின் தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கம்) பின்னணியாகக் கொண்ட புதினம்.

அமேசான் கிண்டில் நேரடி வெளியீடு தளம் 2019-இல் பென் டூ பப்ளிஷ் (Pen to Publish) என்ற தலைப்பில் நடத்திய போட்டியில் இப் புதினம் இறுதிச்சுற்றுக்குச் சென்றது.[9][10]

தனி வாழ்க்கை[தொகு]

சிவசங்கரின் வசிப்பிடம் அரியலூர் ராஜாஜி நகர் ஆகும். இவர் இணையர் காயத்ரிதேவி ஒரு மருத்துவர் ஆவார். இவ்விணையருக்கு சிவசரண், சிவசூர்யா என்ற மகன்கள் உள்ளனர்.[11]

ஊடகத் தோற்றம்[தொகு]

விஜய் தொலைக்காட்சியில் 10 பிப்ரவரி 2013 அன்று "Gopinath discusses Tamil Nadu" என்ற தலைப்பில் கோபிநாத் சந்திரன் தொகுத்து வழங்கிய நீயா நானா நிகழ்ச்சியின் (பருவம் 14; படலம் 21) பங்கேற்பாளர்களுள் ஒருவராகக் கலந்துகொண்டார் சிவசங்கர். அப்போது மாணவி ஒருவர், பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வுக்குக் (GATE) கட்டணம் செலுத்துவதில் உள்ள சாதி அடிப்படையிலான சலுகைகளைச் சுட்டிக்காட்டி இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை முன்வைத்தார். இதற்கு சிவசங்கர் அளித்த விளக்கம் பரவலான பேசுபொருளானது:[12][4]

மாணவி: ....மாணவிகளுக்கு [கேட் தேர்வு] கட்டணம் இல்லை என்றார்கள். பட்டியலின மாணவர்களுக்கு 600-700 ரூபாய். பிறருக்கு 1500 ரூபாய். இதுபோன்ற வேறுபாடுகள் வேண்டாம் என்கிறேன். எல்லாருக்கும் சமமாக இருக்கட்டும். எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

சிவசங்கர்:...எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்றால் யாரைச் சொல்கிறீர்கள்?

மாணவி: ...எல்லோரையும் சொல்லவில்லை. நன்றாக இருக்கிறவர்களைச் சொல்கிறேன்.

சிவசங்கர்: ...[முன்னதாக வேறொருவர் சொன்ன ஓட்டப்பந்தய எடுத்துக்காட்டைச் சுட்டிக்காட்டி]... 100 மீட்டர் பின்னால் ஒருவரை நிற்கவைத்து உங்களை 100 மீட்டர் முன்பு நிற்கவைத்து ஓடவிடுகையில் பின்னே வருபவருக்கு வாய்ப்பு குறைகிறது. இன்னும் சொல்லப்போனால் உங்களுக்குப் பக்கத்திலேயே ஓடிவருபவர்களுள் எத்தனை பேருக்கு உங்கள் உடல்திறன் இருக்கிறது?...பார்வை அற்றோரும்... [கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும்] ஓடிவரும் நிலை உள்ளது.... அதுபோல நலிந்த பிரிவினர் இருக்கிறார்கள். நீங்கள்...சென்னையில் இருக்கும் சூழலை வைத்துப் பேசுகிறீர்கள். எத்தனை கிராமங்களுக்கு வந்திருப்பீர்கள்? கிராமங்களில் இருக்கும் சூழல் தெரியுமா?...இன்றைக்கும் [ஒருவர் தான்] பிறந்த சாதி அடிப்படையில் தொழில் செய்யவேண்டும் என்ற நிலை உள்ளது. அது தெரியுமா? அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?...சமூகநீதி என்பது பெரிய வரலாறு கொண்ட விடயம். அது உங்களுக்கு முழுவதும் தெரியவேண்டுமென்ற அவசியம் இல்லை. எல்லா சமூகமும் சமமாக மதிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் அவர்கள் கீழே இருக்கிறார்கள். கீழே இருப்பவர்களைக் கைதூக்கி மேலே விடவேண்டும். அந்தக் கைதூக்கி விடுதல் தான் இட ஒதுக்கீடு. இன்னொரு மாணவர்! அவரே தான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட்டு [சலுகைகள்] கிடைப்பது சங்கடமாக உள்ளது எனச் சொல்கிறார். எப்படி நீங்கள் சங்கடமாக உணர முடியும்? உங்கள் தாத்தா, பாட்டனார், முப்பாட்டனார் எல்லாம் என்ன தொழில் செய்தார்கள் எனத் தெரியுமா? அவர்கள் எவ்வளவு ஒடுக்கப்பட்டார்கள் எனத் தெரியுமா?...இன்றைக்கு உங்களுக்குப் படிக்கக்கூடிய வாய்ப்பு... ஒரு கல்லூரிக்கு வந்துவிட்ட ஒரே காரணத்திற்காக, உங்களுடன் உள்ள நண்பர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் [இட ஒதுக்கீடு] வேண்டாம் என்கிறீர்கள். இது உங்களைப் பொறுத்தவரையிலான பார்வை. ஆனால் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட எத்தனை பேர் கிராமத்தில் கூலித்தொழில் செய்துவருகிறார்கள்? எத்தனை பேர் கேரளாவுக்குச் சென்று வேலை பார்த்துவருகிறார்கள்? அவர்களின் நிலையை நீங்கள் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. பொதுவாக இன்று "நான் நன்றாக இருக்கிறேன்.." என மட்டுமே பார்க்கிறீர்கள்.

[அவர் குறிப்பிட்ட மாணவர் பேசுகிறார்]: ஐயா! [இட ஒதுக்கீடு] [வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்துவது] போலத்தான் உள்ளது. இப்போது [ இட ஒதுக்கீட்டில் வரும்] யாரும் படிப்பதில்லை...ஆசிரியர் பயிற்சி என ஒரு பாடநெறி உள்ளது. அதைப் படிப்பதற்குப் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற நிலை உள்ளது....தேர்வுக்கு ஒருநாள் முன்பு உட்கார்ந்து வாசித்துவிட்டுப் போய் எழுதித் தேர்ச்சி மதிப்பெண் வாங்கி...அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது...

சிவசங்கர்: தம்பி! கடந்த 5-10 ஆண்டுகளாக பொதுப்பிரிவில் (open quota) எத்தனை பட்டியலின மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் வாங்கி இடம் கிடைத்துச் செல்கிறார்கள்... என்ற புள்ளிவிவரம் தெரியுமா உங்களுக்கு? [மாணவர் தெரியாது எனத் தலையசைக்கிறார்] தெரியாது! நீங்கள் பொதுவாக உங்களுக்கு அருகிலுள்ள நண்பர் சொல்வதை வைத்துப் பேசுகிறீர்கள்.உங்கள் தாத்தா என்ன தொழில் செய்துகொண்டிருந்தார்?

மாணவர்: கூலி [வேலை].

சிவசங்கர்: அந்த இடத்திலிருந்து ... இத்தனை தலைமுறை தாண்டி வருவதற்கு காரணம், இந்த இட ஒதுக்கீடு... உங்கள் குடும்பம் உங்களை படிக்கவைக்கும் சூழல் வந்துள்ளது. நீங்கள் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். பக்கத்தில் உள்ள நான்கு நண்பர்கள் பேசுவதற்காக நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது. இன்னும் உங்களைப்போல் இருக்கின்ற அடக்கப்பட்ட தலைமுறை மேலே வரவேண்டும். அதை உணர்ந்துகொண்டு பேசுங்கள்.

[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-06-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை! | News7 Tamil" (ஆங்கிலம்). 2022-04-01. 2022-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  5. ஆர். முத்துக்குமார் (2013). மொழிப்போர். கிழக்குப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184939613. https://www.google.co.in/books/edition/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_Mozhippor/t5ldDwAAQBAJ?hl=en&gbpv=1&dq=%22%221978+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&pg=PT149&printsec=frontcover. 
  6. "முதல்வர், அமைச்சர்கள் பயோ டேட்டா". www.dinakaran.com. 2022-04-13 அன்று பார்க்கப்பட்டது.
  7. "ஆளுநர் உரை கிழிப்பு: திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் சஸ்பெண்ட்". Dinamani. 2022-04-19 அன்று பார்க்கப்பட்டது.
  8. Unknown (வியாழன், 27 பிப்ரவரி, 2014). "சிவசங்கர்.எஸ்.எஸ்: உலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்". சிவசங்கர்.எஸ்.எஸ். 2022-04-19 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  9. சிவசங்கர், S. S. Sivasankar எஸ் எஸ். "Thozhar Chozhan தோழர் சோழன்" (Tamil). 2020-04-14 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  10. தோழர் சோழன்|நூல் அலசல்|Tamil Novel Review|Kindle books|S. S. Sivasankar|Thozhar Chozhan, 2022-04-27 அன்று பார்க்கப்பட்டது
  11. புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு தினத்தந்தி 2021. மே. 7
  12. "எல்லா சமூகமும் முன்னேறனும்"- இடஒதுக்கீடு | Debate Speech | Reservation | Dhiravidan-TV, 2022-04-20 அன்று பார்க்கப்பட்டது
  13. "Neeya Naana - Watch Episode 21 - Gopinath discusses Tamil Nadu on Disney+ Hotstar". Disney+ Hotstar (ஆங்கிலம்). 2022-04-20 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._சி._சிவசங்கர்&oldid=3612167" இருந்து மீள்விக்கப்பட்டது