காடுவெட்டி குரு
காடுவெட்டி குரு (எ) செ. குருநாதன் | |
|---|---|
மாநில வன்னியர் சங்க தலைவர் | |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2001-2006 | |
| முன்னையவர் | ராஜேந்திரன் |
| பின்னவர் | எஸ். எஸ். சிவசங்கர் |
| தொகுதி | ஆண்டிமடம் |
| பதவியில் 2011-2016 | |
| முன்னையவர் | கே. இராசேந்திரன் |
| பின்னவர் | இராமஜெயலிங்கம் |
| தொகுதி | ஜெயங்கொண்டம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 பெப்ரவரி 1961 காடுவெட்டி, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு |
| இறப்பு | மே 25, 2018 (அகவை 57) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாட்டாளி மக்கள் கட்சி |
| துணைவர் | லதா |
| பிள்ளைகள் | விருதாம்பிகை, கனல் அரசன் |
| பெற்றோர் | செயராமன் படையாட்சி, கல்யாணி |
| வாழிடம் | ஜெயங்கொண்டம் |
| சமயம் | இந்து |
காடுவெட்டி குரு (Kaduvetti Guru) என்றழைக்கப்படும் செ. குரு என்கிற செ. குருநாதன் (J. Gurunathan) ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகவும் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்.
இளமைக்காலம்
குரு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில், 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று பிறந்தார். இவரின் தந்தை செயராமன் படையாட்சி மற்றும் தாயார் கல்யாணி அம்மாள் ஆகியோர் ஆவர். இவரின் தந்தையார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாசின் நெருங்கிய உறவினரும் ஆவார். இவரின் தந்தையார், குரு சிறு வயதாக இருக்கும் போது எதிரியால் கொல்லப்படுகிறார். பின்னர் குருவின் குடும்பம் அவரது தாயாரின் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. குரு தன் பள்ளிப் படிப்பை கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]
அரசியல் வாழ்க்கை
1986இல், குரு காடுவெட்டியில் திமுகவின் கிளைச் செயலாளராக இருந்தார். அப்பகுதியில் உள்ள வன்னியர்களுக்குத் திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனக் கருதி அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காக எம். கே. ராஜேந்திரன், வீரபோக. மதியழகன் ஆகியோர், பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தலைமையில் குருவை வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து பாமகவில் வளர்ந்தார். பின்பு வன்னியர் சங்கத் தலைவராகப் பதவியேற்றார். இவர் அரியலூர் மாவட்டத்தில் மாற்று சமுதாய சமநிலையை கருத்தில் கொண்டு ஏழு அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்தார். தன் சொந்த மாவட்டமான அரியலூரில் இரட்டைக்குவளை முறையை ஒழித்தார். வன்னிய குல சத்திரிய இளைஞர்களால் மாவீரன் குரு என்றழைக்கப்பட்டார். இருமுறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். குரு தன் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக வாழ்வின் இறுதிநாள் வரைப் போராடியுள்ளார்.[2][3] இவர் இருமுறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
தேர்தல்கள்
குரு 2001ல் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் 2011ல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[4]
மறைவு
குரு நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2018 மே 25 அன்று இவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி, சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு காலமானார். பின்னர் இவரது உடல் சொந்த ஊரான காடுவெட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.[5]
மேற்கோள்கள்
- ↑ "யார் இந்த காடுவெட்டி குரு?". Archived from the original on 2018-07-03. Retrieved 2018-07-07.
{{cite web}}: zero width space character in|title=at position 1 (help)நியூஸ்7 (மே 26, 2018) - ↑ "கடைசி வரை போராடிய காடுவெட்டி குரு!".
- ↑ "காடுவெட்டி குரு மரணம்". Archived from the original on 2018-05-27. Retrieved 2018-07-07.
{{cite web}}: zero width space character in|title=at position 1 (help) நியூஸ்7 (மே 26, 2018) - ↑ "2001 தமிழக தேர்தல் முடிவுகள்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-02-03.
- ↑ "காடுவெட்டி குரு காலமானார்".[தொடர்பிழந்த இணைப்பு] நக்கீரன் (மே 25, 2018)