உள்ளடக்கத்துக்குச் செல்

கரைவெட்டி பறவைகள் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரைவெட்டி என்பது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர். இவ்வூரில் இச்சரணாலயம் அமைந்துள்ளதால் இவ்வூரின் பெயரிலேயே கரைவெட்டி பறவைகள் காப்பகம் என அழைக்கப்படுகிறது. அரியலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இச்சரணாலயம் அமைந்துள்ளது.

இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும். இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இச்சரணாலய‌த்திற்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரையில் தங்கி செல்கின்றன.[1] , [2]

பகல் நேரங்களில் அருகில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைத் தின்பதற்காகவும் நிழல் வெளிக்காகவும் செல்கின்றன. மாலை வேளையில் எங்கிருந்தாலும் வழிதவறாது சரணாலயத்திற்கு வந்துவிடுகின்றன. அதனால் பகல் வேளைகளில் வெறிச்சோடியது போன்று காணப்படும் இச்சரணாலயம், மாலை வேளையில் கண்களுக்கு இதமாக காட்சியளிக்கிறது.

நிலப்பறவைகள்[தொகு]

உரிய காலத்தில் 50-க்கும் மேற்பட்ட வகையான நீர்ப்பறவைகளும் 37 வகையான நிலப்பறவைகளும் வந்து செல்கின்றன. இங்கு வரும் பறவையினங்களில் கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கான், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற கொக்கு, மைல் கால் கோழி, ஆலா, கரண்டி மூக்கான், நத்தை கொத்தி நாரை, பாம்பு நாரை, கொசு உல்லான், சிறிய கொக்கு, முக்குளிப்பான், வண்ண நாரை, மடையான், உண்ணி கொக்கு, நாமக்கோழி, சிறைவி, நீர்காகம் உள்ளிட்டவை நீர்வாழ் பறவைகளாகும்.

கரைவெட்டி சரணாலயத்திற்கு வரும் உள்ளூர் பறவைகள்[தொகு]

ஆள்காட்டி குருவி, பருந்து, சிட்டு, வேதவால் குருவி, மஞ்சள் குருவி, மஞ்சு திருடி, மரங்கொத்தி பறவை, மைனா, புறா, மணியன் காக்கா, அண்டங்காக்கா, மயில், கல் குருவி, நாராயணபட்சி ஆகியவை நிலவாழ் பறவைகளாகும். இப்பறவைகள் இங்கு தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு வகைகள் எப்போதும் கிடைக்கிறது என்பதே இப்பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணம். பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்தும் இங்கு வரும் பறவைகள், இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு.[3]

இங்கு வரும் பறவைகளின் குணாதிசயங்கள்[தொகு]

இங்கு வந்து செல்லும் ஒவ்வொரு வகையான பறவைக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. திபெத் மற்றும் லடாக் பகுதியில் இருந்துவரும் வரித்தலை வாத்து அதிக உயரத்தில் பறக்கும் நீர்ப்பறவையாகும். பாம்பு நாரை எனும் பறவை தண்ணீரில் மூழ்கினால் இரையோடுதான் மேலே வரும். இப்படி ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இங்கு வரும் சிறைவி எனும் பறவையினங்கள் அருகில் உள்ள வயல்வெளிகளுக்குச் சென்று நெல் போன்ற விவசாய பயிர்களை சேதப்படுத்தி விடுவதாக விவசாயிகள் ஆதங்கப்பட்டனர். ஆனால் இன்று விவசாயிகளுக்கு இப்பறவையினங்கள் பலன் தரும் நண்பர்களாக மாறியுள்ளன.

இந்த சரணாலயத்தில் இருக்கும் பறவைகளின் எச்சங்கள் தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதால் விளைச்சலில் நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=607627&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[தொடர்பிழந்த இணைப்பு] கரைவெட்டி பறவைகள் காப்பகம் பற்றியும் அங்கு வரும் பறவைகளைப் பற்றியும் எழுதப்பட்ட தினமணி செய்திக்கட்டுரை
  2. http://paravaigalpalavitham.blogspot.com/2016/12/blog-post.html பறவைகள் பலவிதம் - பட்டைத்தலை வாத்து
  3. http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/jul/22/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2742186.html கரைவெட்டி பறவைகள் காப்பகம் பற்றியும் அங்கு வரும் பறவைகளைப் பற்றியும் எழுதப்பட்ட தினமணி செய்திக்கட்டுரை

அரியலூர் மாவட்டம்