கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் (Kanjirankulam Bird Sanctuary ) இராமநாதபுரம் மாவட்டம் ,முதுகுளத்தூர் அருகே உள்ள அபிராமம் செல்லும் வழியில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சரணாலயம் புதியதாக 1989 இல் உருவாக்கபட்ட பறவைகள் சரணாலயமாகும். 9°20′வடக்கு 78°29′கிழக்கு என்பது இதன் அமைவிட ஆள்கூறு ஆகும். மொத்த பரப்பளவாக சுமார் 1.04 சதுர கிலோமீடர் பரப்புடன் அமைந்திருக்கும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகக் கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் கருதப்படுகிறது. இதற்கு அருகே சித்ரங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. எனவே அனைத்துலகப் பெயராக சித்ரங்குடிமற்றும் கஞ்சிரான்குளம் பறவை சரணாலயம் என்றும் , முக்கிய பறவை பகுதி குறியீடு: ஐஎன்261, அடிப்படை: ஏ1, ஏ4i. என்ற குறியீட்டாலும் அடையாளப்படுத்தப்படுகிறது.[1]. இடம்பெயரும் எரான் எனப்படும் சில வகை கொக்குகள் இங்குள்ள கருவேலமரங்களில் காணப்படுவது இச்சரணாலயத்தின் சிறப்பாகும்.

தாவரங்கள்[தொகு]

சரணாலயத்தில் உள்ள தாவரங்கள் பெரும்பாலும் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள் வகை தாவரங்களாகும். கருவேல மரங்கள் அதிக அளவிலும் முருங்கை, வேப்பம், அத்தி, பூவரசு மரங்கள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.

பறவைகள்[தொகு]

வலசை செல்லும் பறவைகள் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இங்கு தங்கிச்செல்லுகின்றன அவை: சின்னக் கொக்கு, பெரிய கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, கருந்தலை அரிவாள் மூக்கன், வெள்ளைத்தலை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

பார்வையாளர்களுக்கான தகவல்கள்[தொகு]

சாலை வழிப் பயணமாக முதுகுளத்தூரிலிருந்து 8 கி. மீ. தொலைவும், இராமநாதபுரத்திலிருந்து 45 கி. மீ. தொலைவும், மதுரையிலிருந்து 117 கி. மீ தொலைவும் பயணம் செய்து இச்சரணாலயத்தை அடையலாம். அருகில் 15 கிலோமீட்டர் தொலைவில் பரமக்குடி இரயில் நிலையம் உள்ளது மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.

ஏழு கிலோமீட்டர் தொலைவில் பார்வையாளர்கள் தங்க முதுகுளத்தூரிலுள்ள பொதுப்பணித்துறை ஓய்வு விடுதியும், 30 கிலோமீட்டர் தொலைவில் சாயல்குடி மற்றும் பரமக்குடியில் வன ஓய்வு விடுதிகளும் உள்ளன.

வனவிலங்கு காப்பாளர், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், மண்டபம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு என்பது இச்சரணாலயத்தின் தொடர்பு முகவரியாகும். தொலை பேசி எண் 04567-230079 வழியாகவும் இச்சரணாலயப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ள இயலும்[2]

மேற்கோள்கள்[தொகு]