வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் (Vettangudi Bird Sanctuary) என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு பறவைகள் உய்விடமாகும். இது சுமார் 0.384 சதுர கிலோமீடர் பரப்பளவில் அமைந்த ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது 1977 சூன் மாதம் அன்றைய இராமநாதபுரம் மாவட்டம், இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே உள்ள பெரிய கொள்ளுக்குடி பட்டி, சின்ன கொள்ளுக்குடி பட்டி, வேட்டங்குடி ஆகிய ஊர்களில் உள்ள நீர்நிலைப் பகுதிகளில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இங்கு ஆண்டில் அக்டோபர் - திசம்பர் மாதங்களுக்கு இடையில் அதிக மழைப்பொழிவு இருக்கும். அப்போது வடகிழக்கு பருவமழை 330–390 மிமீ (13–15 அங்குலம்) மழை பெய்யும்.[1]
அமைவிடம்
[தொகு]சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் இந்த பறவைகள் புகலிடம் உள்ளது. மதுரையில் இருந்து 51 கி.மீ. தொலைவில் மதுரை-மேலூர்-திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ளது.
பறவைகள்
[தொகு]சிறிய வடிநிலப் பகுதியான இங்கு 217 வகையான சுமார் 8000 வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் வலசை வருகின்றன. இவை பெரும்பாலும் ஐராப்பா, வட ஆசியாவில் இருந்து வலசை வருகின்றன. இது சாம்பல் நாரை, பாம்புத்தாரா, துடுப்பு வாயன், வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, இராக்கொக்கு ஆகியவற்றின் இனப்பெருக்க வாழ்விடமாகும். மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, பாம்புத்தாரா, சின்ன நீர்க்காகம், சின்னக் கொக்கு, வெண் கொக்கு, புபுல்கசு, கிளுவை, புள்ளி மூக்கு வாத்து, ஊசிவால் வாத்து, பூநாரை உள்ளிட்ட அழிந்து வரும் பூர்வீக உயிரினங்களையும் ஈர்க்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BirdLife Data Zone". datazone.birdlife.org. Retrieved 2021-07-12.
- ↑ Tamil Nadu Forest Dept.Vettangudi Bird Sanctuary