எம். வி. ராஜம்மா
எம். வி. ராஜம்மா M. V. Rajamma | |
|---|---|
1940களில் எம். வி. ராஜம்மா | |
| பிறப்பு | மார்ச்சு 10, 1921 அகந்தனகல்லி, மைசூர் இராச்சியம் |
| இறப்பு | 23 ஏப்ரல் 1999 (அகவை 76) சென்னை, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | நடிகை, தயாரிப்பாளர், பின்னணிப் பாடகி |
| செயற்பாட்டுக் காலம் | 1934–1985 |
| வாழ்க்கைத் துணை | எம். சி. வீர்[1] |
| பிள்ளைகள் | எவருமில்லை |
எம். வி. ராஜம்மா (M. V. Rajamma, கன்னடம்: ಎಂ. ವಿ. ರಾಜಮ್ಮ; 10 மார்ச் 1921 – 23 ஏப்ரல் 1999)[1] பழம்பெரும் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையாவார். கன்னட நாடகம், திரைத்துறையில் பங்காற்றிய ராஜம்மாவுக்கு யயாதி முதல் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக உத்தம புத்திரனில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார். பின்னாளில் அன்னை வேடங்களில் நடித்த இவர், ஏறத்தாழ 50 ஆண்டுகள் காலத்திற்கு திரையுலகில் பங்காற்றினார்.[2]
முந்தைய வாழ்கை
[தொகு]ராஜம்மா 1921 ஆம் ஆண்டு இன்றைய பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் உள்ள அகண்டனஹள்ளி என்ற கிராமத்தில் நஞ்சப்பா, சுப்பம்மா இணையருக்கு மகளாகப் பிறந்தார். இது மைசூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ராஜம்மா. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே பங்களூரில் இவரது பெற்றோர்கள் குடியேறினர். வணிகரான இவரது தந்தை நஞ்சப்பா, நாடகங்களில் நடிக்க மகளை ஊக்குவித்தார். ராஜம்மா ஒரு விடலைப் பருவத்தில் இருந்தபோது சந்திரகலா நாடக மண்டலி என்ற நாடகக் குழுவில் சேர்ந்தார், மேலும் பி. ஆர். பந்துலுவுடன் நாடகங்களில் நடித்தார், பின்னர் நடகங்களிலும், திரைப்படங்களிலும் அடிக்கடி இணைந்து பணியாற்றினார்.[3] பங்களூர் ஆரிய பாலகி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் இசைக்க முறைப்படி கற்றுக் கொண்டார்.[4] எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்குத் திருமணம் முடிந்தது. கணவர் நாடக நடிகர். பின்னர் திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னைக்கு குடிபெயர்ந்தார்.[5]
தொழில்
[தொகு]1930களின் முற்பகுதியில், ராஜம்மா நாடகத்தால் ஈர்க்கப்பட்டு, ஆண்களே பெண் கதாபாத்திரங்களில் மாறுவேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த காலத்தில், இவர் களத்தில் இறங்கினார். சம்சார நௌகே, கௌதம புத்தா, சுபத்ரா போன்ற நாடகங்களில் ராஜம்மா பல வேடங்களில் நடித்தார். 1935 ஆம் ஆண்டில், இவர் நடித்த நாடகங்களில் ஒன்றான சம்சார நௌகே திரைப்படமாக எடுக்கப்பட்டபோது, அதில் நடிக்க ராஜம்மாவின் கணவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது ராஜம்மாவைக் கண்ட தயாரிப்பாளர் ராஜம்மாவையும் அப்படத்தில் விதவைப் பெண் கிரிஜாவாக நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். சென்னையில் ஒத்திகைகள் நடந்த போது, ராஜம்மாவின் நடிப்பைப் பார்த்த இயக்குநர் எச். எல். என். சிம்ஹா அப்படத்தின் கதாநாயகியாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு கதாநாயகி சரளாவாக நடிக்க ராஜம்மா புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டார். படமும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. பந்துலுவுக்கு ஜோடியாக மீண்டும் முன்னணி நடிகையாக நடித்தார். அவர்கள் சுமார் 20 ஆண்டுகள் பல படங்களில் இணைந்து பணியாற்றினர். பின்னர் தெலுங்கு கிருஷ்ண ஜரசந்தா, தமிழில் யயாதி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.[4] யயாதிக்குப் பின்னர் உத்தம புத்திரன் (1940) திரைப்படத்தில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார். இப்படமும் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.[4] தொடர்ந்து குமாஸ்தாவின் பெண் (1941) படத்தில் நடித்தார். ஜெமினியின் மதனகாமராஜன் (1941) திரைப்படத்தில் அமைச்சரின் மனைவியாக நடித்தார். இப்படத்தில் இவர் பாடிய கை கொடுப்பேன் அம்மா என்ற பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கே. சுப்பிரமணியம் இயக்கிய அனந்த சயனம், மற்றும் கன்னட பிரகலாதா, தெலுங்கு மாயாலோகம், தெலுங்கு பக்த வேமனா, விஜயலட்சுமி (1946), ஞானசௌந்தரி (1948) ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.[4]
1943 ஆம் ஆண்டில், ஜோதிஷ் சின்ஹா இயக்கிய கன்னட திரைப்படமான ராதா ரமணாவைத் தயாரித்ததன் மூலம் ராஜம்மா கருநாடகத்தின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.[6] இந்தப் படத்தில் பி. ஆர். பந்துலுவுக்கு ஜோடியாக நடித்தார். பாலகிருஷ்ணா, ஜி. வி. ஐயர் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெற்றது. இதன் பிறகு இவரது இரண்டாவது தயாரிப்பான மக்கல ராஜ்ஜியா (1960) வெளியானது. இந்தப் படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும், வணிகரீதியாக எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை. இதனால் இவர் நீண்ட காலம் திரைப்படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். இருப்பினும், கன்னடம், தமிழ் திரைப்படங்களில் பல வெற்றிப்படங்களில் நடித்தார். அனைத்து தென்னிந்தியத் திரைப்படத் துறைகளிலும் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவரானார். ஒரு கட்டத்தில் இவர் முன்பு கதாநாயகியாக நடித்த நடிகர்களுக்கு தாய்மை வேடங்களில் நடிப்பதில் முக்கியமாக கவனம் செலுத்தினார்.
நடித்த சில திரைப்படங்களின் பட்டியல்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1935 | சம்சார நௌகா | கன்னடம் | கதாநாயகி |
| 1938 | யயாதி | தமிழ் | |
| 1940 | உத்தம புத்திரன் | தமிழ் | |
| 1941 | குமாஸ்தாவின் பெண் | தமிழ் | |
| 1941 | மதனகாமராஜன் | தமிழ் | |
| 1942 | அனந்த சயனம் | தமிழ் | |
| 1942 | பக்த பிரகலாதா | தெலுங்கு | |
| 1943 | ராதா ரமணா | கன்னடம் | |
| 1946 | அர்த்தநாரி | தமிழ் | |
| 1946 | விஜயலட்சுமி | தமிழ் | |
| 1947 | யோகி வேமணா | தெலுங்கு | |
| 1948 | ஞானசௌந்தரி | தமிழ் | |
| 1948 | கோகுலதாசி | தமிழ் | |
| 1949 | வேலைக்காரி | தமிழ் | |
| 1949 | லைலா மஜ்னு | தமிழ் | |
| 1950 | பாரிஜாதம் | தமிழ் | |
| 1950 | ராஜ விக்கிரமா | தமிழ் | |
| 1952 | தாய் உள்ளம் | தமிழ் | |
| 1952 | புயல் | தமிழ் | |
| 1952 | ஜமீன்தார் | தமிழ் | |
| 1953 | உலகம் | தமிழ் | |
| 1954 | கார்கோட்டை | தமிழ் | |
| 1954 | இத்தரு பெல்லலு | தெலுங்கு | |
| 1955 | மொதல தேடி | கன்னடம் | |
| 1955 | நம்பேக்கா | கன்னடம் | |
| 1957 | தங்கமலை ரகசியம் | தமிழ் | |
| 1957 | ரத்தினகிரி ரகசிய | கன்னடம் | |
| 1957 | மணாளனே மங்கையின் பாக்கியம் | தமிழ் | |
| 1958 | ஸ்கூல் மாஸ்டர் | கன்னடம் | |
| 1958 | எங்கள் குடும்பம் பெரிசு | தமிழ் | |
| 1959 | பாகப்பிரிவினை | தமிழ் | |
| 1959 | அப்பா ஆ உதுகி | கன்னடம் | |
| 1960 | குழந்தைகள் கண்ட குடியரசு | தமிழ் | |
| 1960 | மக்கள ராஜிய | கன்னடம் | |
| 1960 | கைராசி | தமிழ் | |
| 1961 | தாயில்லா பிள்ளை | தமிழ் | |
| 1961 | பாவமன்னிப்பு | தமிழ் | ஜெமினி கணேசனின் தாயார் |
| 1962 | படித்தால் மட்டும் போதுமா | தமிழ் | |
| 1962 | தாயிய கருலு | கன்னடம் | |
| 1962 | தெய்வத்தின் தெய்வம் | தமிழ் | |
| 1962 | தர்மம் தலைகாக்கும், ஆடிப்பெருக்கு | தமிழ் | |
| 1962 | காளி கோபுரா | கன்னடம் | |
| 1962 | காளி மெடலு | கன்னடம் | |
| 1962 | பந்த பாசம் | தமிழ் | |
| 1963 | பணத்தோட்டம் | கன்னடம் | |
| 1963 | குங்குமம் | தமிழ் | |
| 1965 | பெண் மனம் | தமிழ் | |
| 1964 | சின்னாட கோம்பே | கன்னடம் | |
| 1964 | வேட்டைக்காரன் | தமிழ் | |
| 1964 | கர்ணன் | தமிழ் | |
| 1965 | தாயின் கருணை | தமிழ் | |
| 1965 | வாழ்க்கைப் படகு | தமிழ் | |
| 1966 | யெம்மே தம்மன்ன | கன்னடம் | |
| 1966 | எங்க பாப்பா | தமிழ் | |
| 1970 | சிறீ கிருஷ்ணதேவராயா | கன்னடம் | |
| 1970 | தேடிவந்த மாப்பிள்ளை | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "kannadamoviesinfo.wordpress.com". Retrieved 29 November 2015.
- ↑ ராண்டார் கை (2 மே 2008). "Utthama Puthran 1940". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022854.ece. பார்த்த நாள்: 20 செப்டம்பர் 2016.
- ↑ Bhaktavatsala, M. (29 August 1999). "The two of a pair". Deccan Herald. Archived from the original on 7 June 2000. Retrieved 30 September 2020.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "எம். வி. ராஜம்மா". பேசும் படம்: பக். 14-25. சூன் 1948.
- ↑ "MV Rajamma article". Kannada Ratna. Archived from the original on 24 October 2014. Retrieved 30 June 2014.
- ↑ அன்றைய நாயகிகள் எம். வி. ராஜம்மா, அம்மா மட்டுமே அல்ல!, கட்டுரை ஆர். சி. ஜெயந்தன், இந்து தமிழ் திசை சித்திரை மலர் 2021 பக்கம்: 184-185