அயோத்தி பிரச்சினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அயோத்தி பிரச்சினை என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சினையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தர பிரதேசம், அயோத்தியில் உள்ளது. இந்த இடம் இந்து மதக் கடவுளான இராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.

வரலாறு[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் 1949ல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் ரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டன.[சான்று தேவை] 1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின. இப்பிரச்சனை பாரதீய ஜனதா கட்சியால் (பாஜக) அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. 1989ல் அலஹாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின. மசூதியை இடித்து விட்டு அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன. இந்த பிரச்சனை பாஜக கட்சியின் அரசியல் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. 1993ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம் (அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக் போர்டு வாரியத்துக்கா), அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக உத்தர பிரதேச உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு[தொகு]

2010-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும், இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரிக்கப்பட்டு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷ்வ இந்து பரிஷத், மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இரண்டும் அறிவித்தன. இந்து மகாசபை செய்த மேல் முறையீட்டு மனுவைப் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், மே 2011ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது[1]

அயோத்தி சமரசக் குழு 2019[தொகு]

2.77 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொள்ளும் பிணக்கை தீர்க்க உச்சநீதிமன்றம், ஒய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதி பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூன்று உறுப்பினர்கள் கொண்ட சமரசக் குழுவை 7 மார்ச் 2019 அன்று நிறுவியது.[2] மேலும் இச்சமரசக் குழு தனது அறிக்கையை 8 வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

உச்ச நீதிமன்ற விசாரணை[தொகு]

சமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே 6 ஆகஸ்டு 2019 முதல் நாள்தோறும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இப்பிணக்கு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு தொடர்ந்து விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. [3][4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


  1. Supreme Court stays verdict on Ayodhya title suit, த இந்து, மே 9, 2011.
  2. அயோத்தி விவகார மத்தியஸ்தர் குழு
  3. அயோத்தி சமரசக் குழு தோல்வி : ஆகஸ்டு 6 முதல் சுப்ரீம் கோர்ட் விசாரணை
  4. அயோத்தி விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை: 6-ந்தேதியில் இருந்து தினமும் விசாரணை- உச்ச நீதிமன்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தி_பிரச்சினை&oldid=2790235" இருந்து மீள்விக்கப்பட்டது