மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில்
மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள வைணவத் திருக்கோயில்.
அமைவிடம்
[தொகு]மலையடிப்பட்டி குகைக் கோயிலானது புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[1] இக்கோயிலை திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை 67, துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கிமீ தூரம் பயணம் செய்தும் அடையலாம்.
குகைக் கோயில்கள்
[தொகு]மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சிவனுக்கும் மற்றொன்று திருமாலுக்கும் உரியது. [2] இவை இரட்டைக் கோயிலாகக் கருதப்படுகிறது.[3] சிவன் கோயிலானது வைசுவரமுடையார் கோயில் எனவும், திருமாலுக்குரிய கோயிலானது பள்ளிகொண்ட பெருமாள் கோயில் எனப்படுகிறது. மேலும் திருமால் கோயில் கண்திறந்த பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
இறைவன், இறைவி
[தொகு]சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள், தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி.
சிறப்பு
[தொகு]சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை உள்ளது. இக்கோயில் ஓர் குடவரைக்கோயிலாகும்.[2] மலையைக் குடைந்து பாறையிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் மூலமாக கி.பி.7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.[1] சற்றொப்ப புதுக்கோட்டை அருகே உள்ள திருமயத்தில் இருப்பதைப் போலவே இங்குள்ள பெருமாளும் காணப்படுகிறார்.[3]
பூசை நேரம்
[தொகு]தினமும் நான்கு வேளைகளில் பூசைகள் நடைபெறுகிறது. கால நடை திறப்பு பூசை 7 மணிக்கும், உச்சிக்கால பூசை மதியம் 12 மணிக்கும், சாயரட்சை மாலை 6 மணிக்கும், அர்த்தசாம பூசை இரவு 8.30 மணிக்கும் நடைபெறும். கோயிலானது தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.[1]