திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜ கோபுரம்

திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக அரங்குள நாதர் உள்ளார். அவர் ஹரிதீர்த்தேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி பிரகாதாம்பாள் ஆவார். தல மரம் பொற்பனை ஆகும். இங்குள்ள திருச்சிற்றம்பல உடையார் காசி விசுவநாதருக்கு இணையானவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபட்டால் அவரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். [1]

அமைப்பு[தொகு]

இக்கோயிலின் ராஜ கோபுரம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். திருச்சுற்றில் உள்ள தட்சிணாமூர்த்தி வீணையுடன் காணப்படுகிறார். அம்மன் தனி சன்னதியில் உள்ளார். இவ்வூரைச் சேர்ந்த பெரியநாயகி என்பவர் மூலவர் மீது அதிக பற்று கொண்டவராக இருந்ததாகவும், பெற்றோருடன் இக்கோயிலுக்கு வந்தபோது இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டதாகவும், அவருக்குப் பிரகாதாம்பாள் என்று பெயர் சூட்டியதாகக் கூறுவர். இப்பகுதியில் வசித்த வேடன் உணவு தேடச்சென்றபோது தன் மனைவியைக் காணாமல் போனாள். அங்கு வந்த முனிவர் அவரைக் கொண்டு வந்து வேடனிடம் சேர்த்துவிட்டு அவருடைய வறுமை நிலை அறிந்து ஒரு பனை மரத்தை உண்டாக்கி அதிலிருந்து பொற்பனம் பழம் வரும் வகையில் செய்தார். அதனை வாங்கிய வணிகரோ அதற்கு குறைந்த விலையே தந்தார். அதன் மதிப்பு வேடனுக்குத் தெரிய வரவே, வணிகரிடம் தனக்குரிய பங்கினைத் தர வேண்டினார். இந்தப் பிரச்னை மன்னரின் முன்பு கொண்டு செல்லப்பட்டது. மன்னரின் ஆணைப்படி அந்த மரத்தைப் பார்க்க அரண்மனையாட்கள் வந்தபோது அங்கு லிங்கத் திருமேனியைக் காணமுடிந்தது. மன்னன் அவ்விடத்தில் ஒரு கோயிலைக் கட்டினான். வணிகரும் இறைவனின் பெருமையை அறிந்து தன்னையும் அப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டார். [1]

சன்னதிகள்[தொகு]

மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சூரியன், நால்வர், வீரபத்திரர், சப்தமாதர், விநாயகர், 63 நாயன்மார், கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சரஸ்வதி, ஜேஷ்டாதேவி, கஜலட்சுமி, சுப்பிரமணியர், நடராஜர், சிற்றம்பலம் உடையார், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக பலிபீடம், நந்தி, கொடி மரம் ஆகியவை உள்ளன. அம்மன் சன்னதி கருவறைக்கு முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார். அடுத்து பள்ளியறை உள்ளது. இரு புறமும் துவார சக்திகள் உள்ளனர்.

திருவிழாக்கள்[தொகு]

வைகாசி விசாகம், ஆடிப் பூரம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும். ஆடிப் பூரத்தின் ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]