வேணாடு
வேணாடு பண்டைச் சேர நாட்டில் அமைந்திருந்த 18 நாடுகளில் ஒன்றாகும். கி.பி 880க்கு முன்னர் இப்பகுதி பாண்டியரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. கி. பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளினி என்பார், பாண்டியனின் பிரதிநிதிகள் வாசனைத் திரவியங்கள் தருவதாகக் கூறி அவ்வரசனின் ஆளுகைக்கு உட்பட்ட திருச்சூருக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்குத் தன்னை அழைத்ததாகக் கூறியுள்ளார். ஆய் வேளிர் எனப்பட்டோர் பாண்டிய அரசர்களுக்குக் கீழ்ப்பட்டு இப் பகுதிகளை ஆண்டுவந்தனர். இப் பகுதி இன்றைய இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்தது. இவ் வேணாடே பிற்காலத்தில் மார்த்தாண்ட வர்மரால் உருவாக்கப்பட்ட திருவிதாங்கூர் அரசுக்கு மூலமாக அமைந்தது. இவர் வேணாட்டுடன், தென் கேரளத்தில் கொச்சி வரை அமைந்திருந்த பல நாடுகளைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டு திருவிதாங்கூர் அரசை உருவாக்கினார்.
வேளிர் நாடு ஆகையால், வேள் நாடு எனப்பட்டு வேணாடு ஆனதாகக் கருதப்படுகிறது. தமிழில் யானை வேழம் என்றும் அழைக்கப்படும். எனவே யானைகள் நிறைந்த பகுதியாகிய இந்நாடு வேழ நாடு எனப்பட்டு வேணாடு ஆகியதாகக் கூறுவோரும் உளர்.