யவனர்
பண்டைய இந்தியாவில் பாலி மற்றும் பிராகிருதம் மொழிகளில், கிரேக்க மொழி பேசுவர்களை யோனா என்றும்,தமிழ் மற்றும் சமசுகிருதம் மொழியில் யவனர் என்றும் அழைப்பர். மேற்குப் பகுதியிலிருந்து இந்திய துணை கண்டத்திற்குள் நுழைந்த வெளிநாட்டவர்களான கிரேக்கர்களை, துவக்க கால இந்திய இலக்கியங்களில் யவனர் எனக்குறிப்பிட்டனர். இந்த கிரேக்க ஐயோனியர்களை என்ற சொல்லை எழுத்துப்பெயர்ப்பு செய்யும் போது யவனர் என்றும், யோனா என்றும் அழைக்கப்பட்டனர். அகாமனிசியப் பேரரசின் கீழிருந்த ஐயோனியா பகுதி கிரேக்கர்களின் கிளர்ச்சியை கிமு 545-இல் முதலாம் டேரியஸ் அடக்கினார். அகாமனிசியப் பேரரசின் கல்வெட்டுகளில் கிரேக்கர்களை குறிப்பதற்கு யோனா என பண்டைய பாரசீக மொழியில் குறித்தனர்.[2]
யவனர் என்ற சொல் இந்தியாவின் பண்டைய சமசுகிருத மகாபாரத போன்ற காவியங்களிலும் மற்றும் தமிழ் இலக்கியங்களில் அதிகம் காணப்படுகிறது. ஆனால் யோனா என்ற சொல் இலங்கையின் மகாவம்ச நூலில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனுதரும சாத்திரம் [3] பரத நாட்டவர்கள் அல்லாத இனக்குழுக்களை பட்டியலிடும் போது யவனர்களுடன், காம்போஜர்கள், சகர்கள், பகலவர்கள், மிலேச்சர்களை குறிக்கிறது. மேலும் இவர்களை பாரத நாட்டின் சத்திரியர்களை விட தாழ்ந்தவர்கள் எனக்குறிக்கிறது. மகாபாரத இதிகாசத்தின்[4] அனுசான பருவத்தில் யவனர்கள், காம்போஜர்கள், சகர்கள் போன்ற பரத கண்டத்திற்கு வெளியே வாழ்ந்த இனக்குழுக்கள் பற்றி கூறுகிறது. பதஞ்சலியின் மகா பாஷ்யம் நூலில்[5] யவனர்களையும், சகர்களையும் சுத்த சூத்திரர்கள் பிரிவில் சேர்த்துள்ளது. கௌதம சூத்திரத்தில்[6]சத்திரிய ஆண்களுக்கும், சூத்திர குல பெண்களுக்கும் பிறந்தவர்களின் வழித்தோன்றல்களே யவனர்கள் எனக்கூறுகிறது. பௌத்தர்களின் மச்சிம நியாகத்தின் அஸ்சாலாயான சூத்தத்தில் யவனம் மற்றும் காம்போஜ நாடுகளைக் குறித்துள்ளது. விஷ்ணு புராணத்தில் பரத கண்டத்தின் வடக்கிலும்,கிழக்கில் வாழ்ந்த கிராத மக்களும், மேற்கில் யவனம் மற்றும் காம்போஜப் பகுதிகளில் வாழ்ந்த மக்களும் நால்வகை வர்ண முறை பின்பற்றப்படவில்லை எனக்கூறுகிறது. புராணங்கள் கூறும் யவனர்கள், காம்போஜர்கள், பகவலர்கள், சகர் மக்கள் தங்கள் தலைமுடியை, பரத நாட்டவர்கள் போன்று குடுமி வைத்து இராமல், குறுகிய முடியுடன் இருந்தனர் எனக்கூறுகிறது. வால்மீகி இராமாயனம், பால கண்டத்தில், ய்வனர்கள், சகர்கள், காம்போஜர்கள் மற்றும் பகலவர்களை பரத கண்டத்து மக்கள் அல்லாத மிலேச்சர்கள் என வகைப்படுத்துகிறது.
அசோகர் கல்வெட்டுகக்ளில் யவனர்களை அரசகுலத்தவர்கள் என்றும், காம்போஜர்களை அடிமைகள் எனக்குறிப்பிட்டுள்ளது.[7] சமஸ்கிருத மொழியின் இலக்கண ஆசிரியர் பாணினி தனது அஷ்டாத்தியம் எனும் இலக்கண நூலில் கிரேக்கர்களை யவனர் என்றே குறிப்பிட்டுள்ளார்.[8] சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப் பாலை நூலில் ய்வனர்கள், தமிழ்நாட்டுடன் கொண்ட வணிகத்தை விவரித்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் பகுதியை கைப்பற்றிய பின்னர் பேரரசர் அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் மேற்குப் பகுதிகளை யவனர்களான கிரேக்கர்களின் செலூக்கியப் பேரரசு (கிமு:312 - கிமு 256), கிரேக்க பாக்திரியா பேரரசு (கிமு 256 – கிமு 125) மற்றும் இந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிபி 10) ஆட்சி செலுத்தியது. இந்தியாவின் மேற்கில் ஆட்சி செய்த இந்த யவனர்கள் பௌத்த சமயத்தை ஆதரித்ததுடன், கௌதம புத்தர் சிற்பங்களை கிரேக்க கலைப்பாணியில் வடித்தனர்.
யவனப் பேரரசர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பேரரசர் அலெக்சாந்தர், செலூக்கஸ் நிக்காத்தர், மெனாண்டர் மற்றும் ஸ்டாட்ரோ ஆவார்.
இந்திய நினைவுச்சின்னங்களில் குறித்த சில கிரேக்க யவன மன்னர்கள்:
- அசோகர் கல்வெட்டுகக்ளில் (கிமு 280), கிரேக்க யவனப் பேரரசர் செலூக்கஸ் நிக்காத்தாரின் பேரனும் முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் மகனுமான, பேரரசர் இரண்டாம் ஆண்டியோகோசின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் விதிஷா நகரத்தில் நிறுவப்பட்ட ஹேலியோடோரஸ் தூணில் (கிமு 110) கிரேக்க யவன மன்னரான ஆன்டிலிசிடாஸ் நிக்போரோஸ் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
- மிலிந்த பன்கா எனும் பௌத்த சமய நூலில்[9]இந்தோ கிரேக்க நாட்டை ஆண்ட யவன மன்னர் மெனாண்டர் குறித்தும், அவரது 500 மெய்க்காவலர்களையும் குறித்துள்ளார்.
- இந்தியாவின் மேற்குப் பகுதிகளை ஆண்ட மேற்கு சத்திரபதி மன்னர் முதலாம் ருத்திரதாமன் ஆட்சிக் காலத்தில (கிபி 150) கிரேக்க மொழி யவன ஜாதகம் [10] எனும் ஜோதிட நூலை, யவனேசுவரன் என்பவரால்[11]சமசுகிருதம் மொழியில் மொழிபெயர்கக்ப்பட்டது.
- தற்கால ஆப்கானித்தான் நாட்டின் பாக்ராம் எனும் ய்வனர்கள் வாழ்ந்த அலெக்சான்டிரிய காகசஸ்[12] நகரம் குறித்து மகாவம்ச நூலில் அத்தியாயம் 29-இல் குறிக்கப்பட்டுள்ளது, காலம் (கிபி 4-ஆம் நூற்றாண்டு).
ஹெலனியக் காலத்தில் இந்திய நாட்டவர்கள், கிரேக்கர்களை யவனர்கள் என அழைத்தனர்.[13]பாரசீகர்கள் கிரேக்கர்களை யுனானிகள் என்றே அழைத்தனர்.
தமிழ்நாட்டில் யவனர்கள்
[தொகு]தமிழகத்திற்குக் கடல் வழியே மரக்கலங்களில் வந்து வாணிகம் செய்த கிரேக்கரையும், பிற்பாடு ரோமானியரையும்[14] யவனர் என்று சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன.[15] சங்ககால ரோம கிரேக்க தமிழக தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் ரோம நாணயங்களும் கிரேக்க நாணயங்களும் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன.[16]
மிலேச்சர்
[தொகு]கடல் வாணிகத்தின்போது மரக்கலங்களில் கப்பல் தலைவனுக்குப் பாதுகாவலராக வந்த யவனர் மிலேச்சர் எனப்பட்டனர். இவர்களில் சிலர் தமிழ் அரசர்களுக்கு மெய்காப்பாளராகவும் தங்கிவிட்டனர். இவர்கள் ஊமையர்.[17]
வணிகம்
[தொகு]மிளகு
[தொகு]யவனர் மரக்கலங்களில் வந்தனர். சேரநாட்டு முசிறித் துறைமுகத்தில் அவற்றை நிறுத்தினர். முசிறித் துறைமுகம் பெரியாறு கடலில் கலக்குமிடத்தில் இருந்தது. பெரியாறு அக்காலத்தில் கப்பல் செல்லும் அளவுக்கு அகன்றும் ஆழமாகவும் இருந்தது. அதன் ஆற்று நுரை கலங்கக் கலம் செலுத்திக்கொண்டு உள்நாட்டுப் பகுதிக்குச் சென்றனர். தாம் கொண்டுவந்த பொன்னைப் பண்டமாற்றாகக் கொடுத்துவிட்டுக் 'கறி' என்னும் மிளகை மூட்டை மூட்டையாக வாங்கிக்கொண்டு சென்றனர்.[18]
மதுக் கிண்ணம்
[தொகு]இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டிய மன்னன் யவனர் அன்பளிப்பாகத் தந்த பொன்னால் செய்யப்பட்டதும், அதிக வேலைப்பாடுகள் கொண்டதுமான கிண்ணத்தில் மகளிர் தேறல் கள்ளை ஊற்றித் தர உண்டு மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது. எனவே யவனர் விற்பனை செய்த பொருள்களில் தங்கத்தாலான மதுக் கிண்ணமும் ஒன்று எனத் தெரியவருகிறது.[19]
ஓதிம விளக்கு
[தொகு]அன்னத்தைத் தலையிலே கொண்ட ஓதிம விளக்கு யவனர் விற்பனை செய்த பொருள்களில் ஒன்று.[20]
பாவை விளக்கு
[தொகு]பாவை விளக்கு அரண்மனைக்கு ஒளி ஊட்டிய விளக்குகளில் ஒன்று[21] இதுவும் யவனர் விற்பனை செய்த விளக்குகளில் ஒன்று எனலாம். இதனை 'யவனர் இயற்றிய வினைமாண் பாவை' என்று நக்கீரர் குறிப்பிடுகிறார். பாவை ஒருத்தி அகல்விளக்கைக் கையில் ஏந்தி நிற்பது போலவும், அந்த அகல் விளக்கில் ஐந்து திரிகள் போட்டு எரியவிட்டனர் என்றும், அது பாண்டிநாட்டு அரண்மனைப் பள்ளியறையில் எரிந்துகொண்டிருந்தது என்றும் நக்கீரர் குறிப்பிடுகிறார்.[22]
புலிப்படை
[தொகு]யவனர் மெய்ப்பை என்று சொல்லப்பட்ட சட்டை அணிந்திருந்தனர். ஆடைகளைச் செறித்து இறுக்கமாகக் கட்டியிருந்தனர். அதன் மேல் மத்திகை என்னும் அரைக்கச்சை அணிந்திருந்தனர். அவர்கள் வலிமை மிக்க யாக்கையைப் பெற்றிருந்தனர். அவர்களின் தோற்றம் பிறருக்கு அச்சம் தருவதாக அமைந்திருந்தது. அவர்கள் வன்கண் என்னும் முரட்டுக் குணம் உடையவர்களாக விளங்கினர். அரசனது பாசறையில் இவர்களுக்கும் தனி இடம் இருந்தது. அரசனுக்கு இவர்கள் புலிப்படை நடத்தி உதவிவந்தனர். பாசறையில் இவர்கள் புலியைச் சங்கிலித் தொடரால் பிணித்திருந்தனர். [23]
யவனர் பிணிக்கப்படல்
[தொகு]இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர வேந்தன் தனக்கு நன்மை தராத வன்சொல் பேசிய யவனரைப் போரிட்டு வென்று அவர்களைக் கைது செய்து கொண்டுவந்து தன் நாட்டுச் சிறையில் அடைத்திருக்கிறான்.[24]
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Kosmin, Paul J. (2014). The Land of the Elephant Kings (in ஆங்கிலம்). Harvard University Press. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674728820.
- ↑ Yavana people
- ↑ Manusmriti X.43-44.
- ↑ Mahabharata 13.33.23.
- ↑ Mahabhasya II.4.10.
- ↑ Gautama-Dharmasutra IV.21.
- ↑ Thomas, Edward Joseph (1933). The History of Buddhist Thought. Asian Educational Services. p. 85 with footnote 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1095-8.
- ↑ Lal, Shyam Bihari (2004). "Yavanas in the Ancient Indian Inscriptions". Proceedings of the Indian History Congress 65: 1115–1120. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937.
- ↑ Milinda Panha
- ↑ Yavanajataka
- ↑ Yavaneśvara
- ↑ Alexandria in the Caucasus
- ↑ The Greeks in Bactria and India by William Woodthorpe Tarn p.257
- ↑ பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
- ↑ யவனர்
- ↑ தமிழகத்தில் கிரேக்கக் காசுகள், தமிழகத்தில் ரோமக் காசுகள்
- ↑ முல்லைப்பாட்டு - 65-66
- ↑ தாயங்கண்ணனார் - அகநானூறு 149
- ↑ நக்கீரர் - புறநானூறு 56
- ↑ கடியலூர் உருத்திரங் கண்ணனார் - பெரும்பாணாற்றுபடை 316
- ↑ முல்லைப்பாட்டு - 85
- ↑ நக்கீரர் - நெடுநல்வாடை 101-104
- ↑ முல்லைப்பாட்டு - 59 முதல் 62
- ↑ பதிற்றுப்பத்து இரண்டாம்பத்து - பதிகம்
மேற்கோள்கள்
[தொகு]- The shape of ancient thought. Comparative Studies in Greek and Indian philosophies, by Thomas Mc Evilly (Allworth Press, New York 2002) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58115-203-5
- Liber Genesis 10:2. "Filii Iapheth: Gomer et Magog et Madai et Iavan et Thubal et Mosoch et Thiras." Nova vulgata.