உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை சேலம் பசுமை விரைவுச் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை சேலம் பசுமை விரைவுச் சாலை
Chennai-Salem Green Corridor Express Highway
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:274 km (170 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:அரியானூர், சேலம் மாவட்டம், தமிழ்நாடு
முடிவு:தாம்பரம், காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு

சென்னை சேலம் பசுமை விரைவுச் சாலை (Chennai-Salem Green Corridor Express Highway) என்பது தமிழ்நாட்டின் சேலம் நகரையும், படப்பையையும் இணைக்கும் விதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டுவழிப்பாதையாக அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் ஒரு விரைவுச் சாலை ஆகும். இந்தச் சாலையினால் சென்னை- சேலம் இடையே 340 கிலோமீட்டர் தூரமாக உள்ள தொலைவு 274 கி.மீ. தொலைவாக குறையும்.

சென்னை முதல் அரூர் வரையிலான சாலை 179 பி எனவும், அரூர் முதல் சேலம் வரையிலான சாலை 179 ஏ எனவும் எண்ணிடப்பட்டு அழைக்கப்படும்.[1] இச்சாலை சென்னைக்கு அருகே தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, செங்கம் பகுதியில் 122 கி.மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கி.மீட்டரும், தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக 53 கி.மீட்டரும், அங்கிருந்து மஞ்சவாடி கணவாயை அடைந்து, சேலத்தில் அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, எருமாபாளையம், நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வழியாக சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அரியானூர் 1008 சிவாலயம் கோயில் அருகில் நிறைவு பெறுகிறது.[2] இது சேலம் மாவட்டத்தில் 38 கி.மீட்டர் செல்கிறது. இந்த சாலையானது சென்னை, சேலம் இடையேயான பயணத் தொலைவை 60 கிலோமீட்டர் குறைக்கும். அதேசமயம் பயண நேரமானது 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறையும்.

இந்த பசுமைவழிச் சாலையில் 23 பெரிய பாலங்கள், 156 சிறிய பாலங்கள், 9 மேம்பாலங்கள், வாகனங்களுக்காக 22 கீழ்வழிப் பாதைகள், பாலங்களுடனான 2 கீழ்வழிப் பாதைகள், வனப்பகுதியில் 3 சுரங்கப் பாதைகள், 8 சுங்கச்சாவடிகள், பேருந்து மற்றும் லாரிகளுக்கான 10 நிறுத்தங்கள் ஆகியவை அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.[3]

மாற்று வழி சாலை நிலைப்பாடு

[தொகு]

சேலம் சென்னைக்கு இடையே தற்போதுள்ள சாலைகள்[4]

[தொகு]
  1. ஆத்தூர்-கள்ளக்குறிச்சி-விழுப்புரம் வழி: இது சேலம் - ஆத்தூர் - கள்ளக்குறிச்சி - விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னையை சென்றடையும் விதத்தில் ஏறக்குறைய 340 கிமீ தொலைவுக்கு 4 வழிச்சாலையாக உள்ளது.
  2. தருமபுரி-கிருஷ்ணகிரி-வேலூர் வழி: சேலம்-தருமபுரி-கிருஷ்ணகிரி-ஆம்பூர் - பள்ளிகொண்டா - வேலூர் - ஆற்காடு - திருபெரும்புதூர் வழியாக 362 கிமீ, பயணத் தொலைவை 6 மணி பயண நேரத்தில் சென்னையை சென்றடைய இயலும். இதில் சேலம்-கிருஷ்ணகிரி வரை 4 வழிச்சாலையாகவும், கிருஷ்ணகிரி-சென்னை வரை 6 வழிச்சாலையாகவும் உள்ளது.
  3. அரூர்- ஆம்பூர்- வேலூர் வழி: சேலம் - அரூர் - ஊத்தங்கரை - திருப்பத்தூர் - ஆம்பூர் - வேலூர் வழியாக 336 கிமீ, பயணத் தொலைவில் 6.30 மணி நேரத்தில் சென்னை சென்றடைய இயலும். இந்த சாலையானது சேலம் முதல் ஆம்பூர் வரை இரு வழிச்சாலையாகவும், ஆம்பூர்- முதல் சென்னை வரை 6 வழிச்சாலையாகவும் உள்ளது.
  4. சேலம் - செங்கம் - ஆரணி - ஆற்காடு - வழி : அரூர், ஊத்தங்கரை, செங்கம், போளூர், ஆரணி, ஆற்காடு, பூந்தமல்லி வழியாக சென்னையை அடையலாம். இந்த வழியில் பயணித்தால் 340கிமீ தான் வரும்.
  5. சேலம்- திருவண்ணாமலை வழி:- திண்டிவனம்- சென்னை,
  6. சேலம்-அரூர்-திருவண்ணாமலை வழி:-சேத்துபட்டு- வந்தவாசி- உத்திரமேரூர்-தாம்பரம்- சென்னை இந்த வழித்தடத்தில் சுங்கவரிக் கட்டணம் இல்லாமல் செல்லலாம். இது மொத்தம் 340 கி.மீ தொலைவு கொண்டது.
  7. இதர வழித்தடங்களைக் காட்டிலும் குறைவான தொலைவு. இனி புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலைத் திட்டத்தை விட 30 கி.மீ மட்டுமே கூடுதல் தொலைவாக உள்ளது.[5]

சர்ச்சைகள்

[தொகு]

சென்னை சேலம் இடையே பல சாலைகள் உள்ளபோது அவற்றை அகலப்படுத்தினாலே போதுமானதாக இருக்கும் எனப்படுகிறது. மேலும் இந்தச் சாலை, 22 கி.மீ. பாதுகாக்கப்பட்ட காடுகள், குடியிருப்புகள், வேளாண் நிலங்கள் வழியாகவும் செல்வதாக உள்ளது. புதிய சாலை அமைப்பதற்காக மேற்கண்ட மாவட்டங்களில் 5,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்; இதனால் பல்லாயிரக்கணக்கான மரங்களும் அழிக்கவேண்டியிருக்கும் என குற்றம்சாட்டி இத்திட்டம் எதிர்க்கப்படுகிறது.[6] இந்த திட்டத்தை எதிர்ததாக கூறி விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.[7]

இந்த மாவட்டங்களில் மக்களைச் சந்திக்கவோ, கூட்டம்போடவோ பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.[8] திட்டத்தை எதிர்த்தது கருத்து கூறியதற்காக பியூஷ் மானுஷ்[9], மன்சூர் அலி கான்[10] போன்றோரையும், நிலம் கையகப்படுத்தப்படும் பகுதி மக்களைச் சந்திக்கச் சென்ற மாணவி வளர்மதி, சிபிஎம் முன்னாள் சமஉ பாலபாரதி, சீமான், வ. கவுதமன் போன்றோர் கைது செய்யப்பட்டு வழக்குகள் போடப்பட்டன.

தமிழ்நாட்டில் பல்வேறு சாலைத் திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமலே உள்ள நிலையில், இவற்றை முடிக்க முனைப்பு காட்டாமல், சேலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கு மட்டும் தமிழக அரசு இவ்வளவு வேகமாகச் செயற்படுவது ஏன் என தமிழ்நாடு பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் மற்றும் மூத்த பொறியாளர் சங்கம் கேள்வி எழுப்பியது. மேலும் சென்னை - சேலம் புதிய வழித்தடத்தின் அவசியத்தினை நிபுணர்கள் யாரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும், இதற்கான திட்ட மதிப்பீடானது மத்திய அரசு வழிகாட்டும் மதிப்பீட்டிலிருந்தே பெரிதும் வேறுபடுவதாகவும், சாலைக்கான நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானப் பணிகள் போன்றவற்றிற்கு மொத்தமும் ரூ.7,000 கோடி மட்டுமே தேவைப்படும் நிலையில் இதற்கான திட்டமதிப்பீடு மிகக்கூடுதலாக செய்யப்பட்டுள்ளது ஐயத்துக்கு இடமளிக்கிறது என்றும் கூறியது.[11]

சாலை அமைக்கப்படும் பகுதியில் 6400 மரங்கள் வெட்டப்படும் என அரசால் சொல்லப்படுகிறது. ஆனால் இதில் பத்து இலட்சம் மரங்கள் வெட்டப்படவுள்ளதாக சூழலியலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாலை தேவைக்காக 300 ஏக்கர் அடர்ந்த காடுகள் அழிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.[5]

இந்த எட்டுவழிச் சாலையின் உண்மையான நோக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடியப்பன் மலை- கவுத்தி மலை, சேலம் கஞ்சமலை, சேர்வராயன் மலை போன்ற மலைப்பகுதிகளில் உள்ள இரும்புத் தாது, பாக்சைட், மாங்கனீசு போன்ற கனிமங்களை வெட்டி எடுத்து பெரிய ஊர்திகளில் விரைவாக துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லவதற்காகவே என்றும், இதற்காக ஜிண்டால் நிறுவனம் இந்த சாலை அமைக்கும் செலவில் 75 விழுக்காடு நிதி உதவி அளிப்பதாக கூறப்படுகிறது.[5][12]

இடைக்காலத் தடை

[தொகு]

பசுமை விரைவுச் சாலை திட்டத்துக்காக நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்துக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், விவசாயி பி. வி. கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2018 ஆகத்து 21 அன்று இத்திட்டத்திற்காக விவசாயிகளை வெளியேற்றவும் மரங்களை வெட்டவும் இடைக்காலத் தடை விதித்தது.[13][14]

திட்டத்தில் மாற்றம்

[தொகு]

இந்த சாலைத் திட்டத்துக்கு எழுந்த கடும் எதிர்ப்பால், சாலை திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்து அதன்படி திட்ட அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக 2018 செப்டம்பரில் ஊடகங்களுக்கு தெரிவித்தது. அதன்படி, நில எடுப்பின் அளவைக் குறைக்க சாலையின் அகலமானது 90 மீட்டரில் இருந்து 70 மீட்டராக குறைக்கப்படும், வனப்பகுதியில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ. தொலைவு மட்டுமே சாலை அமைக்கப்படும். மேலும் வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும். இதனால் வனப்பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலமானது 300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கராக குறைக்கப்படும். எட்டு வழிச்சாலையோடு இணைப்புச் சாலையாக (சர்வீஸ்) அமைக்க திட்டமிடப்பட்டிருந்த மூன்று சாலைகள் அமைக்கப்படாது. இந்தச் சாலை சில இடங்களில் ஆறு வழிச்சாலையாகவும் குறைக்கப்படும். சேலத்தில் உள்ள கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டும். சாலையின் நீளம் அதே அளவாக இருந்தாலும் திட்ட மதிப்பீடு ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.7,210 கோடியாக குறைக்கப்படும்.[15][16]

நிரந்தர தடை

[தொகு]

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான டி. எஸ். சிவஞானம் மற்றும் பவானிசுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கானது தொடர்ந்து 8 மாதங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பானது ஏப்ரல் 08, 2019 அன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டனர். இதில் 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும், தங்கள் தீர்ப்பில் கூறினர்.[17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சென்னை -சேலம் பசுமை விரைவுச் சாலை: அரூரில் பணிகள் தொடக்கம்". செய்தி. தினமணி. 2018 ஏபரல் 24. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "சென்னை-சேலம் இடையே பசுமை விரைவு சாலை நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு வலுக்கிறது". செய்தி. தினகரன். 2018. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2018.
  3. "சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை திட்டம் குறித்து 5 மாவட்ட மக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு உத்தரவு: பொதுமக்கள், விவசாயிகளின் விருப்பத்துக்கேற்ப திட்டத்தில் மாற்றம் செய்யவும் வாய்ப்பு". செய்தி. தி இந்து தமிழ். 25 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2018.
  4. எஸ்.விஜயகுமார், வி.சீனிவாசன், ராஜா, தினேஷ்குமார் (20 சூன் 2018). "பசுமை வழிச்சாலைக்கு தேவை என்ன?- உலுக்கும் ஒற்றை கேள்வி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2018.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. 5.0 5.1 5.2 எஸ்.விஜயகுமார், வி.சீனிவாசன், ராஜா, இரா. தினேஷ்குமார் (21 சூன் 2018). "பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2018.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. செந்தமிழ்ப்பாண்டியன் (26 மே 2018). "மாங்கனி நகரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2018.
  7. "பசுமை சாலைக்கு தொடரும் எதிர்ப்பு: தி.மலை மாவட்டத்தில் தற்கொலை முயற்சி; சேலம் அருகே 16 பேர் கைது". செய்தி. இந்து தமிழ். 4 சூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2018.
  8. "கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி மறுப்பு: அரூரில் போலீஸார் குவிப்பு". செய்தி. தினமணி. 28 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2018.
  9. "பியூஸ் மனுஷ் நக்சலைட்டா?- போலீஸுக்கு சகோதரி கேள்வி". செய்தி. இந்து தமிழ். 21 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2018.
  10. "சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது". செய்தி. தினத்தந்தி. 18 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2018.
  11. கி.ஜெயப்பிரகாஷ் (9 சூலை 2018). "மத்திய அரசு வழிகாட்டும் மதிப்பீட்டில் இருந்து சென்னை - சேலம் புதிய 8 வழிச்சாலை திட்ட மதிப்பீடு வேறுபடுவது ஏன்?- மூத்த பொறியாளர் சங்கம் கேள்வி". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2018.
  12. க. முகிலன் (ஆகத்து 2018). "மக்களுக்கு எதிரான எட்டுவழிச் சாலையும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் ஒடுக்குமுறைகளும்". சிந்தனையாளன்: 5-10. 
  13. "சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளரை வெளியேற்ற தடை". தினத்தந்தி (22 ஆகஸ்ட், 2018)
  14. "சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை: மக்களை அப்புறப்படுத்தவோ, மரங்களை வெட்டவோ கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு". (22 ஆகஸ்ட், 2018)
  15. "சென்னை - சேலம் 8 வழி திட்டத்தில் மாற்றம்: நிதி குறைப்பு; சாலையின் அகலமும் குறைகிறது". செய்தி. இந்து தமிழ். 18 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  16. "சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி". செய்தி. இந்து தமிழ். 15 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  17. "சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு". மாலைமலர் (ஏப்ரல் 08, 2019)