ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்
தற்போது
அந்தோனியோ குத்தேரசு

1 சனவரி 2017 முதல்
வாழுமிடம்சட்டன் பிளேசு,மன்ஹாட்டன், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள், காலவரையின்றி நீட்டிக்கப்படலாம்
முதலாவதாக பதவியேற்றவர்கிளாட்வின் ஜெப்
24 அக்டோபர் 1945
(பொறுப்பு)
டிரைக்வெ லீ
1 பெப்ரவரி 1946
உருவாக்கம்ஐக்கிய நாடுகள் பட்டயம்,
26 சூன் 1945
இணையதளம்ஐநா பொதுச்செயலாளர் இணையதளம்

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை அங்கங்களில் ஒன்றான ஐநா செயலகத்தை தலைமையேற்று நடத்துபவராகும். ஐக்கிய நாடுகளின் நடைமுறைத் தலைவராகவும் வெளித்தொடர்பாளராகவும் விளங்குகிறார்.

தற்போதைய பொதுச் செயலாளராக தென் கொரியாவின் பான் கி மூன் சனவரி 1, 2007 முதல் இருந்து வருகிறார். இவரது முதல் பதவிக்காலம் திசம்பர் 31, 2011 அன்று முடிகிறது. அடுத்த பதவிக் காலத்திற்கும் தொடர இவருக்கு தகுதியுள்ளது.

பொறுப்பு[தொகு]

ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் பிராங்கிளின் ரோசவெல்ட் ஐநா பொதுச்செயலாளரைக் குறித்துக் கொண்டிருந்த கருத்தில் அவர் ஒரு "உலக நெறியாளராக" இருக்க வேண்டும் என விரும்பினார்; இருப்பினும் ஐக்கிய நாடுகள் பட்டயம் பொதுச் செயலாளரை நிறுவனத்தின் "முதன்மை நிர்வாக அதிகாரியாகவே" ( பிரிவு 97) வரையறுத்துள்ளது. எனினும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட வரையறை இப்பதவி வகித்தவர்களுக்கு உலகப் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களை வெளியிடவோ தீர்வுகளில் முதன்மையான பங்காற்றவோ தடையாக இருக்கவில்லை.

ஐநா பொதுச்செயலாளருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நியூ யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சட்டனில் ஐந்து தள வீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நகர வீட்டை 1921ஆம் ஆண்டு ஆன் மோர்கனுக்காக கட்டப்பட்டது; 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்காக நன்கொடையாக அளிக்கப் பட்டது.[1]

பதவிக்காலமும் தேர்வும்[தொகு]

1953ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டில் அவரது மறைவு வரை டாக் ஹமாஷெல்ட் மிகவும் துடிப்பான ஐநா பொதுச் செயலாளராக விளங்கினார். சூயஸ் கால்வாய் பிரச்சினையின்போதும் 1960 ஆண்டில் சோவியத் ஒன்றியத்தால் அமெரிக்க ஒற்றுப்படை விமானம் பிடிக்கப்பட்ட நிகழ்வின்போதும் நெறியாளராகப் பங்காற்றினார். கனடிய வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பி. பியர்சன் முன்மொழிந்தபடி முதல் ஐநா அமைதிகாப்புப் படையினையும் நிறுவினார்.

பொதுச் செயலாளர்களுக்கு பதவிக்காலம் ஐந்தாண்டு காலமாக இருப்பினும் இது காலவரையின்றி நீடிக்கப்படலாம். இருப்பினும் எந்தவொரு பொதுச்செயலரும் இருமுறைக்கு மேலாக பதவியில் நீடித்திருக்கவில்லை.[2] ஐக்கிய நாடுகள் பட்டயம் பொதுச் செயலாளரைபொதுச் சபையால் பாதுகாப்பு அவையின் பரிந்துரைப்படி நியமிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ளது. இதனால் இத்தேர்வு பாதுகாப்பு அவையின் எந்தவொரு ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் வெட்டுரிமைக்கு உட்பட்டது.

ஐநா பட்டயத்தின் சுருக்கமான இந்தத் தேர்வுமுறை நடைமுறையில் பிற செய்முறை விதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கங்களாலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் பொதுச்செயலாளர் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் நாட்டினராக இருக்க முடியாது; ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாக அடுத்தடுத்த செயலர்கள் தேர்வுக்கு மண்டல ( கண்டவாரியான) சுழல்முறை கடைபிடிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பேசும் திறமையும் அலுவல்முறைசாரா தகுதியாக கருதப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளின் கூடுதல் எண்ணிக்கையாலும் ஒருநாட்டிற்கு ஒரு வாக்கு என்ற முறைமையாலும் பொதுச்செயலாளர்களாக மேற்கு நாடுகளுக்கு சாதகமானவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 1960களில் சோவியத் அதிபர் நிக்கிட்டா குருசேவ் இந்தப் பதவியை அழித்திட முயன்றார். இதற்கு மாற்றாக மூவர் அடங்கிய தலைமை அவையை பரிந்துரைத்தார்;ஒருவர் மேற்கு நாடுகளிலிருந்தும் ஒருவர் இடதுசாரி கிழக்கு நாடுகளிலிருந்தும் ஏனையவர் கூட்டு சேரா நாடுகளிலிருந்தும் தேர்வு செய்யப்படலாம். சோவியத்துகளின் இந்த தீர்மானத்தை நடுநிலை நாடுகள் ஆதரிக்க தவறியதால் இது நிறைவேற்றப்படவில்லை.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Teltsch, Kathleen. "Town House Offered to U. N.", த நியூயார்க் டைம்ஸ், 15 July 1972. Accessed 27 December 2007.
  2. Secretary-General Appointment Process
  3. Fordham University(23 September 1960). "Nikita Krushchev, Address to the UN General Assembly". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2 May 2011.
  4. "BBC On This Day 1960: Khrushchev anger erupts at UN" (in ஆங்கிலம்). BBC Online (United Kingdom: BBC News). 23 September 1960. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/29/newsid_3087000/3087171.stm. பார்த்த நாள்: 2 May 2011. 

வெளியிணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்கள்