ஐக்கிய நாடுகள் தலைமையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கியநாடுகள் சபை, தலைமை நிலையக் கட்டிடம்

ஐக்கிய நாடுகள் தலைமையகம், நியூயார்க் நகரில் உள்ள தனித்துவமானதொரு கட்டிடத் தொகுதியாகும். இது 1952 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை அலுவலகமாகச் செயற்பட்டு வருகின்றது. இது மான்ஹட்டனின் கிழக்குப் பகுதியில், டர்ட்டில் பே (Turtle Bay) வட்டகையில், ஈஸ்ட் ஆற்றை நோக்கியிருக்கும் பரந்த நிலத்தில் அமைந்துள்ளது. இது நியூயார்க் நகரத்தில் இருந்தாலும், இக் கட்டிடத்தொகுதி அமைந்துள்ள இடம் ஒரு அனைத்துலக ஆட்சிப் பகுதியாகும். இந் நிலப்பகுதி, மேற்கில் முதலாவது அவெனியூவையும், கிழக்கு 42 ஆவது தெருவைத் தெற்கிலும், கிழக்கு 48 ஆவது தெருவை வடக்கிலும், ஈஸ்ட் ஆற்றைக் கிழக்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஃபிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் ஈஸ்ட் ஆற்றுச் சாலை (Franklin D. Roosevelt East River Drive) இக் கட்டிடத்தொகுதியின் கீழாகச் செல்கிறது.

ஐக்கியநாடுகள் சபை, தலைமை நிலையக் கட்டிடம். இன்னொரு தோற்றம்

இக் கட்டிடத் தொகுதியில் மூன்று முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. 39 மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டிடம், சபையின் உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச் சபைக் கட்டிடம், டாக் ஹாமர்ஷீல்ட் நூலகம் என்பனவே அவையாகும். இவை தவிர இத் தொகுதி, கட்டிடங்களைச் சுற்றி அமைந்துள்ள பூங்காக்களுக்கும், சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது.

ஐக்கிய நாடுகள்சபையின் இந்தத் தலைமையகக் கட்டிடத் தொகுதி, 1949, 1950 ஆம் ஆண்டுகளில், ஜோன் டி, ராக்பெல்லர் ஜூனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது.