அனைத்துலக நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனைத்துலக நீதிமன்றம்
International Court of Justice.jpg
அமைதி மாளிகை, அனைத்துலக
நீதிமன்றத்தின் தலைமையகம்.
வகை முதன்மை உறுப்பு
சுருக்கப்பெயர் ICJ, CIJ
தலைமை

அனைத்துலக நீதிமன்றத்தின் தலைவர்

டேம் ரோசலின் ஹிக்கின்ஸ் DBE
நிலை செயற்படுகிறது
நிறுவப்பட்டது 1945
இணையதளம் www.icj-cij.org

அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice) என்பது, ஐ.நா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான தனியார் ஆய்வு மையமான, ஹேக் அனைத்துலகச் சட்ட அக்காடமி என்னும் நிறுவனத்துடன் அமைதி மாளிகை (Peace Palace) என அழைக்கப்படும் கட்டிடத்தை அனைத்துலக நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் மேற்படி அக்கடமியுடன் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அவையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது. இது முன்னர் இயங்கிவந்த நிரந்தர அனைத்துலக நீதிமன்றம் (Permanent Court of International Justice) என்பதற்கான பதிலீடாகச் செயல்பட்டது. இதன் சட்டங்களும் இதன் முன்னோடியின் சட்டங்களை ஒத்ததே. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் என்பதும் அனைத்துலக அளவிலான நீதி வழங்குதலுடன் தொடர்புடையதாக இருப்பினும் அதுவும், அனைத்துலக நீதிமன்றமும் ஒன்றல்ல. [1]

இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த வழக்குகளையே கையாண்டுள்ளது எனினும், 1980 களுக்குப் பின்னர் இந்நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில், ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு, உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தடுப்பு வாக்குரிமைக்கு உட்பட்டது ஆகும்.

அமைப்பு[தொகு]

இதில் பதினைந்து நீதிபதிகள் பதவி வகிப்பர். ஒவ்வொருவருக்குமான காலம் ஒன்பது ஆண்டுகள். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுவும், பாதுகாப்புக் குழுவும் இணைந்து இவர்களை தேர்ந்தெடுக்கின்றன. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐந்து நீதிபதிகள் என்ற அளவில் தேர்தல் நடைபெறும். பதவியில் இருக்கும்போதே ஒருவர் இறப்பார் எனில், அவருக்கு மாற்றாக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை தேர்வு செய்யக் கூடாது. இந்த அமைப்பு தொடங்கியதில் இருந்து இன்றுவரை, பாதுகாப்பு குழுவில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளை நியமித்துக் கொண்டிருக்கின்றன. சீனா மட்டும் சில ஆண்டுகாலத்திற்கு தன் நாட்டு நீதிபதியை இந்த குழுவில் கொண்டிருக்கவில்லை. ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, பிரான்சு, ரசியா உள்ளிட்ட நாடுகள் அனைத்து தடவைகளிலும், தங்கள் நாட்டு நீதிபதிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் நியமித்திருந்தன. புவிப்பிரிவு அடிப்படையில் நீதிபதிகளின் நியமனம் இருக்கும். என்றாலும், சட்டப்பூர்வமாக இதற்கு விதி எதுவுமில்லை. இந்த அமைப்பின் சட்டத்தின்படி, “நாட்டின் அடிப்படையில் அல்லாமல், உயர்ந்த குணங்களின் அடிப்படையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.” இதில் பதவியில் உள்ல நீதிபதிகள் பிற இடங்களில் பணியாற்றக் கூடாது என்பது விதி. நீதிபதி ஒருவரை நீக்க நீதிமன்றத்தின் பெரும்பான்மையினரது வாக்குகள் தேவை. வழக்கின் நிலையைப் பொருத்து, தற்காலிகமாக நீதிபதிகள் இணைந்து கொள்ளலாம். அதிகபட்சமாக, ஒரு வழக்கிற்கு பதினேழு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியும். [2] நீதிபதிகளின் தீர்ப்புகள் ஒரே மாதிரியோ, வேறுபட்டோ இருக்கலாம். வேறுபட்டு இருந்தால், அதிகம் பேரின் கருத்துக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். சம அளவில் வேறுபட்ட கருத்துகள் இருந்தால், தலைவரின் முடிவே இறுதியானது.

ஐநா சபையின் சட்டத்தின் 93வது பட்டயத்தின்படி, அதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்.. [3] ஐநா சபையில் இல்லாத நாடுகளும் இதன் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம். சுவிட்சர்லாந்தும், நவுருவும் ஐநா சபையில் இல்லாத போதே இதன் உறுப்பினராகச் சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புக் குழுவும் அனைத்துலக நீதிமன்றமும்[தொகு]

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். உறுப்பினர் இந்த தீர்வை ஏற்காத நிலையில், இது பாதுகாப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு எதிராகவோ, அவற்றின் நட்பு நாடுகளுக்கு எதிராகவோ நீதிபதி தீர்ப்பளித்தால், அந்த தீர்ப்பை தடுப்பு வாக்கின் மூலம் தடை செய்ய முடியும். சில வழக்குகளில் இது நிகழ்ந்துள்ளது. அனைத்துலக நீதிமன்றத்திற்கும், பாதுகாப்புக் குழுவிற்கும் எதிரெதிர் கருத்துகள் இருந்தால், இறுதி முடிவு பாதுகாப்புக் குழுவிற்கு சாதகமாகவே இருக்கும்.

செய்முறை[தொகு]

அனைத்துலக நீதிமன்றம், புதிய சட்டங்களை எழுதி, பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிமை பெற்றுள்ளது. வழக்குகள் நிலையான வடிவத்தில் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு வரும். அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கை சமர்ப்பிக்க விரும்பாத வாதி, தன் கருத்தை பதிவு செய்யலாம். எழுத்துப் பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பின், பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

வழக்குகளின் போது, தொடர்பில்லாத ஒரு நாட்டின் நலன் பாதிக்கப்படும் எனில், அந்த நாடு வழக்கில் தன் வாதத்தை முன்னிறுத்தலாம். மூன்றாம் நபரை (நாட்டை) குறுக்கிட அனுமதிப்பது நீதிமன்றத்தின் கையில் உள்ளது. உறுப்பினர் நாடுகள் மட்டுமே வழக்கு தொடர் முடியும். தேவைப்படும் பட்சத்தில், பிற பன்னாட்டு நிறுவனங்களும், ஐநா உறுப்பு அமைப்புகளும் தங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்கப்படுவர். ஐநா சபையின் உறுப்பினர் நாடுகளிடம் அறிவுரைகள் கேட்கப்படலாம். சிக்கலான வழக்குகளின்போதே இத்தகைய கருத்துகேட்புகள் இருக்கும். கருத்துகளும் எதிரெதிராக இருப்பதும் உண்டு. இவர்கள் தங்கள் கருத்தை வாய்மூலமாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ சமர்ப்பிக்கலாம்.

எதிர்கருத்துகள்[தொகு]

  • அமைப்புகளும், தனி நபரும் தங்கள் வழக்குகளை தங்கள் நாட்டு உயர்நீதிமன்றங்களுக்கு வழக்கை எடுத்துச் செல்ல முடியும். அந்த நடைமுறை அனைத்துலக நீதிமன்றத்திற்கு இல்லை. உறூப்பினர் நாடுகள் மட்டுமே வழக்கு தொடர முடியும்.
  • அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனியாக இயங்குகிறது. உயர் மட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முடியாததால், நீதி பகிர்வில் சிக்கல் ஏற்படலாம்.
  • இதற்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. அனைத்துலக நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பையும், நிரந்த உறுப்பு நாடுகள் தடுக்கும் அதிகாரம் கொண்டுள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. Statute of the International Court of Justice. Retrieved 31 August 2007.
  2. Rules of Court of the International Court of Justice 1978 (as amended on 5 December 2000). Retrieved 17 December 2005. See also Practice Directions I-XII (as at 30 July 2004). Retrieved 17 December 2005.
  3. The jurisdiction is discussed in the entire Chapter XIV of the UN Charter (Articles 92–96). Full text
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்துலக_நீதிமன்றம்&oldid=1712056" இருந்து மீள்விக்கப்பட்டது