அமைப்புமுறையற்ற தன்மையின் கொடுங்கோன்மை
பெண்ணியம் தொடரின் பகுதி |
---|
பெண்ணியம் வலைவாசல் |
பெண்ணிய மெய்யியல் தொடரின் பகுதி |
---|
முதன்மை ஆக்கங்கள் |
முதன்மை கோட்பாட்டாளர்கள் |
முக்கிய கோட்பாடுகள் |
அமைப்புமுறையற்ற தன்மையின் கொடுங்கோன்மை (The Tyranny of Structurelessness) என்பது அமெரிக்கப் பெண்ணியலாளர் யோ ஃபிரீமன் அவர்களால் 1970 களில் எழுதப்பட்ட, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கட்டுரை ஆகும். இக் கட்டுரை 1960 களில் புரட்சிகர பெண்ணிய குழுக்களில் நிலவிய கட்டமைப்பு மற்றும் அதிகாரச் சிக்கல்களை ஆய்கிறது..[1]
1960 களில் பெண்ணிய அமைப்புகள் அமைப்புமுறையற்ற தன்மையிலான குழுக்களில் செயற்பட்டனர். இந்த "அமைப்புமுறையற்ற தன்மை"யினை விமர்சித்து யோ ஃபிரீமனின் கட்டுரை அமைகிறது. [2]
கட்டுரையின் சுருக்கம்
[தொகு]அமைப்புமுறையற்ற குழு என்ற ஒன்று இல்லை. ஒரு குழு குறிப்பிட்ட நோக்குக்காக, நீண்ட காலம் இயங்கும் என்றால் அது எதாவது ஒரு கட்டமைப்பில் தன்னை ஒழுங்குசெய்து கொள்கிறது என்கிறார். அக் குழுவின் பணிகள், அதிகாரம், வளங்கள் பரவலாக்கப்பட்டு இருக்கலாம், மக்களாட்சி முறையில் இயங்கலாம், நெகிழ்வுத் தன்மைக் கொண்டதாக இருக்கலாம் ஆனால் அதற்கு எதாவது ஒரு கட்டமைப்பு இருக்கும் என்கிறார்.
அமைப்புமுறையற்று இயங்குகிறோம் என்று கூறி இயங்கினாலும், அங்கும் முறைசாராக் கட்டமைப்பு எழும். இந்த முறைசாராக் கட்டமைப்பின் விதிகள் எல்லோருக்கும் விளங்க மாட்டாது. இந்த முறைசாராக் கட்டமைப்புக்குள் உருவாகும் உட் குழுக்கள் அல்லது மேல்தட்டு மிகப் பாதகமாக விளைவுகளைத் தரக் கூடியது. தெளிவான விதிகளுடன், அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படாமல், சகோதரிகள் முடிவுகள் எடுப்பது போல் அமைந்துவிடும். அமைப்புமுறையற்று இருந்தால் பொறுப்புடைமையை வலியுறுத்துவது கடினம் ஆகும்.
அமைப்புமுறையற்ற எண்ணம் நட்சத்திரங்களை உருவாக்கின்றது என்கிறார். இந்த இயக்கம் பேச்சாளர்களை நியமிப்பது இல்லை. ஆனால் சிலர் பேச்சாளர்களாக அல்லது நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றார்கள். இவர்கள் இயக்கத்தால் நியமிக்கப்படுவதில்லை என்பதால் அவர்களை விலக்கவும் முடியாது. பல சந்தர்ப்பங்களில் இந்தப் பெண்கள் சகாக்களால் தாக்கப்படும் சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் இவர்கள் தனிப்பட்ட பாதிப்பு அடைகிறனர், இயக்கமும் பாதிப்பு அடைகிறது.
அமைப்புமுறையற்ற தன்மையில் இயங்குவதாகக் கூறும் குழுக்களின் செயல் ஆற்றலையும் யோ ஃபிரீமன் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
இறுதியாக, மக்கள் அல்லது உறுப்பினர் ஆட்சிக்கு உட்பட்ட முறையில் ஒழுங்குபடுத்தப் பயன்படக் கூடிய அடிப்படைக் கொள்கைளை முன்வைக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alice Echols, Ellen Willis, Daring to be Bad: Radical Feminism in America, 1967-1975, University of Minnesota Press, 67, 1989 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8166-1787-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-1787-6
- ↑ "The Tyranny of Structurelessness". www.jofreeman.com. Notes from the Third Year. 1971. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.[தொடர்பிழந்த இணைப்பு]