பெண்ணிய இயக்கங்களும் கொள்கைகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல ஆண்டுகளாக பெண்ணிய இயக்கங்களும் கொள்கைகளும் உருவாகியுள்ளன. இவை தங்கள் இலக்குகள், யுக்திகள் மற்றும் இணைப்புகளில் வேறுபட்டிருந்தன. இவற்றில் பொதுவாக பல ஒற்றுமைகள் இருந்தன; பெண்ணியக் கருத்துக்களின் பல வடிவங்களுடன் சில பெண்ணியலாளர்கள் அடையாளம் காண்கின்றனர்.

இயக்கங்களும் கோட்பாடுகளும்[தொகு]

முற்போக்குவாதம்[தொகு]

முற்போக்குப் பெண்ணியம் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை அரசியல் மற்றும் சட்டவழியே வலியுறுத்துகின்றது. இது தனிநபர் சார்ந்த பெண்ணியமாகும்; பெண்கள் தங்களது செயல்களாலும் விருப்பத்தேர்வுகளாலும் சமநிலையை வெளிப்படுத்துவதையும் நிலைநாட்டுவதையும் குவியப்படுத்துகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான தனிப்பட்ட தொடர்பாடலை சீர்திருத்திற்கான களமாகப் பயன்படுத்துகிறது. முற்போக்குப் பெண்ணியலாளர்கள் அனைத்துப் பெண்களாலும் தங்கள் சமநிலையை நிலைநாட்ட முடியும் என்றும் எனவே சமூக கட்டமைப்பில் மாற்றங்கள் எதுவும் இல்லாமலே சீர்திருத்தங்களை மேற்கொள்ள இயலும் என்றும் நம்புகின்றனர். கருத்தரித்தல் மற்றும் கருக்கலைத்தலுக்கான உரிமைகள், பாலியல் துன்புறுத்தல், வாக்குரிமை, கல்வி, சமனானப் பணிக்கு சமனான ஊதியம், ஏற்கத்தகு குழந்தைப் பராமரிப்பு, ஏற்கத்தகு நலவாழ்வு, பெண்களுக்கு எதிரான பாலியல், குடும்ப வன்முறை ஆகியன இவர்களது போராட்டப் பிரச்சினைகளாக உள்ளன.[1]

அரசின்மை[தொகு]

எம்மா கோல்ட்மன், முன்னோடி அரசின்மை பெண்ணிய எழுத்தாளரும் செயற்பாட்டாளரும்.

அரசில்லா பெண்ணியம் அரசின்மையை பெண்ணியத்துடன் இணைக்கிறது. இது குடும்பத்தலைவர் அல்லது இனத்தலைவர் சார்ந்த சமூகத்தை (patriarchy) தன்னிச்சையான அடுக்கதிகாரத்தின் வெளிப்பாடாக கருதுகிறது. எனவே குடும்பத்தலைவராட்சிகு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தின் அங்கமாகவும் அரசுக்கு எதிரான அரசின்மை போராட்டமாகவும் நம்புகிறது.[2] இக்குழுவினர் பெண்ணியப் போராட்டத்தை அரசின்மைப் போராட்டத்தின் இன்றியமையா அங்கமாக கருதுகிறது. எல். சூசன் பிரவுன் "அரசின்மை என்ற அரசியல் தத்துவம் அதிகாரத்தின் அனைத்துத் தொடர்புகளையும் எதிர்ப்பதால் இயல்பாகவே அது பெண்ணியத் தத்துவமாகும்"என்கிறார்.[3][4]

அரசின்மை பெண்ணியவாதிகளில் எம்மா கோல்ட்மன், பிரெடிரிக்கா மொன்ட்செனி, வோல்ட்டைரைன் டெ கிளெயர், மரியா லாசெர்டா மௌரா, லூசி பார்சன்சு ஆகியோர் முதன்மையானவர்கள். எசுப்பானிய உள்நாட்டுப் போரின்போது, பெடரேசியோன் அனார்குசுத்தா ஐபீரிகா உடன் இணைந்திருந்த முகெரேசு லிபெரெசு (சுதந்திரப் பெண்கள்) என்ற பெண்ணிய இயக்கம் அரசின்மையையும் பெண்ணியத்தையும் சேர்த்தே ஆதரித்தது.

தற்காலத்தில் ஜெர்மைன் கிரீர், எல். சூசன் பிரவுன் அரசின்மைப் பெண்ணியத்தை ஆதரிக்கின்றனர். பொலிவியாவின் முகெரெசு கிரெயான்தொ, எசுப்பானிய ஆக்கிரமிப்பாள அமைப்பான லா எசுகலேரா கரகோலா மற்றும் பாஸ்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் லா ரிவோல்ட்டா! இத்தகைய பெண்ணியக் குழுக்கள் ஆகும்.

சோசலிச மார்க்சியப் பெண்ணியம்[தொகு]

கிளாரா ஜெட்கின், ரோசா லக்சம்பேர்க், 1910.

சோசலிசப் பெண்ணியம் மார்க்சிய கருத்தியலைப் பெண்களின் ஒடுக்கத்துடன் இணைக்கிறது; சுரண்டல், ஒடுக்கப்படுதல் மற்றும் தொழிலாளர்களுடன் குவியப்படுத்துகிறது. சோசலிச பெண்ணியலாளர்கள் பணியிடத்திலும் குடும்பச் சூழலிலும் பெண்கள் சமனில்லா கீழ்நிலையில் உள்ளதாகக் கருதுகின்றனர்.[5] விலைமாதர், குடும்ப வேலை, குழந்தைப் பராமரிப்பு, திருமணம் போன்ற வழிகளில் பெண்கள் சுரண்டப்படுவதாகவும் குடும்த்தலைவர்சார் சமூகம் பெண்களின் மதிப்பைக் குறைத்து மிகுந்த வேலைப்பளுவை அவர்களிடத்திலிருந்து பெறுவதாக கருதுகின்றனர். இவர்கள் தனிநபர் அடிப்படையில் இல்லாது சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த தங்கள் ஆற்றலைக் குவியப்படுத்துகின்றனர். இவர்கள் இந்நோக்கை அடைய ஆண்களுடன் மட்டுமன்றி பிறக் குழுக்களுடனும் இணைந்து செயற்பட வேண்டும் எனக் கருதுகின்றனர்; முதலாளித்துவ, அனைவருக்கும் தாக்கமேற்படுத்துகின்ற கட்டமைப்பில் பெண்களின் ஒடுக்கம் ஒரு அங்கமே என்கின்றனர்.[6]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிளாரா ஜெட்கின்னும் எலெனார் மார்க்சும் ஆண்களை அரக்கர்களாக கருதுவதை எதிர்த்தனர்; ஆண், பெண் இருவரின் சமனில்லா நிலைகளையும் கூடியவரை தீர்க்கும் என்று பாட்டாளி வர்க்கத்தினரின் புரட்சியை ஆதரித்தனர்.[7] பாட்டாளிகளின் இயக்கம் ஏற்கெனவே பெண்களுக்கான சமநிலையை வலியுறுத்துவதால் கிளாரா ஜெட்கின்[8][9], அலெக்சாண்டிரா கொலோண்டை[10][11] உள்ளிட்ட மார்க்சிய சிந்தனையாளர்கள், இரண்டையும் ஒன்றிணைப்பதற்கு மாறாக, பெண்ணியத்திற்கு எதிராக மார்க்சியத்தை முன்வைத்தனர்.

அடிப்படைவாதம்[தொகு]

முழுமையானப் பெண்ணியம் அல்லது அடிப்படையையே மாற்ற விரும்பும் பெண்ணியம், பாலினம் சார் ஆணாதிக்க முதலாளித்துவ அடுக்கதிகாரமே பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணமாகக் கருதுகிறது. அடிப்படைவாத பெண்ணியலாளர்கள் இயல்பாகவே ஒடுக்குகின்ற, ஓங்கியுள்ள குடும்பத்தலைவர் சார் அமைப்பு நீக்கப்பட்டாலே பெண்கள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என நம்புகின்றனர். இவர்கள் ஆண்சார் அதிகாரம் மற்றும் செல்வாக்கு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்றும் ஒடுக்கப்படுவதற்கும் சமனில்லா நிலைக்கும் இதுவே காரணம் என்றும் இந்த அமைப்பும் அதன் தகைமைகளும் இருக்கும்வரை சமூகத்தைத் திருத்த முடியாது என்றும் உணர்கின்றனர். எனவே தங்கள் இலக்குகளை அடைய இந்தக் கட்டமைப்பை முழுமையாக கட்டுடைத்து புதிய சமூக அமைப்பை மீளமைக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.[12]

மேற்சான்றுகள்[தொகு]

 1. hooks, bell. "Feminist Theory: From Margin to Center" Cambridge, Massachusetts: South End Press 1984.
 2. Dunbar-Ortiz, Roxanne (2002). Quiet Rumours. AK Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-902593-40-1. 
 3. Brown, Susan (1990). "Beyond Feminism: Anarchism and Human Freedom". in Roussopoulos, Dimitrios I.. The Anarchist papers, 3. Montreal: Black Rose Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-921689-53-5. 
 4. Brown, p. 208.
 5. "Monstrous Domesticity by Faith Wilding". பார்க்கப்பட்ட நாள் May 31, 2007.
 6. Ehrenreich, Barbara. What is Socialist Feminism, in WIN Magazine, 1976.
 7. Stokes, John (2000). Eleanor Marx (1855–1898): life, work, contacts. Aldershot: Ashgate. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7546-0113-5. https://archive.org/details/eleanormarx185510000unse. 
 8. Zetkin, Clara On a Bourgeois Feminist Petition (1895).
 9. Zetkin, Clara Lenin on the Women's Question.
 10. Kollontai, Alexandra The Social Basis of the Woman Question (1909).
 11. Kollontai, Alexandra Women Workers Struggle For Their Rights (1919).
 12. Alice Echols (1989). Daring to be bad: radical feminism in America, 1967–1975. Minneapolis: University of Minnesota Press. பக். 416. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8166-1787-2. https://archive.org/details/daringtobebadrad0000echo.