உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு (ஒலிப்பு) என்பது அரசாங்கத்தில் உயிர் வாழும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு அரசியற் சமூகமாகும்.[1] அரசுகள் அரசுரிமை உள்ளவையாக இருக்கலாம். பல அரசுகள் மாநிலங்களாக அல்லது கூட்டரசுகளாக இருக்கலாம். அவற்றில் சில கூட்டு ஒன்றியத்தினூடாக கூட்டரசில் பங்குபெறுகின்றன.[1] சில அரசுகள் வெளி அரசுரிமை அல்லது அரசியல் ஆதிக்கம் கொண்டவையாக, இன்னொரு அரசின் மீது அதன் உச்ச அதிகாரம் செயல்படக்கூடியவாறு காணப்படும்.[2] அரசு என்னும் பதம் ஒர் அரசினுடைய அரசாங்கத்தின் நிலைத்த பகுதிகளுக்குள்ளும் பாவிக்கப்படும். இது சமயமாகவோ அல்லது குடிமக்கள் நிறுவனமாகவோ காணப்படும்.மனித குலத்தின் மிகப் பழைய மற்றும் முதல் சமூக நிறுவனமாக அரசு கருதப்படுகிறது.

நவீன அரசின் உறுப்புகள்

[தொகு]

பொதுவாக ஒரு நவீன அரசில் நேரடி மற்றும் மறைமுக உறுப்புகளாக பின்வருவன அமைகின்றன.

நேரடி உறுப்புகள்

[தொகு]
 1. சட்டம் இயற்றுகிற நிறுவனம்(எ.கா பாராளுமன்றம்)
 2. சட்டத்தை நடைமுறைப்படுத்த நிறுவனம் (எ.கா. அமைச்சகங்கள்)
 3. சட்ட நடைமுறையாக்கத்தைக் கண்காணிக்கும் நிறுவனம் (எ.கா நீதிமன்றம்)

மறைமுக உறுப்புகள்

[தொகு]
 1. பண்பாட்டு நிறுவனங்கள் (எ.கா சாதி, மதம்)
 2. அறிவுத்துறை நிறுவனங்கள் (எ.கா கல்வி)
 3. பொருளியல் நிறுவனங்கள் ( எ.கா. பணம்)

அரசு என்பது அரசறிவியல் சார்ந்த ஒரு சொல் ஆகும். அதன்படி அரசு என்பது ஐந்து உறுப்புகள் இணைந்து உருவாகிறது. அவை,

 • ஆல்புல எல்லை - ஒரு அரசு தனக்கே உரிய ஒரு நில எல்லை, வான் எல்லை, கடல் எல்லை என்பனவறைக் கொண்டிருக்கும்.
 • மக்கள் தொகை - குறித்த நிலப்பரப்பில் வாழும் மக்களைக் கொண்டிருக்கும்.
 • இறைமை - அதிகாரம்
 • அரசாங்கம் - அரசை இயக்கும் கருவி
 • பன்னாட்டு அங்கீகாரம் - இது சர்வதேச நாடுகளினால் இது ஒரு அரசு என அங்கீகரிக்கப்படுவது ஆகும்.

அரசின் ஆரம்பம்

[தொகு]

அரசின் ஆரம்பமானது கிரேக்க நகர அரசுகள் தொடக்கம் கி.மு 7ம் நூற்றாண்டு முதல் நிலவுகிறது என்பதே அரசறிவியல் அறிஞர்களின் கருத்தாகும்.

அரசின் பரவல்

[தொகு]

கிரேக்க நகர அரச முறையில் ஆரம்பித்த அரசு முறை தொடர்ச்சியாக,

என வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.

அரசு பற்றிய கோட்பாடுகள்

[தொகு]

வகைகள்

[தொகு]

பல வகை அரசுகள் புழக்கத்தில் உள்ளன

 1. முடியரசு
 2. அரை முடியரசு
 3. பாராளுமன்றக் குடியரசு
 4. சோசலிசக் குடியரசு

ஒர் அரசு உருவாக முக்கியமான 5 அம்சங்கள் - 1) நிலம் அல்லது ஆள்புல எல்லை 2) மக்கள் 3) இறைமை 4 அரசாங்கம் 5) சர்வதேச அங்கீகாரம்

கீழைநாட்டுப் பேரரசுகள்

[தொகு]

தொடக்கக் கால நோமட்டிக் பழங்குடியினர் கங்கை, நைல், யூப்ரட்டீஸ் ரைகிரிஸ், மஞ்சள் ஆறு, யங்சூ போன்ற பள்ளத்தாக்குப் பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இப்பள்ளத் தாக்குகளில் மனித நாகரீகம் தோன்றி வளர்ச்சிப் பெற்றதுடன், அரசுகளும், பேரரசுகளும் தோற்றம் பெற்றன. இவ் அரசுகள் தொன்மரபுவழி மன்னர்களினால் ஆளப்பட்டது. இவர்கள் சமயம், அரசியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்ச்சியுறச் செய்தனர். சமயங்கள் பல சட்டங்களுக்குரிய தகவமைகளை அரசனின் ஒப்புதலுடன் பெற்றுக்கொண்டன. மக்கள் தமக்குரிய அடிப்படை உரிமைகள், சுதந்திரம் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. அரசகட்டளைகளுக்குக் கீழ்படிதலைத் தலையாய கடமையாகக் கொண்டனர்.இது குறித்து, கெட்டல் என்பார், கீழைத்தேச அரசு குறித்து, ஆட்சியாளர்கள் தமது மக்களை அடிமையாக்குபவர்களாகவும், வரி அளவிடத்தக்க உறுப்பினர்களாகவும் மட்டுமே வைத்திருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.[3]

கிரேக்க நகர அரசு

[தொகு]

கி.மு 1000 நூற்றாண்டில் கிரேக்கத்தில் நகர அரசுகள் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்தன. உண்மையில் அரசியல் அறிவியல் பற்றி அறிய முற்படும்போது, அரசின் தோற்ற வளர்ச்சியினைக் கிரேக்க நகர அரசின் உருவாக்கத்துடன் தொடர்புபடுத்திக் கோட்பாட்டாளர்கள் எடுத்துரைக்கின்றனர். கிரேக்க நகர அரசுகள் அரசியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், இவை உணர்வுப் பூர்வமாக வளர்ச்சியுற்ற முதல் சமூகங்களாகக் கொள்ளப்படுகின்றன.

ஐரோப்பாவில் கிரேக்கர்கள் தம்மை அரசியல் ரீதியாக நிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்தனர். இருப்பினும், தொல்குடிச் சமூக ஒழுங்கமைப்பின் அடிப்படையில் அவர்கள் பிரிந்து வேறுபட்டுக் காணப்பட்டனர். ஒருதரப்பினர் பொது மரபுக்குடியின் அடிப்படையிலும்,மற்றொரு தரப்பினர் பழங்குடி மக்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் மலைகள்,கடல் ஆகியவற்றால் பிளவுபட்டிருந்த கிரேக்கத் தீவுகளில் குடியேற்றத்தை உருவாக்கியிருந்தனர். ஏதன்ஸ் நகர அரசின் வளர்ச்சி மூலமாக கிரேக்க உள்ளூர் சமுதாயம் பரிணாம வளர்ச்சி அடைந்து நகர அரசாக மாற்றம் பெற்றதை அறியவியலும்.

ஒவ்வொரு நகர அரசுகளும் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டுக் காணப்படும். இந் நகர அரசுகள் சுதந்திரமானவையாகும். மேலும், மாகாண அளவில் மட்டுப்பட்டும் மக்கள்தொகை அடிப்படையில் மிகக் குறைந்தும் உள்ளன. கிரேக்க அரசியல் தத்துவமானது, ஒவ்வொரு நகர அரசும் அரசியல், சமூக, பொருளாதார, இலக்கிய வாழ்க்கை என்பது சிறியதாக இருக்கும் வரையிலேயே சாத்தியமாகும் என எடுத்துரைக்கிறது.

கிரேக்க நகர அரசுகள் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளன. மக்கள் அனைவரும் போர் வீரர்களாகவும்,ஆட்சிமன்ற உறுப்பினர்களாகவும் காணப்பட்டனர். அக் கிரேக்க நகர அரசுகளில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையிலிருந்தது. இதன் உறுப்பினர்கள் சட்ட ஆக்கச் செயற்பாட்டிற்காக நேரில் ஒன்று கூடினர். அதாவது, கிரேக்க நகர அரசில் மக்கள் அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.[3]

உரோமை நகர அரசு மற்றும் பேரரசுகள்

[தொகு]

இத்தாலியில் இருந்த சிறிய நகர அரசுகளில் ஒன்றுதான் உரோமை நகர அரசு என்றழைக்கப்படுகிறது. கிரேக்க நகர அரசுகளைப் போலவே, இத்தாலிய உரோமை நகர அரசுகளும் புவியியல் ரீதியாகப் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டுக் காணப்பட்டன. உரோமை நகர அரசானது கொடுங்கோல் ஆட்சியாக இருந்தது. பின்னர், மக்கள் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தும் அவர்களைத் தோற்கடித்தும் குடியரசு ஆட்சியினை நிறுவினர். உரோமையில் தோற்றுவிக்கப்பட்ட குடியாட்சி முறையில் இரட்டை நிர்வாக முறை நிலவியது. தொன்மரபின் வழி வந்த ஆட்சியாளர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனற்சபை உறுப்பினர்களும் இணைந்து ஆட்சி புரிந்து வந்தனர். இதனால், உரோமைக் குடியரசு உயர்குடி சிறுகுழுவாட்சி முறையாக மாற்றம் பெற்றது.

ஐரோப்பாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததன் காரணமாக உரோமை அரசு உரோமைப் பேரரசாக மாறியது. பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா, ஜெர்மனி, வட ஆப்ரிக்கா ஆகிய பகுதிகள் உரோமையின் ஆட்சிப் பகுதிகளாக ஆயின. உரோமைப் பேரரசும் கொடுங்கோல் தன்மையுடன் ஆட்சி மேற்கொண்டது. உரோமைப் பேரரசர் அனைத்து வகைப்பட்ட அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் உரோமையின் சட்டங்களாக காணப்பட்டன. கிறித்தவம் அரச சமயமாக்கப்பட்டது. ஆன்மீக உரிமைக் கோட்பாடு விவரணைச் செய்வது போன்று அரசர் இறைவனின் தூதராகக் கருதப்பட்டார். அவரைக் கீழ்ப்படிவது என்பது இறைவனைக் கீழ்ப்படிவதற்கு ஈடாகப் பார்க்கப்பட்டது.[3]

உரோமைப் பேரரசு அரசியல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வந்தது. அரசிற்குள் குடும்ப மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் போக்கினை வலியுறுத்திச் செயற்படுத்தியது. இருப்பினும், உரோமைக் குடிமக்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் வரையறைப்படுத்தி விரிவுப்படுத்தியது. நாடுகளின் சட்டம் என்பது உரோமைப் பேரரசின் அடிப்படைக் கொள்கையாக விளங்கியது. இதுவே, உரோமர்களின் சட்டமுறைமையின் வடிவமாக அமையப் பெற்றிருந்தது.

நிலவுடமையாளர் அரசு

[தொகு]

உரோமைப் பேரரசில் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. குடிமைச் சேவைகளில் காணப்பட்ட துணிவின்மைப் போக்குகள், அச்சவுணர்வு தன்மைகள் ஆகியவற்றால் மக்களிடையே அவநம்பிக்கைகள் உருவாயின. இவற்றிலிருந்து பேரரசை மீட்டெடுப்பது என்பது கடினப் பணியாக இருந்தது. உரோமைப் பேரரசு இதன்காரணமாகப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இக்கால கட்டத்தில் நிலவுடமையாளர்கள் எழுச்சிப் பெற்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இதனால், நிலவுடமையாளர்கள் தம்மிடம் பணியாற்றும் எளியவர்கள் மீது செலுத்தப்பட்டு வந்த அதிகாரம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது.[3]

இவ் அரசில் ஒவ்வொரு மாவட்ட நிலப்பகுதியும் ஒவ்வொரு நிலவுடமையாளரின் கீழ் இருந்தது. இவர்கள் தம்மை குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு ஆட்சிசெய்து வரத் தொடங்கினர். உரோமை அரசியல் அதிகாரமானது நிலவுடமையுடன் தொடர்புடையதாக இருந்தது. இச்சூழ்நிலையில் வலிமை பெற்ற நிலவுடமையாளர்கள் வலிமை குன்றிய நிலவுடமையாளர் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டனர். இதன்விளைவாக, மீளவும் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின. போர் நிகழ்வுகள் மற்றும் திருமண உறவுகள் மூலமாக சிற்றரசுகள் பேரரசுகளாக மாற்றம் பெற்றன. நிலவுடமைக் கோட்பாட்டின்படி அரசன் இறைவனின் ஊழியனாகச் செயல்பட்டு அரசினை வழிநடத்த கடமைப்பட்டவனாவான். அதுபோல, அரசர்கள் தமது இறைமையினை நிலவுடமையாளர்களுக்குச் செலுத்தும் விசுவாசத்தினூடாகப் பெற்றுக்கொள்ளும் வழக்கிருந்தது. இதனால், அரசன் இறந்தபின் அவனுடைய அதிகாரங்களும் பொறுப்புகளும் நிலவுடமையாளர்களுக்குச் சொந்தமானது. திருச்சபைக் காலத்தில் சமயரீதியாக உரோமை அரசுகளுக்கிடையில் இணக்கப் போக்குகள் நிலவின. இது அனைத்துலக பேரரசு என்பதைத் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டு உலக அரசுகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்தது.[3]

நவீன தேசிய அரசுகள்

[தொகு]

நவீன தேசிய அரசுகளின் வளர்ச்சியில்,பிரெஞ்சுப் புரட்சி தலையாயதாகும். கி. பி. 1789 இல் பிரெஞ்சு மக்கள் கொடுங்கோன்மை முடியாட்சிக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் மூலம் மக்களாட்சி அரசியலை முன்வைத்தனர். விடுதலையும், இறையாண்மையும் கொண்ட குடியரசாகப் பிரான்சை அறிவித்துக் கொண்டனர். அனைத்து மனிதர்களும் சில உரிமைகளுடன் பிறக்கின்றனர்; சமத்துவமாக உருவாக்கப்படுகின்றனர் என்கிற கருத்துக்களைத் தேசிய அரசுகள் வலியுறுத்தின.[3]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் அதிகரிப்புகள், பொருட்களின் உற்பத்தி மற்றும் உற்பத்திகளின் அமைப்புமுறை என்பன தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வித்திட்டன. அனைத்துலக வர்த்தகம் துரிதமடைந்ததுடன், தேசிய வர்த்தகமும், வங்கித் தொழிலும் அதிகரித்தன. மேலும், போக்குவரத்திலும், தகவல் தொடர்பிலும், சமூகப்பொருளாதார வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இம்மாற்றங்கள் நவீன தேசிய அரசுகளின் எழுச்சிக்கு உறுதுணையாக அமைந்திருந்தன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "state". Concise Oxford English Dictionary (Oxford University Press). 1995. "3 (also State) a an organized political community under one government; a commonwealth; a nation. b such a community forming part of a federal republic, esp the United States of America". 
 2. For example the Vichy France officially referred to itself as l'État français.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "அரசு: தோற்றமும் வளர்ச்சியும்". பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசு&oldid=2764797" இலிருந்து மீள்விக்கப்பட்டது