உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாண்டிரா கொலோண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Young woman facing right, wearing high-necked, embroidered dress
அலெக்சாண்டிரா கொலோண்டை

அலெக்சாண்டிரா கொலோண்டை (உக்குரேனிய மொழி: Олександра Михайлівна Коллонтай, ரசிய மொழி : Александра Михайловна Коллонтай - née Domontovich, Домонтович) (மார்ச் 31 1872 - மார்ச் 9, 1952) ஒரு ரஷிய பெண் கம்யூனிஸ்ட் புரட்சியாளர். இவர் லெனினின் மந்திரி சபையில் இருந்த ஒரே பெண்மணி .[1]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

அலெக்சாண்டிரா கொலோண்டை ஒரு ரஷ்ய ஜெனரலுக்கும் , பின்லாந்தை சார்ந்த ஒரு பெரும் நிலச்சுவான்தாரின் மகளுக்கும் , 1872ம் ஆண்டு பிறந்தார். மகள் ‘தேவையற்ற விரும்பத்தகாத போக்கினால்’ பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக உயர்கல்வி பயில கொலோண்டையை அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை .

திருமண வாழ்க்கை

[தொகு]

தனது திருமணம் குறித்த பிரச்சினை வரும்போது, அலெச்சாண்டிரா தனது பெற்றோரின் மரபு ரீதியான அணுகுமுறைக்கு எதிராய் கலகம் செய்தார். அவரது மூத்த சகோதரிக்கு, பத்தொன்பது வயது இருக்கும் போது, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள எழுபது வயதுகாரருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. மரபுரீதியாக பணத்துக்காக செய்து வைக்கப்படும் இந்த திருமணத்தை அலெக்சாண்டிரா வெறுத்தார். தான் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அதில் தனது பெற்றொர்களின் பேச்சைக் கேட்பது இல்லை எனவும் உறுதியாய் முடிவெடுத்தார்.

1893ம் ஆண்டு, தனது இருபத்தோராம் வயதில், விளாடிமிர் கொலோண்டை என்ற தனது மாமா மகனை அவர் திருமணம் புரிந்து கொண்டார். விளாடிமிர் ஒரு பொறியாளர் என்றாலும், காசு கையில் இல்லாதவர். திருமணம் செய்து கொள்ள பணம் தேவையில்லை, காதல்தான் அவசியம் என அலெக்சாண்டிரா தனது பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதற்காக, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக விளாடிமிரை த் திருமணம் புரிந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அலெக்சாண்டிரா தனது கணவனை உயிருக்கும் மேலாய் நேசித்தார் என்பது உண்மைதான் என்றாலும் அந்த காதல் ஒரு எல்லையை கடந்து, அவர் பெண் என்ற வகையில் பெரும் தியாகத்தை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து நின்றது. அது கொலோண்டைக்குள் பெரும் கலகத்தை தூண்டிக் கொண்டே இருந்தது. அவர் நேசித்து திருமணம் செய்து கொண்டவரை விட்டு வெளியே வராமல் அவருடன் அண்டி இருந்தால், தனது சுயம் என்ற அம்சமே இல்லாது ஒழியும் அபாயம் உள்ளது என்பதை அலெக்சாண்டிரா புரிந்து கொண்டார். தனது சுயம் என்ற அம்சம் இழந்து, காதல் என்ற சிறைக்குள் அவர் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அந்த காதல் அவரது முழு சக்தியையும் கிரகித்துக் கொண்டு, அவரை சமூகத்திற்கு ஒரு பயனற்ற சக்கையாகதான் தரும் என்பதும் அலெக்சாண்டிராவின் கருத்து.

உயர்கல்வி

[தொகு]

1896ல் அலெக்சாண்டிரா தனது கணவரையும் மகனையும் விட்டு விட்டு, சூரிச் சென்று அங்குள்ள பல்கலைகழகத்தில் பேராசிரியர் ஹுன்ரிச் ஹெர்க்னரிடம் அரசியல் பொருளாதாரம் கற்றார். அப்போது அவர் பிளெக்னேவ், ரோசா லக்சம்பர்க், கார்ல் கௌட்சிகி போன்றோர்கள் எழுதியவற்றை படித்து தன்னை தயார் செய்து கொண்டார். தனது வாழ்க்கையை பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர நடவடிக்கைக்காக அர்பணிப்பது என்று முடிவு எடுத்துக் கொண்டார். அப்போது கொலோண்டை லண்டனுக்கு சென்று, அங்கு தொழிலாளர்கள் வரலாறு குறித்து நிபுணத்துவம் பெற்றிருந்த, சிட்னி வெப் மற்றும் பெட்ரிச் வெப் போன்றோர்களை சந்தித்தார். அவர்களது பேபியன் சீர்திருத்த கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவர்களை வெறுத்தொதுக்கினார்.

போராட்ட வாழ்க்கை

[தொகு]

1895ம் வருடம் 12000 பேர் பணிபுரியும் கிரென்கோல்ம் நெசவுத் தொழிற்சாலைக்கு கொலோண்டை சென்றார். அதிகமான பெண் பாட்டாளிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில், பெண்கள் 12 முதல் 18 மணி நேரம் தினமும் பணிபுரிய வேண்டும். தொழிற்சாலைக்குள்ளேயே சிறைப்படுத்தப்பட்டுள்ள அவர்கள், அங்குள்ள துயிற்கூடத்திலேயே தூங்கி காலத்தை கழிக்க வேண்டியதுதான். அவர் அந்த தொழிற்சாலையை சுற்றி பார்க்கும் போது, ஒரு இளம்பெண்ணின் குழந்தை இறந்து போனது. ஆனால் எதுவும் நடக்காதது போல், எல்லாம் அங்கு வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது.இந்த தெழிலாளிகளுக்கு எதாவது செய்ய வேண்டும் என அலெக்சாண்டிரா நினைத்தார். அவர் மார்க்சிய இயக்கத்தில் சேர்ந்து, இந்த தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபட முனைந்தார். 1899ல் அவர் படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பினார். செயிண்ட் பீட்டஸ்பர்க் திரும்பிய கொலோண்டை, அங்குள்ள சட்டபூர்வமற்ற ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். அதன் கொள்கை பரப்பாளாராயும், எழுத்தாளாராயும் பணிபுரிந்தார்.

அந்த காலகட்டத்தில், பின்லாந்தின் சுதந்திரம் ஜாரின் பிற்போக்குத்தனமான கொள்கைனால் அச்சத்திற்கு உள்ளாயிருந்தது. கூடவே தாத்தாவின் வீட்டில் வசித்த காலத்தில், அலெக்சாண்டிரா பின்லாந்து குறித்த நேரடி அனுபவமும் பெற்றிருந்தார். ஆகவே அவர் பின்லாந்தின் தேசிய விடுதலைக்காக உறுதியான ஆதரவு தெரிவித்தார். பின்லாந்து தொழிற்சாலைகளை வைத்து பார்க்கும் போது, பின்லாந்து பாட்டாளிகளின் வாழ்க்கை தரம் மட்டும் பணிபுரியும் சூழல் எப்படியுள்ளது என்று நேரடியான ஆராய்ந்து, முழுமையான ஒரு அரசியல் பொருளாதார ஆய்வை கொலோண்டை மேற்கொண்டார். அந்த ஆய்வுப் புத்தகம் 1903ம் ஆண்டு வெளியானது.

பெண் பாட்டாளிகளை திரட்டும் போராட்டங்கள்

[தொகு]

அடுத்து அவர் பெண் பாட்டாளிகளை திரட்டும் போராட்டத்தில் தீவிரமாய் ஈடுபட்டார். அப்போது சமூக மாற்றத்தை கொண்டுவர, பெண் பாட்டாளிகளை எப்படி திரட்டுவது என்பது குறித்து, சரியான மார்க்சிய செயல்திட்டம் இல்லை. குருப்ஷ்கயா அவர்கள் 1900ம் ஆண்டு வெளியிட்ட, ‘பெண் பாட்டாளிகள்’ என்ற 24 பக்க துண்டுபிரசுரம் மட்டும்தான் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியிடம் பெண் பாட்டாளிகள் குறித்து கைவசம் உள்ள ஒரே ஆவணம்.
1905ல் புகழ்பெற்ற முதல் ரஷ்ய புரட்சியில் ஆற்றிய பணிகளின் மூலந்தான், பெண்கள் பிரச்சினையை எப்படி கையாளுவது என்ற படிப்பினையை அலெக்சாண்டிரா கொலோண்டை கற்றுக் கொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alexandra Kollontai 1873-1952". Charles Sturt University. Archived from the original on 2008-06-10. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டிரா_கொலோண்டை&oldid=3541916" இலிருந்து மீள்விக்கப்பட்டது