உள்ளடக்கத்துக்குச் செல்

விளாதிமிர் லெனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விளாடிமிர் லெனின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விளாதிமிர் லெனின்
Vladimir Lenin
Владимир Ленин
சோவியத் ஒன்றியத்தின் அரசுத்தலைவர்
பதவியில்
30 திசம்பர் 1922 – 21 சனவரி 1924
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்அலெக்சி ரீக்கொவ்
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் தலைவர்
பதவியில்
8 நவம்பர் 1917 – 21 சனவரி 1924
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்அலெக்சி ரீக்கொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விளதீமிர் இலீச் உலியானொவ்

(1870-04-22)22 ஏப்ரல் 1870
சிம்பீர்ஸ்க், உருசியப் பேரரசு
இறப்பு21 சனவரி 1924(1924-01-21) (அகவை 53)
கோர்க்கி, உருசியா, சோவியத் ஒன்றியம்
இளைப்பாறுமிடம்லெனின் நினைவாலயம், மாஸ்கோ, உருசியா
தேசியம்உருசியப் பேரரசு
அரசியல் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் முன்னணி (1895–1898)
துணைவர்
உறவுகள்
  • அலெக்சாந்தர் உலியானொவ் (உடன்பிறப்பு)
  • அன்னா உலியானொவ் (உடன்பிறப்பு)
  • திமீத்ரி உயியானொவ் (உடன்புறப்பு)
  • மரியா உலியானொவா (உடன்பிறப்பு), மேலும் மூவர்
பெற்றோர்
  • இலியா நிக்கொலாயெவிச் உலியானொவ்
  • மரியா அலெக்சாந்திரொவ்னா பிளாங்க்
கல்விசட்டம்
முன்னாள் கல்லூரிசென் பீட்டர்ஸ்பேர்க் அரசுப் பல்கலைக்கழகம்
மத்திய நிறுவன உறுப்புரிமை
  • 1917–1924: முழு உறுப்பினர், 6-வது, 7-வது, 8-வது, 9-வது, 10-வது, 11-வது, 12-வது பொலித்பியூரோ
  • 1917–1924: முழு உறுப்பினர், 6-வது, 7-வது, 8-வது, 9-வது, 10-வது, 11-வது, 12-வது மத்திய குழு
  • 1905–1907: முழு உறுப்பினர், 3-வது மத்திய குழு

படைத்துறைப் பதவிகள்
  • 1918–1920: தலைவர், தொழிலாளர் மற்றும் பாதுகாப்புப் பேரவை
சோவியத் ஒன்றியத்தின் தலைவர்
  • ஆரம்பத் தலைவர்
  • Stalin

விளாதிமிர் இலீயிச் லெனின் (Vladimir Ilyich Lenin, உருசியம்: Влади́мир Ильи́ч Ле́нин; ஒலிப்பு, ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924), ஒரு உருசியப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அரசத்தலைவரும், பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

பெயர்க்காரணம்

[தொகு]

"லெனின்" என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாதிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாதிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை நிக்கலாய் லெனின் (Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.

லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு லேனா என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ஜார்ஜி பிளிகானொவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

குழந்தைப் பருவம் 1870–1887

[தொகு]
லெனின் நான்காம் அகவையில்

விளாதிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் லெனினுக்கு இருந்தனர். இல்யா உல்யனாவ் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இவருடைய தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அண்ணன் அலெக்ஸாண்டர் ஜார் மன்னனை கொல்ல முயன்றதுக்காக 1887 ஆம் ஆண்டு மார்ச் 1ம் நாள் கைது செய்யப்பட்டரார். அதனையடுத்து 1887 ஆம் ஆண்டு மே 8ம் நாள் ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார்.

பல்கலைக்கழகம் மற்றும் அரசியல் தீவிரவாதம்: 1887–1893

[தொகு]
லெனின், அண். 1887.
கார்ல் மார்க்ஸ் (இடது) மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (வலது) கோட்பாடுகளில் லெனின் தனது சகோதரர் போல் ஆர்வம் கொண்டார்

1887 ஆம் ஆண்டு கசான் பல்கலைக் கழகத்தில் லெனின் சேர்ந்தார், அப்பொழுது அன்னையுடன் சில்பர்க் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கினார். அங்கு தனது சகோதரர் அலெக்ஸாண்டரைப் போல தீவிரமான கருத்துகளை உடைய லாசர் போகோராக் (Lazar Bogoraz) உடன் சந்திப்பு நேர்ந்தது. லாசர் மக்கள் சுதந்திர கட்சி என்ற உழைப்பாளர்களின் நலன் சார்ந்த இடதுசாரி அமைப்பினை ஏற்படுத்தியிருந்தவர்.

லெனின் பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பினை படித்தார். அப்பொழுது மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார், இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக் கழகம் அவருக்கு படிப்பு தர மறுத்தது. இதனையடுத்து லெனின் தானே சட்டப்படிப்பினை ஒன்றரை வருடத்தில் படித்து தேர்ந்ததாக கூறப்படுகிறது.

தொழிலாளர் விடுதைலை இயக்கம் என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளை பரப்புரை செய்தார். 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல். ஸ்பார்க் என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.

விளாதிமிர் லெனின் தன் இளமைக் காலத்தில் நடாயா கிரூப்ஸ்காயா என்ற பள்ளி ஆசிரியயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரையும் ஜார் அரசு சைபீரியாவிற்கு நாடுகடத்தியது.

ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சி

[தொகு]

ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த முக்கிய அரசியல் தலைவர் லெனின் ஆவார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான "லெனின்" என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். பொதுவுடமைக் கொள்கையை நிறுவிய உலகப் புகழ்பெற்ற கார்ல் மார்க்ஸ் என்பாரின் ஆர்வம் மிக்க சீடரான லெனின், மார்க்ஸ் அவ்வப்போது கோடி காட்டிய கொள்கைகளை நடைமுறையில் தீவிரமாகச் செயற்படுத்தினார் லெனின் உருவாக்கிய பொதுவுடமைக் கொள்கை வரலாற்றில் மிகுந்த செல்வாக்கு மிக்க மாந்தர்களுள் ஒருவராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

சைபீரியாவில் இவர் கழித்த இந்த மூன்றாண்டுக் காலம் இவருக்கு அத்துணை துயர்மிகுந்ததாக இருக்கவில்லை. அங்கு இருந்தபோதுதான் லெனின் 1898 இல் தமக்கு தோழியராக இருந்த குரூப்ஸ்காயா என்பவரை மணந்து கொண்டார். "ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்த வரலாறு" என்ற நூலையும் அப்போதுதான் எழுதினார். இவருடைய சைபீரிய வாழ்க்கை 1900 பிப்ரவரியில் முடிவடைந்தது. சில மாதங்களுக்குப் பிறகு இவர் மேற்கு ஐரோப்பாகவுக்குச் சென்றார். அங்கு இவர் ஒரு தொழில்முறைப் புரட்சி வாதியாக சுமார் 17 ஆண்டுகள் கழித்தார். அதுபோது, இவர் சார்ந்திருந்த ரஷ்யன் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி "போல்ஷ்விக்" கட்சி என்றும், "மென்ஷவிக்" கட்சி என்றும் இரண்டாக உடைந்தது. லெனின் பெரிய கட்சியாக இருந்த "போல்ஷ்விக்" கட்சிக்குத் தலைவரானார். 1914 இல் தொடங்கிய முதல் உலகப் போர் லெனினுக்குப் பெரிய வாய்ப்புகளைத் தேடித் தந்தது. அந்தப் போரில் ரஷியாவுக்குப் பெருந்தோல்வி ஏற்பட்டது. பொருளாதாரத் துறையில் பேரழிவுகள் ஏற்பட்டன.

1917 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜார் அரசு கவிழ்க்கப்பட்டது. ரஷியாவில் மக்களாட்சி அரசு ஏற்படலாம் என்று கூடத் தோன்றியது. ஜார் ஆட்சி வீழ்ந்த பின்னர் ரஷியாவில் ஜனநாயகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு தற்காலிக அரசை அமைத்திருந்தன. ஆனால், அந்தக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் வலிமை அக்கட்சிகளுக்கு இல்லை என்பதையும் லெனின் அறிந்து கொண்டார். கட்டுக் கோப்பும் ஒழுக்கமும் வாய்ந்த தம்முடைய பொதுவுடைமைக் கட்சி எண்ணிக்கையில் சிறியதாக இருப்பினும், அது ஆட்சியைப் பிடிப்பதற்கு அரிய வாய்ப்பி உருவாகியிருப்பதையும் லெனின் கண்டார். எனவே, தற்காலிக அரசை கவிழ்த்துவிட்டு பொதுவுடைமை அரசை நிறுவும்படி அவர் போல்ஷ்விக் கட்சியினரைத் தூண்டினார். "இப்போது இல்லையெனில் இனி எப்போதும் இல்லை" என்று கூறி அவர்களை ஊக்குவித்தார்.

1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி

[தொகு]

1917 ஜூலையில் நடந்த ஒரு புரட்சி முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தப் புரட்சியின் எதிரிகள் இவரை ஜெர்மன் கையாள் என்று காட்ட முயன்றனர். அதனால் இவர் முதலில் பெட்ரோகிராடு நகரில் ஒரு குடும்பத்தினருடனும், பின்னர், பின்லாந்திலும் ஒளிந்திருந்தார். பின்னர், 1917 நவம்பரில் நடந்த இரண்டாவது புரட்சி வெற்றி பெற்றது. லெனின் தாயகம் திரும்பி, புதிய ஆட்சியின் தலைவரானார்.அரசுத் தலைவர் என்ற முறையில் லெனின் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டார். ஆயினும், மக்கள் நலனுக்குப் பயன்படுகின்ற கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தீவிர நாட்டமுடையவராக இருந்தார். லெனின் முதலில் முழுமையான சோசலிசப் பொருளாதாரத்தை மிக விரைவாக ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டினார். ஆனால், இந்த முயற்சி தோல்வி கண்டபோது இவர் தமது கொள்கையை மாற்றிக் கொண்டார். முதலாளித்துவமும் சோசலிசமும் இணைந்த ஒரு கலப்புப் பொருளாதாரத்தை வகுத்துச் செயற்படுத்தினார். இந்தப் பொருளாதார முறையே சோவியத் ஒன்றியத்தில் பல ஆண்டுகள் வரை தொடர்ந்து நீடித்தது.

பிப்ரவரி புரட்சி

[தொகு]

முதலாம் உலகப் போரினைத் தொடர்ந்து ரஷ்யாவில் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். வறுமை, பட்டினி சூழ்ந்தது. இப் போரினை லெனின் போன்ற தலைவர்கள் கொள்ளக்காரப் போர் என்று வர்ணித்தனர். ஜார் மன்னருக்காக போராடிய தொழிலாளர்கள் தாங்கள் முதலாளிகளால் சுரண்டப்படுவதை லெனின் பிரட்சாரம் மூலம் அறிந்தனர். போரினை நிறுத்த மக்கள் அனுப்பிய மனுக்கள் ஜார் மன்னரால் நிராகரிப்பட்டதால், 1917ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களால் இப்புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இப்புரட்சியால் ரஷ்யாவின் ஆட்சியை கைப்பற்றிய மிதவாத கம்யுனிஸ்டுகள் ஜார் மன்னரையும் அவரது குடும்பத்தினைரையும் சுட்டுக் கொன்றார்கள். இருப்பினும் உணவுப் பற்றாற்குறை ரஷ்யாவில் நிலவி வந்தது.[1]

அக்டோபர் புரட்சி

[தொகு]

அக்டோபர் புரட்சியானது (October revolution) 1917ல் நிகழ்த்தப்பட்ட பிப்ரவரி புரட்சியை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்டதாகும். இது விளாதிமிர் லெனின், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோர் தலைமையில் போல்ஷெவிக்குகளால் நடத்தப்பட்டது. போல்ஷெவிக் புரட்சி என்றும் இப்புரட்சி அறியப்படுகிறது. இதன் மூலம் இடைக்கால ரஷ்ய அரசாங்கம் வீழ்ந்து 1918லிருந்து 1920 ரஷ்யா உள்நாட்டு கலகங்களை சந்தித்தது. அதன் பிறகு 1922ல் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது.

சிலர் இப்புரட்சியினை நவம்பர் புரட்சி என்றும் அழைக்கின்றனர். பிப்ரவரி புரட்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த மிதவாத கம்யுனிஸ்டுகளால் ரஷ்யாவில் பெரும் மாற்றம் நிகழவில்லை. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி லெனின் தனது நண்பர்களால் உருவாக்கப்பெற்ற செம்படையினைக் (செஞ்சேனை) கொண்டு ரஷ்யாவினை கைப்பற்றினார். நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை வளைத்த இப்படைகளைக் கண்டு இடைக்கால அரசின் வீரர்கள் விலகி நிற்க, வன்முறையில்லாமல் ரஷ்யா கம்யுனிஸ்ட் நாடாக மாறியது.

லெனின் சிறப்புகள்

[தொகு]

லெனின் ஒரு செயல்வீரராக விளங்கினார். ரஷியாவில் பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் கண்ணுங் கருத்துமாகப் பாடுபட்டார். அவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை அரசியல் செயற்படுத்தினார். 1917 நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள். லெனின் முக்கியமாக அரசியல் தலைவராக விளங்கிய போதிலும், அவர் தமது புரட்சிகரமான எழுத்துகளில் மூலமாகவும் கணிசமான அளவுக்குச் செல்வாக்கு பெற்றார்.

லெனின் கொள்கைகள்

[தொகு]

லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர். உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். வன்முறை இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தி வந்தார். "வர்க்கப் போராட்டத்தில ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை!" என்று அவர் வலியுறுத்தினார். "தொழிலாளர் சர்வாதிகாரம்" பற்றி மார்க்ஸ் இங்குமங்கும்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லெனின் இந்தக் கோட்பாட்டைத் தீவிர வெறியுடன் பின்பற்றினார். "தொழிலாளர் சர்வாதிகாரம் என்பது வன்முறையின் அடிப்படையில் அமைந்த அதிகாரமேயன்றி வேறில்லை. அந்த அதிகாரத்தை சட்டத்தினாலோ, ஆட்சியினாலோ கட்டுப்படுத்த முடியாதது" என்று அவர் நம்பினார். லெனினுடைய பொருளாதாரக் கொள்கைகளை விட, சர்வாதிகாரம் பற்றிய அவரது கொள்கைகள் தாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். சோவியத் அரசின் தனிச் சிறப்புக்குக் காரணம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல (வேறு பல நாடுகளிலும் சோசலிச அரசுகள் ஆள்கின்றன). மாறாக அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் உத்திகள் தாம் தனித்தன்மை வாய்ந்தனவாகும். லெனினின் காலம் முதற்கொண்டு உலகின் ஒரு முறை நிலையாக வேரூன்றி விட்ட எந்த ஒரு பொதுவுடைமை அரசும் கவிழ்க்கப்பட்டதில்லை. பொதுவுடைமை அரசுகள் ஆட்சியைப் பிடித்தவுடன், நாட்டிலுள்ள பத்திரிகைகள், வங்கிகள், திருச்சபைகள், தொழிற்சங்கங்கள் முதலிய அதிகார நிறுவனங்கள் அனைத்தையும் தம் வலுவான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து, உள் நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பினை அடியோடு ஒழித்து விடுகின்றன. அவர்களுடைய படைக்கலங்களில் பலவீனமானது ஏதேனுமொன்று இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த பலவீனத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

லெனின் சாதனைகள்

[தொகு]

பொதுவுடைமை இயக்கம், மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இயக்கம் என்பதில் ஐயமில்லை. அந்த இயக்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் மார்க்சா, லெனினா என்பது முக்கியமில்லை. மார்க்ஸ், லெனினுக்கு முன்னர் வாழ்ந்தவர்; லெனின் மீது செல்வாக்குச் செலுத்தியவர். இந்தக் காரணத்தினாலேயே மார்க்சை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதுகிறேன். எனினும், ரஷியாவில் பொதுவுடைமை நிறுவுவதில் லெனினுடைய நடைமுறை அரசியல் திறமைதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது எனலாம். லெனின் இல்லாதிருந்திருந்தால், ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒரு வாய்ப்புக்காக பொதுவுடைமைவாதிகள் மேலும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கலாம்; அவர்களுக்கு வலுவான எதிர்ப்புத் தோன்றி, அவர்கள் ஆட்சியைப் பிடிக்காமலே போயிருக்கலாம், அவர் மிகக் குறுகிய காலமே ஆட்சியிலிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர் சர்வாதிகாரம் நிறுவப் பெற்றதற்கு, லெனினுக்குப் பின் ஆட்சிக்கு வந்து லெனினைவிடவும் ஈவிரக்கமின்றி ஆட்சி புரிந்த ஜோசஃப் ஸ்டாலினும் முக்கிய காரணமாவார். லெனின் தமது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார். அவர் ஈடிணையற்ற எழுத்தாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய நூல்கள் 55 தொகுதிகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. லெனின் தமது புரட்சிப் பணியில் தீவிர ஈடுபாடுடையவராக இருந்தார். அவர் தமது குடும்பத்தை நேசித்த போதிலும், அந்தக் குடும்பப் பாசம் தமது அரசியல் பணிக்கு இடையூறாக இருக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. லெனின் தமது ஆயுள் முழுவதும் அடக்குமுறையை ஒழிப்பதற்குப் பாடுபட்டபோதிலும், அவருடைய சாதனைகளின் நிகர விளைவாக அமைந்தது உலகின் கணிசமான பகுதியில் தனிநபர் சுதந்திரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகும்.

லெனின் மரணம்

[தொகு]

விளாதிமிர் லெனின் மீது 1918-ஆம் ஆண்டு துப்பாக்கி சூடு நடந்தது. அதை ஒரு ரஷ்யப் பெண் நிகழ்த்தினார். இருப்பினும் அந்நிகழ்வில் லெனின் உயிர் பிழைத்தார்.

லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் உழைத்து வந்தது, அவருடைய உடல் நலத்தைச் சீர் குலைத்தது. அதனால் 1922 மே மாதம் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவர் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியது. பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. டிசம்பரில் இவரது வலக்கையும் செயல் இழந்தது. அது முதல் முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவினால் நாடெங்கும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடல் தைலமூட்டி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைக்கப் பெற்றது. அந்த உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

உடல்

[தொகு]

லெனின் இறந்தாலும் அவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. அலங்கரிக்கப்பெற்ற நிலையில் அவரது உடல் பொது மக்களின் பார்வைக்கு 1930ம் ஆண்டில் இருந்து வைக்கப்பெற்றது இவ்விடத்திற்கு லெனின் மாஸோ லியம் என்று பெயர். கிறிஸ்துவ மத வழக்கப்படி உடலானது புதைக்கப்பட வேண்டும் என கிறிஸ்துவ குருமார்கள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருந்தனர். 1989-ல் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் லெனின் உடலை அவருடைய தாயாரின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டுமென கூறியதை அடுத்து பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு லெனின் உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை பரவலாக எழுந்தது. இதனைத் தொடர்ந்து விளாதிமிர் புடினின் ஆட்சிகாலத்தில் லெனின் உடல் அடக்கம் செய்யப்படுமென அறிவிப்பு வெளிவந்தது.

எதிர் கால விஞ்ஞான வளர்ச்சி இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை அடையக்கூடும் என்று அப்போதைய பொதுவுடமை தலைவர்கள் கருதியமையால் லெனின் உடல் பாதுகாக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

நூல்கள்

[தொகு]
  • லெனின் 100 - கம்யூனிஸத்தின் செயல் தந்தை - பசுமைக்குமார்
  • லெனின் - மருதன்
  • லெனினுக்கு மரணமில்லை - மரியா பிரிலெழாயெவா
  • லெனின் - ஸ்டாலின்
  • லெனின் அரசும் புரட்சியும் - ரா.கிருஷ்ணய்யா
  • முதல் காம்ரேட் லெனின் - மருதன்jj

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-20. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_லெனின்&oldid=4027560" இலிருந்து மீள்விக்கப்பட்டது