உள்ளடக்கத்துக்குச் செல்

ரோசா லக்சம்பேர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசா லக்சம்பேர்க்
Rosa Luxemburg
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மார்ச் 1871
சமோஸ்க், விஸ்தூலா நிலம், ரஷ்யா
இறப்பு15 சனவரி 1919
பெர்லின், செருமனி
குடியுரிமைசெருமனியர்
தேசியம்போலந்து
அரசியல் கட்சிசெருமனியக் கம்யூனிஸ்ட் கட்சி
துணைவர்குஸ்தாவ் லூபெக்
துணைலியோ யோகித்சே
உறவுகள்எலியாஸ் லக்சம்பேர்க் (தந்தை) லீன் லோவென்ஸ்டைன் (தாய்)
தொழில்புரட்சியாளர்

ரோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg, மார்ச் 5, 1871[1] – சனவரி 15, 1919), போலந்தில் பிறந்த ஒரு செருமானிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும், பொருளியலாளரும், ஒரு புரட்சியாளரும் ஆவார்.

செங்கொடி (Die Rote Fahne) என்ற இதழை இவர் ஆரம்பித்தார். முதலாம் உலகப் போரில் செருமனி பங்குபற்றியதை செருமனி சமூக-மக்களாட்சிக் கட்சி ஆதரித்ததைத் தொடர்ந்து இவர் மற்றொரு மார்க்சியவாதியான கார்ல் லீப்னெக்ட்டுடன் இணைந்து "புரட்சிகர ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி" (Spartacist League) என்ற அமைப்பை உருவாக்கினார்.[2] இதுவே பின்னர் செருமனியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரைப் பெற்றது. ஸ்பர்டாசிஸ்ட் லீக் தலைமையில் 1919 சனவரியில் நடத்தப்பட்ட பேர்லின் புரட்சி தோல்வியில் முடிந்தது. ரோசா லக்சம்பேர்க்கின் ஆதரவிலான இப்புரட்சி ஃப்ரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவக்குழுவினரால் நசுக்கப்பட்டது. ரோசா மற்றும் லீப்னெக்ட் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் இறப்பின் பின்னர் ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் சனநாயக சோசலிஸ்டுகளாலூம் மார்க்சியவாதிகளாலும் மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

போலந்தில்

[தொகு]
கிளாரா செட்கின் உடன் லக்சம்பேர்க் (வலது)
செருமனிய புரட்சியின்போது போடப்பட்ட தடை அரண்
பெர்லினில் ரோசா லக்சம்பேர்கின் சிலை

ரொசாலியா லக்சம்பேர்க் மார்ச் 5, 1870 அல்லது 1871 இல் யூத இன நடுத்தரக் குடும்பத்தில் உருசியக் கட்டுப்பாட்டில் இருந்த போலந்து நகரான சாமொஸ்க்கில் பிறந்தார். மர வியாபாரியான எலியாஸ் லக்சம்பேர்க் மற்றும் லைன் லோவென்ஸ்டீன் தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரே லைன் லோவன்ஸ்டீன் தம்பதிக்கு கடைசி குழந்தையாவார். பின்னொரு நாளில் தனது தந்தையின் தாராளமயமாக்கள் கருத்துக்கள் தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக லக்சம்பெர்க் நினைவு கூறுகிறார்.அவரது தாயார் மத நம்பிக்கைகளில் ஈடுபாடு உடையவராகவும் புத்தகங்களை நன்கு படிக்கக்கூடியவராகவும் இருந்தார் [3] . அவரது குடும்பத்தினர் செருமானிய மற்றும் போலிய மொழியையும் பேசினர் லெக்சம்டிபர்க் கூடுதலாக உருசிய மொழியையும் கற்றறிந்தார். ஐந்து வயதிலேயே இவரைப் பாதித்திருந்த இடுப்பு வலியால் இவர் நிரந்தர ஊனமுடையவரானார்.[4].

1873 இல் குடும்பத்துடன் வார்சாவுக்குக் குடிபெயர்ந்த ரோசா 1886 இல் இருந்து போலந்தின் இடது சாரி பாட்டாளிக் கட்சியில் (Proletariat party) சேர்ந்தார். பொது வேலைநிறுத்தமொன்றை முன்னின்று நடத்தினார். இதனை அடுத்து இவரது கட்சியின் 4 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதில் கட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் ரோசா தனது சகாக்களை இரகசியமாகச் சந்தித்து வந்தார்.

1889 இல் இவர் சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். அங்குச் சூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய துறைகளில் உயர் கல்வியைப் பெற்றார். இங்குதான் லியோ ஜோகித்சேவை சந்தித்தார். இவர்களுக்கிடையேயான உறவு 1907 இல் ஜோகிசத்சேக்கு அவரது உருசியத் தலைமறைவு வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னொரு உருசியத் தோழியுடனான உறவின் பின் முறிந்தது. ஆனால் அவர்களது முன்னைய நெருக்கமும் அரசியல் தோழமையும் ரோசாவின் இறுதி நாட்கள்வரை இருவரையும் இணைத்திருந்தது.

1893 இல் ஜோகித்சேவுடன் இணைந்து "தொழிலாளர் குரல்" (Sprawa Robotnicza) என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். போலந்து சோசலிசக் கட்சியினரின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்துத் தமது பத்திரிகையில் எழுதினார். புரட்சியின் மூலமே போலந்தை விடுவிக்க முடியும் என்று நம்பினார். குறிப்பாகச் செருமனி, ஆஸ்திரியா, மற்றும் ரஷ்யாவில் புரட்சி வெடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். முதலாளித்துவத்துக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்பதும் இவரது கொள்கையாக இருந்தது.

செருமனியில்

[தொகு]

1898 இல் குஸ்தாவ் லூபெக் என்பாரைத் திருமணம் புரிந்து செருமனியக் குடியுரிமை பெற்று பெர்லின் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்குச் செருமனியின் சமூக சனநாயகக் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

1914, ஆகஸ்ட்டில் கார்ல் லீப்னெக்ட், கிளாரா செட்கின், பிரான்ஸ் மேரிங் ஆகியோருடன் இணைந்து Die Internationale என்ற இயக்கத்தை லக்சம்பேர்க் ஆரம்பித்தார். இவ்வியக்கம் 1916 ஆம் ஆண்டில் ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி (Spartacist League) என்ற பெயராக மாற்றப்பட்டது. ஸ்பர்த்தாக்கசு என்ற பெயரில் போருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை எழுதிச் சட்டவிரோதமாக அச்சிட்டு வெளியிட்டார்கள். லக்சம்பேர்க் ஜூனியசு என்ற புனைபெயரில் எழுதினார். செருமனியில் பாட்டாளி வர்க்கத்தைப் போருக்கெதிராகத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டரை ஆண்டுகள் ரோசா, கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

சிறையிலிருந்து இவர் எழுதிய கட்டுரைகளை அவரது நண்பர்கள் இரகசியமாக வெளியே எடுத்து வெளியிட்டார்கள். இவற்றில் ஒன்று “உருசியப் புரட்சி". இது போல்செவிக்குகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தது. அவர்களின் சர்வாதிகாரத் தன்மையை எடுத்துக் கூறியிருந்தார். ஆனாலும் ஒரு கட்சி ஆட்சியை அவர் வெறுத்தாலும், அவர் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை ஆதரித்து எழுதினார்.

1918, நவம்பர் 8 இல் சிறையிலிருந்து விடுதலையானார்கள். விடுதலையான அடுத்த நாள் லீப்னெக்டுடன் இணைந்து பெர்லினில் சுதந்திர சோசலிசக் குடியரசை அறிவித்தார்கள். ஸ்பர்த்தாக்கஸ் அணியை மீள நிறுவி "செங்கொடி" என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், மரண தண்டனைகளை ஒழிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் எழுதினார்கள்.

1918, டிசம்பர் 29 முதல் 31 வரை இடம்பெற்ற ஸ்பர்த்தாசிசுக்களின் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். இதனை அடுத்து செர்மனியப் பொதுவுடமைக் கட்சி (KPD) கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் தலைமையில் 1919, சனவரி 1 இல் நிறுவப்பட்டது.

1919 சனவரியில் பேர்லின் நகரில் இரண்டாவது புரட்சி வெடித்தது. வன்முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதை லக்சம்பேர்க் எதிர்த்தார். ஆனாலும் "செங்கொடி" இயக்கத்தினரை, லிபரல்களின் பத்திரிகை அலுவலகங்களைத் தமது குழுவினர் ஆக்கிரமித்துக் கொள்ள ஊக்குவித்தது. இதனை அடுத்து, செருமனிய அதிபர் பிரீட்ரிக் ஈபேர்ட் இடது சாரிகளை ஒழிக்கத் தமது படையினருக்கு உத்தரவிட்டார். 1919, சனவரி 15 இல் ரோசா, மற்றும் லீப்னெக்ட் இருவரும் பெர்லினில் பிரீகோர்ப்ஸ் என்ற வலது சாரி துணை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள். லக்சம்பேர்க் ஒட்டோ ரூஞ்ச் (1875–1945) என்பவனால் துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தப்பட்டு, லெப். ஹெர்மன் சூக்கோன் (1894–1982) என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது உடல் பெர்லினில் லாண்ட்வெர் கால்வாயில் எறியப்பட்டது. கார்ல் லீப்னெக்ட் சுட்டுக் கொல்லப்பட்டு பெயர் குறிப்பிடப்படாமல் சவச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதேபோல், KPD இன் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை அடுத்து செருமனியப் புரட்சி முடிவுக்கு வந்தது. நான்கு மாதங்களுக்குப் பின்னர் 1919, சூன் 1 இல் லக்சம்பேர்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பெர்லின் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டது.

இக்கொலைக்காக ஒட்டோ ருஞ்ச் இரண்டாண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான். ஏனையோருக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கப்படவில்லை.

லக்சம்பேர்க், லீப்னெக்ட் இருவரினதும் உடல்கள் பெர்லினில் உள்ள பிரீட்ரிக்சுபெல்ட் மத்திய சவச்சாலையில் அடக்கம் செய்யப்பட்டது. சோசலிஸ்டுகளும், பொதுவுடமைவாதிகளும் இவ்விடத்தில் ஆண்டுதோறும் சனவரி மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடி அவ்விருவரையும் நினைவு கூருகிறார்கள்.

கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தில் பிரபலம்

[தொகு]
  • புகழ்பெற்ற பல்கேரிய எழுத்தாளரான ஹிரிஸ்த்தோ சிம்ரென்ஸ்கி ரோசா லக்சம்பேர்க்கின் பொதுவுடைமை சித்தாந்தங்களை அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தான் தான் எழுதிய ரோசா லக்சம்பேர்க் என்ற பாடலில் மெச்சியுள்ளார்.
  • ரோசா லக்சம்பேர்க் (1986 ல் செருமானிய மொழி :Die Geduld der Rosa Luxemburg) மார்க்கரெட் வோன் துரோத்தா இயக்கிய இப்படத்தில் லக்சம்பேர்க்காக பார்பரா சுகோவா நடித்து 1986 ஆம் ஆண்டு இதற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார்.[5]
  • 1992 ல் கியூபெக் ஓவியர் ஜீன்-பவுல் ரியோபிலி லுக்சம்பேர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அழியாத முப்பது

சுவர் ஓவியங்களைத் தீட்டினார். இவை கியூபெக் நகரத்திலுள்ள நுண்கலை தேசிய அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுகள்

[தொகு]
1907 ல் பெர்லின் நகரில் லக்சம்பேர்க்
  • மூலதன திரட்சி ஏக்னஸ் சுச்வார்சைல்டு என்பவரால் 1951 இல் மொழிபெயர்க்கப்பட்டது. பதிப்பு 2003. Die Akkumulation des Kapitals என்ற பெயரில் 1913 ல் இதன் மூல நூல் வெளியிடப்பட்டது
  • மூலதன திரட்சி - ஒரு எதிர்விமர்சனம் 1915 ல் எழுதப்பட்டது.
  • சேகரிக்கப்பட்ட படைப்புகள் 5 தொகுப்புகள், பெர்லின் 1970–1975.
  • கடிதங்களின் தொகுப்புகள் 6 தொகுப்புகள், பெர்லின் 1982–1997.
  • அரசியல் எழுத்துக்கள் ஓசிப் கே. பிளச்தெய்ம் என்பவரால் தொகுக்கப்பட்டு முன்னுரை எழுதப்பட்டது, 3 தொகுப்புகள், பிரங்போர்ட் 1966 .
  • ரோசா லக்சம்பர்க் முழு படைப்புகள் 14 தொகுப்புகள், ரண்டன் மற்றும் நியூ யோர்க் 2011.
  • ரோசா லக்சம்பேர்க் வாசகர் எட்ஸ். பீட்டர் ஹூடிஸ் & கெவின் பி. ஆன்டர்சன்

நூல்கள்

[தொகு]

ரோசா லக்சம்பேர்க் எழுதிய நூல்களில் சில

நூல் வருடம் உரை
போலந்தின் தொழில் வளர்ச்சி 1898 ஆங்கிலம்
தேசியத்தின் பாதுகாப்பில் 1900 ஆங்கிலம்
சமூக சீர்திருத்தம் அல்லது புரட்சி 1900 ஆங்கிலம்
பிரான்சில் சோசலிச நெருக்கடி 1901 ஆங்கிலம்
உருசிய சமூக ஜனநாயகத்தின் அமைப்பியல் கேள்விகள் 1904 ஆங்கிலம்
அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் பெருந்திரள் வேலைநிறுத்தம் 1906 ஆங்கிலம்
தேசிய கேள்விகள் 1909 ஆங்கிலம்
கோட்பாடும் செய்முறையும் 1910 ஆங்கிலம்
மூலதன திரட்சி 1913 ஆங்கிலம்
மூலதனத்தின் திரட்சி- ஓர் எதிர்ப்பு விமர்சனம் 1915 ஆங்கிலம்
ஜூனியஸ் துண்டுச்சீட்டு 1915 ஆங்கிலம்
உருசியப் புரட்சி 1918 ஆங்கிலம்

பேச்சுக்கள்

[தொகு]
பேச்சு வருடம் எருத்துப்பெயர்ப்பு
இசுடுட்கார்ட் காங்கிரசுக்கான பேச்சு 1898 ஆங்கிலம்
அனோவர் காங்கிரசுக்கான பேச்சு 1899 ஆங்கிலம்
செருமானிய சமூக சனநாயகக் கட்சியின் நுரெம்பெர்க் காங்கிரசில் பேச்சு 1908 ஆங்கிலம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Luxemburg biography at marxists.org
  2. Frederik Hetmann: Rosa Luxemburg. Ein Leben für die Freiheit, p. 308
  3. Merrick, Beverly G. (1998). "Rosa Luxemburg: A Socialist With a Human Face". Center for Digital Discourse and Culture at Virginia Tech University. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  4. ROSA LUXEMBURG: MORE THAN A REVOLUTIONARY
  5. https://www.infoplease.com/arts-entertainment/cannes-film-festival-winners/1986-cannes-film-festival

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசா_லக்சம்பேர்க்&oldid=2306941" இலிருந்து மீள்விக்கப்பட்டது