உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்னழுத்தம்
பொதுவான குறியீடு(கள்): V , V
U , U
SI அலகு: வோல்ட்டு
உயர் மின்னழுத்த அபாயக்குறியீடு

மின்னழுத்தம் (voltage) என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம். ஒரு தொட்டியில் தண்ணீர் இருந்து, அத்தொட்டியின் அடியிலே ஒரு ஓட்டை (துளை) இருந்தால், அவ்வோட்டையின் வழியே நீர் பீய்ச்சி அடிக்கும். நீரை உந்தி வெளியே தள்ளுவது அந்த ஓட்டைக்கு மேலே உள்ள நீரின் அழுத்தம் தான். நீரின் அழுத்தம் ஏற்படுவதற்கு தரையை நோக்கி ஈர்க்கும் நிலவீர்ப்பு அல்லது புவியீர்ப்பு விசை இருப்பதால் தான். இதே போல மின்தன்மை (மின்னேற்பு அல்லது மின்னூட்டம்) பெற்ற பொருட்களைச் சுற்றி மின் விசை தரும் மின்புலம் உள்ளது. இம்மின்புலத்தில் இருந்து இந்த மின்னழுத்தம் எழுகின்றது. இந்த மின்னழுத்தம் குறைந்த மின்னழுத்தமுடைய பொருளுடன் இணையும் போது மின்னோட்டமும் உண்டாகும். மின் விளக்கு எரிவதற்கு, மின் அழுத்ததால் உண்டாகும் மின்னோட்டம் உதவுகின்றது.

மின்னழுத்தை வோல்ட்டு என்னும் அலகால் அளக்கிறார்கள் மின்துறையாளர். ஒரு வோல்ட்டு மின் அழுத்தத்தை ஒரு 10 ஓம் கொண்ட தடையத்தின் இரண்டு முனைக்கும் இடையே பொருத்தினால், அந்த தடையத்தின் வழியாக 1/10 ஆம்பியர் அளவு மின்னோட்டம் நிகழும். இந்த மின்னழுத்தம், மின்னோட்டம், தடை என்பவற்றினிடையே உள்ள தொடர்பை சார்ச்சு சைமன் ஓம் என்பாரின் ஓமின் விதியால் அறியப்படுகின்றது. மின்னழுத்தம் = (மின்தடை) x (மின்னோட்டம்). இதனையே குறியீடுகள் வழி, V = மின்னழுத்தம் R = மின்தடை I = மின்னோட்டம் என்றால்,

  • V = R x I என சுருக்கமாக நினைவில் கொள்ளலாம்.

மின்னை அளக்கும் அலகு[தொகு]

மின் அளக்கும் அலகு

இங்கே மின்னழுத்தம் (V), மின்னோட்டம் (I), மின் தடை (R) என்பவற்றை எப்படி எளிதாகக் கணக்கிடுவது என்பதை காட்டியுள்ளது.

  • இந்த முக்கோணமான படத்தின் மேலே (V) என்ற குறியீடு உள்ளது இது மின்னழுத்தம் ஆகும். மின்னழுத்தத்தை நாம் கண்டறிய வேண்டும் என்றால் கீழே உள்ள மின்னோட்டத்தையும் (I) மின் தடையையும் (R) (IxR=V) பெருக்க வேன்டும் அப்போது மின்னழுத்தத்தின் அளவு தெரியும்.
  • அது போன்று மின்னோட்டத்தை (I) கண்டறிய வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை (V) கீழே உள்ள மின்தடையால்(R) (V/R=I) வகுக்கும் போது மின்னோட்டத்தின் அளவு தெரியும்.
  • இப்போது மின் தடையை (R) அளக்க வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை (V) கீழே உள்ள மின்னோட்டத்தினால் (I) (V/I=R) வகுக்கும் போது மின் தடையின் அளவு தெரியும்.

மின்னழுத்தம் - விளக்கம்[தொகு]

ஈறிலாத் தொலைவு[தொகு]

காற்று அல்லது வெற்றிடத்தில் ஒரு புள்ளி மின்னூட்டம் (q) வைக்கப்படும் போது அதனருகில் ஒரு புள்ளியில் அம்மின்னோட்டத்தினால் ஏற்படும் மின்புலத்தைக் கருதுவோம். மின்னூட்டத்திலிருந்து அப்புள்ளி இருக்கும் தொலைவைப் பொறுத்து மின்புலச் செறிவு (E) மாறுபடும். தொலைவு அதிகரிக்கும் போது மின்புலச் செறிவு குறைந்து, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் சுழியாகக் குறைந்து விடும். அத்தொலைவிற்கு அப்பால் உள்ள ஒரு புள்ளியை நாம் ஈறிலாத் தொலைவிலுள்ள புள்ளியாகக் கருதுவோம். ஈரிலாத் தொலைவு எனப்படுவதன் வரையறை யாதெனில் அந்த புள்ளி மின் துளியின் மின் உணர்வு உணரப்படாத எந்த ஒரு புள்ளியையும் கொள்ளலாம்.

வேலை[தொகு]

ஈறிலாத் தொலைவிலிருந்து ஓரலகு நேர் மின்னோட்டம் (+ 1 கூலூம்) ஒன்றை, புள்ளி நேர் மின்னோட்டத்தின் புலத்திலுள்ள ஒரு புள்ளிக்குக் கொணரும் போது, அப்புலத்தினால் ஏற்படும் விலக்கு விசைக்கு எதிராகக் குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டும். அவ்வேளை அது அந்த மின்னோட்டத்தில் ஆற்றலாகச் சேமித்து வைக்கப்படுகின்றது. எனவே, ஓரலகு நேர்மின்னோட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்துவரச் செய்யப்படும் வேலையே அப்புள்ளியில் புள்ளி மின்னூட்டம் q இன் மின்னழுத்தம் என வரையறுக்கப்படுகிறது.

வோல்ட் மின்னழுத்தம்[தொகு]

ஓரலகு நேர்மின்னோட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்து வரும்போது செய்யப்படும் வேலை அப்புள்ளியில் மின்னழுத்தம் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னழுத்தம்&oldid=3351235" இலிருந்து மீள்விக்கப்பட்டது