உள்ளடக்கத்துக்குச் செல்

தி. சு. அவிநாசிலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார்
தி. சு. அவிநாசிலிங்கம் (1947 இல்)
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
1958–1964
பிரதமர்ஜவஹர்லால் நேரு
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை)
திருப்பூர்
பதவியில்
1952–1957
பிரதமர்ஜவஹர்லால் நேரு
கல்வி அமைச்சர்(மதராசு மாகாணம்)
பதவியில்
1946–1949
பிரதமர்தங்குதுரி பிரகாசம்,
ஓ. பி. ராமசாமி ரெட்டியார்
இந்திய இராசாங்க சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1934–1945
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1903-05-05)மே 5, 1903
திருப்பூர், மதராசு மாகாணம்
இறப்புநவம்பர் 21, 1991(1991-11-21) (அகவை 88)
கோயம்புத்தூர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இல்லை
முன்னாள் கல்லூரிபச்சையப்பாக் கல்லூரி, சென்னை
சென்னைச் சட்டக் கல்லூரி
வேலைவழக்கறிஞர், அரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார் (மே 5, 1903 - நவம்பர் 21, 1991) ஓர் இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் காந்தியவாதி.1946 முதல் 1949 அப்போதிருந்த மதராசு மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழ்வழிக் கல்வியை அறிமுகம் செய்தவர்.இவருக்கு தமிழில் முதல் களஞ்சியம் உருவாக்க முனைந்த பெருமையும் உண்டு.

அவிநாசிலிங்கம் செட்டியார் திருப்பூரின் கே.சுப்பிரமணியச் செட்டியாருக்குப் பிறந்தவர். திருப்பூர்,கோவை மற்றும் சென்னையில் கல்வி பயின்ற அவிநாசிலிங்கம் சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கெடுத்தவர். இந்திய இராசாங்க சட்டமன்றத்திலும் பின்னர் இந்திய நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக இருந்தவர்.

காந்தியக் கொள்கைகளில் தீவிர பற்றுடையவர்.சமுதாய சீர்திருத்தங்களில் ஈடுபாடு மிக்கவர். இராமகிருஷ்ணா திருச்சபையை பின்பற்றியவர்.

இளமை வாழ்க்கை

[தொகு]

அவிநாசிலிங்கம் மே 05,1903 அன்று அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த திருப்பூரில் பிரபலாமாகவிருந்த செல்வந்தரும் வணிகருமான சுப்பிரமணிய செட்டியாருக்கும் பழனியம்மாளுக்கும் பிறந்தவர்.[1][2] திருப்பூர் உயர்நிலைப் பள்ளியிலும் கோவையிலிருந்த லண்டன் மிஷன் உயர்நிலைப்பள்ளியிலும் துவக்கக் கல்வியை பெற்றார். பின்னர் சென்னை பச்சையப்பாக் கல்லூரி மற்றும் சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் பெற்றார். 1926ஆம் ஆண்டு தமது உறவினரும் காங்கிரசு அரசியல்வாதியுமான ராமலிங்கம் செட்டியாரிடத்தில் பயிற்சி வழக்கறிஞராக சட்ட வாழ்வைத் துவங்கினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில்

[தொகு]

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கெடுத்தார். காந்தியக் கொள்கைகளில் நாட்டம்கொண்டு இந்திய தேசியக் காங்கிரசில் இணைந்தார்.[3] கோவை மாவட்ட காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1934ஆம் ஆண்டு அரிசன நலவாழ்வு நிதிக்காக நன்கொடைகள் திரட்ட தமிழகம் வந்த காந்திக்கு இரண்டரை இலக்கம் ரூபாய்கள் நிதி திரட்டிக் கொடுத்தார்.அந்த பயணத்தின் அனைத்துச் செலவுகளையும் தாமே ஏற்றார்.[3]

இந்த போராட்டக் காலத்தில் 1930, 1932, 1941 மற்றும் 1942 ஆண்டுகளில் நான்குமுறை சிறை சென்றார்.[1][3] 1944ஆம் ஆண்டு இவரது சிறைவாசம் முடிந்தபின்னர் அரசியலில் ஈடுபட்டு 1946ஆம் ஆண்டு சென்னை சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

கல்வி அமைச்சராக

[தொகு]

1946 முதல் 1949 வரை தங்குதுரி பிரகாசம் மற்றும் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் முதல்வர்களாக இருந்த சென்னை மாகாண அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.[2] அப்போது உயர்நிலைப் பள்ளிகளில் தமிழை பயில்மொழியாகக் கொண்டுவந்தது இவரது முக்கிய பங்களிப்பாகக் நினைவு கூறப்படுகிறது. 1946ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக் கழகம் அல்லது தமிழ் அகாடெமி நிறுவினார்.[1] இக்கழகம் 1954 மற்றும் 1968 ஆண்டுகளுக்கிடையே தமிழில் முதன்முறையாக ஓர் பத்து அதிகாரங்கள் கொண்ட களஞ்சியத்தை (encyclopedia) வெளியிட்டது.[1][3] இவர் பெண்கள் கல்வி,முதியோர் கல்வி இவற்றிற்கு முன்னோடியாக விளங்கினார். நூலகங்களை சீரமைத்தார்.

விடுதலைப் போராட்ட வீரரும் கவிஞருமான சுப்பிரமணிய பாரதியின் பாடல்களை தேசியமயமாக்கினார்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழிற்கும் பிற இந்திய மொழிகளுக்கும் பேரறிஞர்களைக் கொணர்ந்தார்.[3] ஆறாம் படிவத்திலிருந்து திருக்குறளை பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக அறிமுகம் செய்தார்.[3]

பின்னாள் வாழ்க்கை

[தொகு]

1952 முதல் 1957 வரை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[1][2][4][5] பின்னர் 1958 முதல் 1964 இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1][2]

1975ஆம் ஆண்டு சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.[3]

நவம்பர் 21,1991ஆம் ஆண்டு தமது 88ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.[4]

சீர்திருத்தங்கள்

[தொகு]

தமது இளம் வயதில் இராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா மற்றும் சுவாமி பிரமானந்தா அவர்களால் இராமகிருஷ்ணா இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1930ஆம் ஆண்டு கோவை ரேசுகோர்சு பகுதியில் இராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் துவக்கினார்.[1][2][3][3][3] பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் 300 ஏக்கரா பரப்பில் அமைந்த வளாகத்திற்கு பள்ளியை மாற்றினார்.தீண்டத்தகாதவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்கு பாடுபட்டார். விதவை மறுமணம் குறித்தும் போராடி வந்தார்.தமது பள்ளியில், பிற சாதி மாணவர்களை அனுமதிக்காத அந்தக் காலத்தில், முதலில் அனைத்து சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களையும் படிக்கச் சேர்த்துக் கொண்டார்.[3] பெண்கள் கல்விக்காக கல்லூரி ஒன்றையும், தற்போதைய அவிநாசிலிங்கம் மனையியல் நிகர்நிலை பல்கலைக் கழகம், 1957ஆம் ஆண்டு தொடங்கினார்.[6]

புத்தகங்கள்

[தொகு]

அவிநாசிலிங்கம் தமிழில் எழுதிய திருக்கேதாரம் குறித்த பயண நூல் குறிப்பிடத்தக்கது. அவர் பொருளாதாரம், காந்தியின் கல்விக் கொள்கை மற்றும் வார்தா கட்டமைப்பு குறித்தும் நால்கள் எழுதியுள்ளார்.

விருதுகள்

[தொகு]
  • அவிநாசிலிங்கத்திற்கு 1970ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[7]
  • ஜி.டி.பிர்லா விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "One who lived for the rest". த இந்து. மே 5, 2003 இம் மூலத்தில் இருந்து 2003-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030624055558/http://www.hindu.com/thehindu/mp/2003/05/05/stories/2003050500670100.htm. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "T. S. Avinashilingam Chettiar – Rajya Sabha biography". Rajya Sabha. Archived from the original on 2003-06-10. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 "Who lived for the community:Architects of Coimbatore". த இந்து. சனவரி 14, 2009 இம் மூலத்தில் இருந்து 2009-09-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090925045925/http://www.hindu.com/2009/01/14/stories/2009011451040200.htm. 
  4. 4.0 4.1 Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha : First to Thirteenth Lok Sabha. Lok Sabha Secretariat. 2003. p. 98.
  5. "Key Highlights, General Elections 1951 to the First Lok Sabha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-18. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
  6. "Avinashilingam College for Women -Genesis". Avinashilingam College for Women. Archived from the original on 2009-04-21. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
  7. "Padma Bhushan awardees". Government of India.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சு._அவிநாசிலிங்கம்&oldid=3943831" இலிருந்து மீள்விக்கப்பட்டது