இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982
1982 இலங்கை பொது வாக்கெடுப்பு | |||
---|---|---|---|
நாடாளுமன்றத்தை மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடித்தல்
| |||
[1] |
இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு, இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக டிசம்பர் 22, 1982ல் நடைபெற்றது. சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அப்போதைய நாடாளுமன்றத்தின் (நாடாளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார்.
அரசறிவியலில் பயன்படுத்தப்படும் அடிப்படை எண்ணக்கருக்களுள் ஒன்றாக விளங்கும் மக்கள் தீர்ப்பு என்பது சனநாயகத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படுகின்றது. மக்கள் தீர்ப்பு (referendum) ஒப்பங்கோடல் எனும்போது அரசியலமைப்பு ஏற்பாடுகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளின் போது பொது மக்களின் விருப்பு வெறுப்புக்களை மக்கள் மூலமாகவே அறிந்துகொள்ளும் வழிமுறை என பொருள் கொள்ளப்படுகிறது.
வரலாறு
[தொகு]அரசியல் நிர்வாகத்தில் பொதுமக்களையும் தொடர்புபடுத்த வேண்டும் என்ற கருத்தினை ஜெக்குலின் ஜின் ரூசோ 1762ல் முன்வைத்தார். 'தனது பிரதிநிதிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க செயற்பாடுகளைப் பொது மக்களின் விருப்பத்திற்கமைய செயற்படுத்துவது பயனுறுதி வாய்ந்தவையாகும" என்பது இவரின் வாதமாகும். 1793ல் பிரான்சிய அரசியலமைப்பில் 'மக்கள் தீர்ப்பு' எனும் அம்சம் முதன் முதலாக இடம்பெறலாயிற்று.
இலங்கையின் சட்ட ஏற்பாடுகள்
[தொகு]1978ம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படும் சனநாயத்தன்மை மிக்க ஓர் அம்சமாக இது கருதப்படுகிறது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் மக்கள் தீர்ப்புக்கான சட்டவிதிகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
- யாப்பின் 4ம் உறுப்புரை (அ) பந்தி மக்களின் சட்டவாக்க அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சட்டவாக்க அதிகாரத்தைச் செயற்படுத்தும் ஒரு வழிமுறை மக்கள் தீர்ப்பு என்பது புலப்படுகின்றது.
- யாப்பின் 83ம் உறுப்புரை (அ) (ஆ) பந்திகளின் கீழ் குறிக்கப்பட்டுள்ள உறுப்புரைகளை மாற்றியமைப்பதாயின் நாடாளுமன்றத்தில் முழு அங்கத்தினரதும் (சமுகமளிக்காத அங்கத்தவர் உட்பட) 2/3 பெரும்பான்மை பெற்று அதை மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களும் அனுமதிக்க வேண்டும் எனப்பட்டுள்ளது.
அந்த உறுப்புரைகளாவன
[தொகு]1ம் உறுப்புரை:
- இலங்கை சுதந்திரம், தன்னாதிக்கம், இறைமைமிக்க சனநாயக சோசலிசக் குடியரசாகும்.
2ம் உறுப்புரை:
- இலங்கை குடியரசு ஓர் ஒற்றையாட்சியாகும்.
3ம் உறுப்புரை
- இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடமே உண்டு. அதை மாற்ற முடியாது. (இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்கியது.)
6ம் உறுப்புரை
- இலங்கைக் குடியரசின் தேசியக்கொடி சிங்கக் கொடியாகும். (அரசியலமைப்பின் 2ம் பின்னிணைப்பில் கூறப்பட்டுள்ளது.)
7ம் உறுப்புரை
- இலங்கைக் குடியரசின் தேசிய கீதம் 'ஸ்ரீலங்கா தாயே..'
8ம்உறுப்புரை
- இலங்கைக் குடியரசின் தேசிய தினம் பெப்ரவரி 4ம் திகதி
9ம் உறுப்புரை
- இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னிடம் அளித்துள்ளது. மற்றைய மதங்களுக்கு அவற்றிற்குரிய இடத்தை வழங்கும் அதேவேளையில் இலங்கைக் குடியரசு பௌத்த சாசனத்திற்கு முன்னிடம் வழங்குவதோடு அதைப் பேணி வளர்த்தலும், பாதுகாத்தலும் அரசின் கடமையாகும்.
10ம் உறுப்புரை
- சகல பிரசைகளுக்கும் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, பிரசாரம் செய்ய உரிமையுண்டு. (சிந்தனை மதச்சுதந்திரம் என்பவற்றிற்கு உரித்துடையவராயிருத்தல் வேண்டும்.)
11ம் உறுப்புரை
- ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.
30(2) உறுப்புரை
- குடியரசின் ஜனாதிபதி ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கவென மக்களால் தெரிவு செய்யப்படுவார்.
62(2) உறுப்புரை
- நாடாளுமன்றத்தின் 1வது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகளுக்கு மேல் அதன் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது.
மேற்குறித்த விடயங்களில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் மக்கள் தீர்ப்புக்கு விடப்படல் வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள்
[தொகு]மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது மக்களின் தீர்ப்பிற்காக குறித்த பிரச்சினையை முன்வைக்கும் அதிகாரம் சனாதிபதிக்கு உண்டு.
மக்கள் தீர்ப்பிற்கு சமர்ப்பிக்கும் வழிமுறை
[தொகு]சனாதிபதி மக்கள் தீர்ப்பிற்காக சமர்ப்பிக்கும் வழிமுறை (சுருக்கமாக)
1. மக்கள் தீர்ப்பிற்காக அமைச்சரவை சான்றுரை அளித்துள்ள அல்லது.
2. மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ஏதேனுமொன்று. இவை நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையின் குறித்த சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்காக சானாதிபதி சமர்ப்பிப்பார்.
- நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஏதேனும் சட்ட மூலத்தை தனது தற்துணிபின் பேரில் மக்கள் தீர்ப்பிற்கு சமர்ப்பிக்கலாம். ஆனாலும், இச்சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புத் திருத்தம் அல்லது நீக்கம், மாற்றம் குறித்து சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாது.
- எவ்வாறாயினும் பதிவுசெய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களுள் 2/3 க்கு மேற்பட்ட வாக்களார்கள் தமது வாக்குகளை அளித்தல் அவசியமாகும்.
- இவ்வாறு 2/3 க்கும் குறைவானவர்கள் வாக்களிக்குமிடத்து குறித்த பிரேரணை சார்பாக மொத்த பதிவு செய்யப்பட்டு வாக்காளர் எண்ணிக்கையில் 1/3 க்கு அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
- இவ்வாறு அளிக்கப்படாதிருப்பின் குறித்த பிரேரணை மக்களால் நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.
தேர்தல் ஆணையாளர்
[தொகு]சனாதிபதியால் மக்கள் தீர்ப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின் மக்கள் தீர்ப்பு தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையாளரைச் சார்ந்தது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டவிதிகள், 1981 - 7ம் இலக்க நாடாளுமன்ற சட்டமூலம் என்பவற்றுக்கு இணங்க இத்தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.
'ஆம்' 'இல்லை'
[தொகு]1981 - 7ம் இலக்க நாடாளுமன்ற சட்டமூலத்துக்கிணங்க மக்கள் தீர்ப்புக்காக விடப்படும் பிரேரணை வினா வடிவில் முன்வைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறாயின் வாக்காளர் அப்பிரேரணைக்கு விருப்பமாயின் 'ஆம்' எனவும் விருப்பமில்லையெனில் 'இல்லை' எனவும் வாக்கினை வழங்குதல் வேண்டும்.
வாக்குச் சீட்டில் 'ஆம்' 'இல்லை' என்ற சொற்கள் மும்மொழியிலும் அச்சிடப்பட்டிருக்கும். 'ஆம்' என்ற சொல்லுடன் 'விளக்கு' அடையாளமும் 'இல்லை' என்ற சொல்லுடன் 'குடம்' என்ற அடையாளமும் அச்சிடப்பட்டிருத்தல் அவசியமாகும்.
இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு
[தொகு]இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக டிசெம்பர் 22, 1982 இல் நடைபெற்றது. சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அப்போதைய நாடாளுமன்றத்தின் (நாடாளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார்.
தேர்தல் முடிவு
[தொகு]நாடாளுமன்றத்தின் (நாடாளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்கான விருப்பம்
ஆம் - (ஆதரவாக) விளக்கு சின்னம் - 3,141,223 (54.66%)
இல்லை - (எதிராக) குடம் சின்னம் - 2,605,983 (45.34%)
செல்லுபடியான வாக்குகள் - 5,747,206 (99.63%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 21,456 (0.37%)
அளிக்கப்பட்ட வாக்குகள் - 5,768,662
அளிக்கப்பட்ட வாக்கு விகிதம் - 70.82%
பதியப்பட்ட மொத்த வாக்குகள் - 8,145,015
முடிவு
[தொகு]இதன்படி நாடாளுமன்றத்தின் (நாடாளுமன்றம்) பதவிக்காலம் மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது
உசாத்துணை
[தொகு]- இலங்கைப் நாடாளுமன்ற ஹன்சாட் கோவை -1981]
- இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு (1978)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Referendums". Handbook of Parliament. Parliament of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2010-02-27.